ஒரே நாடு ஒரே சட்டம்: மீளவும் மேற்கிளம்பும் விவாதங்கள்

13
  • மாலிக் பத்ரி

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் ஒரே நாடு ஒரே  சட்டம் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அந்தக் கூற்று தற்போது பெரும் விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் “நாட்டில் அனைத்து மக்களுக்கும் சிவில், குற்றவியல், அரசியலமைப்புச் சட்டம் ஒன்றாகவே உள்ள நிலையில், ஜனாதிபதி கூறும் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் அர்த்தம் புரியவில்லை என்று தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சமூகப் பிரிவினர்களுக்கு விவாகம், விவாகரத்து தொடர்பான சில விசேட சட்டங்கள் உள்ளமை உண்மையே. அது இந்தியா, சிங்கப்பூர் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் உள்ளன. அவை ஒரே நாடு என்ற எண்ணக்கருவுக்கு சவால் விடுப்பவை அல்ல. அவ்வாறிருக்க ஜனாதிபதியின் கூற்றின் உள்ளர்த்தம் என்ன எனக் கேகள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் எமக்குத் தெளிவில்லை. நாட்டில் பல இனக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு இனக் குழுமத்திற்கும் சம்பிரதாயபூர்வமான சில சட்டங்கள் உள்ளன. அவை தொடர்பாக எவ்விதக் கருத்தும் இங்கு முன்வைக்கப்படவில்லை. நாம் இப்போது ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில்தான் வாழ்கின்றோம். ஆனால் அரசாங்கம் புதிதாக வலியறுத்தி வருவது தொடர்பில் எமக்குச் சந்தேகம் எழுகின்றது. அதனால் அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையின் உண்மையான உள்ளடக்கத்தை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

1956 இல் இனவாதிகளுடன் சேர்ந்து ஆட்சியை முன்னெடுத்தமையால்தான் பண்டாரநாயக்க தனது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அரசாங்கத்தின் பின்னாலும் அவ்வாறானவர்கள் உள்ளனர். பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்ட நிலைமையை ஜனாதிபதி உணர்ந்துகொள்ள வேண்டும்” எனவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

இதே கருத்தை முன்னாள் அமைச்சர் ஹக்கீமும் வெளியிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதில் ஜனாதிபதி எதனை வலியுறுத்துகிறார் என்பது தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் தெரிவித்து வரும் கருத்துக்களில் தெளிவில்லை. மேலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் மூலம் ஜனாதிபதி எதைக் கருதுகிறார் என்பது தொடர்பில் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பாராளுமன்ற அமர்வுகளில் ஒரே நாடு ஒரே சட்டம் ஆழமாக விவாதிக்கப்படுகின்றது. 19 அவது திருத்தச் சட்டம் அகற்றப்படுவது ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றும் அது குறித்து நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

எமது நாடு பல்வகைத் தன்மை கொண்டது. இங்கு பல்வேறு இனங்களும் மதங்களும் மொழிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்துவமான திருமணச் சட்டங்களும் சொத்துரிமை தொடர்பான சட்டங்களும் உள்ளன. அவ்வாறான பல்வகைமையினை அகற்ற வேண்டும் என்பது ஆபத்தானது. அது சமச்சீரற்ற தன்மையையே ஏற்படுத்தும். அவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்றே எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையின் கீழ் பல்வேறுபட்ட மதங்களையும் கலாசாரங்களையும் கையாள்வது எவ்வாறு எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அது சிறுபான்மை மக்களின் கலாசார உரிமைகளை மீறுவதாகும் என்ற அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பான விவாதத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விவகாரத்தை பெரும் விவாதப் பொருளாக மாற்றியுள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிப்பொருள் எதைக் குறிக்கின்றது என்ற குழப்பம் பொது மக்களிடையே காணப்படுகின்றது. இந்த நாட்டில் ஒரு சட்டம் மாத்திரம் அமுல்படுத்தப்படுமானால் தற்போது நடைமுறையில் உள்ள கண்டியச் சட்டம், தேச வழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் என்பன நீக்கப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

கண்டியச் சட்டம் சிங்கள மக்களின் கலாசார பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு சட்டம். நீண்டகாலமாக அந்தச் சட்டம் நாட்டில் இருந்த வருகிறது. அது இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை. ஆகவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை கண்டியச் சட்டத்தையும் இல்லைõமல் ஆக்கப்போகின்றதா? இதனை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

