Features அரசியல்

கூன் விழுந்து குடை சாய்ந்த குருட்டு யானை ரணிலின் தோல்வி வரலாற்றின் இனிய பழிவாங்கல்

Written by Administrator
  • மாலிக் பத்ரி

2020 பொதுத் தேர்தல் முடிவுகள் பல்வேறு கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையின் முதலாவது கட்சி 100 வீதம் தோற்றுப் போய் நிற்கிறது. வலது சாரி லிபரல் ஜனநாயகம் இலங்கையில் தோற்றுப் போய் விட்டதென்றே இதனைப் பலரும் கருதுகின்றனர். மறுபக்கம் உலக அரசியலின் பொதுப் போக்கு இலங்கையில் வென்று விட்டது. ஐ.தே.க. மூன்று வீதமான வாக்குகளையே இந்தத் தேர்தலில் பெற முடிந்தது. ஒருவரைக் கூட மக்கள் தெரிவுசெய்யவில்லை. அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டு அவரைச் சுற்றியிருந்த பரிவாரம் அனைவருமே மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இன, மதத் தேசியவாதத்தின் திட்டமிட்ட பரவலாக்கம், ஐ.தே.க.வின் மோசமான பிளவு, சிறுபான்மைக் கட்சிகளின் சிதைவு என்பன மஹிந்த அணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஐ.தே.க.விலிருந்து பிரிந்து சென்ற சமகி ஜனபல வேகய 54 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இலங்கையில் அடுத்த ஐந்தாண்டுகள் மிகவும் சவால் நிறைந்தவையாக இருக்கப் போகின்றது. அந்தச் சவால்களுக்கு ஐ.தே.க.வும் ஒருவகையில் உடந்தையாகியுள்ளது.

உண்மையில் கட்சித் தலைவர் ரணில் தன் வினைச் தன்னைச் சுடும் என்பது போல் தனது தலையிலேயே மண்ணை வாரி இறைத்துள்ளார். பிணைமுறி மோசடியின் சூத்திரதாரி ரவி கருணாநாயக்க, முன்னாள் சபா நாயகர் கரு ஜயசூரிய, ரணிலின் நெருங்கிய உறவினர் ருவன் விஜேவர்தன, கல்வி அமைச்சர் அகில விராஜ் உள்ளிட்ட ரணில் மேட்டிமை அணி (Elite Group) யாரும் வெற்றிபெறவில்லை.

இலங்கைச் சூழலைப் புரிந்துகொள்ளாத ஒரு மேட்டிமைத் தலைவரே ரணில் என்பதை தேர்தல் நிறுவியுள்ளது. அதேபோன்று ஐ.தே.கட்சிக்கான மக்கள் ஆதரவு கடந்த பொதுத் தேர்தல் வரை சஜித்தினதும் அவரைச் சூழவிருந்தவர்களினதும் களப் பணிகள் மற்றும் ஆழ்நிலை வசீகரங்களைச் சுற்றியே சாத்தியப்பட்டுள்ளது என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ரணிலின் முகவர் அரசியல் கிழித்தெறியப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்போதே ஐ.தே.க. பிளவுபட்டு விட்டது. சஜித்தை அபேட்சகராக நிறுத்துவதில் இழுத்தடித்து வந்த ரணில் நீண்ட போராட்டத்தின் பின்னர் அதனை அங்கீகரித்தார். ஆனாலும், அவரும் அவரது மேட்டிமை அணியும் சஜித்தை தோற்கடிக்க சோபா ஒப்பந்தத்தைப் பேசுபொருளாக்கினர்.

