Features அரசியல் சர்வதேசம்

இந்து ஆக்கிரமிப்புக்காக சுத்தம் செய்யப்படும் காஷ்மீர்

Written by Administrator
  • லதீப் பாரூக்

ஆகஸ்ட் 05, எழுபது ஆண்டுகளுக்கும் மேலான இந்தியக் குடியரசுச் சட்டத்தின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவைக் குறிக்கிறது. 12 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் தாயகமான ஜம்மு – காஷ்மீரின் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை இது இதுவரை காலமும் உறுதிப்படுத்தி வந்தது.

2002 பெப்ரவரியில் குஜராத் முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பினதும் கடந்த பெப்ரவரியின் முஸ்லி்ம்களுக்கெதிரான டெல்லி வன்முறைகளினதும் சிற்பியாக தான் வகித்த பாத்திரத்துக்கும் அப்பால் இரண்டு முறை பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடியின் இந்துத்துவா அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய சர்வதேச அமைப்புக்களும் வழங்கிய உத்தரவாதங்களையும் தாண்டி இந்தச் சட்டத்தை ரத்து செய்தது.

அரசியலமைப்பு உத்தரவாதத்தை ரத்துச் செய்தலானது காஷ்மீர் மக்களின் சுயாட்சி, உரிமைகள், கௌரவம் அனைத்தையும் கொள்ளையடித்தது. இதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட முடங்கல் நிலை காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை இன்றுவரை முடக்கியுள்ளது. இது தவிர முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூப் முப்தி உட்பட அனைத்து காஷ்மீர் முஸ்லிம் அரசியல்வாதிகளும் மோடியினால் தொடர்பாடல் தடைகள் விதிக்கப்பட்டு கடுமையான இராணுவப் பாதுகாப்புடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியப் பாணியில் காஷ்மீரின் அடையாளத்தைக் கையகப்படுத்தும் மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை, தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் சுட்டுப் பொசுக்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, பாகி்ஸ்தானின் பாரம்பரிய நண்பனான சீனா, அமெரிக்க இஸ்ரேலிய கைக்கூலிகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிற அரபுக் கொடுங்கோலர்கள் கூட மோடி அரசாங்கத்துடன் இணைந்து காஷ்மீரை பெரும்பாலும் கைவிட்டுள்ளனர்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்துச் சட்டங்கள், மனிதாபிமான நெறிமுறைகள், ஒழுக்கங்கள் அனைத்தையும் மீறி மத்திய கிழக்கின் இதயத்தில் விதைக்கப்பட்ட இஸ்ரேல், பொதுவாக இந்திய முஸ்லிம்களையும் குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களையும் துன்புறுத்துவதற்கு மோடியுடன் கைகோர்த்துள்ளது.மோடியின் இந்துத்துவா அரசாங்கமும் இஸ்ரேலும் இலங்கையில் சிங்கள இனவெறிச் சக்திகளுடன் கைகோர்த்துள்ளன என்ற யூகங்களும் நிலவுகின்றன.

மோடியின் அரசாங்கம் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA)  அறிமுகப்படுத்தியது. யாப்பில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட முஸ்லிம்கள், தாராண்மைவாதிகள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும் இதற்கெதிராக நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தோடு கொண்டு வரப்பட்ட தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) , முன்மொழியப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)  போன்ற சமீபத்திய நகர்வுகள், நாட்டின் 1.3 பில்லியன் மக்களில் 20 வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம்களை ஓரம்கட்டுவதற்கானவையாகும்.

மோடியின் அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்வதிலும் மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதிலும் காட்டும் அக்கறையை விட இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இந்தியாவில் இருந்து கருவறுப்பதிலேயே அதிக அக்கறை காட்டியது. அவர்கள் இடித்த அயோத்தி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது இதன் சமீபத்திய வெளிப்பாடாகும்.

