சுபீட்சத்தை நோக்கிய அமைச்சுக்களின் பணிகளும் விஷேட முன்னுரிமைகளும்

12

ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கமைய அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களும் இராஜாங்க அமைச்சுக்களும் செயற்படும் வகையில் அமைச்சுக்களுக்கான பணிகளும் பொறுப்புக்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. இதற்கேற்ற வகையில் ஒவ்வொரு அமைச்சின் கீழும் அதன் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான இராஜாங்க அமைச்சுக்கள், தொடர்புடைய நிறுவனங்கள், சட்டங்கள் என்பனவும் குறித்துரைக்கப்பட்டுள்ளன. அமைச்சுக்களுக்கும் இராஜாங்க அமைச்சுக்களுக்கும் வெவ்வேறாக நிதி ஒதுக்கப்படும்.

சமூக பொருளாதார விருத்தியின் முன்னுரிமைப்படுத்தப்படும் விடயங்களாக கிராமிய மக்களின் வாழ்வும் கமத்தொழில் பொருளாதாரமும் இனங்காணப்பட்டிருக்கின்றன. அதனால் கிராமிய மற்றும் பிரதேச அலுவலகங்களின் சேவைகள் பலப்படுத்தப்படவுள்ளன. தமது அமைச்சர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் இதற்கான நகர மற்றும் கருத்திட்டத் தொகுதிகளை அமைப்பது சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களது பொறுப்பாகும். அத்தோடு பிரதம கணக்களிப்பு உத்தியோகத்தராகச் செயற்படும் அதிகாரமும் அமைச்சின் செயலாளர்களுக்கு நிதி அமைச்சரினால் வழங்கப்படுகிறது. அந்தவகையில் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்கும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களுக்கான பிரதான பொறுப்புக் கூறுபவராக இருப்பார். அதேபோல இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் தனது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட நிறுவனங்களுக்கான பிரதான பொறுப்புக் கூறுபவராக இருப்பார். அரசியலமைப்பின் 42(2), 44(4) உறுப்புரைகளுக்கமைய அமைச்சரவை அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறுதல் வேண்டும்.

தனது விடய எல்லைக்குரிய இராஜாங்க அமைச்சுக்காகக் கொள்கை ரீதியான வழிகாட்டலை வழங்குவதும், அவற்றின் அமைச்சுப் பத்திரங்களை அமைச்சரவைக்கும் சட்டதிட்டங்களை சட்டவாக்கத் துறைக்கும் சமர்ப்பித்தலும் அதற்குரிய எதிர்காலச் செயற்பாட்டுமுறைகளைப் பின்பற்றுவதும், அவற்றின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதும் தொடராய்வு செய்தலும் அமைச்சரவை அமைச்சருக்கு தனது இராஜாங்க அமைச்சு தொடர்பில் ஒப்படைக்கப்படும் பணிகளாகும்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கினை அடைந்து கொள்ளும் வகையில் 28 அமைச்சுக்களும் 40 இராஜாங்க அமைச்சுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் நேற்று நியமிக்கப்பட்டனர். கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் மாத்திரம் நேற்று நியமிக்கப்படவில்லை.

அமைச்சுக்களுக்கு மேலதிகமாக தேசிய முன்னுரிமைகளுக்காக தேசிய மட்டத்திலான வழிகாட்டல்கள் மற்றும் கூட்டிணைப்புக்காகச் செயற்படும் நிறுவனங்களாக 07 நிறுவனங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

 1. இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் இணைந்த நிறுவனங்கள்
 2. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை மற்றும் இணைந்த நிறுவனங்கள்
 3. இலங்கை கணிணி திடீர் பதிலளித்தல் ஒன்றியம்
 4. இலங்கை முதலீட்டுச் சபை
 5. கொழும்பு துறைமுக நகர கருத்திட்டம்
 6. ஸ்ரீலங்கா டெலிகொம் அதன் நிர்வாகக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகள்
 7. அனைத்து தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்

ஜனாதிபதியால் நிறுவப்பட்ட அனைத்து செயலணிகளுடனும் அதனுடன் தொடர்புடைய அமைச்சுக்கள் இணைந்து செயற்பட வேண்டும். அந்தச் செயலணிகளில், முப்படை உறுப்பினர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்துப் படைகளினால் எடுக்க வேண்டிய செயன்முறைகளை கற்றாராய்ந்து சொல்லப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்குவதற்கான ஜனாதிபதி செயலணி, பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்புமிக்க, குணநெறிமிக்க, சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி, கொவிட் 19 அமைச்சுக்களின் செயலணி, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமையை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி, இலங்கை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி, பொருளாதார புத்தெழுச்சி மற்றுமு் வறுமையை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணி என்பன அடங்குகின்றன.