இலங்கை அரசியலில் சிங்கள சமூகத்தின் மத்தியில் நிலவும் சாதி அமைப்புக்கு வலுவான ஒரு தாக்கம் இன்னும் உள்ளது என்பதை இந்தப் பிளவு காட்டுகின்றது. சமீபத்திய தொலைக்காட்சி உரையாடலொன்றில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் கோத்தாவை விட சஜித் 10 வீதத்தால் முன்னணியில் இருந்ததாகவும் குண்டு வெடிப்புக்குப் பின்னர் 10 வீதத்தால் அவர் பின்தள்ளப்பட்டார் என்றும் ரணில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ரணிலின் ஆட்சியிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. பின்னர் நிகழ்ந்த தலைமைத்துவப் போராட்டத்திலும் சஜித் தோற்கடிப்பட்டார். அதனால், கட்சி பிளவுபட்டமை மொட்டு அணியினருக்கு வாய்ப்பாகியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஐ.தே.க. தலைமையில் மாற்றம் நடந்திருந்தால் அதன் தலைவிதி வேறு வகையில் அமைந்திருக்கும்.

நீண்ட காலத்திற்குப் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய அக்கட்சி அதனை தக்க வைக்கத் தெரியாமல் நழுவ விட்டமைக்கு ரணிலே பிரதான காரணம். ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத ரணில் போன்ற தலைவர்களால் ஐ.தே.க. தோற்று விட்டது. யானை கூன் விழுந்து குடை சாய்ந்துள்ளது.

கட்சியைப் புனரமைப்போம் என்று அதன் பொதுச் செயலாளர் அகில விராஜ் தேர்தலுக்குப் பின்னர் அறிக்கை விட்டாலும் ஸ்ரீகொத்தா இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு அருங்காட்சியகமாகவே இருக்கப் போகின்றது. ரணில் அரசியல் வரலாற்றின் குப்பை கூடத்திற்குள் கசக்கி எறியப்பட்டு விட்டார். ஐ.தே.க.வின் தோல்வியிலிருந்து முஸ்லிம்கள் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

1946 செப்டம்பர் 06 இல் முழுச் சுதந்திரம் பெறும் நோக்கில் டி.எஸ். சேனாநாயக்க இந்தக் கட்சியை ஆரம்பித்த போது ரீ.பி. ஜாயா, சேர் ராஸிக் பரீத், டாக்டர் எம்.சி.எம். கலீல், சேர் மாக்கான் மாக்கார் போன்ற தலைவர்கள் ஐ.தே.க.வின் உருவாக்கத்திற்குக் காலாய் இருந்தார்கள். சிறுபான்மைச் சமூகங்களை இணைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட ஐ.தே.க. இலங்கையை பலமுறை ஆட்சி செய்துள்ளது. அதிலிருந்து பிரிந்து சென்றே SWRD பண்டார நாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார்.

1990 களில் நீண்ட காலத்திற்குப் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்று உருமாறியது. சின்னம் கையிலிருந்து வெற்றிலையாகியது. கடந்த மூன்றாண்டுகளில் அக்கட்சி மொட்டாக மலர்ந்தது. இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் யாழ்ப்பாணத்தில் அங்கஜன் என்ற ஒரு தமிழன் தெரிவாகியுள்ளார். அந்தளவுக்கு அதன் விலாசமே இல்லாமல் போய் விட்டது.

டீ.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாஸ, லலித், காமினி திஸாநாயக்க போன்ற பிரபலங்கள் ஆட்டிப் படைத்த ஐ.தே.க. இன்று ரணிலின் தலைமையுடன் முகவரியில்லாமல் அழிந்து போயுள்ளது. முஸ்லிம்களில் இன்னும் பச்சை இரத்தம் ஓடுகின்றவர்கள் மட்டுமன்றி, ஐ.தே.க.வை நம்பி களமிறங்கியவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் யானையின் தோல்வி பல கசப்பான உண்மைகளை உணர்த்தியுள்ளது.

இம்முறை சில மாவட்டங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்தமைக்கு ஐ.தே.க.யின் சில முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கியமையும் காரணமாகும். கொழும்பு மாவட்டம், குருநாகல் மாவட்டம், களுத்துறை மாவட்டம் என்பன இதற்கு உதாரணங்களாகும்.

நடந்து முடிந்த தேர்தலில் தேசிய பட்டியலோடு சேர்த்து 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளபோதும் இதைவிட அதிகமான உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு எமக்கு இருந்தது. அதனை உள்ளகப் பிளவுகளாலும் பிரிவுகளாலும் நாம் இழந்துள்ளோம்.