கடந்த பெப்ரவரியில் மோடி அரசாங்கம் புதுடில்லியின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பில்லியன் கணக்கில் பெறுமதி வாய்ந்த வணிகங்கள், குடியிருப்புக்கள் மற்றும் தொழிற்துறைச் சொத்துக்கள் உட்பட வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன. அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு முன்னால் அவர்கள் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கலவரத்தில் ஈடுபட்ட இந்துக் கும்பல்களுக்கு புதுடில்லி காவல்துறை உடந்தையாக இருந்ததாக மேற்கத்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். முஸ்லிம்களைத் தாக்குவதற்காக கற்கள் போதாமல் போனபோது காவல் துறையினர் தமது இருப்பிலிருந்து தங்களுக்கு கற்களை வழங்கியதாக இந்து கலகக்காரர் ஒருவர் இந்திய தொலைக்காட்சியொன்றுக்குத் தெரிவித்தார்.

இந்த அட்டூழியங்களைத் தொடர்ந்து வந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதையும் முடக்கியது. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம் வரை முன்னேறியது. இதற்கிடையிலும் ஜம்மு – காஷ்மீரில் முஸ்லிம்களை தமது சொந்த நிலங்களிலும் வீடுகளிலும் சொந்தமற்றவர்களாக மாற்றுவதை நோக்காகக் கொண்ட சட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும் கள யதார்த்தங்களையும் சனத்தொகைக் கட்டமைப்பையும் மாற்றுவதிலும் மோடி அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டிருந்தது.

370 ஆவது அத்தியாயத்தை ரத்து செய்வதன் முக்கிய நோக்கம் முஸ்லிம் சனத்தொகையைக் குறைத்து இந்துப் பிராந்தியமாக இதனைக் காலனியமயப்படுத்துவதே. இதே வேலையைத்தான் பலஸ்தீன் மண்ணில் யூத அரசை நிறுவுவதற்காக தமது நிலங்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் பலஸ்தீன் மக்கள் துரத்தப்பட்டார்கள்.

இந்த மோசடியின் ஒரு பகுதியாக, முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கி  ஏனைய இந்திய மாநிலங்களில் வசிப்பவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்கிக் குடியேறுவதற்கு வசதியாக புதிய குடியிருப்புச் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. பாகிஸ்தானும் உரிமை கோருகின்ற இந்த சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் இதுவரை 25,000 வெளியாளர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“படிப்படியாக அத்துமீறப்படும் காஷ்மீர் உரிமைகளும் வளர்ந்துவரும் காலனித்துவத்துக்கான வாய்ப்பும் இந்தப் பிராந்தியத்தை தீக்கிரையாக்கும்“ எனும் தலைப்பில் காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசின் எழுதிய கட்டுரையொன்றில் காஷ்மீரின் சனத்தொகைக் கட்டமைப்பை மாற்றுவதற்காக மோடி அரசு மேற்கொண்ட ஏமாற்றுவழிகள் பற்றிய தெளிவான விபரங்களை வழங்கியிருந்தார். அதில் அவர் குறிப்பிடும் போது, ஒரு முழுமையான தொடர்பாடல் முற்றுகை உட்பட இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்கடியில் ஜம்மு – காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட முடங்கல், அதன் சிறப்பு அந்தஸ்தை மறைமுகமாக அகற்றி மேலும் வளைந்து கொடுக்கும் பிரிவுகளாகப் பிரிப்பதற்கு இந்திய அரசாங்கத்துக்கு கடந்த ஆண்டு வழி செய்து கொடுத்தது.  காஷ்மீர் நீண்ட காலமாக முடக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் கிளர்ந்தெழுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தணிப்பதற்கு உதவியது. மொத்தச் சனத்தொகையையும் கண்களில் இருந்து மறையச் செய்து அவர்களது குரல்களும் வெளியே கேட்காத வகையில் தகவல்கள் அனைத்தும் ஒரு கருந்துளையில் மாயமாய் மறைவது உறுதி செய்யப்பட்டது. இன்று மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காலனித்துவமயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புப் பாணியை மாதிரியாகக் கொண்டு புதிய குடியேற்றவாசிகள் மூலமாக உள்ளுர்வாசிகளை குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களை அதிகாரமற்றவர்களாக்கி வெளியேற்றுவதற்கான பாதை வகுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய ராஜதந்திரி ஒருவர் கடந்த நவம்பரில் ஒருமுறை காஷ்மீர் இந்துக்கள் மத்தியில் உரையாற்றும் போது இந்தியக் கலாச்சாரமே காஷ்மீர் கலாச்சாரம், அது இந்துக் கலாச்சாரம் என முழங்கியதோடு, இஸ்ரேலின் மேற்குக் கரைக் குடியேற்றங்களின் மாதிரியில் முன்னோக்கிச் செல்வதற்கும் ஆதரவு தெரிவித்தார்.

