தாக்குதலுடன் தொடர்பில்லாததால் தௌஹீத் ஜமாஅத் தடை செய்யப்படவில்லை

10

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் 06 இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யுமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும் 03 இஸ்லாமிய அமைப்புக்களே தடை செய்யப்பட்டன என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (11) சாட்சியமளித்த முன்னாள் தேசிய புலனாய்வு பிரதான அதிகாரி சிசிர மெண்டிஸ் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே மில்லது இப்ராஹிம், விலாயதுஸ் ஸைலானி, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் ஆகிய ஆறு இஸ்லாமிய அமைப்புக்களையும் தடை செய்யுமாறு அரச புலனாய்வுப் பிரிவும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் யோசனைகளை முன்வைத்தது. இருந்த போதும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே மில்லது இப்ராஹிம், விலாயதுஸ் ஸைலானி ஆகிய மூன்று அமைப்புக்களையும் மட்டுமே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ தடை செய்வதற்காக ஜனாதிபதிக்கு முன்வைத்தார் எனத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் ஆகிய மூன்று அமைப்புக்களும் தாக்குதலுடன் தொடர்பில்லை என்ற காரணத்தால் தடை செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், ஸஹரான் உள்ளிட்டவர்களை கைது செய்யாமல் விட்டது பொலிசாரின் தவறு எனவும் தெரிவித்தார். (தி)