அமெரிக்காவைப் பாதுகாக்க ஆயுதம் தரிப்பதற்கு உறுதிமொழி வழங்கியவர் எப்படி நாட்டின் முதன்மைப் பதவி வகிக்க முடியும் ?

68

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ண அவர்களால் எழுதப்பட்ட ‘இலங்கை ஜனநாயக ஆட்சியை நோக்கி: அரசியல் யாப்பு தொடர்பான கட்டுரைகள்’ என்ற புத்தகம் கலாநிதி கற்கைகான ஆய்வாக கொழும்பு பல்கலைக் கழக சட்டபீடத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு சட்டம்,   வலுச் சமநிலை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம் போன்ற கட்டுரைகள் அடங்கிய இந்தப் புத்தகம் யாப்பு ஆய்வுக்கான மையத்தினால் வெளியிடப்பட்டள்ளது.  இது விக்ரமரத்ண அவர்களது இரண்டாவது கலாநிதிப் பட்டமாகும். ‘இலங்கையின் அடிப்படை உரிமைகள்’ என்ற ஆய்வுக் கட்டுரைக்காக 1991 ஆம் ஆண்டு பேராதனைப் பல் கலைக்கழத்தினால் இவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ண

  • 19வது யாப்புத் திருத்தத்தின் பின்னணியை சுருக்கமாகக் கூறமுடியுமா?

இது மக்களின் நீண்டகால ஒரு வேண்டுகோளாகும். நீண்டகாலமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு எதிரான கருத்துருவாக்கம் ஒன்று ஏற்பட்டு வந்தது. இறுதியாக இம்முறைமையைக் கொண்டு வந்த ஐ.தே.கட்சி கூட இதனை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தது. இதனை நீக்க முடியாவிட்டாலும் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்ற பரவலான கருத்து காணப்பட்டது. விசேடமாக 18ம் திருத்தத்தின் பின்னர் இக்கருத்து வலுப்பெற்றது. ஏனெனில், 18ம் திருத்தமானது ஜே.ஆர் இன் யாப்பை விட மோசமான அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கியது. இவ்வாறு இது நீண்டகாலமாக இடம்பெற்று வந்து நிறைவேற்று அதிகார முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாகவே 19வது யாப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது வெறுமனே வானத்திலிருந்து விழுந்த ஒன்றல்ல. சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட இந்த முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தது. பின்னர் ஐ.தே.கட்சியும் இந்த முறைமைக்கு நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தது. அதன் பிறகு மாதுலுவாவே சோபிததேரரின் தலைமையில் பாரிய மக்கள் கூட்டணி ஒன்று ஏற்பட்டது. அந்த மக்கள் கூட்டணி  அரசியல் கட்சிகளுடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்த மாற்றத்தின் ஒரு வாக் குறுதிதான் இந்த 19 வது திருத்தம்.

  • உங்களது கருத்தின்படி 19வது யாப்பபுத் திருத்ததில் காணப்படும் சிறந்த விடயங்கள் எவை?

பாராளுமன்றத்தை பலப்படுத்தியமை, ஜனாதிபதின் மிகையான அதிகாரங் களை மட்டுப்படுத்தியமை, இதன்படி ஜனாதிபதியின் முக்கியமான பல அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. அரசியல் யாப்பு சபை உருவாக்கப்பட்டு அரசின் முக்கியமான பதவிகளுக்கு உதாரணமாக உயர் நீதிமன்றம், சுயாதீன ஆணைக் குழுக்கள் என்பவற்றிற்கான நியமணங்கள் ஒரு தனிமனிதரால் நியமிக்கப்படாமல் ஒரு குழுவினரின் ஒருமித்த கருத்துடன் நியமிக்கும் முறைமை ஏற்படுத்தப்பட்டது. ஏனெனில் அரசியல் யாப்பு சபையில் அனைத்து கட்சிகளினதும் அங்கத்தவர்கள் காணப்பட்டனர், அத்துடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இணைந்தே முடிவுகளை எடுத்தனர். இம்முறைமையானது எம்மைப் போல் பல் இனமக்கள், பல அரசியல் கட்சிகள் இருக்கும் நாட்டிற்கு ஒரு சிறந்த முறைமையாகும்.

அடுத்ததாக ஜனாதிபதியின் அதிகா ரங்கள் மட்டுப்படுத்தப்பட்டமை முன்னர் ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்கு என்றாலும் கூட தாக்கல் செய்ய முடியாத நிலைமையே காணப்பட்டது. ஆனால் 19இல் ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்ற விடயம் கொண்டுவரப்பட்டது. அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது.

