ஆஷூரா நோன்பு

43
  • முஹம்மத் பகீஹுத்தீன்

முஹர்ரம் மாதம் 10 ம் நாள் ஆஷுரா தினம் என அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் நோன்பு நோற்பது முக்கியமான ஒரு சுன்னாவாகும்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்றிருந்ததைக் கண்டார்கள். நீங்கள் ஏன் நோன்பு நோற்கிறீர்கள்? என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இது ஒரு மகத்தான நாளாகும். நபி மூஸாவையும் அவர்களுடைய சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனது பட்டாளத்தையும் அழித்த நாளாகும். அதற்காக நபி மூஸா (அலை) நோன்பு நோற்றார்கள், எனவே நாங்களும் நோற்கிறோம் எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: அப்படியெனில் மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நாம் அதிகம் அருகதையுடையவர்கள் எனக் கூறி விட்டு தானும் நோன்பிருந்ததுடன் தனது தோழர்களையும் நோன்பிருக்குமாறு ஏவினார்கள்’. (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா நோன்பின் சிறப்பு பற்றி அபூ ஹுரைரா (ரழி) பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்:  ” நபி (ஸல்) அவர்களிடம் ஆஷுரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது, அது கடந்த வருடத்தில் இடம்பெற்ற (சிறு) பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமையும் என குறிப்பிட்டார்கள்”. (முஸ்லிம்)

ஆஷுரா நோன்பின் வரலாறு

ஆஷுரா நோன்பு மக்கா காலப் பிரிவில் நபிகளாருக்கு மாத்திரம் கடமையாக இருந்தது. அத்தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தனியாக தான் மாத்திரம் நோன்பு வைப்பார்கள். வேறு யாருக்கும் அந்த நோன்பை நோற்குமாறு கட்டளையிடவில்லை.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘ நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தை மிகுந்த ஆசையுடன் எதிர்பார்த்து அத்தினத்தில் நோன்பு வைப்பார்கள். நபிகளார் வேறு எந்த நாட்களுக்கும் அவ்வாறான முக்கியத்துவத்தை கொடுத்ததில்லை’. (புகாரி) ஆனால் குறைஷிகளிடம் இந்த நாளில் நோன்பு பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.

இரண்டாம் கட்டமாக மக்கள் மீதும் விதியாகியது.

இறை தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு புலம் பெயர்ந்து வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பதை அவதானித்தார்கள். அந்த நாள் நோன்பு வைப்பதற்கு அவர்களை விட நாம் அருகதையுள்ளவர்கள் என்ற வகையில் நோன்பு இருக்குமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள். அவ்வேளை யார் உணவை உட்கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அந்த நாளின் எஞ்சியிருந்த பகுதியில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

ரபீஃ பின்த் முஅவ்வித் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஆஷுரா நாள் காலைப் பொழுதில் நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரை சூழவுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு என்னை அனுப்பி, யார் நோன்பு நோற்றார்களோ அவர்கள் தங்களது நோன்பை பூரணமாக நிறைவேற்றும் படியும், யார் நோன்பு வைக்கவில்லையோ அவர்கள் இந்த நாளின் எஞ்சிய பகுதிகளில் நோன்பு பிடிக்கட்டும்.’ என அறிவிக்குமாறு பணித்தார்கள். அதன் பிறகு நாம் ஆஷுரா தினத்தில் கட்டாயமாக நோன்பு வைப்பவர்களாக இருந்தோம். எமது சிறார்களுக்கும் ஆஷுரா நோன்பை நோற்க வைத்தோம். அவர்கள் பசிக்குது என்று சாப்பாடு கேட்டால் பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை கொண்டு பராக்குக் காட்டி நோன்பை முழுமையாக நோற்பதற்கு பயிற்சியளித்தோம் என அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் புகாரி)

மூன்றாவது கட்டமாக ஆஷுரா நோன்பு சுன்னத்தாக்கப்பட்டது.

ரமழான் மாத நோன்பு கடமையான போது ஆஷுரா நோன்பு ‘கடமை’ என்ற அந்தஸ்திலிருந்து சுன்னத் என்ற இடத்திற்கு வந்தது. ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரமழான் மாத நோன்பு கடமையாகுவதற்கு முன்பு நாம் ஆஷுரா நோன்பையே நோற்று வந்தோம். ரமழான் நோன்பு விதியாக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ யார் ஆஷுரா நோன்பை தன்னார்வத்தோடு நோற்பதற்கு விரும்புகிறாரோ அவர் அதனை நோற்கட்டும். யார் விட்டுவிட விரும்புகிறாறோ அவர் அதனை விட்டுவிடட்டும்.’ (ஆதாரம் புகாரி)

ஆஷுரா நோன்பு ஒரேயொரு வருடம் மாத்திரமே மக்கள் மீது கடமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தாஸுஆ’ நோன்பு

புனித முஹர்ரம் மாதத்தின் 9ம் நாள் ‘தாஸுஆ’ என அழைக்கப்படுகிறது. 9ம் நாள் நோன்பு நோற்பதும் வரவேற்கத்தக்க ஒரு சுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் 9ம் நாளும் நோன்பு நோற்பேன்’. (முஸ்லிம்). ஆனால் அடுத்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

‘தாஸுஆ’ எனப்படும் 9ம் நாள் நோன்பு நோற்பதற்கு நபி (ஸல்) ஏன் ஆசைவைத்தார்கள் என்பதற்கு பல நியாயங்களை அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். அதில் மிகவும் ஏற்புடையாக இருப்பது யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்கு என்பதே.

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள் ‘ஆஷுரா தினத்தில் நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். எனவே அதற்கு முன்பு ஒரு நாள் அல்லது அதற்கு பின்பு ஒரு நாள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் முஸ்னத் அஹ்மத்) இந்த அறிவிப்பு ‘ஹஸன்’ என்ற தரத்தில் உள்ள ஸஹீஹான ஹதீஸ் என ஹதீஸ் துறை வல்லுனரான அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்கள் இது ஒரு பலவீனமான ஹதீஸ் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

ஆஷுரா நோன்பை நோற்பதற்கான ஒழங்குகள்

மேற் கூறிய ஹதீஸ்களில் இருந்து முக்கிய சுன்னத்தாக உள்ள ஆஷுரா நோன்பை நோற்பதற்கான ஷரீஆ சட்டப்பார்வையை இஸ்லாமிய அறிஞர்கள் பின்வருமாறு கூறியுள்ளனர்.

1) தாஸுஆ எனப்படும் 9ம் நாளும் ஆஷுரா என்படும் 10ம் நாளும் நோன்பு பிடிப்பது மிகவும் ஏற்றமானது. பெரும்பாலான இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் இந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளார்கள்.

2) ஆஷுரா எனப்படும் 10ம் நாளும் அடுத்து வரக்கூடிய 11ம் நாளும் நோன்பு நோற்பது வரவேற்கத்தக்கது. காரணம் யூதர்களுக்கு மாறு செய்தல் என்ற இலக்கை இது நிறைவேற்றி வைக்கிறது.

3) 10ம் நாளான ஆஷுரா நோன்பை மாத்திரம் நோற்பது. அந்த நாள் மிகவும் மகிமைக்குரியது என்பதை பல ஹதீஸ்கள் மூலம் மேலே அறிந்து கொண்டோம்.

4) 9ம் நாள், 10ம் நாள், 11ம் நாள் ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு வைப்பதும் ஒரு வகையில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையே என இப்னு உஸைமின் (ரஹ்) அவர்கள் தனது பத்வாவில் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.