தேசிய முன்னுரிமைக்கான விடயங்கள்

 • அரசமுறைமைகள் மற்றும் வர்த்தகத் துறைகளை டிஜிட்டல் மயமாக்கல்
 • தேசங்களுக்கிடையில் ஈ-வணிகம் மற்றும் சர்வதேச ஈ-கொடுப்பனவு முறைகளைத் தாபித்தல்
 • தரவுப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் புலமைச் சொத்துக்களின் உரித்து தொடர்பான புதிய சட்டங்களையும் தாபன ரீதியான கட்டமைப்புக்களைம் தாபித்தல்
 • சுற்றாடலில் உணர்வுபூர்வம், தகவல் தொழில்நுட்பம், அறிவு மற்றும் திறன்கள், சுற்றுலாச் சேவைகள் மற்றும் விளையாட்டுத் துறைகளில் இலங்கையின் முக்கியத்துவத்தை உயரச் செய்து கொழும்பு நகரத்தை சர்வதேச வாணிப வர்த்தக மற்றும் நிதிசார் மையமாக அமைப்பதற்குத் தேவையான சட்டரீதியானதும் தாபனரீதியானதுமான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தல்
 • ஏற்றுமதி இறக்குமதி உற்பத்திப் பொருளாதாரத்துக்காக உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டு வசதிகளை விரிவாக்கல்
 • கொழும்பு, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களை தேசிய மற்றும் சர்வதேச பல்துறை மத்திய நிலையங்களாகவும், கண்டி, அநுராதபுரம், கம்பஹா, இரத்தினபுரி, காலி, பதுளை, மன்னார், மட்டக்களப்பு மற்றும் குருநாகல் பிரதேசங்களை தேசிய மத்திய நிலையங்களாகவும் அபிவிருத்தி செய்தல்

அமைச்சுக்களின் விடயப்பரப்பு, கடமைகளும் பணிகளும் மற்றும் விஷேட முன்னுரிமைகள்

பாதுகாப்பு அமைச்சு

தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முன்னுரிமையாகக் கொண்டு இலங்கையின் சகல மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி குற்றவியல்,சமூக விரோத மற்றும் பயங்கரவாதச் செயல்கள் அற்ற சட்டமும் ஒழுங்கும் நிறுவப்பட்டுள்ள ஒரு நாட்டை உருவாக்குதல் இதன் விடயப்பரப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்களை விரிவாக்கும் வகையில் பாதுகாப்புச் சூழலை நாட்டில் உருவாக்குதல் என்பன இந்த அமைச்சின் பணிகளாகும்.போதைப் பொருளிலிருந்து விடுபட்ட நாட்டை உருவாக்குதல் இந்த அமைச்சின் விஷேட முன்னுரிமைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள்,அனர்த்த முகாமை இராஜாங்க அமைச்சு

இந்த அமைச்சின் அதிவிஷேட முன்னுரிமைகளில் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் மக்களை மையமாகக் கொண்ட சேவைகளைப் பலப்படுத்தல், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், பொலிஸ் சேவையின் தரத்தை உயர்த்தல், அரச சார்பற்ற அமைப்புக்களின் ஏற்பாடுகளை ஒழுங்குறுத்தல், குடிவரவு குடியகல்வு நிர்வாக சேவைகளை நவீனமயப்படுத்தலும் வினைத்திறன்மிக்க சேவையை பேணுதலும், இயற்கை அனர்த்தம் தொடர்பான அபாய முகாமைத்துவ றிலையங்கள் மற்றும் நிவாரணச் சேவை நிலையங்களைக் கூட்டிணைத்து கட்டமைப்பைப் பலப்படுத்தல், அனர்த்தங்களை முன்மதிப்பீடு செய்யும் வகையில் வளிமண்டலத் திணைக்களத்தைப் பலப்படுத்தல், தேசிய அனர்த்த தகவல்கள் களஞ்சியம் ஒன்றைத் தாபித்தல், குடிவரவு குடியகல்வு செயற்பாட்டை செயற்திறனாக்குதல் என்பன அடங்குகின்றன.