அடுத்ததாக தகவல் தெரிந்துகொள்வ தற்கான உரிமை வழங்கப்பட்டது. இரட்டை குடியுரிமை உடையவர்கள் பாராளுமன்றத்திற்கு வரமுடியாது என்ற விடயம் கொண்டுவரப்பட்டது. பல நாடுகளில் இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு வாக்களிக்க முடியும். ஆனால் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டமே காணப்படுகின்றது. ஏனென்றால் இது ஒரு முக்கியமான விடயம் ஏனெனில் அவர்கள் இன்னொரு நாட்டிற்கும் உறுதி மொழி வழங்கியுள்ளனர். உதாரணமாக அமெரிக்க பிரஜைகள் அந்த நாட்டினை பாதுகாப்பதற்காக வேண்டி ஆயுதம் தரிப்பதற்காக உறுதிமொழி வழங்குவர். அவ்வாறு உறுதிமொழி வழங்கிய ஒருவர் எவ்வாறு எமது நாட்டின் முதன்மையான பதவிகளை வகிக்க முடியும்? இவைதான் 19வது திருத்தத்தில் காணப்பட்ட முக்கியமான விடயங்கள்.

  • 19வது திருத்ததில் குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகின்றதே இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

ஆம், குறைபாடுகள் காணப்படுகின்றன. அதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட வரைபு சட்டமாக மாறியிருந்தால் இக்குறைபாடுகள் ஏற்பட்டிருக்காது.

முதன் முதலாக இவ்வரைபு அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  2015 மார்ச் மாதம் ஞாயிற்றுக்கிழமையொன் றில் அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டினார். அச்சந்தர்ப்பத்தில் அவரது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ராஜபக்சவினருடன் இருந்த குழுவினர் அனைவரும் இணைந்து வரைபில் கூறப்பட்ட முக்கியமான அம்சங்களை மாற்றும்படி வேண்டினர். அத்துடன் ஆளும் கட்சியினுள்ளும் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ஜனாதிபதியின் அதிகாரங்களை அந்தளவு குறைப்பதனை எதிர்த்தனர். இறுதியில் அரசாங்கத்திற்கு அனைவரதும் கருத்துக் களுக்கேற்ப செயற்பட வேண்டியேற்பட்டது.

ஏனெனில் எமக்கு கிட்டத்தட்ட 50 ஆசனங்களே பாராளுமன்றத்தில் காணப்பட்டது. எனவே மூன்றில் இரண்டைப் பெறுவதற்காக எதிர்க்கட்சிகளினது கருத்தை ஏற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்துடன் உயர் நீதிமன்றத்திலும் சில சிறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்படி கூறினர். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்தினர். உதாரணமாக கட்சி மாறுவதனை தடைசெய்யும் வகையிலான ஒரு ஏற்பாட்டை உள்ளடக்கியிருந்தோம். அதற்கு தினேஸ் குணவர்தன போன்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அடுத்ததாக அரசியல் யாப்பு சபையில் பொதுமக்கள் 07 பேரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 03 பேரும் என்றே நாம் தயாரித்திருந்தோம் ஆனால் அவர்கள் அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் 07 என்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் 03 பேர் என்று மாற்றத்திற்குட்படுத்தினர்.  இவ்வாறு முக்கியமான பல விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையொன்று எமக்கு ஏற்பட்டது. ஆரம்ப வரைபில் பிரதமர் அமைச்சரவையின் தலைவர் என்றே காணப்பட்டது. ஆனால் இவை அனைத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் வகைகூற வேண்டியவர்கள் ஜனாதிபதியும் அவருடன் இருந்த அரசியல் கட்சிகளும் மற்றும் ஆளும் கட்சியினுள் இருந்த ஹெல உறுமயுவும் சம்பிக்க ரணவக்க போன்றவர்களும்தான்.

  • இங்கு நீங்கள் 19இல் இருப்பதாக கூறுகின்ற சிறந்த விடயங்களில் அநேகமானவை 20இல் நீக்கப் பட்டுள்ளதா?

ஆம், இதில் மீதமாக உள்ளவை ஜனா திபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள், பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 5 வருடங்கள், ஜனாதிபதி இரண்டு முறை மாத்திரமே பதவி வகிக்கலாம் மற்றும் தகவல் தெரிந்து கொள்வதற்கான உரிமை தவிர ஏனைய அனைத்து விடயங்களும் போல் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றுகூட தாக்கல் செய்ய முடியாது. 19இன் மூலம் அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்ய முடியுமாக இருந்ததால்தான் நாம் அன்று பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்த சந்தர்ப் பத்தில் நீதிமன்றத்திற்குச் சென்று அதற்கு எதிரான தீர்ப்பைப் பெறமுடிந்தது.

  • இவ்வாறான மாற்றங்கள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு ஒரு சவாலா?

18ஐ நோக்கி மீளச் செல்லலானது எமது நாட்டின் ஜனநாயத்திற்கு ஒரு பாரிய அடியாகும். இம்முறை இவர்கள் இதனை கொண்டுவரவது முன்னர் போலல்ல இம்முறை தீவிர சிங்கள இனவாத கருத்தியலின் ஆதரவுடனேயே இவர்கள் இதனை கொண்டுவந்துள்ளனர்.

