தேர்தல் வெளிப்படுத்திய மனப்பாங்கும் சொல்லும் செய்தியும்

35

தேர்தல் வித்தியாசமான பல முடிவுகளைத் தந்திருக்கிறது. புதிதாய்ச் சிந்திப்பதற்கான பல செய்திகளையும் சொல்லியிருக்கிறது. பாரம்பரியமாக இலங்கையை ஆண்டு வந்த இருகட்சிகளும் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்புரிமையுடன் சுருண்டு போய்க் கிடக்கின்றன. முளைத்துச் சில வருடங்களே ஆன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைக்க உருவாகிச் சில மாதங்களேயான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.

இந்த மாற்றம் என்பது மக்கள் புதிதாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று சொல்வதனை விட புதியதொரு அரசியல் கலாச்சாரம் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இருப்பதாகத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசியல் என்றால் அதில் அராஜகம், ஊழல், அநீதி, அநியாயம் எல்லாம் சகஜமானவைதான் என்ற கருத்தை மக்கள் ஏற்கச் செய்வதில் புதிய அரசியல் கட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.

ஊழல், அராஜகத்துக்கெதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற ஜேவிபி உள்ளிட்ட இடதுசாரிச் சிந்தனைகளின் தேர்தலுக்குத் தேர்தல் அடைந்து வரும் தேய்வு இந்தக் கட்டமைப்பை நோக்கிய மக்களின் மனப்பாங்கிலான மாற்றத்தையே காட்டுகிறது. 1977 க்குப் பின்னர் உருவாகிய முதலாளித்துவவாதச் சிந்தனையை அரசியல்வாதிகள் உண்மையைப் புறந்தள்ளும் சமூகக் (Post-Truth Society) கட்டமைப்பை வரைவதற்குப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் கட்டமைத்த இந்தப் பிம்பத்தின் முன்னால் மக்கள் அடைந்த தோல்வியைத் தான் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவும் எடுத்துக் காட்டுகிறது. கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளையெல்லாம் இலங்கை மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக்கிறார்கள் என பிபிசி சுட்டிக் காட்டியிருந்தது.

உண்மையில் விழுமிய அடிப்படையிலான நாட்டைக் கட்டியெழுப்புவதில் அடைந்த தோல்வியாகத் தான் தேர்தல் முடிவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளைக் கிளறி அதனை முதலீடாக்கி இலாபம் அடையும் அரசியலுக்கு முன்னால் நாடு தோற்றுப் போயிருக்கிறது. கண்முன்னே அராஜகம் நடக்கின்ற போதும், கண்ணுக்குத் தெரிபவர்கள் எல்லாம் அநியாயத்துக்குத் துணை போகின்றவர்களாக இருக்கும் போதும் மக்களிடம் தெரிவுக்கு வேறு வழியில்லாமல் போய்விடுகிறது அல்லது அப்படியானதொரு விம்பம் கட்டியெழுப்பப்படுகிறது என்பதனையே இது காட்டுகிறது.

இதற்கு மக்கள் காரணமல்ல, மலினப்பட்டுப் போன அரசியல்வாதிகள் தான் காரணம் என்று சொல்லித் தப்பிக்க முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் மக்களது அறியாமை தான் இதற்கான மூல காரணம். குறிப்பாக இளைஞர்களிடையே வளர்ந்துவரும் ஞானசூனியம் அரசியலில் தெளிவாகப் பிரதிபலித்திருக்கிறது. தேர்தல் வன்முறைகளை அவதானிக்கும் நிலையமொன்று குறிப்பிட்டது போல இளைஞர்களிடையே அரசியல் ஞானம் அருகி வருவது தேர்தல் செயற்பாடுகளில் தெரிகிறது.

யாரையாவது உள்ளே தள்ளி அவர்கள் ஆடுவதையெல்லாம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல் செய்வதை விடுத்து நாட்டை வளப்படுத்துவதில் உண்மையான அக்கறையுடன் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய இளைஞர் பரம்பரையொன்று நாட்டுக்குத் தேவைப்படுகிறது. சுயமாகச் சிந்திக்கின்ற, நேர்கொண்ட பார்வையுள்ள மிடுக்கான இளைஞர்கள் சாக்கடை அரசியலுக்கு அப்பால் இருந்து அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிலையை நாடு வேண்டி நிற்கிறது.

இனிவரும் காலங்களில் இளைஞர்களை நாட்டின் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் பங்கு கொள்ளச் செய்வதிலும் அவர்களை அரசியல் ஞானம் உள்ளவர்களாக உருவாக்கி எடுப்பதிலும் நாகரிகமானதொரு நாட்டை நேசிக்கின்ற அனைவருக்கும் பங்கிருக்கின்றது.