Features அரசியல்

நாட்டின் எதிர்காலத்துக்குத் தீர்வு தராத தேர்தல் முடிவுகள்

Written by Administrator
  • குசல் பெரேரா

தேர்தல் முடிவுகள் ஆச்சரியமானவையல்ல. நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் நீட்சியாகவே நான் இதனைக் கருதுகிறேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புதிய கட்சியாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் தற்போதைய மோசடி நிறைந்த சந்தைப் பொருளாதாரத்துக்குப் பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பரிணாமமாகவே அதனைக் கருத முடிகிறது. இதனுடைய அடிப்படை சிங்கள பௌத்த தேசியவாதத்திலேயே தங்கி இருக்கிறது. இது இந்தியாவில் மோடியின் இந்துத்துவத் தேசியவாதத்தின் அடிப்படையிலான அரசியலுக்குச் சமனானது. ராஜபக்ஷாக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அந்தச் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையிலான அரசியலினாலேயே  தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டது போலவே இந்தப் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெறுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அரசியலுக்குப் புதியவரல்ல. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மட்டுமன்றி அரசியல் பேச்சாளராகவுமிருந்தார். 19 ஆவது அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாவதற்கு இடமில்லாமல் போனபோது கோதாபய ராஜபக்ஷவே சிங்கள பௌத்த பெரும்பான்மையின் எதிர்பார்ப்பாக இருந்தார். அதனால் கோதாபய என்பவர் அரசியலுக்குப் புதியவரல்ல. மஹிந்தவும் கோதாவும் ஏக காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள்.

ராஜபக்ஷ முகாமின் வெற்றிக்கான பிரதான காரணமாக பலரும் யுத்தத்தைச் சொன்னாலும் இம்முறை தேர்தல் பிரச்சாரங்களின் போது யுத்த வெற்றி பற்றிப் பேசவுமில்லை. யுத்த வெற்றிக்காக வாக்குத் தருமாறு கேட்கவுமில்லை. ஆனால் பெரும்பாலான சிங்கள பௌத்த மக்களின் தானைத் தலைவர்களாக மக்கள் மஹிந்தவையும் கோதாவையும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சிங்கள பௌத்த ஆதிக்கக் கருத்துப் போக்குக்கு மாற்றீடாக ஏனைய இனங்களையும் மதங்களையும் முன்வைக்கும் மாற்று அரசியலொன்று எதிர்க்கட்சியிடமும் இருக்கவில்லை. அதனால் சிங்கள பௌத்த ஆதிக்கவாதம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்றும் முயற்சி்ப்பதெல்லாம் ராஜபக்ஷாக்களின் பெரும்பான்மைப் பலத்திலிருந்து சில வாக்குகளை இழுத்தெடுப்பதற்கு மட்டுமே. எதிர்க்கட்சிக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லாததால் சிங்கள பௌத்த பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான மேலாண்மைச் சக்தி அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மறுபுறத்தில் அதற்கான ஆளுமைமிக்க தலைமையொன்று ராஜபக்ஷ என்ற பெயரில் இருக்கிறது.

ராஜபக்ஷாக்களின் சிங்கள பௌத்த வாக்குத் தளத்தை குலுக்குவதற்கு எதிர்க்கட்சி எடுத்த முதல் முயற்சியல்ல இது. 2010 யுத்த வெற்றியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜேவிபியும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அதற்காக முயற்சி செய்தது. அது வெற்றியளிக்கவில்லை. 2015 இல் யுத்த வெற்றி அல்லாத வேறு காரணங்களும் தாக்கம் செலுத்தியதாலும் தமிழ் முஸ்லிம் வாக்குகள் நல்லாட்சி முகாமுக்குக் கிடைத்ததாலும் தான் அந்த முயற்சி கஷ்டப்பட்டேனும் வெற்றியளித்தது. ஆனாலும் அதே வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தனியாகப் போட்டியிட்டு 95 ஆசனங்களை வென்றெடுத்தார். பெரும்பான்மைச் சிங்கள பௌத்த பலத்தை தம்மால் பெற்றுக் கொள்ள முடியுமென் அவர் அந்தத் தேர்தலில் நிரூபித்தார். மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதி என்ற வகையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் மஹிந்த வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவியைக் கொடுக்க மாட்டேன் எனச் சூளுரைத்திருந்த பின்னணியிலேயே அவர் இந்த 95 ஆசனங்களையும் வென்று காட்டினார். ஐதேக அவ்வேளை ஆட்சியில் இருந்த போதும் அவர்களுக்கு இந்தத் தேர்தலில் 106 ஆசனங்களையே பெற முடிந்தது. அதிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ நல்லாட்சியின் ஒவ்வொரு தவறையும் விமர்சிக்கத் தொடங்கி பெரும்பான்மைப் பலத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். இந்தப் பெரும்பான்மைப் பலத்தின் நீட்சி தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இம்முறைய பொதுத் தேர்தலிலும் பெற்றுக் கொண்ட வெற்றியாகும்.