நிதி அமைச்சு

நிதி அமைச்சின் விஷேட முன்னுரிமைகளாக நிலைபேறான உயர்மட்ட பொருளாதார வளர்ச்சி வீதத்தைப் பேணுதல், தொழிலின்மையைக் குறைத்து தனிநபர் வருமானங்களைக் கூட்டுதல், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல், தேசிய வியாபாரச் சமூகத்துக்குத் தேவையான வர்த்தக சூழலை விரிவாக்குதல் என்பனவும் அடங்குகின்றன.

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு

வங்கிகள், நிதி நிறுவனங்களை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களை செயற்படுத்தல், தேசிய சர்வதேச வர்த்தகப் பிரமுகர்களது வர்த்தக நிறுவனங்களின் பிரதான அலுவலகங்களை கொழும்பு மற்றும் துறைமுக நகரத்தை அண்டிய பிரதேசத்தில் தாபி்ப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்கான பிரசாரங்களை மேற்கொள்ளல் என்பன இதன் விஷேட முன்னுரிமைப்படுத்தலில் அடங்குகின்றன.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சு

விடயப்பரப்பு – அரசியலமைப்பின் புத்த சமயத்துக்கு உரித்தான முன்னுரிமைக்குள் புத்தசமயத்தைக் கட்டிக் காத்து போசித்து ஏனைய சமயங்களுக்கு அளிக்கப்படும் சிறப்புரிமைகளைப் பாதுகாத்தலும், புத்தசமயத்தின் நீண்ட கால உறுதியை முன்னிட்டுச் செயற்படுதலும், இலங்கை அபிமானம் மற்றும் தனித்துவத்தைத் தாபித்துக் கொண்டு வரலாறு,தொல்பொருளியல்,இலக்கியம்,கலை,கலாசார அம்சங்களைப் பாதுகாத்தலும்..

கடமைகளும் பணிகளும் – புத்தசாசனத்தின் முன்னுரிமையைக் கட்டிக் காத்து, அனைத்து சமயங்களதும் சிறப்புரிமைகளைப் பாதுகாத்தல், அனைத்து மதங்களுக்கும் அளிக்கப்படும் சிறப்புரிமைகளைப் பாதுகாத்துக் கொடுத்தலும், மத அடிப்படைவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தலும், ஒவ்வொரு பிரஜையும் பயம் அச்சமின்றி தனது மதத்தை வழிபடுவதற்கான உரித்தை உறுதிப்படுத்துதல்

அதிவிஷேட முன்னுரிமைகள் – கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள விகாரைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கான சகன் உதாவ வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தல், தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டங்களை தேவைக்கேற்றவாறு திருத்தல், அனைத்து மதங்களுக்குரியதாக டிஜிட்டல் தொல்பொருளியல் கலைக்களஞ்சியமொன்றை ஆக்குதல்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

விஷேட முன்னுரிமைகள் – நகர அபிவிருத்தியை மையமாகக் கொண்ட பலவித ஆற்றல்களுடனான தொழில்கள்,வியாபாரங்கள் மற்றும் வருமான வழிகளை விரிவாக்கல், தேசிய நிர்மாணப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கல், கட்டடப் பொருட்கள் கைத்தொழிலை முன்னேற்றல், தொழிலாளர் பற்றாக்குறைக்கு இயன்றளவு தொழில்நுட்பத் தீர்வுகளுக்குச் செல்வதற்கான ஊக்குவிப்புக்களை வழங்குதல், தொழில்கல்வியை சந்தைத் தேவைக்கேற்றவாறு இணைப்பாக்கம் செய்தல், உப ஒப்பந்தக்காரர்களுக்குப் பாதுகாப்பு ஏற்படும் விதத்திலான சட்டதிட்டங்களை அங்கீகரிக்கச் செய்து தேசிய சிறிய மற்றும் நடுத்தர உப ஒப்பந்தக்காரர்களுக்குப் பாதுகாப்பளித்தல்.

