Features அரசியல்

ஒரு நாடு ஒரு சட்டம் – நல்ல அறிவு நிலவ வேண்டும்

Written by Administrator
  • ஜாவிட் யூசுப்

ஆகஸ்ட் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்த தனது கொள்கைப் பிரகடனத்தின் போது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ முன்வரும் வருடங்களுக்கான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டினார். இதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு முன்னுரையாக அமையும் 19 ஆம் திருத்தத்தை நீக்குவதையும் அவர் முன்வைத்தார். இதற்கான அவரது ஆதங்கத்தை அவர் பின்வரும் வார்த்தைகளில் அந்த உரையினூடே வெளிப்படுத்தினார்:

“ஒரு ஜனநாயக நாட்டின் வெற்றியின் அடிப்படை அதனுடைய யாப்பாகும். 1978 இலிருந்து 19 தடவைகள் திருத்தப்பட்டிருக்கின்ற எமது யாப்பு, தெளிவின்மைகளையும் உறுதியற்றதன்மைளையும் கொண்டு தற்போதைய குழப்ப நிலைகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. யாப்புத் திருத்தமொன்றுக்கென நாங்கள் கேட்ட ஆணையை மக்கள் வழங்கியிருக்கும் நிலையில், எமது முதல் பணியாக 19 ஆவது திருத்தத்தை இல்லாமலாக்குவது அமைகிறது. அதன் பின்னர் நாம் எல்லோரும் இணைந்து இந்த நாட்டுக்குப் பொருத்தமான யாப்பொன்றை உருவாக்குவோம். இதில் ஒரு நாடு, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு சட்டம் என்ற கொள்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும்.“

“ஸ்திரமில்லாத பாராளுமன்றம் ஒன்றினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது. தீவிரவாத சக்திகளுக்கு எப்போதும் அடிபணிந்து நடப்பது நாட்டுக்குப் பொருத்தமாக இருக்காது. புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்தும் அதேவேளை நடைமுறையிலுள்ள தேர்தல் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் பெறுமானம் மிக்க விடயங்களை தக்க வைத்துக் கொண்டு, மக்களின் நேரடிப் பிரதிநிதித்துவத்தையும் பாராளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படும்.“

ஜனாதிபதியின் முன்மொழிவுகளில் நீண்ட காலத்தில் நாட்டுக்கு ஆபத்தான தாக்கங்களைக் கொண்டுவரக்கூடியதாக ஒரு நாடு, அனைத்து மக்களுக்கும் ஒரு சட்டம் என்ற கொள்கைக்கு முன்னுரிமை அளித்து புதிய யாப்பு உருவாக்கப்படும் என்பதும் ஒன்றாகும். இது தொடர்பான விவாதத்தின் போது குறைந்த பட்சம் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகிய இருவரேனும் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையைப் பயனுள்ளதாக்குவதற்கான ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு எதிராக வாதிட்டனர். பல்வேறு தரப்புக்களையும் சேர்ந்த கடும்போக்காளர்களால் இந்தக் கொள்கை தீவிரமாக வெளிப்படுத்தப்பட்டதை வைத்துப் பார்க்கும் பொழுது, இது கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்வற்றை நீக்குதல் என்பதாகவே புரிந்து கொள்ள முடிகின்றது.

கடந்த வருட ஈஸ்டர் தாக்குதலில் இருந்து முஸ்லிம் சமூகத்துக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பல்வேறு குழுக்களினதும் வாதத்துக்குள்ளாகிய முஸ்லிம் தனியார் சட்டமே இதன் பிரதான இலக்கு. இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டமானது விவாகம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமையுடன் மட்டுமே தொடர்புடையது. இந்தச் சட்டங்கள் பிரிட்டிஷாரின் காலம் முதலே நாட்டின் சட்டப் புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இது முஸ்லிம்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இவை தொடர்புபடுகின்றன. அடுத்த சமூகங்களுக்கோ ஏனைய சமுதாயங்களுக்கோ இவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. 

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அரிதாகவேனும் இது பங்களிப்புச் செலுத்தியிருக்கிறது என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. இவ்வாறான சூழலில், முஸ்லிம் தனியார் சட்டத்தையோ வேறு தனியார் சட்டங்களையோ நீக்க முயற்சிப்பது நியாயமாகாது. அந்த வகையில் ஒரு நாடு ஒரு சட்டம் கொள்கையின் கீழ் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவது முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்தின் மீது தாக்குதல் தொடுப்பதாகும்.

கொவிட் 19 இனால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து உலக சுகாதார நிறுவனம் வழங்கிய வழிகாட்டல்களுக்கு மாறாக கொவிட் 19 இனால் இறந்த முஸ்லிம்களை அடக்குவதை அரசாங்கம் மறுத்து அவற்றை எரிக்கத்தான் வேண்டும் என நிர்ப்பந்தித்தமை இதனுடன் தொடர்புபடுகிறது. இந்தச் சம்பவத்தின் போது கூட முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடிய இந்தக் கடுமையான செயற்பாட்டுக்கான எந்தக் காரணத்தையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. அவர்களுடைய இஷ்டம் இலகுவாகப் புறந்தள்ளப்பட்டது.