இந்தியாவின் காஷ்மீர் தொடர்பான கொள்கையின் மையப்பகுதியாக இந்த மாதிரியை மாற்றுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வடிவமொன்று வரையப்படுவதை இந்த நகர்வுகள் காட்டுகின்றன. எந்தவொரு எதிர்ப்புக் குரல்களையும் தவிர்த்து வரைபடத்தில் உள்ள புள்ளிகளை இணைப்பதற்கு தற்போதைய முடங்கல் பயன்படுத்தப்படுகிறது. பலவீனமானதொரு அமைப்பிலுள்ள நிர்வாகத்தில் ஏற்படுத்தப்படும் இந்த மாற்றம் எனும் ஆயுதம், நம்ப முடியாத அளவில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் வார்க்கக் கூடியது.

அரசாங்கம் பொதுமக்களின் பொறுமையையும் அமைதியையும் காஷ்மீர் மக்களின் அபிலாஷைகள் மீது சவாரி செய்வதற்கெதிரான சர்வதேச வெறுப்புக்களையும் குறைத்து மதிப்பிடுவதோடு பாரிய மனித உரிமை துஷ்பிரயோகங்களை அதிகரிக்கச் செய்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக ஓரங்கட்டுவதற்கும் தள்ளி வருகின்றது.

2019 இன் முடங்கல் அரசியலமைப்புக்கு முரணானது. ஜனநாயக விரோதமானது. தார்மீக ரீதியாகத் தவறானது. ஆனால் இதுவே இப்போது காஷ்மீரில் இந்தியாவின் வியூகத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறியிருக்கிறது. சிறப்பு அந்தஸ்தையும் பாதுகாப்பையும் இழப்பது குறித்த பொதுமக்களின் எதிர்ப்புக் குரலைத் தடுப்பதில் முதலாவது முடங்கல் வெற்றிபெறுமாக இருந்தால், அடுத்தது பெரிய நிகழ்ச்சி நிரலின் பகுதியாக இந்திய அரசாங்கம் அடுத்து என்ன செய்யவிருக்கிறது என்பதற்கான படிக்கல்லை வடிவமைப்பதாக அமையும்.

புதிய குடியிருப்புச் சட்டமும் அதற்கான கால அவகாசமும் இன மற்றும் சமூக அடையாளங்களையும் அரசியல் பின்புலங்களையும் தாண்டி காஷ்மீரின் அனைத்து மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் தாம் ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்த அரச தொழில்களை குடியேற்றவாசிகளிடம் பறிகொடுக்க நேரிடும் என்ற ஏக்கத்தைத் தோற்றுவி்த்திருக்கிறது.

புதிதாக வெளியேறும் பட்டதாரிகளுக்கான முதன்மைத் தொழில்தருநராக பிராந்தியத்தில் அரசாங்கமே விளங்குகிறது. தற்போது தொழில்வாய்ப்புக்கான ஊற்று வரண்டு போயிருக்கிறது. புதிய குடியிருப்புச் சட்டத்தின் கீழ் வருகின்ற வெளியாருக்கும் தொழில் வழங்கும் வகையில் இது வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

ஒக்டோபரில் நடைமுறைக்கு வந்த ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு தனியார் சொத்துக்களின் உரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டஒழுங்குகள் நிறுத்தப்பட்டன. கடந்த காலங்களில் உள்ளுர் காணிச் சீர்திருத்தச் சட்டம் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தால் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரைப் பலப்படுத்தியதோடு அவர்களை கௌரவமானவர்களாகக் கருதவும் வழிவகுத்தது. அத்தோடு பட்டினியால் இறப்பவர்கள் இல்லாத ஒரு சில நாடுகளின் பட்டியலில் ஜம்மு – காஷ்மீரையும் இணைத்தது.

