முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்துக்கு நாடு தலாக் சொல்ல நாடுவது ஏன்?

17
  • பியாஸ் முஹம்மத்

ஒரு நாடு ஒரு சட்டம் என்பது சந்திக்கு வந்திருக்கிறது. தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லாம் இது தொடர்பில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லாமே கண்ணுக்குப் புலப்படாத உலகமொன்றுக்குள்ளால் நடத்தி முடிக்கப்பட்டு வரும் சூழலில் இந்த “நாட்டுக்கு ஒரு சட்டமும்“ இருட்டுக்குள் துலாவுவதாகத் தான் நடந்து விடுகிறது. எப்படியும் திரை கிழியும் போது யார் எப்படி முழங்கினாலும் நடத்தப்பட வேண்டியதெல்லாம் நடந்து முடிந்திருக்கும். அதற்கெல்லாம் தேவையான ஆணையைத் தானே மக்கள் கொடுத்திருக்கிறார்கள் !

ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவது என்று பலரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இலங்கையில் ஐந்து வகையான சட்டங்கள் இருக்கின்றன. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய ரோமன் டச்சுச் சட்டம் தான் இலங்கையின் பொதுச் சட்டம். இது தவிர வர்த்தக விவகாரங்களுக்காக ஆங்கிலப் பொதுச் சட்டமும் கண்டிய பௌத்த மக்களுக்கான கண்டியச் சட்டமும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கான தேசவழமைச் சட்டமும் இலங்கை முஸ்லிம்களுக்குப் பொதுவான முஸ்லிம் தனியார் சட்டமும் இருக்கின்றன.

திருமணங்களும் விவாகரத்துக்களும் பொதுவாக மூன்று சட்டங்களின் கீழ் வருகின்றன. பொதுச் சட்டமான ரோமன் டச்சுச் சட்டத்தில் 1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க திருமணங்கள் (பொது) கட்டளைச்சட்டத்தின் கீழ் பொதுவான திருமணங்கள், விவாகரத்துக்கள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. கண்டி மாவட்ட பௌத்த மக்களின் விவாக விவாகரத்துக்கள் 1952 ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க  கண்டிய விவாக விவாகரத்துச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம்களின் விவாக விவாகரத்துக்களை ஒழுங்குபடுத்துகின்றன.

திருமணங்கள் மற்றும் விவாகரத்துக்கென இருக்கும் பல்வேறு சட்டங்களுக்கும் பதிலாக ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை தான் முதலில் முன்வைக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க  கண்டிய விவாக விவாகரத்துச் சட்டத்தையும் 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தையும் நீக்குமாறு கோரி 2020 ஜனவரி 08 இல் அதுரலியே ரதன தேரரினால் தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. சுதேச மக்களுக்கென இருக்கும் சட்டங்களை நீக்கி பொதுச் சட்டமான ரோமன் டச்சுச் சட்டத்தின் கீழேயே திருமணங்களும் விவாகரத்துக்களும் நடைபெற வேண்டும் என்பதே திருமணத்துடனோ விவாகரத்துடனோ குடும்ப வாழ்க்கையுடனோ எந்தத் தொடர்பும் இல்லாத இந்த பௌத்தத் துறவியின் கோரிக்கையாகும். இதே பௌத்த மதகுரு தான் மறுபுறத்தில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பௌத்த மதத்தின் அடிப்படையிலேயே நாட்டின் சகல செயற்பாடுகளும் நடக்க வேண்டும் என்றும் கூப்பாடு போட்டு வருகிறார்.

