சுபீட்சத்தை நோக்கிய அமைச்சுக்களின் பணிகளும் விஷேட முன்னுரிமைகளும்

48

நேற்றைய தொடர்

கல்வி அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – முன்பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வியைப் பூர்த்தி செய்யும் வரையில் தெளிவான வழிகாட்டல் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு கொள்கைரீதியான வழிகாட்டல்களைச் செய்தல், கல்விச் சீர்திருத்தமொன்றை ஏற்படுத்துவதற்குத் தேவையான கொள்கைரீதியான சட்டகமொன்றைத் தாபித்தல், பாடசாலை ஆசிரியர்களின் நிர்வாகச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்ப்பதற்காக தற்போது நிலவும் நிறுவனக் கட்டமைப்பை செயற்திறனாகச் செயற்படுத்துவதற்கான விஷேட மேற்பார்வைப் பிரிவொன்றை செயற்படுத்தல், பாடசாலைத் தேவைப்பாடு தொடர்பாக மீண்டும் மீளாய்வொன்றைச் செய்து அதன்படி பாடசாலைக் கட்டமைப்பை மீள்திருத்தியமைத்தல், விடய வெளிவாரிச் செயற்பாடுகளை பாடசாலைகளினுள் பிரபல்யப்படுத்துவதற்கு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், பல்கலைக்கழக அனுமதிக்காகச் செலவாகும் காலத்தைக் குறைத்தல், உள்நாட்டு வெளிநாட்டு தொழிற்சந்தையை நோக்காகக் கொண்டு பட்டதாரிகளை உருவாக்குவதற்காக ஒட்டுமொத்த கல்விச் சீர்திருத்தக் கொள்கையினுள் பாடவிதானங்களைச் சீர்திருத்தம் செய்தல், மகாபொல நிதியை அதிகரித்தல், சமுத்திரப் பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகங்களை விரிவாக்கல், சகல அரச பல்கலைக்கழகங்களையும் சர்வதேச தரப்படுத்தலின் உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தல், பல்கலைக்கழகக் கல்வியினுள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக வசதிகளை உருவாக்கல், பகிடிவதைக் கலாசாரத்தை இல்லாதொழித்தல், ஸ்மார்ட் கல்விப் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு

விஷேட முன்னுரிமைகள் – ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தல், தாய்ப் பாசத்தினுள் பிள்ளைகளைப் பாதுகாத்தல் மற்றும் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதற்காக மகளிருக்குத் தேவையான அறிவு, ஆற்றல்கள் மற்றும் காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான முறையொன்றைத் தாபித்தல், சர்வதேச சிறுவர் உரிமைகள் பிரகடனத்துக்கமைய சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்தல், பிள்ளைகள் தொடர்பாக தாமதமாகிக் கொண்டிருக்கும் சகல வழக்குகளையும் தீர்ப்பதற்காக சகல மாவட்ட நீதிமன்றங்களிலும் தனியான பிரிவொன்றை ஒஒதுக்குதல், சிறுவர் இல்லங்களில் இருக்கும் பி்ள்ளைகளுக்கான முறையொன்றைத் தாபித்தல், சிறுவர் நேய பாடசாலை எண்ணக்கருவை விருத்தி செய்தல், அரச ஒழுங்குறுத்தலின் கீழ் முன்பள்ளிக் கல்வியை விரிவாக்குதல், கிராமிய பாடசாலைகளை மாணவர்களின் கவர்ச்சிக்குள்ளான பாடசாலைகளாக மாற்றுதல், சகல பாடசாலைகளிலும் வகுப்பறைகள் மற்றும் உபகரணங்கள் துப்பரவேற்பாடு, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஓய்விடங்கள், சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக விஷேட செயற்திட்டமொன்றைச் செயற்படுத்தல், பாடசாலைப் பாடப்புத்தகங்கள், பாடவிதானங்கள், ஆசிரியர் கைநூல்கள் போன்றவற்றை தகவல் தொழில்நுட்ப முறை மூலம் வெளிப்படுத்தல், கொத்தணி பாடசாலைத் தொகுப்பொன்றைத் தாபித்தல்..

திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சு

விஷேட முன்னுரிமைகள் – கல்வித் தகுதியைக் கருத்திற் கொள்ளாது தொழில்நுட்ப மற்றும் உயர்தொழில் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்காக புதிய வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்தல், தற்போதுள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களை முறையாக மதிப்பீடு செய்து பொருத்தமான நிறுவனங்களை பௌதீக மற்றும் பாடவிதானங்களை முழுமையாக நவீனமயப்படுத்தி (One TVET) எண்ணக்கருவின் கீழ் அந்நிறுவனங்களை வலையமைப்புச் செய்து தொழில்நுட்பப் பட்டப்படிப்பு நிறுவனங்களாக மாற்றுதல், நாடு பூராகவும் நவீன தொழில்நுட்ப மற்றும் பொறிசார் பல்கலைக்கழகக் கற்கை நிலையங்கள் தொகுதியொன்றை ஆரம்பித்தல், ஜேர்மன் பொறிசார் கல்விநிலையத்தை விரிவாக்கல், தற்போதுள்ள தேசிய தொழில் மட்டத்தை (NVQ) மட்டம் 7 இலிருந்து மட்டம் 10 வரை அதிகரிக்கச் செய்தலும் இதற்கமைவாக இலங்கைத் தகைமைச் சட்டகத்தை (SLQF) மறுசீரமைத்தலும், தொழில் கல்வியை பட்டப்பின் பட்டப்படிப்பு மட்டம் வரை கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல், தொழிற்கல்வி மற்றும் தொழில்சார் துறையை ஒன்றிணைத்து தகவல் தொழில்நுட்ப ஆங்கில மற்றும் ஏனைய மொழி அறிவுகளை உள்ளடக்கி தொழிற்கல்வி பாடவிதானத்தை சீரமைத்தல், தகவல் தொழில்நுட்ப தொழில்முயற்சியாளர்களை உருவாக்குதல், சர்வதேச இணையங்களுடன் தொடர்புபட்ட உதிரிப் பாகங்கள், புலமை, உயிரினத் தொழில் நுட்பம், ரொபோ தொழில்நுட்பம், ஒக்மன்டட் ரியலிட்டி, க்லவுட் கம்பியூட்டிங், நனோ தொழில் நுட்பம், முப்பரிமாண அச்சு போன்ற நவீன தொழில்நுட்பப் பாவனையை உச்ச அளவுக்குக் கொண்டு வருதல், ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது புத்தாக்கங்களைக் கண்டு பிடித்தல் மற்றும் ஆராய்ச்சிகளின் ஆக்கபூர்வமான உரிமைகளை உறுதிப்படுத்தும் உரிமைப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையை ஒழுங்கமைத்தல், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கு ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு வசதிகளை வழங்கல், ஆராய்ச்சிகளுக்குப் பங்களிப்பு வழங்கும் தனியார் தொழில் முயற்சியாளர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குதல்….

அறநெறிப் பாடசாலைகள், பிக்குமார் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – இளம் பிக்குகளின் ஆங்கில மொழி அறிவாற்றல், கணிணி மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக நவீன கல்வி வேலைத்திட்டமொன்றைத் தயாரித்துச் செயல்படுத்தல், மாணவ பி்க்குகளின் கல்விச் செலவைப் பூரணப்படுத்துவதற்கு மாதாந்த அனுசரணை பங்களிப்பு முறையொன்றை அறிமுகப்படுத்தல், சகல மதங்களினதும் அறநெறிப் பாடசாலைகளின் குறைபாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக மாகாண சபையுடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்தல்..

சுகாதார அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – தனியார் மருத்துவச் சேவைகள் மற்றும் பரிசோதனை ஆய்வுகூடப் பணிகளை தேசிய கொள்கைத் திட்டத்தினுள் உள்ளடக்கி அதனை ஒழுங்குபடுத்தலும் முறையான சேவையொன்றை வழங்கக் கூடிய வகையில் அதற்கான செயற்திட்டமொன்றைத் தயாரித்தலும்,  நவீன தொழில்நுட்பத்தினூடாக நோயாளர்களின் காத்திருப்புப் பட்டியல், நீண்ட வரிசைகள் உட்பட நோயாளர் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல், கொழும்பு தேசிய வைத்தியசாலையை சர்வதேச தரத்துக்குத் தரமுயர்த்துதல், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு வைத்தியசாலையைத் தெரிவு செய்து தேசிய மட்டத்துக்குத் தரமுயர்த்தல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிபுணர்களை இலங்கையில் தொடர்ந்தும் இருக்கச் செய்தலும் அதற்குத் தேவையான தொழில்சார் வசதிகளை மேம்படுத்தலும், அரச மற்றும் தனியார் மருத்துவ சுகாதார நிறுவனங்களை ISO தரச்சான்றிதழ் மட்டத்துக்கு உயர்த்துதல்..  

சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூகச் சுகாதார இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – ஆயுர்வேத கல்வியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக சந்தர்ப்பத்தினை வழங்கல், சுதேச மருத்துவர்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளைத் தயாரித்தல், சுதேச மருத்துவ ஔடதக் கோவையை இற்றைப்படுத்தல், ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், மூலிகைச் செடிகளை வளர்ப்பதற்கு வசதி செய்து கொடுத்தல், நச்சற்ற உணவுப்பழக்கங்களை பயிற்றுவித்தல், தொற்றுநோய்களை இனம்காணுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தல்..

தொழில் அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – தொழிலாளர்களின் விடயத்துடன் தொடர்புபட்ட சகல சுற்று நிருபங்கள், சட்டங்கள், சட்டமூலங்கள், பிரமாணங்கள் என்பவற்றை மீளாய்வு செய்து தற்காலத்துக்குப் பொருத்தமான வகையில் ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான திருத்தங்களை மேற்கொள்ளல், ஊழியர் நம்பி்க்கைப் பொறுப்பு நிதியத்துக்கு மேலதிகமாக ஊழியர்களின் ஓய்வு காலத்தைப் பாதுகாக்கக் கூடிய பங்களிப்புடனான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தல்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை இலகுவாக்கும் வகையில் வங்கிகளை நெருக்கமாக்குதல், தாயகம் திரும்பியபின் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க விஷேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தனியார் முகவர் நிறுவனங்களை உரியவாறு ஒழுங்குபடுத்தல்..

சுற்றாடல் அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – நிலைபேறான சூழல் கோட்பாட்டை பாடசாலைக் கல்வி தொடக்கம் சமூகத்துக்கு மத்தியில் நிலைகொள்ளச் செய்தல், சூழல் மற்றும் வனசீவராசிகளைப் பாதுகாப்பதற்காக அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையை மீளாய்வு செய்து நடைமுறைப்படுத்தலை இலகுபடுத்தல்…

வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – வனசீவராசிகளின் பாதுகாப்புக்குத் தேவையான வனப்பூங்காக்களையும் நீர்த்தேக்கங்களையும் வனஜீவராசிகளின் உணவுக்கான பயிர்களையும் வளர்த்தல், காடுகள் வளர்ப்பினை அதிகரிப்பதன் மூலம் காடுகளின் அடர்த்தியை உயர்மட்டத்துக்குக் கொண்டு செல்வதற்காக வீட்டுத் தோட்டங்கள், பாடசாலை வளவுகள், அலுவலக வளவுகள் மற்றும் வைத்தியசாலைகளிலும் வீதிகளின் இருமருங்கிலும் நகர்ப்புறப் பூங்காக்களிலும் மரநடுகையை மேற்கொள்ளல்..

வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – பசுமை உள்வாங்கலை விஸ்தரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், சதுப்பு நிலங்கள் மற்றும் கண்டல் தாவரங்களை மனித அழிவுச் செயற்பாடுகளில் இருந்து பாதுகாத்தல், கைத்தொழிற்சாலைகளை அண்மித்தும் நகர்ப்புறங்களிலும் நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் காட்டு மரங்களை நடுதலும் அரச அலுவலக வளவுகளிலும் தொடர்மாடி வளவுகளிலும் மரக்கன்றுகளை நடுதலும் வீட்டுத் தோட்டங்களில் மரக்கன்றுகள் நாட்டுவதை ஊக்குவித்தலும், ஆறுகள் மற்றும் அதனை அண்மித்த இடங்களில் மணல் அகழ்வதற்கான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல், வனசீவராசிகளின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட காணிகளைப் பாதகாத்தல்…

நெல்,தானிய வகைகள்,சேதன உணவுகள், மரக்கறிகள்,பழவகைகள்,மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு

விஷேட முன்னுரிமைகள் – சேதன மரக்கறி மற்றும் பழங்களுக்கான நுகர்வினைக் குடும்ப மட்டத்தில் விரிவுபடுத்துவதற்காக இருபது இலட்சம் வீட்டுத் தோட்ட விவசாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல், செத்தல் மிளகாய், சோளம், சோயா, பயறு, கௌபீ, வெங்காயம், உருளைக்கிழங்கு இறக்குமதிகளைக் குறைத்தல், மேலதிக உற்பத்திகளை பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதற்கான செயற்திட்டமொன்றை வகுத்தல்…

கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சு

விஷேட முன்னுரிமைகள் – கால்நடை உற்பத்திகளை அதிகரித்து ஏற்றுமதி செய்ய ஊக்குவித்தல், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல்,…

நீர்ப்பாசன அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – உமாஓயா பல்துறை நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை துரிதமாகத் தயார்படுத்தல், மொரகஹகந்த, களுகங்கை சார்ந்த நீர்ப்பாசனத் தொகுதியை விரிவாக்கி வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் விநியோகத்தை விரிவாக்குதல், கிங், நில்வலா மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட பிரதான நீர்த்திட்டங்களை துரித நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் செயற்படுத்தல்….

மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – மகாவலி வலயக் குடியிருப்புக்களில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விற்பனைச் சந்தை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், மகாவலி வலயங்களில் உச்ச பட்ச விவசாய உற்பத்திச் செயற்பாடுகளுக்காக காணிகளை உபயோகித்தலும் முதலீடுகளை விருத்தி செய்தலும்…

காணி அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – தச்சுத் தொழில், பிரம்புத் தொழில், பன்புல் கைத்தொழில் சார்ந்ததாகவுள்ள மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு கூட்டுறவு முறையொன்றின் கீழ் குறைபயன்பாட்டிலுள்ள அரசகாணிகளை நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் அந்த மூலப் பொருட்களைப் பயிரிடுவதற்கான வாய்ப்புக்களை ஊக்குவித்தல், மகாவலி, உமாஓயா, மொரகஹகந்த போன்ற பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள், வீடுகள், ஏனைய சொத்துக்கள், காணிகள், விவசாயக் காணிகள் என்பவை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு துரிதமாக இழப்பீடுகளை வழங்குதல், அரசினால் கையேற்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை பயிர்ச் செய்கைக்காக குத்தகை அடிப்படையில் வழங்குதல், பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அரச பண்ணைகளுக்கும் ஒதுக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்படாதுள்ள காணிகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிராக்கியுள்ள பூக்களையும் சேதனப் பயிர்களையும் காலநிலைக்குப் பொருத்தமான மேலதிக உணவுகளையும் பயிரிடுதல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் காரணிகள் மற்றும் இயற்கை வளம் கொண்ட எதிர்கால நகரமயப்படுத்தல் தேவைகளைக் கருத்திற் கொண்டு காணிகள் பயன்பாட்டுக்கான தேசியக் கொள்கையொன்றை வகுத்தல், காணிகள் தொடர்பான தகவல்களை இற்றைப்படுத்தலும் அதற்கான கட்டமைப்பை முன்னெடுத்தலும், காணி கையேற்றல் செயற்பாடு மற்றும் காணிகளை வழங்கும் செயற்பாடு என்பவற்றை மீளாய்வு செய்து காணிகளற்ற குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் அபிவிருத்தி முதலீட்டுக் கருத்திட்டங்கள் உட்பட காணிகளைத் துரிதமாக விடுவிப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல், பிம்சவிய காணி உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தல், நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான காணிகளை விரைவாகவும் உரியவாறும் பெற்றுக் கொடுத்தல்..

காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – பிம்சவிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச காணிகளைப் பெற்றவர்களின் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக சரியான முறையில் அளவைகளை மேற்கொண்டு கொடுப்பனவுப் பத்திரங்களை வழங்கலைத் துரிதப்படுத்துவதற்கான வழிமுறையொன்றை நடைமுறைப்படுத்தல், இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கருத்திட்டமாக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கி ஒரு இலட்சம் காணித் துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்குதல், பாவனைக்குட்படாத மற்றும் குறைபயன்பாட்டுக் காணிகளை உச்ச பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்கல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரச அபிவிருத்தித் திட்டங்களினால் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக் காணிகளை அல்லது இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல், அரச தொழில் முயற்சிகளுக்கான காணிகள் மற்றும் சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்..

