20 ஆவது திருத்தம்: கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்

16
  • மாலிக் பத்ரி

இந்த வாரம் அரசியலமைப்பில் 20 ஆது திருத்தத்தை உள்ளடக்கும் வகையிலான அரச வர்த்தமானி 40 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து அரசியல் ஆய்வாளர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பல்வேறு அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஜேவிபி அதனை பலமாக எதிர்த்துள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் 20 ஆம் திருத்தத்தை விரைவில் நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கும் நிபுணத்துவக் குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது.

19 ஆவது திருத்தத்தை நீக்கப் போவதாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவித்து ஓரிரு வாரங்களில் அவரது அமைச்சரவை 20 ஆம் திருத்தத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. 19 ஆம் திருத்தத்தின் உள்ளடக்கத்திற்கு முற்றிலும் மாற்றமான உள்ளடக்கத்தை 20 ஆம் திருத்தம் முன்வைத்துள்ளது.

அதன்படி அமைச்சர்களை நியமிக்கும் பிரதமரின் அதிகாரம் ஜனாதிபதியின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் எண்ணிக்கை, அமைச்சர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு அமைச்சின் பணிகள், பொறுப்புகள் என்பவற்றைத் தீர்மானிப்பவராகவும் ஜனாதிபதியே இருப்பார். அவசியம் ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் இது குறித்து அவர் பிரதமரைக் கலந்தாலோசிப்பார். 19 ஆம் திருத்தத்தில் இது பிரதமருக்குரியதாக இருந்தது.

பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகள் செல்லும்வரை கலைக்க முடியாது என 19 ஆம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 20 ஆம் திருத்தத்தின்படி ஒரு வருடம் கழிந்த பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பாராளுமன்றத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இது பாராளுமன்ற ஜனநாயகத்தையும் மக்களின் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குள்ளாக்குவதோடு, பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஸ்திரப்பாட்டுக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும்.

ஜனாதிபதி தேவைப்படும் பட்சத்தில் பிரதமரைக் கலந்தாலோசித்து அமைச்சர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பார் என்ற விடயம் பல்வேறு பொருள்கோடல்களைக் கொண்டது. தான் விரும்புகின்ற ஒருவரை அமைச்சர் பதவியில் நியமிப்பதோடு, அவரது பொறுப்புக்கள், கடமைகள் இவைதான் என்று தீர்மானிப்பதோடு, அது முடிந்துவிடாது.

ஒரே நபரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி வழங்கக் கூடிய அதிகாரம் இதன் மூலம் அவரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. 19 ஆம் திருத்தத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் 20 ஆம் திருத்தத்தின்படி ஜனாதிபதியினாலேயே நியமிக்கப்படவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மை பேணப்படவில்லை என்றும் அவை அரசியல்மயப்பட்டிருந்தன என்பதும் உண்மையே.

அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு அவை தொடர்ந்தும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு வழியமைத்திருக்க வேண்டும். அரசியலமைப்பு சபை மூலமே 19 ஆவது திருத்தத்தில் 10 சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. தற்போது முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் அரசியலமைப்பு சபையை நீக்கியுள்ளது. பாராளுமன்ற அங்கத்தவர்கள் அல்லாத உறுப்பினர்களும் அதில் இடம்பெறுகின்றனர் என்பதே அரசியலமைப்பு நீக்கத்திற்குக் கூறப்படும் நியாயமாக உள்ளது. இன்னொரு வகையில் ஜாவிட் யூசுப், ரத்ன ஜீவன் ஹூல் போன்றோரை நீக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த அரசியலமைப்பு சபையையும் அரசாங்கம் நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பாராளுமன்ற சபை எனப்படும் ஒன்றை 20 ஆம் திருத்தம் முன்வைக்கின்றது. அச்சபையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகம் பரிந்துரைக்கும் ஒருவர், மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைக்கும் ஒருவர் ஆகியோர் உள்ளடங்குவர்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு முறையே என்று 19 ஆம் திருத்தத்தில் உள்ளது போன்றே 20 ஆம் திருத்தமும் மட்டுப்படுத்துகின்றது. இதைத் தவிர உள்ள அனைத்து விடயங்களும் மாற்றப்பட்டுள்ளன.

