பாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும்

56

சட்டத்தரணி சுரேண் பெர்ணேன்டோ

  • 19 ஆம் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தில் நீங்கள் காண்கின்ற நன்மையான விடயங்கள் எவை?

ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு முறைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை, ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாக மாற்றப்பட்டமை, தகவல் அறிவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டமை, 17 ஆம் சீர்திருத்தத்தில் இருந்ததற்கு ஓரளவு சமனான அரசியல் யாப்புச் சபை ஏற்படுத்தப்பட்டமை மூலம் நீதிமன்றங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் ஒரு தனிநபரினது தற்துணிவின் மூலம் குறித்த நியமனங்கள் வழங்கப்படாமல் குறித்த அரசியல் யாப்புச் சபையின் அனுமதி மூலம் நியமனங்கள் வழங்கப்பட வேண்டியிருந்தமை, அதன் காரணமாக குறித்த நிறுவனங்களின் சுயாதீனத் தன்மை பாதுகாக்கப்பட்டமை, ஜனாதிபதி முறைமையிலிருந்து பாராளுமன்ற முறைமைக்கு மாறியமை இதன் காரணமாக ஜனாதிபதி அமைச்சர்களை நியமிக்கும்போது மற்றும் பதவி நீக்கும் சந்தர்ப்பங்களில் பிரத மரின் கருத்தையும் பெற்றுக் கொள்ள வேண் டும் என்றிருந்தமை போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.

1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் கூட ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி அமைச்சர்களை நியமிக்கும் அதி காரம் மூலம் மறைமுகமாக பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் 19ம் சீர்திருத்தம் அமைச்சர்களை நியமிக்கும்போது அல்லது நீக்கும் போது பிரதமரின் கருத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட தன் மூலம் ஜனாதிபதி மறைமுகமாக பாராளுமன்றத்திற்குக் கட்டுப்பட வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. அதேபோல் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு நீதிமன்ற விடுபாட்டுரிமை இருந்தது. ஆனால் 19ம் சீர்திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற விடயம் ஏற்படுத்தப்பட்டது.

உதாரணமாக 2018ம் ஆண்டு யாப்புக்கு முரணாக பிரதமரை பதவி நீக்கிய சந்தர்ப்பத்தில் குறித்த விடயம் யாப்புக்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தேசிய அரசாங்கம் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியுள்ளமையும் 19ம் சீர்திருத்தத்தின் ஒரு முக்கியமான நன்மையாகக் கருதலாம்.

  • இந்த சீர்திருத்தத்தில் காணப்படக்கூடிய குறைபாடுகளாக நீங்கள் கருதுகின்ற விடயங்கள் எவை?

சாதாரணமாக குறைபாடாகக் கூறக் கூடிய விடயமொன்றுதான் ஜனாதிபதிக்கு விரும்பும் வகையில் நியமனங்களை வழங்க முடியாது இருக்கின்றமை என்ற விடயம். இதனைக் குறைபாடாக ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் நான் அவ்வாறு கருதுவதில்லை. ஏனெனில், ஒரு நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு அதிகாரங்கள் குவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவ்விடயம் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. நான் இவ்விடயத்தை ஒரு பாதகமான விடயமாகவன்றி ஒரு சாதகமான விடயமாகவே பார்க்கின்றேன். ஏனெனில் ஒரு தனிநபர் ஒருவரை நியமிப்பதை விட அவர் இன்னும் சிலருடன் ஆலோசித்து நியமிப்பதன் மூலம் மிகச் சிறந்த ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

இன்னும் சிலர் கூறுகின்றனர். அதாவது 19ம் திருத்தம் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை குலைந்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகக் கதைக்கும்போதும் இந்நிலமை காரணமாகவே இது ஏற்பட்டது எனக் கூறுகின்றனர். ஆனால் நான் அவ்வாறு கருதுவதில்லை. அதற்குக் காரணம் என்னவெனில் அத்தாக்கு தல் சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி தான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சராகவும் செயற் பட்டார். எனவே இவ்விடயம் 19ம் திருத்தத் தின் காரணமாக ஏற்பட்டதல்ல.

19ம் திருத்தத்தில் அமைச்சுகளின் செயலா ளர்கள் மற்றும் கெபினட் செயலாளர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவ்விடயம் ஜனாதிபதியினால் தனியாக மேற்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது. உண்மையிலேயே இவ்விடயம் பிரதமரின் ஆலோசனையுடன் அமைச்சர்கள் நியமனம் வழங்குவது போல் செயலாளர்களையும் பிரதமரின் ஆலோசனையுடன் ஜனாதிபதி நியமிப்பார் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. இவ்வாறான விடயம் காணப்படாமை காரணமாக ஜனாதிபதி அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையுடன் நியமித்த போதிலும் செயலாளர்களை அவர் தனிப்பட்ட வகையில் நியமிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. பாராளுமன்ற முறைமை ஒன்றுக்குச் செல்வதானால் இவ்விடயமும் பிரதமரின் ஆலோசனை பெறப்பட்டு நியமிக்கப்பட வேண் டும் என்று வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

  • தற்போதைய அரசாங்கம் 20 ஆம் திருத்தத்தை மிக அவசரமாகக் கொண்டு வரும்போல் இருக்கின்றது. நீங்கள் அறிந்த வகையில் அரசாங்கம் 20ம் திருத்தம் மூலம் கொண்டு வருவதற்கு நினைத்திருக்கின்ற விடயங்கள் எவை?