தேச வழமைச் சட்டமும் முஸ்லிம் விவாக-விவாகரத்தச் சட்டமும் அந்தந்த சமூகங்களைப் பிரதிபலிக்கும் சட்டங்களாகும். இவற்றையும் அரசாங்கம் நீக்கப் போகின்றதா என்ற சந்தேகம் மக்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் ஏனைய சமயங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் சமயங்களின் வித்தியாசமான நடைமுறைகளை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போõகின்றது? பௌத்தம் அல்லாத சமயங்களை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். “ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தாடல் சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது. அவ்வாறு அச்ச உணர்வை ஏற்படுத்தாத வகையில் புதிய அரசின் செயற்பாடுகளும் கொள்கை அமுலாக்கல்களும் அமைய வேண்டும். மன்னர் காலம் தொட்டு மதிக்கப்பட்டு வந்த சமூகங்களது தனித் தனிக் கலாச்சாரங்கள், மரபுரிமைகள், வழக்காறுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். இந்த நாட்டில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனாலும் இந்த வாசகம் வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு சட்டங்கள் இருப்பது போன்ற தோõற்றப்பாட்டை உருவாக்குகின்றது. அது பிழையான சிந்தனையாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் சிறுபான்மைச் சமூகங்களின் தனித்துவத்தில் அத்துமீறி சட்டங்களைத் திணிக்க முயல்வது ஜனநாயக செயற்பாடாக அமைய முடியாது என ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கு மத்தியில் முஸ்லிம்களின் தனிமையும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முன்மொழிவும் எனும் தலைப்பில் பிரபல தமிழ் செயற்பாட்டாளர் ஜெயபாலன் எழுதியுள்ள கட்டுரையொன்றில் முஸ்லிம்களின் தனித்துவத்தைச் சிதைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முதல் தந்திரமே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பிரகடனம் எனத் தெரிவித்துள்ளார்.

1980 களிலிருந்து அரேபிய செல்வாக்கால் முஸ்லிம்கள் தனித்துவம் என்பதை தனிமைப்படுதல் எனப் புரிந்துகொண்டதாக கலாநிதி அமீர் அலி எழுதியிருந்ததை வாசித்தேன். 2013 இல் என்னைச் சிறைப்பிடித்த இன்றைய அரசாங்கத்தின் ஆட்கள் எனக்கு வஹாபிகளின் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்டனர். பாரம்பரிய முஸ்லிம்கள் அல்ல வஹாபிகள்தான் பிரச்சினை. அவர்களுக்கு நாம் விரைவில் முடிவு கட்டுவோம் என்று கடுமையாகச் சொன்னார்கள். அதனால்தான் சிறை மீண்டதும் சூபிகளும் வஹாபிகளும் பேச வேண்டும் எனத் தொடர்ச்சியாக எழுதினேன்.

முஸ்லிம்களின் அதிஷ்டம் 2015 தேர்தலில் ராஜபக்ஷர்கள் தோற்றுப் போனார்கள். ஆனால் இன்றைய நிலைமையோ வேறு. சிங்கள ஆளும் வர்க்கம் திட்டமிட்டு விதைக்கும் முஸ்லிம்கள் பற்றிய அச்சம் 2019 ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஐ.தே.க.யின் செல்வாக்கு மண்டலமாக இருந்த இலங்கையின் மேற்குக்கரையோர சிங்களவர்கள் மத்தியிலும் கிழக்குத் தமிழர்கள் மத்தியிலும் வெற்றிகரமாகப் பரவியுள்ளது. அதுதான் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழரசுக் கட்சிகளுக்குப் பாதகமாக எதிரொலித்தது.

இன்று சிங்கள அரசு தனது முதல் நகர்வை திருமண வயது 18 என்கிற புள்ளியிலிருந்து தந்திரமாக ஆரம்பித்துள்ளது. கணிசமான இலங்கை முஸ்லிம்களும் பல முஸ்லிம் நாடுகளும் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும் மாற்றங்களிலிருந்தே அரசு ஆரம்பிக்கிறது என சிங்கள நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச ஆதரவுள்ள அந்தத் தந்திரம் வலிமையானது. மேற்படி முஸ்லிம் நாடுகளின் முடிவை ஏற்றுக்கொள்வதா நிராகரிப்பதா என்ற கேள்வியை சிங்கள அரசு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தந்திரமாக நகர்த்தியுள்ளது.

இவ்வளவு காலமும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பாரம்பரிய முஸ்லிம்கள் வஹாபிகள் என்ற வரையறைகளும் முஸ்லிம்கள் தொடர்பான அச்சமும் முன்னிலைப்பட்டிருந்தது. 2019 ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பற்றிய அச்சம் கணிசமான கிறிஸ்தவர்களைக் கொண்ட கரையோர சிங்களவர் மத்தியிலும் கிழக்குத் தமிழர் மத்தியிலும் பரவி வருகிறது. இந்தப் பின்னணியில்தான் ஒரே நாடு ஒரே சட்டம் தீர்மானத்தின் ஆரம்ப நகர்வாக திருமண வயது 18 சட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.

திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கு இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஆதரவு உள்ளதாக அரசாங்கம் கூறி வருகிறது. முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் இதற்குள்ளது என்று தெரிவிக்கின்றது. அதனால்தான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை திருமண வயது 18 என்பதிலிருந்த ஆரம்பித்திருக்கிறார்கள். தொடர்ந்து பலதாரமணம், விவகாரத்து, ஜீவானம்சம், காதி நீதிமன்றங்கள் போன்ற சட்டங்கள் வரிசை கட்டி வரும். இவற்றை எதிர்கொள்ளத் தயாராகுவது இலகுவல்ல.

முஸ்லிம்களின் நலன்களைக் காப்பாற்றுவது தொடர்பில் தற்போதைக்கு ஏனைய இனங்களின் அதரவு கிடைக்காது என்பதையும் புரிந்தகொள்ள வேண்டும். இன்றைய நெருக்கடிக்கு முகம்கொடுக்க கிழக்கிலங்கை மற்றும் தென்னிலங்கை முஸ்லிம்கள் உலக முஸ்லிம் நாடுகளின் ஆதரவோடு தமக்குள் ஒற்றமைப்படுவது மட்டும்தான் ஒரே வழி என ஜெயபாலன் எழுதியுள்ள நீண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, வஹாபிகள் எனப்படுவோரும் சூபிகள் எனப்படுவோரும் உள்ளகக் கலந்தரையாடல்களைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜயபாலன் எழுதும் இந்தக் கருத்து இன்றைய சூழலில் உண்மை போன்றே தோன்றுகிறது. காரணம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாங்கம் முஸ்லிம் ஒருவரை நீதியமைச்சராக நியமித்துள்ளது. ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று சூளுரைக்கும்போது நிதியமைச்சர் இளவயதுத் திருமணங்கள் முஸ்லிம் சமூகத்தில் தடைசெய்யப்பட வேண்டியது அவசியம் என்கிறார்.

நீதித்துறை தொடர்பான வகைதொகையற்ற பிரச்சினைகளும் உடனடி மாற்றங்களை வேண்டி நிற்கின்ற நெருக்கடிகளும் உள்ள நிலையில் அவர் பதவியேற்ற கையோடு முஸ்லிம்களின் திருமண வயது குறித்து கருத்து வெளியிட்டிருப்பது பெருத்த சந்தேகத்தைக் கிளறுகிறது. மிக விரைவில் முஸ்லிம் விவாக விவாகரத்தச் சட்டம் புதிய திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் எனக் கூறியுள்ள நீதியமைச்சர் முஸ்லிம் சமூகத்தில் மாத்திரமே இளவயதுத் திருமணங்கள் இடம்பெறுவது போன்ற தோற்றப்பாடொன்றை உருவாக்குகிறார். ஆனால் புள்ளிவிபரங்களும் தரவுகளும் 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட திருமணங்கள் சிங்களவர்களுக்கு மத்தியிலே அதிகம் இடம்பெற்றுள்ளதைக் காட்டுகிறது. எடுத்துக் காட்டாக 2012 இல் 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட திருமணம் நாட்டில் மொத்தமாக 3204 பதிவாகியுள்ளது. அவற்றுள் 2200 திருமணங்கள் சிங்களவர்களுக்கு மத்தியிலும் 511 தமிழர்கள் மத்தியிலும் 471 மாத்திரமே முஸ்லிம்கள் மத்தியிலும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டுமே பெண்கள் 15 வயதுக்கும் குறைவான வயதில்  திருமணம் செய்கிறார்கள் என்பது பிழையான கருத்தாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அரசாங்கத்தின் கொள்கை முஸ்லிம்களின் தனித்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் மிகத் தந்திரமாகக் கையாளப்படும் ஒரு மூலோபாயமா என்ற சந்தேகம் முஸ்லிம்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாதது. முஸ்லிம்கள் தொடர்பில் நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் வரை இந்தச் சந்தேகம் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது. செயலில் உள்ள அரசியலமைப்பு மீள்வரைபுத் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சமத்துவமான பிரஜைகளாகக் கணிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நாடு இன்னும் மூன்று தசாப்தங்கள் பின்நோக்கிச் செல்வதைத் தவிர்க்க முடியாது.