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்குத் தடையாக உள்ள இரட்டைப் பிரஜா உரிமையும் நீக்கப்பட்டுள்ளது. 1978 அரசியலமைப்பில் ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டிருந்த அதிகாரத்தை விட அதிகூடிய அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒற்றைப் பூதத்தை அதிகாரக் கோபுரத்தின் உச்சியில் உட்கார வைக்கும் முதலாளிய ஜனநாயகம் இறுதியில் சர்வதிகாரத்தை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாதது. எனினும், பாராளுமன்ற சட்டவாக்கத் துறையை முற்றிலும் கேள்விக்குள்ளாக்குகின்ற வகையில் ஜனநாயக விழுமியங்களுக்கு அப்பால் ஒற்றை நபரிடம் அதிகாரங்களைக் குவிப்பது என்பது மிக ஆபத்தானது என்பதற்கு நமது கடந்த கால வரலாறு தெளிவான ஆதாரமாகும்.

தற்போது 20 ஆம் திருத்தம் எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு வசதியாக 20 ஆம் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஜேவிபி தலைவர் அனுர குமார இது குறித்து நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் முக்கியமானவை.

“பழங்குடி யுகத்தில் மன்னனுக்கு இருந்த அதிகாரம் தற்போது ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ளது. 19 ஆம் திருத்தத்தில் இக்குறைபாடுகள் இருந்தன. அவை திருத்தியமைக்கப்பட்டிருக்க வேண்டும். 20 ஆம் திருத்தம் அமைச்சர்களை தன் இஷ்டப்படி நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டு 19ஆம் திருத்தத்தில் காணப்பட்ட சிற்சில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் சுயாதீனத் தன்மையை முற்றுமுழுதாக இழந்துள்ளன. முன்னர் கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் கொள்கை வகுப்பு ஆணைக்குழு என இரண்டு ஆணைக்குழுக்கள் இருந்தன. அவற்றை முழுமையாக நீக்கி கணக்காய்வாளரை நியமிக்கும் முழு அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தத்தின் மூலம் பிரதமரின் அதிகாரமும் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப் போகின்றார் என்பது எனக்குத் தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கூறியதுபோல் அதிகாரமற்ற பிரதமராகவே மஹிந்த மாறக் கூடும். தலைகளின் மீது வாள் ஒன்று நீட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒரு அமைச்சரவையே இதன் மூலம் உருவாக்கப்படப் போகின்றது.

அவசரகாலச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் தொழிலாளர்கள் ஜனநாயக அடிப்படையில் போராடும் உரிமையும் மீறப்படலாம். ஏனெனில் அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்து உரிமைகளுக்காக நடத்தப்படும் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டங்களை அடக்கலாம். நீதித்துறையின் சுயாதீனத்தை ஜனாதிபதி கேள்விக் குள்ளாக்குவதோடு, அவருக்கு எதிராக எந்தவொரு வழக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்ய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் சர்வதிகார ஆட்சியின் தொடக்கமாகவே இருக்கும். இதிலுள்ள வேடிக்கை என்னவெனில், 16 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்தவர்கள் 17 ஆம் 18 ஆம் திருத்தங்களுக்கும் ஆதரவளித்தார்கள். 19 ஆம் திருத்தத்திற்கு கையை உயர்த்தியவர்கள் 20 ஆம் திருத்தத்திற்கும் கையை உயர்த்தியுள்ளனர். அதிகாரத்திற்காக எந்தவொரு அநீதியான செயற்பாட்டிற்கும் இவர்கள் துணைபோகின்றனர். ஜேவிபி இத்திருத்தத்தை முழுமையாக எதிர்க்கின்றது.”