மஹிந்தவினதும் கோதாவினதும் அரசியல் பயணம் முடிந்ததன் பின்னர் ராஜபக்ஷ முகாமுக்கு சிங்கள பௌத்த தேசியவாத முகாமை அதேவிதத்தில் தொடர முடியுமா என்பது இப்போது சொல்ல முடியாது. இன்னொருவகையில் அரசியல் தொடர்பில் அவ்வாறு கணக்கிடவும் முடியாது. முன்னால் எதிர்நோக்கவுள்ள நெருக்கடிகள், அவற்றின்போது சிங்கள பௌத்த அடையாளங்களுக்கு மேலதிகமாக ஏனைய பிரச்சினைகள் எழுந்து அவற்றை எதிர்கொள்கின்ற விதம் போன்ற காரணங்களால் மாற்றங்கள் ஏற்பட முடியும். அடுத்ததாக வரவிருப்பது பலரும் எதிர்பார்ப்பது போல மஹிந்த கோதா முரண்பாடு அல்ல. இந்த வாதத்தை முன்வைக்கும் பலர் இந்தப் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தவரையில் பிரதமர் மஹிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவார் எனவும் அந்த வகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் எனவும் 19 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லுகின்ற காரணங்களை முன்வைக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு அதிகாரப் போட்டி நிலவும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் 19 ஆவதை திருத்தத்தை எதிர்ப்பதற்காகவே வாக்களித்தார்கள். 19 உருவாக்கிய கண்காட்சி ஜனாதிபதியை விட அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரை மக்கள் வேண்டினார்கள். அந்த வகையில் 19 ஆவது திருத்தம் காலாவதியாகிறது. கோதாபய ராஜபக்ஷ வேலை செய்வதற்கு பெரும்பான்மைப் பலம் கொண்ட பாராளுமன்றமொன்றை மக்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அரசாங்கம் தவறான வழியில் செல்லும் என்று மக்கள் நினைத்திருந்தால் இப்படியானதொரு பாரிய பலம் கிடைத்திருக்காது. பெரும்பான்மைப் பலம் கிடைப்பதால் மட்டும் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் என்ற எந்தப் பதற்றமும் மக்களிடம் இல்லை. சிங்கள பௌத்த சமூக மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்ட சமூகம் அந்தக் கருத்துடன் தேர்தலில் வாக்களித்திருக்கிறது.

