எதிர்க்கட்சி ஏன் தேவை ?

64

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் எஞ்சியிருக்கின்ற சிலர்தான் தற்போதைய சூழலில் எதிர்க்கட்சி ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறார்கள். இது தவிர எதிர்க்கட்சியை எப்படி வரைவிலக்கணப்படுத்தலாம் என்பது தற்போது சிக்கலானதாகவே இருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்த இரு கட்சி அரசியல் நிலவிய காலங்களில் எதிர்க்கட்சி என்பதற்கு ஓர் அர்த்தம் இருந்தது. இரண்டு கட்சிகளும் கொண்டிருந்த பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் எதிர்க்கட்சியின் செயற்பாட்டுக்கான நியாயத்தின் பின்னணியாக அமைந்திருந்தன.

1994 இல் சந்திரிக்கா தலைமையில் வந்த அரசாங்கத்தின் பின்னர் நாட்டில் பொருளாதாரக் கொள்கையின் வேறுபாடு எதிர்க்கட்சிக்கான நியாயமாக இருக்கவில்லை. அதிலிருந்து முன்னைய அரசாங்கத்தைக் குறை கூறித்தான் அரசாங்கங்கள் ஆட்சி பீடமேறின. ஆட்சி பீடமேறுவது மட்டுமே கட்சிகள் ஆளும் கட்சியை எதிர்ப்பதற்கான காரணமாக மாறின. இந்த அதிகார மோகத்தினால் கட்சிகளுக்குள்ளேயே எதிர்க்கட்சிகள் தோன்றி இன்று பல்வேறு கூறுகளாகப் பிளவுபட்டுள்ளன.

கட்சிகளுக்குள்ளேயே எதிர்க்கட்சிகள் தோன்றியுள்ள சூழலில் தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி பலமானதாக அமைய வேண்டுமென்றிருந்தால் எதிர்த்தரப்பிலிருக்கின்ற கட்சிகளிடையே அல்லது பிரதான எதிர்க்கட்சியிடம் தெளிவான கொள்கையொன்று இருக்க வேண்டும். இல்லாத போது எதிர்க்கட்சி சின்னாபின்னப்பட்டு ஜனநாயக் கட்டமைப்பு சிதைந்து போகும்.

பாராளுமன்றம் தொடங்கி சில நாட்களாகும் நிலையில் எதிர்க்கட்சியினர் ஆற்றி வருகின்ற உரைகள் அவர்களிடம் எதிர்க்கட்சிக்கான தெளிவான பார்வை இல்லை என்பதைப் புலப்படுத்துகிறது. 09 ஆவது பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பணத்தின் போது உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரனின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்கார இவர் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார் என முறையிட்டார். ஒவ்வொருவருக்கும் தனது தாய், தாய்மொழி, தாய்நாடு, சமயம் என்பவற்றில் ஆழ்ந்த பற்று இருப்பதும் அதனை அவர்கள் வெளிப்படுத்துவதும் இயல்பானது. சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டார்.

இதேபோல பாராளுமன்றத்தில் பரிமாறப்படும் உணவுபற்றி ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஒரு புரளியையே கிளப்பி விட்டார். நாட்டைப் பாதுகாப்பதற்கு தம்மிடம் இருப்பதையெல்லாம் அடகு வைத்து விட்டு பசியில் கிடக்கும் மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட உணவைப் பற்றிப் பேசுவதை விட பாராளுமன்றத்தில் பரிமாறப்படும் உணவு எதிர்க்கட்சிக்கு முக்கியமாக அமையக் கூடாது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளிடம் பொதுவான நாட்டை முன்னேற்றுவதற்கான கொள்கையொன்று இருக்கின்றதா என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. அடுத்ததாக எப்படி ஆட்சியைப் பிடிப்பதற்கு என்பதற்கு முன்னர் நாட்டு மக்களின் நலனை முற்படுத்தி எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது தான் இன்றைய நிலையில் எதிர்க்கட்சியின் பணியாக முடியும். இப்படி அவர்கள் தமது பணியை அமைத்துக் கொண்டால் ஆட்சி அமைப்பதற்காக மக்களே அவர்களைத் தேடி வரும் நிலை சீக்கிரமே வர முடியும்.

அதனால் எதிர்க்கட்சி கொள்கை சார்ந்ததாக அமைய முடியும். கட்சிகளே தமக்குள் எதிர்த்துக் கொண்டு பிளவுபடும் நிலையில் எதிர்க்கட்சிக்கான பொதுவாக கொள்கையொன்றே அவர்களைப் பிணைப்பதாக அமைய வேண்டும்.