Features அரசியல்

நெருக்கடியை கவனத்தில் எடுக்காமை

Written by Administrator
  • விக்டர் ஐவன்

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஒரு நாடு என்ற வகையில் இலங்கை பயங்கரப் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள ஆபத்தான நிலையிலேயே காணப்படுகிறது. இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள பிரதான பிரச்சினையாக இதனைக் கருத முடியும். ஆனாலும் ஆச்சரியத்துக்குரிய வகையில் இந்தப் பிரச்சினை ஜனாதிபதித் தேர்தலிலோ பாராளுமன்றத் தேர்தலிலோ பதவிக்காகப் போட்டியிடும் அரசியல் தலைவர்களின் பேசுபொருளாக இருக்கவில்லை. பொதுவாகவே அக்கிராசன உரையில் நாட்டுத் தலைவர் நாட்டின் முன்னால் இருக்கின்ற முக்கியமான சவால்களைத் தெளிவுபடுத்தி அதனை வெல்வதற்கான வியூகம் தொடர்பில் மக்களை விளங்கப்படுத்துவார் என்றிருந்தாலும் அக்கிராசன உரையின் போது ஜனாபதி கூட அவ்வாறான விளக்க மொன்றை எடுத்துக் கூறவில்லை.

ஜனாதிபதிக்குள்ள இராணுவ மனப்பாங்கு காரணமாக இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளின் வடிவத்தைப் புரிந்து கொள்வதற்கு அவருக்கு இருக்கும் கஷ்டத்தினால் இவ்வாறு நேர்ந்திருக்கலாம். அல்லது இலங்கை இவ்வளவு பாரிய பிரச்சினைகள் உள்ள நாடு என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமில்லை என அவர் நினைத்திருக்கலாம்.

அரச வருமானம்

அரசுக்கு வருமானம் கிடைக்கும் முக்கிய வழிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்து அன்றாடச் செலவுகளையேனும் கொண்டு செல்ல முடியாத நிலையே அரசுக்குக் கிடைக்கும் வருமானம் தொடர்பில் காணப்படுகிறது. அரசாங்கத்தின் சென்மதி நிலுவை நெருக்கடி வெடிக்கும் நிலையிலேயே உள்ளது. தொற்று நிலையொன்று வந்து சேர்வதற்கு முன்னரும் கூட இறக்குமதிச் செலவுகளுக்கும் வெளிநாட்டுக் கடன்களின் தவணையையும் வட்டியையும் செலுத்துவதற்குமே முடியாத நிலையிலேயே இலங்கை ஈட்டுகின்ற அந்நியச் செலாவணி காணப்பட்டது. நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியொன்று நிலவும் நிலையில் அதற்கு வந்து விழுந்த தொற்று நோய் நிலைமைகள் பொருளாதார நெருக்கடியை இருமடங்கு மும்மடங்காக அதிகரிக்கச் செய்தன.

வெளிநாடுகளில் வேலை செய்கின்ற இலங்கையர்களில் கணிசமானோருக்கு தொற்று நிலைமைகள் காரணமாக தொழில் இழப்பினால் நாட்டிற்கு கிடைக்கின்ற அந்நியச் செலாவணி கணிசமானளவு குறைந்துள்ளது. சுற்றுலாத்துறை மட்டும் ஆடைக் கைத்தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக குறித்த இரண்டு துறை களிலிருந்தும் கிடைக்கின்ற வருமானம் வீழ்ச்சியடைந்து இறக்குமதி செலவு மற்றும் செலுத்தவேண்டிய கடன் தவணை மற்றும் அவற்றிற்கான வட்டியை திரும்பச் செலுத்துதல் என்பவற்றை சமநிலைப்படுத்துவது மிகச் சிரமமான விடயமாக மாறியுள்ளது. அத்துடன் அரச வருமானம் மிகப் பாரியளவு வீழ்ச்சியடைந்தள்ளது. புதிய ஜனாதிபதி நடைமுறைப்படுத்திய வரிச் சலுகை காரணமாக அரச வருமானம் 33 வீதம் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

நெருக்கடியின் இயல்புகள்

இவ்வருடத்தின் இறுதி நான்கு மாதங்களுக்குமான இடைக்கால கணக்கறிக்கையின்படி அடுத்த நான்கு மாதங்களுக்குமான அரச செலவினம் 1700 பில்லியன். அந்த நான்கு மாதங்களுக்குமான அரச வருமானம் 400 பில்லியன். அதன்படி ஒரு மாத அரச செலவினம் 425 பில்லியன். ஒரு மாதத்திற்கான அரச வருமானம் 100 பில்லியன். இதன்படி மேலதிக செலவான 325 பில்லியனை அரசாங்கம் கடன் மூலமே ஈட்ட விருக்கின்றது. இது ஒரு மாத செலவின் 76.48 வீதம் ஆகும். இது நீண்டகாலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த விடயமல்ல. இறக்குமதிச் செலவை குறைப்பதற்காக வேண்டி பெருமளவான இறக்குமதிப் பொருட்கள் மீது தடை வதித்திருந்தாலும் இந்தச் செயற்பாடு பொருளாதாரத்திற்கு நன்மையைக் கொண்டுவரும் என எண்ண முடியாது.