  • நீங்கள் இவ்வாறான திருத்தம் ஒன்று கொண்டுவருவதற்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு ஒன்று தேவை என்று கூறியிருந்தீர்கள் அது ஏன்?

ஏனெனில் 19வது திருத்தம் மூலம் பொதுமக்களின் இறைமை அதிகரிக்கப்பட்டது. எனவே பொதமக்களின் இறைமையை அதிகரிப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை போதுமானதாகும் அதற்கு பொதுமக்களின் கருத்துக் கணிப்பு தேவைப்படாது. ஆனால் அவ்வாறு பலப்படுத்தப்பட்ட பொதுமக்களின் இறை யாண்மையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு பொதுமக்களின் கருத்துக் கணிப்பு பெறப்படவேண்டும் என்பதே எனது கருத்து. எமது யாப்பில் 17வது உறுப்புரையில் நிர்வாக மற்றும் நிறைவேற்று செயற்பாட்டின் காரணமாக ஏற்படும் அடிப்படை உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஜே.ஆர் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்ற விடயத்தைக் கொண்டுவந்தார். நாம் 19 மூலம் இதனை நீக்கி ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்ற விடயத்தைக் கொண்ட வந்தோம். இதன் காரணமாக இறைமை அதிகரிக்கப்பட்டது. இப்போது இது மீண்டும் இல்லாமலாக்கப்படுவதால் பொதுமக்களின் இறைமை பாதிக்கப்படுகின்றது. அத்துடன் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்படும் சந்தர்ப்பத்தில், அதாவது பொதுமக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதமரை நீக்குதல், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்படும்போது மக்களின் இறைமை பாதிக்கப்படுகின்றது. ஜனாதிபதியை மாத்திரமல்ல மக்கள் தெரிவு செய்திருப்பது, பாராளுமன்றமும் மக்கள் தெரிவு செய்ததே.

  • இவ்விடயம் யாப்புடனும் முரண்படுகின்றதா?

ஆம், அதாவது யாப்பின் அடிப்படை விடயங்களுடன் அதாவது மக்கள் கருத்துக் கணிப்பு பெறப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள உறுப்பரைகளுடன் இது முரண்படுகின்றது. அதனால்தான் நான் இவ்விடயத்திற்கு மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் எனக் குறிப்பிடுகின்றேன்.

  • தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள்  தொடர் பான உங்கள் கருத்து என்ன?

சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லா மலாக்கப்பட்டால் என்ன ஏற்படும்? அரச சேவை ஆணைக்குழு சுயாதீனமாக இயங்காவிட்டால் அரச ஊழியர்களுக்கான பதவி உயர்வு, இடம்மாற்ற போன்றன அரசியல் மயப்படும். எனவே இதற்கு அரச சேவை ஊழியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அரச  சேவை தொடர்பான கொள்கை உருவாக்கம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும். நான் அந்த விட யத்தை இங்கு கூறவரவில்லை. ஆனால் நியமணம் போன்ற விடயங்கள் 1948 களில் இருந்தே சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலமே இடம்பெற்றது. அரசாங்க சேவையில் அரசியல்வாதிகள் தலையிடும் நிலை காணப்பட்டால் அங்கு சுயாதீனமான அரசாங்க சேவை காணப்படாது. அரசாங்க சேவையின் சுயாதீனம் பாதிக்கப்பட்டால் அதனால் பொது மக்களுக்குரிய நன்மை கிடைக்காது. மனித உரிமைகள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றம் என்பவற்றிற்கு ஜனாதிபதி அவருக்கு நினைத்தவாறு வழங்க முடியும் என்றால் அங்கு மக்களின் இறைமை பாதிக்கப்பட்டுள்ளது என்றே அர்த்தம்.

  • அரசியல் யாப்பு சபையில் மேற் கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

உண்மையில் அரசயில் யாப்பு சபை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்த பாராளுமன்ற சபை போன்ற அமைப்பு ஒன்றையே கொண்டுவந்துள்ளனர். அதனால் ஒன்றும் செய்ய முடியாது. சென்ற முறை எதிர்கட்சிகள் அதில் எந்தவிதமான பங்கேற்பும் செய்யவே இல்லை.

  • சென்ற அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்பு ஒன்று கொண்டு வருவதற்கான முயற்சிகள் கொண்டு வரப்பட்டதுதானே. அதற்கு என்ன ஏற்பட்டது?

புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவதற்கு மைத்ரிபால சிறிசேன எந்த விதமான ஆதரவும் வழங்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் கூட நாம் எதிர் பார்த்தளவு போதிய ஆதரவு வழங்கவில்லை. இவர்கள் இருவரினதும் இழு பறிகள் காரணமாகவும் புதிய யாப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சி முற்றாகத் தோல்வியடைந்தது.