அரசியல் யாப்பு சூழ்நிலைக் கைதியாகக் கூடாது

60

நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் அரசியலமைப்பு தான் என்ற முடிவுக்கு நாடு வந்திருக்கிறது. ஜனாதிபதிக்கு எதுவுமே செய்ய முடியாமல் யாப்பு அவரைக் கட்டிப் போட்டிருப்பதாக ஆளும் தரப்பின் சட்ட மேதைகள் சொல்லி வருகிறார்கள். அரசியல் யாப்பை மாற்றாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்ற கருத்துருவாக்கத்துக்குப் பின்னர் மக்கள் அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியிருக்கிறார்கள்.

இலங்கையில் புதிய யாப்பு இயற்றுவதற்கான கதையாடல்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்திருக்கின்றன. தனிநபர் ஆளுமையுள்ள ஒருவருக்கு அபிரிமிதமான ஆதரவு கிடைத்து அவருக்கு தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க வேண்டும் என்று ஆசை வருகின்ற பொழுது இலங்கையில் புதிய யாப்பு தோன்றியிருக்கிறது. அடுத்தது அரசாங்கத்தைத் தொடர்ந்தும் கொண்டு நடத்த முடியாத நிலை தோன்றும் போது யாப்பைக் குறை கூறி யாப்பை மாற்ற வேண்டும் என்று பரப்பப்பட்டிருக்கிறது. நல்லாட்சி அரசின் காலத்தில் பின்னையது உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது.

ஜேஆர் ஜயவர்தன என்ற ஆளுமை தான் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தை நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு தனக்குத் தேவையான பலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 1978 யாப்பை உருவாக்கினார். இதன் மூலம் அவர் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஒரு கட்சி ஆட்சியை நோக்கி யாப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஐக்கிய தேசியக் கட்சி 17 வருடங்கள் ஆட்சி செய்தது. நாட்டின் பொதுச் சொத்துக்கள் தாராளமாகக் கையாடப்பட்டதேயன்றி நாடு முன்னோக்கிப் பயணிக்கவில்லை.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் அரசியல் யாப்பு மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ஜயவர்தன காலத்தில் உலகம் முதலாளித்துவப் பொருளாதார மோகத்தில் இருந்தது போல பெரும்பான்மைத் தேசியவாதம் உலக அளவிலும் பிராந்தியத்திலும் செல்வாக்குப் பெற்று வரும் வேளையில் இலங்கையில் புதிய யாப்பு தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. இதற்குச் சாதகமான வகையில் அமெரிக்கா, இந்தியா, சீனா போல இலங்கையிலும் இனத்துவ ரீதியான பெரும்பான்மைத் தேசியவாதத்தின் மேலாதிக்கம் பரப்பப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களும் இந்தச் சிந்தனைப் புலத்தின் வெற்றியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

இந்தச் சூட்டோடு உருவாக்கப்படும் அரசியல்யாப்பு நாட்டு மக்கள் அனைவரதும் பங்களிப்பைப் பெற்று நாட்டை முன்னேற்றுவதற்கான விடயங்களை நிச்சயமாகக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்த வகையில் 30 வருடங்களுக்கு முந்தி நிலவிய இன மேலாதிக்கப் போக்கின் வாசமே அரசியல் யாப்பில் வீசப் போவது தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் ஒரு சமூகத்தை மட்டும் தூக்கி வைத்து அடுத்த சமூகங்களை ஒதுக்கி வைத்து முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி முயற்சிகள் வெற்றியடைந்ததற்கான சான்றுகள் சமகால உலகில் இல்லை. இனத்துவ அரசியலை முன்னெடுத்து அதிகாரம் செலுத்தியவர்களால் நாட்டை விட தமது பிம்பத்தையே வளர்த்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் நாட்டின் சகல இனங்களையும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கச் செய்யும் வகையில் அரசியல் யாப்பை இயற்றி முன்னேறிய சிங்கப்பூர், மலேஷியா நாடுகளும் நமக்கான கிட்டிய முன்னுதாரணங்களாகவுள்ளன. இந்த நாட்டு மக்களுக்குக் கிடைத்த தன்னலமற்ற தலைவர்களுடன் இணைந்து அனைவருமாக ஒன்றுபட்டு அவர்களது நாட்டைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அவ்வப்பொழுது எழும் சூழலுக்கும் தனிநபர்களுக்குமான யாப்பன்றி நீண்டகால அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட யாப்புகள் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கின்றன.

இலங்கையில் புதிய யாப்பு தேவைப்படுவதாக இருந்தால் அதில் மக்களுக்காக நாட்டை முன்னேற்றுதல் என்ற தெளிவான நியாயம் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இருக்கின்ற யாப்பில் அதற்கு என்ன குறை இருக்கிறது என்பதும் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். சூழ்நிலையின் கைதியாகவிருந்து யாப்பில் கைவைப்பதையிட்டு அனைவரும் மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.