அழகான பன்மைத்துவத்துக்கென உலகம் அங்கீகரித்துள்ள இலங்கையிலேயே ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படப் போகிறது. இங்கு நாங்கள் பன்மைத்துவத்தைக் கொண்டாடுகின்றோம். சிங்கள மன்னர்களுடைய காலத்திலிருந்து நான்கு பெரிய மதங்களையும் பின்பற்றுபவர்கள் நல்லிணக்கத்துடன் வாழுவதை எங்களுடைய பலமாகக் கருதுகின்றோம்.

பாராளுமன்றத்தில் லக்ஷ்மன் கிரியெல்ல ஆற்றிய உரையில் இந்த நாட்டு மக்களின் வாழ்வில் வித்தியாசமான தனியார் சட்டங்கள் வகித்த பாத்திரங்களை கோடிட்டுக் காட்டினார். அந்த உரையில் அவர், தங்களது சொந்த விவகாரங்களில் மக்கள் பிரயோகிக்கும் சில சட்டங்கள் இருக்கின்றன. கண்டி பிரதேசங்களில் புழக்கத்திலுள்ள கண்டியச் சட்டங்கள் சொத்துக்கள் பரம்பரைக்கு எப்படிக் கடத்தப்படுகின்றன என்பதைச் சொல்கிறது. இவ்வாறான சட்டங்களை நீக்குவது எளிதானல்ல. தேசவழமை, முஸ்லிம் தனியார் சட்டம் என்று வரும்போதும் இப்படித்தான்.

இலங்கையின் சட்டத்துறையில் முன்னணி வகிக்கின்ற எச்.டப்.தம்பையா இலங்கைச் சட்டத்தின் செழுமை பற்றிக் குறிப்பிடும் போது, “இலங்கையில் ஐந்து வகையான பிரத்தியேகச் சட்டங்கள் இருக்கின்றன. சாசனங்களால் மாற்றப்பட்ட நீதிமன்றங்களால் விளக்கமளிக்கப்பட்ட ரோமன் – டச்சுச் சட்டம், இலங்கையின் பொதுச் சட்டமாகும். ஆங்கில பொதுச் சட்டம் வர்த்தக ஒப்பந்தங்களிலும் வணிகச் சொத்துக்களிலும் பிரயோகிக்கப்படுகிறது. இன்னும் பல விவகாரங்களிலும் இந்தச் சட்டம் அடக்கமாகப் பிரயோகிக்கப்படுகிறது. ஆங்கிலச் சட்டம் சாசனங்களினாலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதால் நாட்டின் சட்டபூர்வமான சட்டமாகவும் இது பிரயோகிக்கப்படுகிறது. தேசவழமை என்பது தனியாள் சட்டமாகவும் உள்ளுர் சட்டமாகவும் பிரயோகிக்கப்படுகிறது. அதுபோல கண்டியச் சட்டம் கண்டியச் சமூகத்துக்கும் முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களின் விவாகம், விவாகரத்து ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்ற விடயங்களுக்கும் பிரயோகிக்கப்படுகிறது.“

எந்தக் காரணமுமின்றி நாட்டின் தனியார் சட்டங்களை நீக்க முயற்சிப்பது நீண்ட காலமாக நிலவி வருகின்ற சட்டமுறையொன்றை இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல் மதச் சுதந்திரத்திலும் சிறுபான்மை உரிமைகளிலும் கூட பாதிப்பைச் செலுத்தும்.

பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியின் உரையின் இறுதியில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் அவருடன் இணைந்து உழைப்பதற்கு விடுத்த அழைப்பு முரண்நகையானது எனத் தெரிவித்ததோடு, ஒரு நாடு ஒரு தேசம் கொள்கையை நடைமுறைப்படுத்த நாடுகின்ற அவர் எப்படி இவ்வாறு அழைக்க முடியும் எனக் கேள்வியும் எழுப்பினார்.

இடர்களையெல்லாம் அரசியல் ஆயுதமாக மாற்றுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றி டெமோக்ரடிக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ் சொல்வதை மேற்கோள் காட்டிய ரவூப் ஹக்கீம் இலங்கையிலும் இது தான் உண்மையா எனக் கேள்வி எழுப்பினார். ஈஸ்டர் தாக்குதல் பற்றி விபரித்த அவர், ஒரு சிலரின் ஈனத்தனமான செயலை வைத்து முஸ்லிம்களை அரக்கர்களாக்கும் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காக எப்படி அது மீட்டி மீட்டிப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விபரித்தார். சமூகப் பிளவுகளுக்காக முரசு கொட்டி மக்களின் உள்ளார்ந்த அச்சங்களைக் கிளறுவதை விட்டு விட்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும் என அவர் அங்கு தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் பக்கம் சார்ந்து நின்றவர்களும் மிலேச்சத்தனமான ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக அநியாயமாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தி சமூகங்களை நெருக்கமாக்குவதே அரசாங்கத்தின் பணி. ஒரு நாடு ஒரு சட்டம் என்பது இதற்கு மாறான விளைவுகளையே தரும். சமூகத்தின் ஒரு பிரிவினரை அரசாங்கத்திலிருந்து அது தூரமாக்கும். ஒரு நாடு ஒரு சட்டம் என்பதனை நோக்கி நகர்வது பற்றி அரசாங்கம் மீளவும் சிந்திக்க வேண்டும். சிறந்த ஞானம் நிலவும் சூழலிலேயே இவ்வாறு மறுவாசிப்புச் செய்வது விளைவைத் தரும் என்பதை மட்டும் தான் எதிர்பார்க்க முடியும்.  

சன்டே டைம்ஸ்    

About the author

Administrator

Leave a Comment