பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 17 இல் ஆரம்பம்

20

பல்கலைக்கழகங்களின் வழமையான செயற்பாடுகள் 17 ஆம் திகதி தி்ங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 காரணமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மே மாதம் முதலே மூன்று கட்டங்களில் ஆரம்பமாகியது. தொடர்ந்து மருத்துவ பீடங்கள் ஜூன் 15 இலும் ஏனைய பீடங்களின் இறுதி ஆண்டுகள் ஜூன் 22 இலும் ஆரம்பமாகின. பின்னர் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்காக ஜூலை 06 ஆம் திகதி பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களது கல்வி நடவடிக்கைகளுக்குமாக பல்கலைக்கழகம் திறந்து விடப்படவுள்ளது.

பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் மாணவர்களுக்கான இணையவழி கல்வி நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக நடத்திச் செல்லப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

விடுதிகளில் தங்குவதற்காக விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை வரையறைகளும் நீக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரே பீடத்தைச் சேர்ந்த ஒரே வருட மாணவர்கள் ஒன்றாகத் தங்குதவற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு விடுதிகளுக்கு மாணவர்களைப் பார்வையிட வருவதை முடிந்தளவு கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.