கப்பலை விட்டு உயிரைக் காப்பாற்ற முனைந்த மாலுமி தொடர்பில் விசாரணை

17

குவைத்திலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் சுமந்து செல்லும் வழியில் இலங்கையில் தீப்பற்றிய எம்டி நிவ் டயமன்ட் கப்பலின் மாலுமி உட்பட அதிகாரிகள் 23 பேரையும் விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன சிஐடிக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

கப்பல் தீப்பிடித்த போது அது தொடர்பில் உரிய எந்த நிறுவனங்களுக்கும் அறிவிக்காமல் கப்பலின் கப்டனும் ஏனைய மாலுமிகளும் கப்பலை விட்டு உயிர்காப்புப் படகுகளில் ஏறித் தப்பியுள்ளதாகவும், கப்பலின் தீயை அணைப்பதற்கான நவீன கருவிகள் அனைத்தும் கப்பலில் இருந்தும் அதனை அவர்கள் பயன்படுத்த முயற்சிக்கவி்ல்லை எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமாஅதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கருத்துக்களைத் தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இலங்கையின் கடற்பரப்பில் எண்ணெய்க் கசிவுகள் படிந்துள்ளதா என்பதை ஆராய்வதற்காக எண்ணெயின் மாதிரிகளை கப்பலில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறும், கப்பலில் பொருத்தப்பட்டுள்ள தகவல் பெட்டி (வெசல் டேடா ரெகோடர்) யை சிஐடிக்கு வழங்குமாறும் நீதவான் கப்பலின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.