ஐதேகவுக்கு இளைய தலைவர் ஒருவரை நியமிக்கத் தீர்மானம்

8

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை கூடியது. இதில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அலசப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட பலரும் கட்சிக்கு புதிய தலைமை ஒன்றை வழங்குவதற்காக கட்சி அங்கத்தவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருத்து வெளியிட்டனர்.

இந்த வகையில் தலைமைக்கான எதிர்பார்ப்புள்ளவர்கள் அனைவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு அது தொடர்பில் கட்சி அங்கத்தவர்களதும் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து தேசிய எதிர்பார்ப்புகளையும் அடையாளம் கண்டுள்ள இளம் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப தெரிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் சுயமாக முன்வருபவர்களில் இருந்து நாட்டுக்கும் கட்சிக்கும் பொருத்தமான இளம் தலைவர் ஒருவர் தெரிந்தெடுக்கப்படவுள்ளார்.

அதன் முதற்கட்டமாக கட்சியின் இளம் தலைவர்களுக்கு புதிய பொறுப்புக்களை கொடுத்துச் செயற்படுத்துவதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்படும். இதில் வெற்றிகரமாகத் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுகின்ற, கட்சி அங்கத்தவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணுகின்றவர்களைக் கருத்தில் கொண்டு கட்சி மற்றும் கட்சி அங்கத்தவர்களுள் இருந்து உருவாகும் இளம் தலைவர் ஒருவருக்கு வெகுவிரைவில் தலைமைத்துவம் ஒப்படைக்கப்படவுள்ளது என ஐதேகவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.