Features சர்வதேசம்

13 ஆண்டு கால முற்றுகையின் கீழ் காஸா

Written by Administrator

பற்றி எரியும் பலூன்களும் பதறி ஓடும் சியோனிஸ்டுகளும்

  • கலாநிதி றவூப் ஸெய்ன்

இந்த நாட்களில் காஸா பற்றிய செய்திகள் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. காஸா மீது இஸ்ரேல் 2007 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடை விதித்து அதனை முற்றுகையிட்டது. அம்முற்றுகைக்கு 13 ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் மின்சாரத்திற்கும் குடிநீருக்கும் போதிய உணவுக்கும் போராடி வருகின்றனர். ஒட்டுமொத்த உலகிலுமுள்ள மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள காஸாவை திரும்பிப் பார்ப்பதற்கு இந்த உலகம் தயாரில்லை.

இந்தத் தருணத்தில் காஸா மக்கள் உலகப் பார்வையை தம் பக்கம் ஈர்ப்பதற்கு ஒரு புதிய ஆனால், மிக எளிய உத்தியை கையிலெடுத்துள்ளனர். அதுதான் பற்றியெரியும் பலூன்கள். இஸ்ரேலுக்கு இயற்கையான காற்றில் அனுப்பப்படும் இந்த பலூன்கள் சொல்லும் செய்தி என்ன? காற்றுச் சுமந்து செல்லும் இந்த பலூன்கள் ஆகாயத்திலிருந்து கீழே விழும்போது இஸ்ரேலின் விவசாய நிலங்கள் தீப்பற்றி எரிகின்றன. காஸா மக்களின் ஆயுதங்கள் ஏதோ இரசாயன ஏவுகணைகள் போல் யூதர்கள் குலைநடுங்குகின்றனர். ஆனால், அவை வெறும் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள்.

இஸ்ரேல் தனது முற்றுகையை நீக்கிக் கொள்ள அதன் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு காஸா மக்களுக்கு இப்போது இதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த இரு வாரங்களாக காஸாவில் ஒரு இளைஞர் குழு தம்மை பர்க் குழு என்று அழைத்துக் கொண்டு இந்தக் கைங்கரியத்தில் இறங்கியுள்ளனர். காஸா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு இஸ்ரேல் எல்லைப் புற தொங்கு வலயத்தில் இருந்து ஹீலியம் மற்றும் சில எரியும் இரசாயனங்கள் புகுத்தப்பட்ட புலூன்கள் இஸ்ரேல் பக்கம் பறக்கவிடப்படுகின்றன. இந்த இளைஞர்கள் தமது அடையாளங்களை மறைப்பதற்கு முகமூடிகளையும் சில துணிகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஒலிவ் மரங்கள், புதர்களில் மறைந்திருந்து காற்று இஸ்ரேல் திசையில் வீசும்போது பலூன்களை பறக்க விடுகின்றனர். அவை விழுந்து சிதறும் இடங்கள் பெரும்பாலும் யூதர்கள் குடியிருக்காத பகுதிகள். ஆனால், தமது விவசாய நிலங்களை இந்த பலூன்களில் உள்ளடங்கியிருக்கும் ஹீலியம் போன்ற இரசாயனங்கள் எரித்துச் சேதம் விளைவிப்பதாக சியோனிச அரசு குற்றம் சாட்டுகின்றது.

பறக்கவிடப்படும் பலூன்களால் இஸ்ரேலியர்கள் எவருக்கும் இதுவரை காயம் கூட ஏற்படவில்லை. ஆனால், இதைச் சாட்டாக வைத்து சியோனிச அரசு வழங்கும் பதிலடி மிகவும் பயங்கரமானது. கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் எல்லைப் புறத்திலிருந்து ஏவுகனைகள் அனுப்பப்படுகின்றன. சிறிய ரக விமானங்கள் காஸா மீது குண்டுகளை வீசி வருகின்றன. ஹமாஸின் கண்காணிப்பு மையங்களும் பயிற்சி முகாம்களுமே தமது இலக்கு என்று சியோனிச ஆக்கிரமிப்புப் படையினர் தாக்குதலை நியாயப்படுத்துகின்றபோதும், காஸா மக்களில் பலர் இதனால் காயமடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்துமுள்ளனர்.

காஸா மக்களின் இந்தத் தெரிவுக்கு காரணம் என்ன என்பதை பர்க் குழுவினர் சர்வதேச ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். “இஸ்ரேலிய முற்றுகைக்கும் ஆக்கிரமிப்புக்கும் நாம் ஒரு சூடான செய்தியை அனுப்பி வருகிறோம். காஸாவில் கடந்த 13 ஆண்டுகளாக இஸ்ரேலின் அடாவடித் தனங்களை நாம் சகித்து வந்துள்ளோம். ஆனால், இதற்கு மேல் எங்களால் இந்த முற்றுகையை சகிக்க முடியாது. இஸ்ரேல் இந்த அநியாயமான முற்றுகையை நிறுத்த வேண்டும்.” இது பர்க் பிரிவின் ஊடகப் பேச்சாளர் அபூ யூசுப் அல் ஜஸீராவிடம் தெரிவித்த கருத்து.

“நாமும் எமது குடும்பமும் எமது அன்புக்குரியவர்களும் கௌரவமான ஒரு இயல்பு வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் இஸ்ரேலுக்கு உணர்த்தவே எங்கள் பலூன்கள் பறக்கின்றன. இஸ்ரேலின் முற்றுகையை சவாலுக்குட்படுத்தவே தாம் இந்த ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளோம். காஸாவின் மிகப் பரிதாபகரமான நிலையை இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்ல இதைத் தவிர இப்போது நமக்கு வேறு வழியில்லை” என்கிறார் அபூ உபைதா.

