அன்பளிக்கப்பட்ட இலங்கைத் தேயிலையை தனியாகச் சுவைத்ததாக லெபனான் ஜனாதிபதி மீது விமர்சனம்

9

லெபனானின் தலைநகர் பெய்ரூத்தை உலுக்கிய அமோனியம் நைட்ரேட் வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கென இலங்கை அன்பளிப்பாக வழங்கிய தேயிலையை ஜனாதிபதி தனது சொந்தப் பாதுகாப்புப் படைக்கு வழங்கியதாக அந்நாட்டு சமூக ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.

வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை பாதிக்கப்பட்டவர்களின் பாவனைக்கென 1675 கிலோ கிராம் இலங்கைத் தேயிலையை லெபனானிலுள்ள இலங்கைத் தூதுவரூடாக அன்பளிப்பாக வழங்கியிருந்தது. இந்தத் தேயிலைகள் அனைத்தையும் லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் தனது சொந்த பாதுகாப்புப் பிரிவிலுள்ள படையினருக்கு வழங்கினார் என சமூக ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெடிப்பின் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவுலா யாகோபியான், அந்தத் தேயிலைகள் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்காக வழங்கப்பட்டது. அது அவர்களுக்கே போய்ச் சேர வேண்டும். அதனைத் தனது பரிவாரங்களுக்குள் பகிர்ந்து கொள்வது வெட்கமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.