முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது

0
3

மிகவுமே அரசியல்மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களில் ஒன்றே முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் என அதன் பணிப்பாளர் அஷ்ரப் ஆதம்பாவா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கடந்த வியாழனன்று (3) சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

2020 இல் நான் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழிருந்த இந்தத் திணைக்களம் தற்பொழுது கலாச்சார அமைச்சின் கீழ் இருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவி்ன் கீ்ழ் நான் அதிகளவான சுதந்திரத்தை அனுபவிக்கிறேன். தொழில்வாண்மையை நிறுவனத்தில் செயற்படுத்துவதற்கு நான் முயன்று வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சிலுள்ள சில அதிகாரிகள் முஸ்லிம்கள் சிறுபான்மை என்பதால் அவர்களுடைய அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒழுங்கான நடைமுறைகள் எதுவும் இன்றியே அவர்கள் தமது பணியைச் செய்திருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தான் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இஸ்லாம் பாடத்திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை நியமித்ததாகத் தெரிவித்த அவர், இவர்களிடமிருந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் அது கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கலாநிதி யூசுப் கர்ளாவி தொடர்பிலும் இஸ்லாம் பாடத்திட்டத்தில் அவரது கருத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஆணைக்குழு பணிப்பாளர் அஷ்ரபிடம் வினவியபோது, அவர் ஒரு மிதவாத அறிஞர், ஆனால் இஸ்லாம் பற்றிய அவரது சில பார்வைகளால் அவர் சர்ச்சைக்குரியவாரானார் எனத் தெரிவித்தார்.

மத்ரஸாக்கள் தொடர்பில் அவரிடம் வினவியபோது, இலங்கையில் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1689 மத்ரஸாக்கள் இருக்கின்றன. ஆனால் மத்ரஸாக்களைப் பதிவு செய்வதற்கான முறையான திட்டமொன்று இருக்கவில்லை. தரமில்லாத மத்ரஸாக்களைப் பதிவு செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்திலேயே அதிகமான மத்ரஸாக்கள் உள்ளன. அங்கு 347 மத்ரஸாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைகள் பதிவு செய்யப்படும் போது குறித்த பிரதேசத்தின் சனத்தொகைப் பரம்பல் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த மத்ரஸாக்களில் இருந்த வெளியேறிய அதிகமானோர் தொழில்வாய்ப்பின்றி இருக்கிறார்கள். 13, 14 வயதுகளில் மத்ரஸாக்களில் இணைந்து கொள்கின்ற இளைஞர்கள் இதனால் பெரிதும் இடர்பாடுகளுக்கு உள்ளாகிறார்கள். அரபுக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுவோர் மௌலவித் தகுதியினை மட்டுமே பெறுகிறார்கள். 3500 பள்ளிவாசல்கள் நாட்டில் இருக்கின்றன. மத்ரஸாக்களிலும் இவர்களும் போதிக்க முடியும். ஆனால் மத்ரஸாக்களில் மாதச்சம்பளமாக 15,000 ரூபா அளவிலேயே வழங்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தில் குருத்துவம் இல்லை. அவர்களும் திருமணம் முடிக்கிறார்கள். அவர்கள் எப்படி தமது குடும்பத்தை நடத்திச் செல்வார்கள் ? நாட்டில் ஏராளமான மத்ரஸாக்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான மத்ரஸாக்கள் நவீன சமூகத்தின் தேவைகளையோ உலகளாவிய  பொருளாதாரத்தையே எதிர்கொள்ளும் அளவுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நிலையில் இல்லை.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாகத்தில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களமும் ஈடுபடுகிறதா என ஆணைக்குழு கேட்டதற்குப் பதிலளி்த்த அஷ்ரப் ஆதம்பாவா, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதன் நிர்வாகத்தில் திணைக்களம் பங்கெடுப்பதில்லை எனத் தெரிவித்தார்.