Features அரசியல்

கோட்டாவின் அலி சப்ரி சிறிமாவின் பதியுத்தீன் மஹ்மூத்துடன் பொருந்துவாரா ?

Written by Administrator

ஆங்கிலமூலம் : கலாநிதி  அமீர் அலி

26 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லீம் அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஒரு முஸ்லீம் கூட இல்லாத அமைச்சரவையை விரும்பிய கடும்போக்கு சிங்கள-பெளத்த தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் இந்நியமனம் இடம் பெற்றிருக்கின்றது. இந்நியமனம் பெறுபவரின் எதிர்கால பங்கு, அதாவது அவரது சமூகத்திற்கான சேவை மற்றும் நாட்டிற்கு செய்யப்படவேண்டிய பங்களிப்பு என்பன இன்று பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களினால் வெளிநாட்டமைச்சராக லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் நியமிக்கப்பட்டதையும் ஒப்பீடு செய்கின்றார்கள். இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவிகள் அவரவரின் சமூகத்தோடு இணைத்து பார்க்கப்படுகின்ற சிக்கலான பிரச்சினைகளுக்கு அரசாங்கங்களினால் எதிர்பார்க்கப்பட்ட அல்லது எதிர்பார்க்கப்படுகின்ற தீர்வுகளை எட்டுவதற்காக அமைக்கப்பட்ட வியூகமாகவே இருந்தது இருக்கின்றது எனலாம்.

இரண்டு அமைச்சர்களினதும் அறிவுசார் மற்றும் தொழில்முறை திறனைப் பொறுத்தவரை எந்தவொரு குறைபாட்டையும் எவராலும் காண முடியாது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான லக்ஷ்மன் கதிர்காமரின் சிலுவைப் போர் அவரை தமிழ் தேசியவாதிகளின் பார்வையில் தமிழ் சமூகத்தின் எதிரியாக உருவகப்படுத்தியது. அதேபோல், கோதபாய ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை பெளத்த தேசியவாதிகளின் அழுத்தத்தின் கீழ் “ஒரு நாடு-ஒரு-சட்டம்” எனும் கொள்கையை அடிப்படையாகக்கொண்டது. இதன் விரிவாக்கத்தை சர்ச்சைக்குரிய முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் (MMDA) மற்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒழிப்பது மதரஸாக்கள் மற்றும் முஸ்லீம் பள்ளிகள் (பாடசாலைகள்) என்பவற்றின் இருப்பையும் மறுஆய்விற்கு உட்படுத்தலாம் என்ற அம்சங்களை உள்ளடக்கியது எனலாம். இதுபோன்ற தீவிரநடவடிக்கைகளை செய்வதற்காக அலிசப்ரி தெரிவு செய்யப்பட்டாரா, அதற்காக தனது சமூகத்திடமிருந்து ஆதரவை பெறுவாரா போன்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்லும்.

அலிசப்ரியையும் லக்ஷ்மன் கதிர்காமரையும் போன்று அமைச்சர்களாக நியமனம் பெற்ற இன்னொருவர் இருந்தார். அவர்தான் கெளரவ பதியுத்தீன் மஹ்முத் அவர்கள். திருமதி சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் 1960-1963 மற்றும் 1970-1977 ஆகிய இரண்டு காலப்பகுதியில் கல்வி அமைச்சராகவும் 1963-1965 காலப்பகுதியில் சுகாதார அமைச்சராகவும் பதியுத்தீன் மஹ்மூத் நியமிக்கப்பட்டார். அலிசப்ரி அவர்கள் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களினால் ஆகர்ஷிக்கப்பட்டதாக சில ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் குறிப்பிட்டுள்ளார். பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் அலி சப்ரி அவர்களின் தந்தையின் நெருங்கிய நண்பர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் என்ன செய்தார்கள் அவரின் அரசியல் களநிலவரம் எப்படி இருந்தது என்பதுபற்றி நினைவுபடுத்துவது பிரயோசனமானது.

அலி சப்ரி அவர்கள் பெரும் எதிர்ப்பிற்கு மத்தியில் நியமனம் பெற்றிருப்பதனைப் போன்ற ஒரு சூழலிலேயே பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும் அவரின் பணியின்போது அதிருப்தியினை எதிர் கொண்டார்கள். பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு அமைச்சரவைக்கு உள்ளேயும் வெளியேயுமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பின. இன்று அலிசப்ரிக்குப் பின்னால் கோதபாய ராஜபக்ச அவர்கள் இருப்பதுபோல அன்று பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு பின்னால் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் இருந்தாலும் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதி 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியை விடவும் அடிப்படையிலேயே மிகவும் வேறுபட்டது. அப்போது தமிழ், சிங்கள தேசியவாதிகள் முஸ்லிம் பழைமைவாதிகளோடு கைகோர்த்து பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை எதிர்த்து நின்றாலும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள். சிங்கள பெளத்த தேசியவாதிகள் இன்றுபோல் அன்று தீவிரமாக இருக்கவில்லை. இன்று பெளத்த தேசியவாதம் தீவிரப்போக்கை அடைந்துள்ளது.