உலக வங்கியின் கணிப்பீட்டின்படி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மறை மூன்று வீதமாக வீழ்ச்சியடையும். கணிப்பிட்டுள்ளதன்படி மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் சுமார் 5 இலட்சம் பேர் தமது வேலையை இழக்க வாய்ப்புள்ளது. அனைத்து துறைகளிலும் சேர்த்து சுமார் 10 இலட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழக்கவுள்ளனர். சுற்றுலாத் துறைசார் தொழில்களில் ஈடுபட்டிருந்த பலர் தமது வேலையை இழந்துள்ளதுடன் ஆடைக் கைத்தொழில் துறையில் இருந்த பலரும் தமது வேலையை இழந்துள்ளனர். இந்த இரண்டு துறைகளில் மாத்திரம் பலர் வேலையை இழந்துள்ளதுடன் அது தொடர்பான சரியான புள்ளிவிபரம் எவ்வாறு என்பது தெளிவாக இல்லை.

நெருக்கடியின் பருமன்

பொருளாதாரத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலாத்துறை, ஆடைக் கைத் தொழில் உட்பட மொத்தமாக 10 இலட்சம் பேர் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். இது நாட்டின் சமூக பொருளாதார மற்றும் அரசியலின் மீது பாரிய பாதிப்பினை செலுத்தும். இது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை இன்னும் தீவிரப்படுத்தும். நாட்டின் பொருளாதாரம் இந்தளவு வீழ்ச்சியடைந்தும் வணிகக் கடனாகப் பெற்றுள்ளவைக்கான மீளச் செலுத்த வேண்டிய ஒரு வருட தவணை மற்றும் வட்டியின் அளவானது சுமார் 3 பில்லியன் டொலர் ஆகும். இதில் ஒரு தவணையாவது திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் நாடு திவால் நிலையை அடைந்த நாடாக அடையாளப்படுத்தப்படும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் இலங்கை மீள எழும்ப முடியாத ஒரு மோசமான நிலையை அடையும்.

இலங்கை அடைந்துள்ள இந்த மோசமான நிலையை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதனை அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். வேலை வாய்ப்பினை இழக்கவுள்ளவர்களது எண்ணிக்கை எவ்வளவு? இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு என்ன? வேலை இழப்பவர்களுக்காக அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? அரசாங்கம் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? அவற்றின் அளவு என்ன? போன்றவற்றை அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

வெடிக்கவுள்ள கடன் மீளச் செலுத்தல் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எவ்வாறு கடன் தவணை மட்டும் வட்டியை மீளச் செலுத்துவது? அதற்கான அந்நியச் செலாவணியை எவ்வாறு பெற்றுக்கொள்வது?  நாட்டின் மிகச் சிறந்த வளங்களை விற்பனை செய்வதன் மூலம் இப்பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு இலகுவான வழியாக இருந்தாலும் கூட இது பிரச்சினை மேலும் தீவிரப்படுத்துமே ஒழிய பிரச்சினையைத் தீர்க்காது.

இறக்குமதியை மட்டுப்படுத்துவதினால் மாத்திரம் உள்நாட்டு உற்பத்திப் பொருளா தாரம் வளர்ச்சியடையாது. ஆனால் அரசாங்கமானது இறக்குமதியை கட்டுப்படுத்துவதினால் உள்நாட்டு உற்பத்தி பொருளாதாரம் வளர்ச்சியைடையும் என நம்புகின்றது.

பகல் கனவிலிருந்து மீளல்

ஆடைக் கைத்தொழிலானது இலங்கையின் பிரதான கைத்தொழிலாகும். இது இலங்கைக்குத் தேவையான அந்நியச் செலாவணியின் பெரும் பங்கினை ஈட்டும் தொழில்துறையாகும். மத்திய மற்றும் பாரிய ஆடைக் கைத்தொழிற்சாலைகள் சுமார் 800 உம்அதில் தொழில்களில் ஈடுபடும் 3 இலட்சம் பேரும் உள்ளனர். இலங்கையில் ஆடைக் கைத்தொழில்துறை ஈட்டும் மொத்த வருமானம் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

இவ்வாறான ஒரு தொழிற்துறையை உள்நாட்டுத் தேவையை நிவர்த்தி செய்யும் ஒரு தொழில் துறையாக மாத்திரம் செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளனவா? பலர் இதற்கு ஆம் என்று பதில் கூறுவர்.

ஆடைக் கைத்தொழில் துறைக்கான மூலப்பொருட்களின் 70 வீதமும் தேவையான கருவிகளின் 90 வீதமும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இங்கு இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்கள் கருவிகள் மூலமே ஆடையை உற்பத்தி செய்து அதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேலையே இடம்பெறுகின்றது. எனவே இந்தத் தொழில் துறையை நாட்டுக்குத் தேவையான சாரி, சாரம், காற்சட்டை என்பவற்றை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்த முடியாது. விவசாயத்திலும் இதே நிலைமையே காணப்படுகின்றது.

இலங்கை இந்த நெருக்கடி நிலையினை வெற்றிகொள்ள வேண்டும். அவ்வாறில்லா விட்டால் நாட்டு மக்களின் வாழக்கைத் தரம் மோசமான நிலையை அடைவதனை யாராலும் தடுக்க முடியாது. இலங்கை அடைந்துள்ள இந்த நெருக்கடி நிலை தொடர்பாக அரசாங்கம் தனது பூரண கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதோடு எதிர்க்கட்சிகளும் இது தொடர்பான தமது கருத்துக்களை கூறுவதன் மூலமாக இந்தக் கருத்தாடலை வளப்படுத்த வேண்டும்.

தமிழில்: நுஸ்ரத் நிலாம்

About the author

Administrator

Leave a Comment