புதிய பாராளுமன்றத்தின் முன்னுள்ள பணி

60

ஜனாதிபதித் தெரிவு முடிந்து விட்டது. மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் தெரிவும் முடிந்து விட்டது. அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டு கடமைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கென மக்களிடம் கேட்கப்பட்ட முழுமையான அதிகாரத்தையும் மக்கள் வழங்கிவிட்டார்கள்.

இனி இவை அனைத்தினதும் ஒட்டு மொத்த வடிவமான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் தமது எதிர்பார்ப்புக்களைக் கொட்டி வைத்துக் காத்திருக்கிறார்கள். மக்களின் ஒரே எதிர்பார்ப்பு தம்மைச் சிறைப்படுத்தி வைத்திருக்கின்ற பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து மீளுவது. இதற்கு முந்திய இலங்கையின் தேர்தல் வரலாறுகளில் எல்லாம் மக்களது பொருளாதாரப் பிரச்சினையை முன்வைத்தே வாக்குகள் பொறுக்கி எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த முறை தேர்தலில் அப்படியான வாக்குறுதிகள் முன்வைக்கப்படாமல் நாட்டின் பாதுகாப்பு என்பதே அடிப்படைப் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டு வாக்குப் பெறப்பட்டிருக்கிறது.

என்னதான் நாடு வீடு என்று பேசினாலும் மக்களின் வயிற்றுப் பசிக்கு முன்னால் அனைத்தும் தோற்றுப் போய்விடும். பசி பத்தையும் செய்வதற்கு அவர்களைத் தூண்டும். அதனால் மக்களின் வயிறு காய்வதற்கு முன்னர் இதற்குரிய தீர்வை முன்வைப்பது முக்கியமாகும்.

அரசாங்கத்திடம் இதற்கான திட்டம் இருக்கின்றது என்பதனை ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை எடுத்துச் சொல்கிறது. ஆனால் கொவிட் 19 உருவாக்கிய பொருளாதார நெருக்கடி மக்களை நீண்ட காலத் தீர்வு வரை காத்திருக்கும் பொறுமையை மக்களிடமிருந்து பறித்திருக்கிறது. மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொழிலை இழந்திருப்பதாக தொழில் திணைக்களம் அறிவித்திருக்கிறது. வியாபாரங்கள், வர்த்தகங்கள் எல்லாம் முடங்கியிருக்கின்றன. விலைவாசியின் சுமை மக்களை மூச்சுவிட முடியாமல் அழுத்திக் கொண்டிருக்கின்றன.இவற்றுக்குத் தீர்வு கேட்டு அழத் தொடங்கும் மக்களை ஆயுத முனையில் அடக்க முடியாது. அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தான் அவர்களுக்கு வேண்டும்.

இந்தப் பிரச்சினை கவனிக்காமல் விடப்படுமானால் அல்லது அதிகாரத்தால் அடக்கப்படுமானால் மக்களிடம் கொலை, கொள்ளைகள் தலையெடுக்கத் தொடங்கும். அடுத்தவனிடம் அபகரித்து வாழும் சமூகக் குழுவொன்று உருவாகும். மனிதத் தன்மைகள் விலை பேசப்பட்டு நாடு சுடுகாடாக மாறும்.

தேர்தலின் மூலம் மக்கள் எதிர்பார்த்தது இந்த நிலையல்ல. ஏதோ ஒரு உந்துதலால் அவர்கள் தேர்தலில் பங்கெடுத்தாலும் ஆறுதலாக இருந்து யோசிக்கும் போது பிறக்கும் ஞானம் அவர்களுக்குச் சோறு போடாது.

அதிகாரம் செய்வதற்குக் கேட்ட ஆணையை மக்கள் வழங்கிவிட்டார்கள். இனி மக்களின் அடிப்படையான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். இந்தக் கடமையை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டும். நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பது உலக நடப்புகளைத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் நெருக்கும் போதெல்லாம் நாட்டில் இனவாத வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதை கடந்த கால அரசாங்கங்கள் வழக்கமாகச் செய்து வந்திருக்கின்றன.

தற்போது மக்களின் நம்பிக்கையை வென்று அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் பழைய தவறுகளில் ஈடுபட்டு மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பி விடாமல் தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும்.