கடற்றொழில் அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் –  கரையோரப் பிரதேசங்களில் மீன்களின் தொகை அளவினைக் கூட்டுவதற்காக விஞ்ஞான ரீதியிலான முறையொன்றை அறிமுகப்படுத்தல், கடற்தொழில் துறைமுகங்களை நவீனமயப்படுத்தலும் தேவைப்பாட்டுக்கமைய புதிய துறைமுகங்களை நிர்மாணித்தலும், ரின்மீன் கைத்தொழிலை மேம்படுத்தல், வடக்கு கிழக்கு கடலில் அத்துமீறி மீன்பிடித்தலை இல்லாதொழித்தலும் கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகளை பலப்படுத்துவதற்காக இந்தியாவுடனான முரண்பாட்டைத் தீர்த்தல் …..

பெருந்தோட்ட அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – தேயிலை, இரப்பர் மற்றும் தெங்கு நடுகை செய்யப்பட்டுள்ள காணிகளைத் துண்டித்து குடியிருப்புகளாக்குவதை முற்றாகத் தடை செய்தல்…

ஊடக அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – மாகாண அடிப்படையில் ஊடக சங்கங்களை நிறுவுதல், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் சமூக கலாச்சாரப் பெறுமதிகளையும் சமூக விழுமியக் கட்டமைப்புக்களையும் மீறாதவாறு செயற்படுவதற்கான பின்னணியை உருவாக்குதல், இலங்கைப் பத்திரிகையாளர் சபையை மறுசீரமைத்தல்…

தபால் சேவை, ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – சமூக ஊடக வலைத்தளங்கள் உட்பட புதிய ஊடகப் பாவனையும் அவற்றின் செயற்பாடுகளும் தொடர்பில் அறிவினையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் வகையில் சமூகக் கற்கைகளுக்கான செயன்முறையொன்றை அறிமுகப்படுத்தல், சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் ஊடகத்துறையில் உயர்கல்விக்கான வசதிகளை ஏற்படுத்தல், டிஜிட்டல் தபால் சேவை..

பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – தளபாட உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான நெருக்கடிகளுக்குத் தீர்வாக சுங்கத் தீர்வையற்ற பட்டைகளுடனான மரக்குற்றிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கல்…

இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள், கனிய வளங்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – பெறுமதி சேர்க்கப்படாது ஏற்றுமதி செய்யப்படும் இரத்தினக்கற்கள் மற்றும் கனியவள ஏற்றுமதியை மட்டுப்படுத்தி அதனுடன் சார்ந்த கைத்தொழில் துறைகளுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட உச்ச அளவிலான ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஏற்றுமதி உற்பத்திகளாக அவற்றை மாற்றியமைத்தல், பட்டை தீட்டப்பட்ட இரத்தினக்கல் ஏற்றுமதிக்குப் பதிலாக இரத்தினக்கற்கள் அடங்கிய தங்க ஆபரண உற்பத்திகளை மேற்கொள்வதற்கான நவீன தொழில்நுட்பக் கருவிகளை இறக்குமதி செய்ய வரிச்சலுகை வழங்கல், அனுமதிப்பத்திர செயற்பாட்டினை இலகுபடுத்தல்…

பற்றிக், கைத்தறித் துணிகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – இலங்கையை வெளிநாட்டுச் சந்தையில் ஆடை உற்பத்தியில் முன்னணி நாடாக மாற்றும் வேலைத்திட்டம், ஆடைகளை விற்பனை செய்வற்கான நகரமொன்றை ஏற்படுத்தல், அதிதொழில்நுட்பத்துடனான உற்பத்திகளை புதிதாக ஆரம்பிப்பதற்கு வசதி செய்து கொடுத்தல்…

கைத்தொழில் அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – ஏற்கனவே முதலீட்டுச் சபையுடனும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுடனும் ஒருங்கிணைந்து ஏறாவூரில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள கைத் தொழில் பேட்டையை ஆரம்பிப்பதற்கான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குதல், தற்போது நிலத்துக்குக் கீழும் கடலுக்கு அடியிலும் இருப்பதாகக் கருதப்படும் கனிய வளங்களை ஆய்வு செய்து அவற்றை உற்பத்தி செய்வதற்கான செயற்பாட்டைப் பலப்படுத்தல்…

கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு

அதிவிஷேட முன்னுரிமைகள் – கூட்டுறவுக் கட்டமைப்பினை பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தக மாதிரியொன்றின் கீழ் இலாபமீட்டும் நிறுவன வலைப்பின்னலாக மாற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றறைத் தாபித்தல்…