கண்டியச் சட்டத்தின் கீழ் திருமணத்தை விட விவாகரத்துக்கு முக்கிய தேவை இருக்கின்றது. ஏனெனில் விவாகரத்தின் பின்னர் சொத்துக்கள் எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என்பதனை அந்தச் சட்டம் சொல்கிறது. 1769 – 1815 காலப்பிரிவில் செங்கடகலவில் எழுதப்பட்ட நித்தி ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி விவாகரத்து என்பது அன்றைய காலப்பகுதியில் மிகவும் சுதந்திரமாக விடப்பட்டிருந்தது. திருமணத்தினால் கணவன் – மனைவியின் சொத்துக்கள் ஒன்றாகின்ற முறை அப்போது இருக்கவில்லை. இது விவாகரத்தின் பின்னர் பெற்றோரின் சொத்துக்கள் பிள்ளைகளைச் சென்றடைவதில் பிரச்சினைகளை ஏற்படுத்தின. தவிரவும் கண்டிக்கு வெளியில் ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ரோமன் டச்சுச் சட்டம், திருமணம் முடித்தால் விவாகரத்துச் செய்ய முடியாது என்ற அளவுக்கு கடினமானதாக இருந்தது. இதிலிருந்து முழுமையான சுதந்திரம் வழங்கக் கூடியதாக கண்டியச் சட்டம் அமைந்திருந்தது. காலப்போக்கில் ரோமன் டச்சுச் சட்டத்தில் இருந்த இதுபோன்ற இறுக்கங்கள் மாறி கண்டியச் சட்டம் போல எளிதானதாக திருமணமும் விவாகரத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே பௌத்த மதகுருக்கள் கண்டியச் சட்டத்தை நீக்கி ரோமன் டச்சுச் சட்டத்தை பொதுச் சட்டமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சோபையிழந்த அரசியல்வாதிகள் தமது சொந்தமான சொப்பனங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மதத்தைப் பயன்படுத்தி அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதை இலங்கை அரசியல்வாதிகளும் விட்டு வைக்கவில்லை. இலங்கையில் பௌத்த மதமும் பௌத்த மதகுருக்களும் அரசியல்வாதிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல்வாதிகளைப் பூஜிப்பதற்காக ஹிட்லரையும் நியாயப்படுத்துகின்ற அகிம்சைவழி பௌத்தத்தின் காவலர்கள் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள். இந்த வகையில் வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புக்காகவேனும் மதத்தின் பெயரால் பௌத்த மக்களின் ஆதரவை அரசியல்வாதிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் இலங்கையின் பௌத்த மதகுருக்கள் பின்நிற்க மாட்டார்கள் என்பதற்கு வரலாறு சான்று.

இலங்கையை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதாகக் கூறப்படும் எம்சிசி ஒப்பந்தம் பேய்க்காட்டுவதாகவன்றி பேயாகவே வருவதற்கான வாய்ப்புக்களே அதிகம் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் சரத்துக்களில் ஒன்றாக சர்வதேச சட்டங்களாகக் கூறப்படும் சட்டங்களே நாட்டின் சட்டங்களாக அமைய வேண்டும் என்றொரு நிபந்தனை இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் பிரதிலாபங்களை அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் அந்த நிபந்தனைக்கு ஏற்றவாறு நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டிய தேவை எம்சிசியை ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு சிங்கள மக்களை சம்மதிக்க வைக்கத்தான் முஸ்லிம் தனியார் சட்டப் பூச்சாண்டி.

சிங்கள மக்களை தேவையானவாறு வளைத்துக் கொள்வதற்கான புதிய பட்டறை தான் முஸ்லிம் சமூகம். அவர்களுடைய வாய்க்கு முஸ்லிம் எதிர்ப்பைக் கொடுத்து விட்டு தேவையான பாலைக் கறந்து கொள்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது. அதனால் வெளிநாடுகளின் தேவைக்கேற்ற சட்டங்களை உருவாக்கிக் கொள்ளும் வரை முஸ்லிம் சட்டம் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற போர்வையில் சிங்கள மக்களுக்குத் தீனியாகப் போடப்பட்டிருக்கிறது. இதற்கு பௌத்த மதகுருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இறுதியில் அப்பம் கறுத்த பூனைக்கும் இல்லை, வெள்ளைப் பூனைக்கும் இல்லை, மொத்தமுமே குரங்குக்குத் தான் என்று தான் கதையை முடிக்க வேண்டியிருக்கும்.

இந்த நோக்கம் எதுவும் இல்லையென்றால் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமலாக்குவதற்கான கோஷத்தின் மூலம் நாடு அடையப்போகும் நன்மை என்ன ? முஸ்லிம் தனியார் சட்டம் இந்தோனேஷிய மாதிரியைக் கொண்ட மிகவும் பழைய சட்டம் என்பதை முஸ்லிம் சமூகமே ஏற்றுக் கொண்டு தான் அதிலே திருத்தம் செய்வதற்கு ஜம்இய்யதுல் உலமாவின் துணையுடன், அங்கு சட்ட அறிஞர்கள் இல்லாவிட்டாலும், களமிறங்கியது. நாட்டின் நிலைமைகளுக்கும் காலச் சூழலுக்கும் ஏற்ப அதிலே மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு சிபாரிசுகளை முன்வைத்தது. இந்தச் சிபாரிசுகளில் நாடு தற்போது பேசும் சமூக நீதிகள் அனைத்தும் பெரும்பாலான விடயங்களில் உள்வாங்கப்பட்டுள்ளன. இஸ்லாம் சொல்லாத சமூக நீதியொன்று இருக்க முடியாது என்ற வகையில் முஸ்லிம் தரப்புக்கு இவற்றை உள்வாங்குவதில் சிக்கல்கள் இருக்கவில்லை.

