ஐக்கிய அறபு அமீரகம் இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்தங்களை தொடங்குகின்றது

13

இஸ்ரேலுடன் ராஜ தந்திர உறவுகளை புதுப்பித்துள்ள அமீரக ஆட்சியாளர்கள் இஸ்ரேலியர்களையும் இஸ்ரேலிய கம்பனிகளையும் அமீரகத்தில் இயங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக அமீரகம் விதித்திருந்த பொருளாதாரப் பகிஷ்கரிப்பை அந்நாடு நீக்கிக் கொண்டுள்ளது. அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வியாபார மற்றும் நிதி ஒப்பந்தங்கள் அநேகம் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இஸ்ரேலுடன் ராஜ தந்திர உறவுகளை சுமுகமாக்கிய முதல் அறபு நாடு அமீரகம் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலும் அமீரகமும் ராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதாக அறிவித்தன. இந்த சந்திப்பை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடன்யாஹு இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அமீரகத்தின் அரச செய்திச் சேவை இஸ்ரேல் மீதான அனைத்துத் தடைகளும் ஷெய்க் கலீபா பின் ஸியாத் அல் நஹ்யானின் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இவர் அபூதாபியின் ஆட்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி அமீரகத்திலுள்ள 7 பிராந்தியங்களிலும் இஸ்ரேல் கம்பனிகள் தமது வணிக நடவடிக்கைகளைத் தொடர முடியும். இஸ்ரேலின் வணிகச் சரக்குகளை இறக்குமதி செய்வதற்கும் இந்த ஒப்பந்தங்கள் இடமளித்துள்ளன. இஸ்ரேலுடன் ராஜதந்திர மற்றும் வணிக ஒத்துழைப்பு என்ற பெயரிலேயே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இரு தரப்பு பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கத்தை விருத்தி செய்வதற்கு ஒரு பாதை வரைபடம் அமுல்படுத்தப்படும் என்று அமீரக ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் முதல் விமானம் அபூதாபியை வந்தடைந்தது. அதில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராஜதந்திரிகள் வருகை தந்தனர். குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரட் குஷ்னர் உள்ளடங்கியிருந்தார்.

அமீரகத்தின் அறிவிப்பு 1972 ஆம் ஆண்டின் சட்டத்தை நீக்கியுள்ளது. இஸ்ரேலை பகிஷ்கரிப்பதே அந்த சட்டத்தின் நோக்கம். சமீபத்தில் அமீரகம் இஸ்ரேலுடன் மேற்கொண்ட இந்த ஒப்பந்தங்களை பலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் கடுமையாகச் சாடியுள்ளது. பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் புறக்கணித்து யூதர்களை ஆதரிக்கும் இந்தச் செயல்பாடு பலஸ்தீனர்களின் முதுகில் குத்தும் தேசத் துரோகம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து அவ்வமைப்பின் பேச்சாளர் ஹாஷிம் கஸ்ஸாம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த உடன்படிக்கை பலஸ்தீனப் பிரச்சினைக்கு எந்த வகையிலும் தீர்வல்ல. மாறாக, சியோனிஸ கருத்தாடலுக்கு வலுச் சேர்த்துள்ளது. இதன் மூலம் பலஸ்தீனர்களின் உரிமையை மறுக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு தூண்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது மக்களுக்கெதிரான இஸ்ரேலின் போர்க் குற்றங்களுக்கு லைசன் வழங்கப்பட்டுள்ளது.”

இதேவேளை, பதாஹ் இயக்கமும் அமீரகத்தின் இந்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியதிலிருந்து இதுவரை பலஸ்தீன மக்களுக்கு இழைத்து வரும் கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் அமீரகத்தின் ஆட்சியாளர்கள் விருது வழங்கியுள்ளனர் என்று PLOவின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர் ஹனான் அஷ்ராவி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எகிப்தும் ஜோர்தானும் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், அமீரகத்தின் இந்த உடன்படிக்கையின் மூலம் அறபுலகத்திற்குள் இஸ்ரேல் சட்டபூர்வமாக ஊடுருவுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

துருக்கி, அமீரகத்தின் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது. இது அமீரக ஆட்சியாளர்களின் நயவஞ்சகத் தனமான செயல் என்று பிரதமர் அர்தூகான் கடிந்துள்ளார். பலஸ்தீனர்கள் சார்பான எவ்வித விவகாரங்களும் கலந்துரையாடப்படாமல் அல்லது நிபந்தனையாக விதிக்கப்படாமல் இஸ்ரேலுடன் உறவு கொண்டாட விளைவது மிகவும் ஆபத்தானது என்று துருக்கி சுட்டிக்காட்டியுள்ளது.