பெளத்த தேசியவாதத்தின் ஆக்ரோஷமான இந்த உருமாற்றம் அலிசப்ரியின் பதவியை மிகவும் சவாலாக்கியுள்ளது மட்டுமல்ல அவரது சமூகத்திற்கு சேவை செய்வதற்கான அவரது திறனை மிகவும் பாதிக்கவே செய்யும். பதியுத்தீன் மஹ்மூத்தை பொருத்தவரை, அவர் அடிப்படையில் ஒரு தேசபக்தர் மற்றும் தூரநோக்குடையவர். ஒப்பீடற்ற தேசபக்தராகவும் முற்போக்கு மற்றும் நவீனத்துவத்தின் இடைவிடாத ஆதரவாளராகவும் இருந்துகொண்டே, தனது அந்தஸ்தை இழக்காமல் பல மட்டங்களில் தனது சமூகத்திற்கு சேவை செய்ய அவரால் முடிந்தது. வாழ்வில் ஒரு அமைச்சராகவும் சமூகத்தில் அதன் தலைவராகவும் பிரகாசித்தார். அதுபற்றி ஒருசில வசனங்களால் விளக்க இயலாது. இருப்பினும், அவரது பன்னிரண்டு வருட அமைச்சர் பதவிகால வரலாற்றிலிருந்து எவ்வாறு அவர் தான் அடைய நினைத்ததை சாதித்தார் என்பதனை கவனிக்கலாம்.

கல்வி அமைச்சராக இருந்தபோது, தனியார் பாடசாலைகளை தேசியமயமாக்கும் பொறுப்பை தனியாக பொறுப்பேற்றார்.  சுகாதார அமைச்சராக இருந்தபோது அரசமருத்துவர்கள் தனியார் மருத்துவர்களாகவும் பணியாற்றும் நடைமுறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அச்சமின்றி செயல்படுத்தினார். இருப்பினும் இது பின்னர் UNP அரசாங்கத்தின் கீழ் மாற்றப்பட்டன. இதுபோன்றும் பிற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதில் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் தனது சொந்த சமூகத்தின் முழு ஆதரவையும் பெறவில்லை, குறிப்பாக கல்வி சம்பந்தமாக குறிப்பிடலாம். கொழும்பு சாஹிரா கல்லூரியை அரசாங்கப் பாடசாலையாக மாற்றும் முயற்சியில் நீதிமன்றம் வரை செல்லவேண்டி ஏற்பட்டது, அவரது சமூகத்தின் எதிர்ப்பை விளக்குவதற்குப் போதுமானது. இன்னொரு பிரச்சினையும் இருந்தது, முஸ்லீம் பாடசாலைகளின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இசை மற்றும் நடனம் அறிமுகப்படுத்தப்பட்டபோது அனைத்து பழமைவாத முஸ்லீம் பிரிவினரின் கோபத்தையும் சம்பாதிக்கவேண்டி ஏற்பட்டது. அந்நேரத்தில் வளர்ந்து வரும் முஸ்லீம் தலைவர்களில் ஒருவர் ஒரு முஸ்லீம் அரசியல் கட்சியை உருவாக்கி அமைச்சரைக் கண்டித்தார்.