நீதி அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – அரசியலமைப்பின் சிக்கல்களை அகற்றி மக்களின் இறைமை,தேசிய பாதுகாப்பு, சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம், மற்றும் நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பை சீர்திருத்தம் செய்தல், நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தோடு தேசிய அடையாளத்தையும் இறைமையையும் பாதுகாக்கும் வகையில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்தல், காலாவதியான சட்டம், செயல்நெறிகள் மற்றும் கட்டளைச் சட்டங்களைச் சீர்திருத்தம் செய்வதற்காக சகல நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்றைத் தாபித்து நடைமுறைப்படுத்தல், நீதிக் கட்டமைப்பின் தாமதங்களைத் தடுப்பதற்கான பொருத்தமான திறமுறையொன்றைத் தயாரித்தல், சிவில் முரண்பாடுகள் நீதிமன்றம் வரை செல்லாமல் தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபைச் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தல், நீதிக் கட்டமைப்பை டிஜிட்டல்மயப்படுத்தல்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர்

சிறைச்சாலைகளில் நெரிசல்களைக் குறைப்பதற்காக பொதுமன்னிப்பு வழங்கும் கொள்கை செயற்பாட்டுக்கு மேலதிகமாக மீளாய்வு செயற்பாடொன்றின் ஊடாக விஷேட மன்னிப்பு வழங்கும் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் இதன் விஷேட முன்னுரிமைகளில் ஒன்றாக அடங்குகின்றது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

நாட்டின் சுயாதீனத்தைப் பாதுகாத்து அந்நிய நாடுகளுடன் சமநட்பைப் பேணுதல், இதுவரை ஏற்படுத்திக் கொண்டுள்ள இருதரப்பு உடன்படிக்கைகளை மீண்டும் மீளாய்வு செய்து நாட்டுக்கு ஒவ்வாத உடன்படிக்கை தொடர்பாக மீண்டும் ஆராய்தல் மற்றும் உடன்படிக்கைகளுக்கு உட்படும் போது தேசிய பொருளாதாரத்துக்கு இடையூறில்லாத பின்புலத்தைத் தயாரித்தல் இதன் விஷேட முன்னுரிமைகளில் அடங்குகின்றன.

பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு

விஷேட முன்னுரிமைகள் – ஆசிய நாடுகளுடன் வலுவான முறையில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை விஸ்தரித்துக் கொள்ளல், சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்தல், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுடன் வர்த்தக, சுற்றுலா, முதலீட்டு மற்றும் தொழிற்சந்தை உறவுகளை ஏற்படுத்தல், இலங்கை வியாபாரிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள பண்டங்கள் மற்றும் சேவைகள் சந்தைகளுக்காக உள்ள பல்வேறு தடைகளை நீக்குவதற்கு நேரடிப் பங்களிப்பை வழங்குதல்…

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு

விஷேட முன்னுரிமைகள் – அரச சேவையைத் துரிதப்படுத்துவதற்காக ஏற்கனவே அரச துறையிலுள்ள சகல சுற்றறிக்கை ஏற்பாடுகள், சட்டங்கள், பிரமாணங்கள் என்பவற்றை மீளாய்வு செய்து அவற்றை இலகுபடுத்தல், அரச உத்தியோகத்தர் என்ற சிந்தனையிலிருந்து மக்கள்­ சேவை சிந்தனையை நோக்கி அரசசேவையை வழிநடத்தல், சுயாதீனமான அரச சேவையொன்றை ஏற்படுத்துவதற்குத் தேவையான சேவைகள் மற்றும் ஒழுக்கக் கோவையொன்றை அறிமுகப்படுத்தல், புதிய சேவைப் பிரமாணக் குறிப்புக்களை அறிமுகப்படுத்தலும் இற்றைப்படுத்தலும், நீண்டகால மனித வளத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்…

(நாளை தொடரும்)