குறிப்பாக திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும் என்பது. இந்த விடயத்தில் பெரும்பாலான உடன்பாடு முஸ்லிம் தரப்பிடையே எட்டப்பட்டிருக்கிறது. நல்ல சில பரிந்துரைகளும் இந்த விடயத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் சட்டம் இதுவாக இருக்குமாக இருந்தால் அதனைப் பின்பற்றப் போவதில்லை என்று முஸ்லிம் தரப்பிலிருந்து யாரும் சொல்லவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகம் மட்டும் தான் சிறுவர்களைத் திருமணம் செய்து வைக்கிறது என்று தான் கூப்பாடு போடப்படுகிறது.

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் 23 ஆம் பிரிவு திருமணத்துக்கான குறைந்த பட்ச வயது (Minimum age of Marriage) ஆணுக்கு 16 எனவும் பெண்ணுக்குப் 12 எனவும் குறித்துரைக்கிறது. இதேபோல 1952 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க கண்டிய விவாக விவாகரத்துச் சட்டத்தின் 66 ஆவது பிரிவும் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதாக ஆணுக்குப் 16 ஐயும் பெண்ணுக்கு 12 ஐயும் தான் குறித்துரைக்கிறது. ஆகவே திருமணத்துக்கான குறைந்த பட்ச வயதைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் ஒரே விதமாகத் தான் சிந்தித்திருக்கிறார்கள். ஆனால் 1995 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் அனைவருக்குமான திருமண வயது 18 ஆக மாற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திலும் இந்தத் திருத்தம் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தங்கள் அங்கீகரிக்கப்படும் போது முஸ்லிம் சமூகத்திலும் இந்த மாற்றம் பிரதிபலிக்கத்தான் போகிறது. ஆகவே தொடர்ந்தும் சிறுவயதுத் திருமணம் முஸ்லிம் பிரச்சினையாக நாட்டில் இருக்கப் போவதில்லை.

இதேபோல முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள பல மாற்றங்கள் நாட்டில் நிலவும் தற்போதைய சமூக நீதிகளுக்கு மிகவும் இணக்கமானதாகவே அமையவுள்ளன. காதிகளாக பெண்களும் நியமிக்கப்படுதல், பெண்ணின் எழுத்து மூல சம்மதம் பெறப்படுதல், திருமணங்கள் கட்டாயம் பதியப்படுதல், பலதாரமணத்துக்கான வாய்ப்புக்களை நெறிப்படுத்தல், தாபரிப்புப் பணத்தை ஒழுங்குபடுத்தல் எனச் சில சமயரீதியான ஒழுங்குகளும் காதிநீதிமன்ற செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் சில சட்டரீதியான நெறிப்படுத்தல்களையும் இந்தத் திருத்தம் உள்ளடக்கியிருக்கிறது. ஒரு மத்ஹப் என்ற வரையறையைத் தாண்டி சட்டமியற்ற முடியுமாக இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த ஜம்இய்யதுல் உலமாவின் கைகளில் சிக்கி இன்னும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதேயல்லாமல் முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் மாற்றத்துக்குத் தயாராகத் தான் இருக்கிறது.

இந்த மாற்றங்களுடனான முஸ்லிம் தனியார் சட்டம் நாட்டுக்கு எந்த விதத்தில் தீங்கானதாக இருக்கிறது என்று அதனை நீக்குவதற்கு தேரர் அவர்கள் பிரேரணை முன்வைத்திருக்கிறார்கள் ? அல்லது தேரர்கள் முன்வைத்தால் தான் எதிர்க்க மாட்டார்கள் என்று யாரும் நினைத்து இதனை அவர்களுக்குச் செய்யச் சொன்னார்களா ? நாட்டில் ஒவ்வொரு சமூகத்துக்கென்றும் சட்டம் இருப்பது நல்லிணக்கத்துக்குப் பாதகமாக இருக்கும் என்று யாராவது சொல்வதாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டுச் சட்டங்களை நாட்டுக்குள் கொண்டு வர வழி செய்து கொடுப்பதை விட நாட்டுக்குப் பொருத்தமான சட்டமொன்றை முன்வைப்பது தான் பொருத்தமானது. அப்படிப் பார்த்தால் தேரர் அவர்கள் நாட்டுக்குப் பொதுவானதாகக் கொண்டு வர நினைக்கின்ற ரோமன் டச்சுச் சட்டத்தை விட அவர் இல்லாதொழிக்க முயலும் கண்டியச் சட்டத்தைத் திருத்தி நாட்டுக்கு முன்வைப்பது அதைவிடப் பொருத்தமாக அமையும்.