இதேபோன்று தமிழ் சமூகமும் ஒருபோதும் பதியுத்தீன் மஹ்மூதை ஆதரிக்கவில்லை. பல்கலைக்கழக நுழைவுக்கான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தமிழர்களின் தீவிர எதிரியாக குறிப்பாக வடக்கிலிருந்த தமிழ் சமூகத்தின் எதிரியாக அவர் மாறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு முஸ்லீம் தொலைநோக்கு பார்வையாளராக தேசிய மட்டத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப முஸ்லிம் சமூகத்தை அதன் பொது உருவமான ‘வணிக சமூகம்’ என்ற தளத்திலிருந்து அதனை வேறு தளங்களுக்கு மாற்ற விரும்பினார். 1972 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு மாலைநேர தேநீர் விருந்திற்கு அனைத்து முக்கிய முஸ்லீம் தலைவர்களையும் அழைத்ததோடு அவரது அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்ப்பதனையும் எச்சரித்தார். தொழிலிற்காக பிற பொருளாதார வழிகளிலும் கவனம் செலுத்துமாறும் தலைவர்களை அவர் ஊக்குவித்தார். தனது பங்கிற்கு, கல்வியை ஒரு கருவூலமாக தேர்ந்தெடுத்தார், அதன் மூலம் முஸ்லீம் சமூகத்தை அறிஞர்கள், கல்விமான்கள் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நிரம்பிய சமூகமாக உருவாக்க விரும்பினார். இன்றைய முஸ்லீம் மகா வித்யாலயங்கள், முஸ்லீம் புத்திஜீவிகள் என்போர், பதியுத்தீன் மஹ்முத் அவர்களின் தூரநோக்கின் விளைவாக விளைந்தவைகள் என்பதற்கான சான்றுகள் ஆகும். இவை அனைத்தையும் தான் சார்ந்த சமூகத்திற்காக சாதித்த போதும் கூட அவர் தனது கட்சித்தலைவர் சிறிமா பண்டாரநாயக்கா அம்மையாரின் பூரண நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தார்.

பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் கவலை பெரும்பான்மை சமூகத்திலிருந்து அவரை நோக்கி வரும் எதிர்ப்புகளைப் பற்றியதாக இருக்கவில்லை, அவ்வாறாயின் அவற்றை கட்சித்தலைவர் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது ஆனால் தனது சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதே கவலையாக இருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக பதுயுத்தீன் மஹ்மூத் அவர்கள் இஸ்லாமிய சோசலிச முன்னணி எனும் அமைப்பை (ISF – Islamic Socialist Front ) உருவாக்கினார், அதன் பின்னால் முஸ்லிம் ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுவாக முஸ்லிம் இளைஞர்களை திரட்டினார். ISF இற்கு அதிகரித்துவந்த செல்வாக்கு, UNP இன் முக்கியஸ்தர்களில் ஒருவரான M.H. முகம்மதின் கீழ், மார்க்சிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கக் காரணமாகியது. மாக்சிச எதிர்ப்பு முண்ணணியில் அனைத்து மத பழமைவாதிகளும் திரண்டனர். அலி சப்ரியின் ‘தேசிய அனைத்து முஸ்லீம்களின் போfரம்’ ( NATIONAL MUSLIMS COLLECTIVE FORUM ) ISF இன் புதிய பதிப்பா என்ற கேள்வி எழுகின்றது. வரலாறு தீர்ப்பளிக்கட்டும்.

இந்த விவாததின் சுருக்கத்தை எடுத்தால் ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் அலிசப்ரி ஆற்றல் மிக்கவர்,புத்திசாலி மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பதியுதீனை போன்று தொழில்சார் தகைமையுடையவர். அவர் கோதபாய ராஜபக்சவின் “ஒழுக்கமும் நல்லொழுக்கமுமுள்ள” சமுதாயத்தைப் பற்றிய பார்வையை குறைத்து மதிப்பிடாமல் முஸ்லிம் சமூகத்தை ஒரு புதிய திசையில் கொண்டு செல்ல விரும்புகிறார். ஆனாலும், அவர் எதிர்கொள்ளும் சவால்கள் வலிமை மிக்கவை. சிங்கள பெளத்தர்களின் இன-தேசியவாதமும் மற்றும் இஸ்லாமியரின் பிரச்சினைகளும் முற்றிலும் எதிர்மறையானவை.

மேலும் தமிழ் சமூகத்துடனான நல்லிணக்க பிரச்சினையும் உள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே தமிழர்களுடன் சமரசம் செய்ய உகந்த ஒரே வழி என ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச அவர்கள் நம்புகிறார். குதிரைக்கு முன் வண்டியை வைப்பது போல இது சிக்கலாக இருக்கும். அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதிக்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையில் பாலம் கட்டுபவராக விளங்குவாரா? அமைச்சரவையில் உள்ள ஒரே முஸ்லீம் மந்திரி என்பதால், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக அவரது செயல்திறனைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் அவர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் சாதித்த அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுடன் பொருந்துவாரா என்பது பற்றியெல்லாம் காலம் பதில் சொல்லும்.

கெளரவ பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் தனது சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்காக 1977 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது முடிவில் சமூகம் அவரை நிராகரித்தது. முஸ்லிம்களின் நன்றியுணர்வை பற்றியும் அலிசப்ரி அறிந்திருக்க வேண்டும்.

தமிழில் : அக்பர் ரபீக், நன்றி கொழும்பு டெலிகிராப்

About the author

Administrator

Leave a Comment