திருத்தப்பட்ட காணி தொடர்பான சட்டங்கள் பிரத்தியேகமான தங்களது சிறப்புரிமைகளை இழப்பதான அச்சத்தை உள்ளுர்வாசிகளில் ஏற்படுத்தியிருப்பதோடு சாத்தியமான ஏகபோக பொருளாதார ஆக்கிரமிப்பின் கீ்ழ் துன்பப்படுவதையிட்டும் அவர்கள் அஞ்சுகின்றனர். தற்பொழுது பன்டமிக்கை சாக்காக வைத்து கோடை காலத்தில் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தலைநகரத்தை மாற்றுகின்ற 150 வருடகால நடைமுறையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

இந்து பெரும்பான்மை ஜம்முவுக்கு அதிக ஆசனங்களை வழங்கும் வகையில் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மீள்நிர்ணயத்தைத் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு, உள்ளுர் அரசியல் அசைவியக்கத்தை மாற்றியமைக்கும். மார்ச் 06 ஆம் திகதி எல்லை மீள்நிர்ணயக் குழு அறிவிக்கப்பட்டவுடனேயே தரவு சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. கொவிட் 19 இனால் நாடு முடக்கப்பட்டிருந்த போதும் இந்தப் பணி இடைவிடாமல் நடந்தது.

அதிகாரத்தின் கட்டமைப்புக்கள் துண்டு துண்டாக அகற்றப்படுகின்றன. குறிப்பாக ஸ்ரீநகரின் அரசியல் முக்கியத்துவத்தைக் குறைத்து அதன் மக்களை அதிகாரமற்றவர்களாக்கி ஜம்முவை வெற்றியின் அடையாள தலமாக மாற்றப்படுகின்றன.

காஷ்மீர் மக்கள் அடக்குமுறையின் கறைபடிந்த தீர்வுகளுக்கு உட்படும் வகையில் ஆக்கிரமிக்கப்பட முடியாது. கடந்த ஏழு தசாப்தங்களாக இந்தியா இதனைக் கண்டு வருகிறது. காஷ்மீரிகள் வற்புறுத்தும் தந்திரங்களுக்கு அடிபணிபவர்களாக இல்லை. இப்போதும் கூட இந்திய மேலாதிக்கத்தை ஏற்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. காஷ்மீரின் சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் நூறாயிரக்கணக்கான தியாகிகளைக் கண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் தங்களது இரத்தத்தை ஒருபோதும் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு விற்க மாட்டார்கள்.

மத்தியிலுள்ள வலதுசாரி இந்து அரசாங்கத்தின் கடுமையான கொள்கைகளுக்கு எதிரான காஷ்மீரிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று அணுசக்தி வல்லமை படைத்த நாடுகளுக்கு இடையில் செயற்பாடு சார்ந்த நடவடிக்கைகள் எழுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. இவ்வாறானதொரு சந்தர்ப்பம் மிகவும் அச்சத்துடன் எதிர்பார்க்கப்படுகின்ற அணுசக்தி பனிக்காலத்தை உண்மையாக்கும் வகையில் எதிர்பாராத விதமாக இட்டுச் செல்லும். உலக சமூகமும் ஏனைய அமைதி மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களும் உலகளாவிய அமைதியையும் நல்லெண்ணத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக வேகமாகச் செயற்பட வேண்டும்.

கொவிட் 19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச சமூகம் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நிலையில், காஷ்மீர் மக்கள் மீது மிருகத்தனத்தைத் தீவிரப்படுத்துவதில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. போலி விசாரணைகளிலும் ஊடுருவல் எதிர்ப்பு எனச் சொல்லப்படும் நடவடிக்கைகளிலும் சட்டத்துக்கு மேலால் காஷ்மீர் இளைஞர்கள் கொல்லப்படுவது 2019 ஆகஸ்ட் 05 க்குப் பின்னர் பல மடங்கு அதிகரித்துள்ளன.      

About the author

Administrator

Leave a Comment