பெயர் குறிப்பிட விரும்பாத 35 வயது நிரம்பிய ஐந்து குழந்தைகளின் தந்தை ஒருவர் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். “எமக்கு யூத மக்களுடன் எந்தக் கோபமும் இல்லை. எமது போராட்டமெல்லாம் அவர்களது அரசாங்கத்திற்கு எதிராகத்தான். அந்த அரசாங்கமே எம்மைத் திட்டமிட்டு 13 ஆண்டுகள் முற்றுகையிட்டு பட்டினியில் போட்டுள்ளது. எம்மை வாழ விடாமல் அநியாயமிழைக்கின்றது.”

கடந்த 10 நாட்களாக இஸ்ரேலை நோக்கி பறக்க விடப்படும் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் அதிகரித்து வருவதை கண்காணித்து வரும் இஸ்ரேல் காஸா மக்களை மென்மேலும் பட்டினி போடும் பல நீசத்தனமான பதில் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.  கடந்த வாரம் காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழையும் வாயிலிலுள்ள முக்கிய வர்த்தக மையத்தை இஸ்ரேல் மூடியுள்ளது.

ஆகஸ்ட் 17 இல் காஸா மக்கள் மீன்பிடிக்கும் கடல் வலயத்தையும் இஸ்ரேல் மூடியுள்ளது. 18 ஆம் திகதி காஸாவிலுள்ள ஒரேயொரு மின்உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டுள்ளது. காரணம் இஸ்ரேல் காஸாவுக்கான எரிபொருள் விநியோகத்தை முற்றாக நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்கனவே 12 மணித்தியாலங்கள் மட்டும் மின்சாரத்தை அனுபவித்த காஸா மக்களுக்கு இப்போது வெறும் 3 மணித்தியாலங்களே மின்சாரம் கிடைக்கின்றது. நிலமை நீடித்தால் காஸா முற்றிலும் இருளில் அடைபட்டு விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

காஸா மீது உலகம் ஒரு கூட்டுத் தண்டனையை விதித்துள்ளது. அது எந்த நியாயமும் இல்லாத மிகக் குரூரமான தண்டனை என்பதை இப்போதைய நிலவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், எதிர்ப்பை வெளிப்படுத்தும் தமது அடிப்படை உரிமையை காஸா மக்கள் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதையே எரியும் பலூன்கள் உலகத்தின் செவிகளுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றன.

365 சதுர கி.மீ. பரப்பைக் கொண்ட காஸாவில் சுமார் 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். சுத்தமான குடிநீர் இல்லாமல், போதியளவு உணவு இல்லாமல், மருத்துவ வசதிகள் எதுவும் கிடைக்காமல், மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கட்டுப்பாடுகளையும் துண்டிப்புக்களையும் கட்டவிழ்த்து வருகின்றது.

80 வீதமான காஸா மக்கள் வெளிநாட்டு உதவிகளிலேயே தங்கியுள்ளனர். உலக வங்கியின் அறிக்கைப் படி 53 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் விழுந்து விட்டனர். கடுமையான பொருளாதார நெருக்கடியினால் காஸாவின் ஒவ்வொரு துறையும் வேகமாக வீழ்ந்து வருகின்றது. மக்களில் அநேகமானவருக்குத் தொழில் இல்லை. உலகிலேயே தொழிலற்றோர் வீதத்தை மிக அதிகமாகக் கொண்ட பிராந்தியம் காஸா என உலக வங்கி கூறுகிறது.

45.5 வீதமான ஊழியப் படையினர் தொழிலற்றோராகக் காணப்படுகின்றனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றவர்கள். நான் திருமணம் முடித்து 3 பிள்ளைகள் உள்ளனர். எனது பிள்ளைகளுக்கு பாடசாலை செல்ல பயன்படுத்தப்பட்ட சீருடைகளை இரவல் வாங்குவதற்குக் கூட எனக்கு வழியில்லை. இஸ்ரேல் சொல்வது போல் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை. நாம் எதையும் எரிக்கவோ யாரையும் காயப்படுத்தவோ விரும்பவில்லை. நான் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவன். இங்கே எங்களது மேசைகளில் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் மட்டுமன்றி, உணவுப் பீங்கான்களும் இல்லை. இரவின் பெரும்பாலான பகுதி இருளிலேயே கழிகின்றது. எங்கள் போராட்டத்தை நாம் கைவிட மாட்டோம். செய்தி சொல்லும் பலூன்களை அனுப்பும் எங்களுக்கு இஸ்ரேல் குண்டுகளைப் பதிலாக அனுப்புகின்றது. உலகம் எங்களை உற்றுப் பார்க்க வேண்டும். நாம் மீன்பிடிக்கும் கடலை இஸ்ரேல் கட்டுப்படுத்தியுள்ளது. எங்கள் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்கள் இஸ்ரேலினால் எரிக்கப்படுகின்றது. தொழிலுக்காக மேற்குக்கரை செல்லும் வாய்ப்பும் மறுக்கப்படுகின்றது. காஸா மக்களின் நிலைமை சொல்லில் மாழாதவை. சுமார் 2 மில்லியன் மக்கள் இஸ்ரேலின் முற்றுகையால் மூச்சுத் திணறி வருகின்றனர். இந்த அரச பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கு உலகம் முன்வர வேண்டும். இதுவே எங்கள் கோரிக்கை என்கிறார் பர்க் பிரிவின் பேச்சாளர் அபூ யூசுப்.

About the author

Administrator

Leave a Comment