இதேவேளை, முன்னாள் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் 20 ஆம் திருத்தம் குறித்து தாம் உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாக அறிவித்தனர். நீண்டகாலமாக இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. 2015 தேர்தல் பிரச்சாரத்தில் சமூக நீதிக்கான இயக்கத்தின் தலைவர் சோபித தேரர் உள்ளிட்டு நாட்டின் முற்போக்கு அரசியல் சக்திகள் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறிப்பிட்டளவு மட்டுப்படுத்தும் நோக்கில் 19 ஆம் திருத்தத்தை பிரேரித்தது. 19 ஆம் திருத்தத்தை சந்திரிக்கா கொண்டு வந்தார். மஹிந்த ராஜபக்ஷ அதற்கு ஆதரவளித்தார். 2015 இல் பாராளுமன்றத்தில் 42 பேர் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களால் மாத்திரம் 19 ஆம் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்க முடியாது. இன்று 20 ஆம் திருத்தத்திற்கு கையுயர்த்தியவர்கள்தான் அன்று 19 ஆம் திருத்தத்தைக் கொண்டுவருவதில் மும்முரமாக இருந்தனர். உதய கம்மன்பில கூட அந்த நிலைப்பாட்டிலேயே இருந்தார்.

அரசியலமைப்பு சபை நீக்கப்பட்டு, பாராளுமன்ற சபை உருவாக்கப்பட்டு, அதன் கீழ் நீதித்துறை ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டால் நீதிமன்றங்களின் சுயாதீனத் தன்மை முற்றிலும் இல்லாமல் போய்விடும். மட்டுமன்றி, அரசாங்கத்தின் உயர் நிறுவனங்கள் அனைத்தினதும் சுயாதீனத் தன்மை இல்லாமல் போய் அவை அரசியல் மயப்பட்டு விடும். எனவே நாம், 20 ஆம் திருத்தம் குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் புதியதோர் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணத்துவக் குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ள நிலையில், அவசர அவசரமாக 20 ஆம் திருத்தம் ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கேள்வியை ஆளும் தரப்பிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த கம்மன்பில, “ஜனாதிபதிக்கு இந்த அதிகாரங்கள் அவசியம் என்பதை மக்கள் வழங்கிய ஆணை வெளிப்படுத்தியுள்ளது” என்று நியாயப்படுத்தியுள்ளார்.

20 ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியிடம் வகைதொகையற்ற அதிகாரங்கள் குவிக்கப்படும் அதேவேளை, நீண்டகாலத்தில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் பெரும்பான்மையினரின் வாக்குகளால் மாத்திரம் பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதற்கும் ஏற்ற விதத்தில் தேர்தல் முறை மாற்றம் மற்றும் காணி அதிகாரங்கள் போன்றன தொடர்பான புதிய மாற்றங்களுடன் புதிய அரசியலமைப்பு இலக்கு வைக்கப்படுவதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பை வரையும் நிபுணத்துவக் குழுவில் பேராசிரியை நஸீமா கமர்தீன் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் சர்வேஷவரன் ஆகியோர் சிறுபான்மைச் சமூகங்கள் சார்பில் இடம்பெறுகின்றனர். ஓர் அதிரடியான புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் தொடக்கப் புள்ளியே 20 ஆவது திருத்தம்.

இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் எவ்வாறிருக்கும் என்பதை முன்னறிவிப்புச் செய்வதாகவே 20 ஆம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், அரசியல் பங்கேற்பு, மனித உரிமைகள், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் இவற்றை கருத்திற் கொள்ளாத அரசியலமைப்போ அரசாங்கமோ நாட்டிற்கு நலன் பயக்கப் போவதில்லை. இது தொடர்பில் முற்போக்கு அரசியல் சக்திகள் விரைந்து செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.