கொவிட் 19 சூழலால் மேலெழுந்துள்ள சமூக பொருளாதார நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதில் தான் அடுத்த பிரச்சினை எழவிருக்கிறது. உண்மையான பிரச்சினை அங்கிருந்து தான் முளைக்குமே தவிர ஜனாதிபதி-பிரதமர் ரூபத்தில் அல்ல. இந்த நாட்டை அரித்துக் கொண்டிருக்கும் சமூக பொருளாதார நெருக்கடிகள் பற்றி ராஜபக்ஷாக்களின் தேர்தல் பிரச்சாரங்களின் போதோ எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களின் போதோ எதுவும் பேசப்படவில்லை. இந்தப் பிரச்சினைகளை யாருமே தூக்கவில்லை. கடந்த மே மாதத்தில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. தேர்தல் கதையாடல்களால் அது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. அது தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டுள்ளதன்படி மூன்று இலட்சம் பேர் அல்லது அதனைவிட அதிகமானோர் தற்போதைய தொழில்களை இழப்பார்கள். ஏற்றுமதி உற்பத்தித் துறையில் தொழில்புரிபவர்கள் இந்த வகையில் தொழில் இழக்கப்போகிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றவர்கள் உழைத்து அனுப்புகின்ற அந்நியச் செலாவணியும் பெரியளவில் குறையப் போகிறது. இந்த அறிக்கையின்படி சுற்றுலாத் துறையை மீளக்கட்டியெழுப்புவதும் இலகுவாக அமையப் போவதில்லை. கொவிட் 19 காரணமாக பல விமான சேவைகள் தடைப்பட்டுள்ளமை இதற்குக் காரணமாகும். சில சர்வதேச அறிக்கைகள் குறிப்பிடுவதைப் பார்த்தால் சர்வதேச விமான சேவைகள் 85 வீதம் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியுடன் சேர்த்து எமக்கு வருடாந்தம் 500 மில்லியன் டொலர் கடன்தவணை செலுத்த வேண்டி வருகிறது. இந்தக் கடனை எப்படி அடைப்பது ? இதுவரையான வருமான வழிகள் இழக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வருமான வழிகளை எப்படித் தேடுவது போன்ற கேள்விகளை யாரும் கேட்பதும் இல்லை, அவற்றுக்குத் தீர்வு சொல்வதுமில்லை. ஜனாதிபதி என்ற வகையில் கோதாபய ராஜபக்ஷவும் பிரதமர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவும் இந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கும் தீர்வைப் பொறுத்தே எதிர்கால அரசியல் தீர்மானங்கள் அமையப் போகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கு தனிப்பட்டவர்கள் காரணமாகவிருப்பது உண்மைதான். ஆனால் உண்மையான காரணத்தைப் பார்த்தால் ஜேஆர் ஜயவர்தன ஆரம்பி்த்து வைத்த திறந்த பொருளாதாரக் கொள்கை மென்மேலும் ஊழல் மலிந்ததாகவும் நகரத்தை மையப்படுத்திய சந்தைப் பொருளாதாரமாகவும் பரிணாமமடைந்து 40 வருடங்களாகும் போது 1947 பொதுத் தேர்தலின் பின்னர் இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐதேக, ஸ்ரீலசுக  இரண்டையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்த இரு கட்சிகளதும் சமூக அடிப்படையான பெறுமானங்கள் அனைத்தும் 1990 தசாப்தத்தில் சீரழியத் தொடங்கியது. திறந்த சந்தைப் பொருளாதாரம் இந்தக் கட்சிகளை மேலும் ஊழல் நிறைந்ததாக மாற்றியது. அதனால் சுதந்திரக் கட்சியுடன் இந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் அதற்குப் பொருந்துகின்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கியது போல ரணில் விக்கிரமசிங்க ஜேஆர் ஜயவர்தனவுடைய ஐதேகவை பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சிகள் வியர்த்தமாயின. இதுபோன்ற அரசியலுக்கு இனி இடமில்லை. இந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவினால் வெல்ல முடியாதெனக் கூறி அவருக்கு எதிராக கட்சியின் ஏராளமானோர் அணி திரண்டனர். விளைவாக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான அணியொன்று உருவானது. இந்தியாவிலும் இதனையொத்த நிலையே தோன்றியது. நேரு – காந்தி குடும்பத்தின் பாரம்பரிய அரசியலுக்கு மேலும் இடம் கிடைக்காததலாலேயே மோடி தோற்றமெடுத்தார்.

தேசிய மக்கள் சக்திக்காக சமூக ஊடகங்களில் படித்தவர்களாகவும் கலைஞர்களாகவும் கூறியவர்கள் கொண்டு சென்ற தேர்தல் பிரச்சாரம் அவர்களது கால்கள் பூமியில் இல்லை என்பதைப் புலப்படுத்தியது. கசப்பான அரசியலுக்கு உண்மையானவர்களை நியமிக்குமாறு அவர்கள் வேண்டும் போது நான் அதனைக் கேலியாக எடுத்துக் கொண்டதற்குக் காரணம், குப்பைக் கூளத்துக்கு சிவப்புக் கொடி அலங்கரிப்பது போல எனக்கு அது தெரிந்தது. குப்பைக் கூளத்தை எப்படி அகற்றுவது என அவர்கள் பேசவில்லை. அதற்கானதொரு வேலைத்திட்டம் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

இந்தத் தேர்தல் தொடர்பில் நான் கருத்து வெளியிடும் போது நான் தேர்தலில் வாக்களித்தாலும் சமூகம் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கு யாரிடமும் தீர்வு இல்லை என்று சொல்லியிருந்தேன். இந்த அரசாங்கம் இந்த நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் இந்த அரசாங்கத்தின் முன்னாலுள்ள சோதனை.

ஞாயிறு லங்காதீப

About the author

Administrator

Leave a Comment