எடுத்துக் காட்டாக களுத்துறை மாவட்டத்திலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட எங்களால் தெரிவுசெய்ய முடியவில்லை. ஒரு பக்கம் மொட்டு அணியினர். இன்னொரு பக்கம் டொலிபோன் அணியினர். மறுமுனையில் சுயேச்சைக் குழு அங்கத்தவர்கள் என முஸ்லிம் வாக்குகள் பெருமளவு சிதறடிக்கப்பட்டன. களுத்துறை மாவட்டத்திற்கு முஸ்லிம் எம்பிக்களை தெரிவுசெய்ய வேண்டும் என்ற மூலோபாயம் முஸ்லிம்களிடம் இருக்கவில்லை.

ஆளுக்கொரு கட்சி வேளைக்கொரு கொள்கையைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் தூர நோக்கு மற்றும் அரசியல் எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாமல் தேர்தல் கால தெருக் கூத்துக்களில் அள்ளுண்டு போனார்கள். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் வாக்குப் பலம் இருந்தும் ஒருவர் கூட தெரிவாகாமல் இறுதியில் மொட்டுக் கட்சியில் தேசியப் பட்டியிலிருந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இரண்டு பேர் (றவூப் ஹக்கீம், ஹலீம்) தெரிவாகினர். ஆனால், அம்மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் வாக்குகள் மூலம் இன்னும் ஒருவரை தாராளமாக நியமித்திருக்கலாம். சந்தர்ப்பவாதம் அரசியல் ஞானமின்மை, தூரநோக்கின்மை, சுயநலம் போன்ற காரணங்களால் முஸ்லிம் வாக்குகள் இம்மாவட்டத்திலும் செல்லாக் காசாகியது.

மொட்டு, யானை, டெலிபோன், சுயேச்சை என்று பிளவுகள் அதிகரித்ததனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. ஏற்கனவே நாம் குறிப்பிட்ட களுத்துறை மாவட்டத்தில் 45 வாக்குகள் குறைவினால் ஒரு முஸ்லிம் தோற்கடிக்கப்பட்டார். கண்டியிலும் இவ்வாறான மிகக் குறைந்த வாக்குகளால் முஸ்லிம்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

குருநாகல் மாவட்டத்தில் இரண்டு உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் வாக்குப் பலம் முஸ்லிம்களுக்கு இருந்தபோதும் ஒருவரைக் கூட பெற முடியாமல் போனமைக்கான காரணம் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மையும் குருட்டுத்தனமான கட்சி வெறியுமே. இம்மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட சஹாப்தீன் குறிப்பிட்ட சில வாக்குகளோடு தோல்வியுற்றார். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமிருந்த சட்டத்தரணி ஜஹவர்ஷா வெறும் 950 விருப்பு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார்.

தென்னிலங்கையில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைந்தமைக்கு ஜேவிபி கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க முனைந்தமையும் பிரதான காரணமாகும். கொள்கைவாத அரசியல் இலங்கையில் இனி வெல்லப் போவதில்லை என்பதை ஜேவிபி கட்சியின் தோல்வி தெளிவாக உணர்த்தியுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் நடைபெற்ற இறுதித் தேர்தல் இதுவாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள மொட்டு அணியினர் இம்முறையை மாற்றியமைத்து சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கு விகிதாசாரம் மற்றும் தொகுதி என்ற கலப்பு முறையை அரசியல் அமைப்பில் கொண்டு வருவதற்கு துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இச்சூழ்நிலையில் முஸ்லிம்கள் அதிகபட்சம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தே சிந்தித்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக தென்னிலங்கையில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் கூட பாரிய அரசியல் தவறு நிகழ்ந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் களமிறங்கியதால் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்தோம். மேலும் 600 பேர் வாக்களித்திருந்தால் ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெற்றிருப்பார்.

இன்னொரு வகையில் ஹிஸ்புல்லாஹ் களமிறங்காது இருந்திருந்தால் இரு முஸ்லிம்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். அமீர் அலிக்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால், சந்தர்ப்பவாதத்தால் ஒரு பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. இதே சூழ்நிலையை நாம் திருகோணமலை மாவட்டத்திலும் காணலாம்.