ஒவ்வொருவரும் இது தொடர்பாக ஊடகங்களில் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவையன்றி வேறு வழிகளில் இது தொடர்பாக எந்த விதமான தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை. சுயாதீன ஆணைக் குழுக்களை நீக்குவதில்லை எனக் கூறப்படுகின்றது. அவ்வாறென்றால் அதுவொரு சிறந்த விடயம். ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அவை எவ்வாறான அதிகாரங்கள் என எங்கும் குறிப் பிடப்படவில்லை. ஆனால் இதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமன முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு அதன் சுயாதீனத் தன்மையில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் அது ஒரு சரியான விடயமல்ல. அனைத்து நியமனங்களும் அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதியின் தற்துணிவின் மூலம் நியமிக்கப்படும் நிலைமை ஒன்று ஏற்படுத்தப்பட்டால் அதுவும் பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஒன்றுக்கு         ஆரோக்கியமான விடயமல்ல. ஜனாதிபதி முறைமை 20 ஆண்டுகள் வரை இருந்து இம்முறைமை மாற்றப்பட வேண்டும் என்று பலமான கருத்து ஒன்று காணப்பட்டமை காரணமாகவே 19ம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே மீண்டும் ஜனாதிபதியின் அதிகாரம் அதிகரிக்கப்படுகின்றமையா னது அனுமதிக்கப்பட முடியாததொரு விடயமாகும்.

தேர்தல் முறைமையில் வெட்டுப் புள்ளியை அதிகரிப்பதற்கான திட்டமொன்றும் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறு இடம்பெற்றால் சிறுபான்மை கருத்துக்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் காணப்படுகின்றது. ஜனநாயக முறைமையொன்றில் சிறுபான்மைக் கருத்தைக் கூறுவதற்கான இடம் அவர்களுக்கும் பாராளுமன்றத்தில் வழங்கப்பட வேண்டும். 20ம் திருத்தத்தில் எவ்வாறான விடயங்கள் காணப்படுகின்றன என்று எமக்குத் தெரியாது. சட்ட வரைபு கொண்டு வரப்படும் சந்தர்ப்பத்திலேயே அதில் எவ்வாறான விடயங்கள் காணப்படுகின்றன என்று எம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

சில சந்தர்ப்பங்களில் இது ஒரு நல்ல விடயம் அல்லாமல் கூட இருக்கலாம். அர சாங்கத்தினுள் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயம் தொடர்பாக ஒருங்கிணைந்த கருத்து இல்லை. சுதந்திரக் கட்சி இது தொடர் பாக அவர்கள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். இன்னொரு கட்சிதிருத்தம் தேவையில்லை புதிய யாப்பு ஒன்றையே கொண்டுவர வேண்டும் எனக் கூறு கின்றது. இன்னும் சில கட்சிகள் 19ம் திருத்தத்திலுள்ள குறைபாடுகள் மாத்திரம் நீக்கப் பட வேண்டும் எனக் கூறுகின்றது.

  • பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை யாப்பு மீறல் என அரசாங்கத்திற்கு குற்றச்சாட்டொன்று உள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியும் என்றாலும் கூட எதிர்க்கட்சிகள் இவ்விடயம் தொடர்பான தேசிய கடமையை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாகத் தெரியவில்லை. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாதத்தினுள் இவ் விடயம் தொடர்பாக எவரும் கேள்விக்குட்படுத்த முடியும். அமைச்சர்கள் தொடர்பான வர்த்தமானியில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக உட்படுத்தப்படவில்லை. ஒரு மாத காலத்தில் மாத்திரமன்றி ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக ஏதாவது அறிவித்தல் ஒன்றை வழங்கிய சந்தர்ப்பத்திலிருந்து ஒரு மாதத்தினுள் கூட உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். இவ்விடயம் தொடர்பாக     நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு 30 நாட்கள் காணப்படுகின்றமையால் அரசியல் கட்சிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு இன்னும் காலம் இருக்கின்றது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் சில கட்சிகள் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்ற நிலைப் பாட்டில் இருக்கலாம். இன்னும் சிலர் இது நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய விடயம் என்ற நிலைப்பாட்டில் இருக்கலாம். இது போன்று எவ்வாறானதொரு முறையிலாவது இவ்விடயம் தொடர்பாக கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். இன்னும் நாட்கள் காணப்படுகின்றமையால் அரசியல் கட்சிகள் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா இல்லையா என்று எம்மால் ஒன்று கூற முடியாமல் உள்ளது.

  • பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக வர்த்தமானியில் குறிப்பிடப்படாமை மூலம் அவ்வாறானதொரு அமைச்சு இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. அந்தப் பதவியை ஜனாதிபதி ஏற்றுள்ளார் போன்றே தெரிகின்றது. இவ்வாறான யாப்பு மீறல் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

நாட்டின் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான விடயம் என்ற வகையில் பாதுகாப்பு அமைச்சு ஒன்று கட்டாயம் காணப்பட வேண்டும்.

லோரண்ஸ் பேர்டிணண்ட் – ராவய