பௌத்த மத கலாச்சாரப்படி தான் நாட்டில் அனைத்தும் நடக்க வேண்டும் என்று பௌத்த தேரர்கள் நினைப்பார்களானால் அதற்குகந்த சட்டமொன்றையே அவர்கள் நாட்டுக்கு முன் வைக்க வேண்டும். பஞ்சசீலம் தடுக்கின்ற மதுபானத்தையோ சூதையோ தடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாட்டின் சட்டங்கள் இருக்கும் போது, மதுபான நிலையங்களுக்கு லைசன்ஸ் வழங்கும் அரசாங்கத்துக்காக தேரர்கள் வக்காலத்துக்கு வாங்குவதாக இருந்தால் அவர்களது உள்நோக்கம் பௌத்த மதம் அல்ல என்பதும் பௌத்த மதத்தை அரசியலாக்கும் வேலையையே அவர்களும் செய்கிறார்கள் என்பதும் சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல.

சட்டம் என்பது மக்களது கலாச்சாரத்தையே பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனிக் கலாச்சாரம் இருப்பதை சொல்லப்படுகின்ற சர்வதேச சட்டங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதனால் ஒவ்வொரு சமூகத்துக்கும் தனியான சட்டம் இருப்பது தவிர்க்க முடியாதது. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த பிரிட்டிஷார் கூட தமது காலனித்துவ நாடுகள் அனைத்திலும் ஒரு சாம்ராஜ்யம் ஒரு சட்டம் என்றொரு விதியைப் பேணவில்லை. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயரின் அடிமைகளாக இருந்த போதிலேயே முஸ்லிம்களுக்கென தனியார் சட்டமொன்றை அவர்கள் ஒதுக்கிக் கொடுத்தார்கள். சுதந்திரமடைந்து 72 வருடங்கள் கடந்த பின்னர் அடிமைச் சமூகத்திலிருந்த சுதந்திரத்தையும் பறித்து வெளிநாட்டுச் சட்டங்களை சுதந்திர நாட்டில் புகுத்துவதற்கு தேரர்கள் முண்டு கொடுப்பது மீண்டும் காலனித்துவத்துக்கு உட்படுவதற்குத் தானா ?

சொல்லப்படுகின்ற ரோமன் டச்சுச் சட்டத்துக்கும் மேலாகக் கொண்டுவரப்படும் சட்டத்துக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பும் திருத்தப்படப் போகிறது. அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் பெறப்படும் வேளையில் நாட்டுக்கான சுதேச சட்டமொன்றையும் ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானது. உலகின் பாரிய சமூகங்கள் ஒன்றித்து வாழும் இலங்கைச் சமூகத்தின் நலச் செழுமையிலிருந்து அனைத்துத் தரப்பிலுமுள்ள சிறந்த சட்டங்களைப் பொறுக்கியெடுத்து நாட்டுக்கான சட்டத்தை இயற்றிக் கொள்வது சிறந்ததாக அமையும்.

இலங்கை சுதந்திரம் பெற்றபோதும் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான யாப்பொன்றை இலங்கையால் உருவாக்கிக் கொள்ள முடியவி்ல்லை. இங்கிலாந்து யாப்பைப் பிரதி பண்ணியே உருவாக்கப்பட்ட அரசியல்யாப்பு இலங்கைக்குப் பொருத்தமாக இல்லை என்பது 70 வருடங்கள் கழிந்த பின்னர் தான் நாட்டுக்குப் புரிந்திருக்கிறது. அதனால் சட்டயாப்பையும் நாட்டில் வாழும் மக்களுக்குப் பொருந்துகின்ற விதமாக அமைத்துக் கொள்வது இரவு விழுந்த குழியில் பகலிலும் விழாமலிருக்க உதவும்.