இவற்றிலிருந்து நாம் பெறுகின்ற படிப்பினைகள் எதிர்காலத்தில் நமக்குப் பயன்படுமா என்பது சந்தேகமே. காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடைபெற்ற இறுதித் தேர்தல் இதுவென்றே கருதப்படுகின்றது. புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் மிகுந்த புத்திசாலிகள். அவர்கள் ஒன்றிணைந்து தமக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதி வேண்டும் என்ற அரசியல் வேட்கையை பூர்த்தி செய்துள்ளனர். இந்தப் புத்திசாலித்தனம் குருநாகல், களுத்துறை, கம்பஹா போன்ற மாவட்டங்களிலும் செயற்பட்டிருந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.

ஐக்கியப்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற பாடத்தை புத்தளம் முஸ்லிம்கள் கற்றுத் தந்துள்ளனர். தேர்தலுக்குப் பின்னர் முஸ்லிம் அரசியல் அரங்கில் விவாதிக்கப்படும் விவகாரங்களில் ஜேவிபியினருக்கான முஸ்லிம்களின் ஆதரவும் ஒன்றாகும். கொள்கை வாத அரசியலை இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் தீவிரமாக நிராகரித்து வரும் நிலையில் சிறுபான்மைச் சமூகம் அதிலும் குறிப்பாக, சிதறலான வாக்குப் பலம் கொண்ட ஒரு சமூகம் ஆதரிப்பதனால் விளையப் போகும் நன்மை என்ன என்பதும் ஒரு சிக்கலான கேள்வியே. அக்கட்சி கடந்த தேர்தலை விட 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. மூன்றாவது தேசியப் பட்டியல் முஸ்லிம்களின் வாக்குகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதனால் அவர்களது பிரதிநிதித்துவம் அதிகரிக்கவில்லை. அதேவேளை, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் சார்பில் தெரிவாகவுமில்லை. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சுமாராக செல்லுபடியற்றது போன்றே தோன்றுகிறது.

நல்லாட்சி மற்றும் ஊழல் மோசடியற்ற கொள்கைவாத அரசியல் குறிப்பாக, இடதுசாரி அரசியல் இலங்கையில் தனது களத்தை இழந்து கனகாலமாகிவிட்டது. தினேஷ், வாசுதேவ போன்ற இடதுசாரி ஜாம்பவான்களே இன்று தீவிர வலதுசாரி இனத் தேசியவாதம் பேசும் சூழலில் இடது சாரிகளுக்கான காலம் இன்னும் கனியவில்லை. உரிமை அரசியல் எப்படிப் போனாலும் குறைந்தபட்சம் அவிபிருத்தி அரசியலையேனும் சாத்தியப்படுத்துவதற்கு நமது சமூகம் சார்பாக செயல்படும் அரசியல் பிரதிநிதிகளே இப்போது நமக்குத் தேவை.

எதிர்வரும் ஐந்தாண்டுகள் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் எதிர்க்கட்சியில் இருக்கப் போகிறார்களா அணி தாவி அரசியல் நடத்தப் போகிறார்களா என்பதைக் கூட ஊகிக்க முடியாத அளவுக்கு சந்தர்ப்பவாதம் மற்றும் சுயநலத்தால் நமது அரசியல் சூழல் மாசுபட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் எதிர்வரும் ஒரு தசாப்தம் நாட்டின் அரசியல் போக்குகள் முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரும் அறைகூவலாக இருக்கம் என்பதில் சந்தேகமில்லை. கட்சி, கொள்கைவாதம், கோட்பாட்டு அரசியல் என்பவற்றை ஒரு புறம் வைத்து விட்டு, முஸ்லிம் சமூக நலனை மையப்படுத்திய ஒரு மூலோபாய அரசியல் பார்வை அவசியம் என்பதையே மாறி வரும் சூழல் உணர்த்தி நிற்கின்றது.  

About the author

Administrator

Leave a Comment