ஆப்கானிஸ்தான் அரசியல் செயற்பாட்டாளர் பவ்ஸியா கூபி மீது கொலை அச்சுறுத்தல்

11

ஆப்கான் பெண் அரசியல்வாதியான பவ்ஸியா கூபி மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இனந் தெரியாதோர் அவர் மீது நடத்திய தாக்குதலை அடுத்து அவர் காபூல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பவ்ஸியா கூபி ஆப்கான் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேச்சுவார்த்தைக் குழுவின் அங்கத்தவர்களில் ஒருவர். அதேவேளை, மாற்றத்திற்கான இயக்கம் எனப்படும் அரசியல் கட்சியின் தலைவர். டோஹாவில் நடைபெறவுள்ள ஆப்கான் உள்ளக குழுக்களுடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்குபற்ற இருந்த வேளையிலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காபூல் அரசாங்கத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஐக்கிய அமெரிக்காவினால் முடுக்கி விடப்பட்டது. 2001 இல் தாலிபான் அரசாங்கத்தை பதவி கவிழ்ப்பதற்கு அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தமை குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தாலிபானுக்கும் ஆப்கான் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதலை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து வருகின்றது.