இறங்கி வந்தாலும் நெருங்கி வராத தங்கம்

9

தங்கத்திற்கான 15 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் குறைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தங்க வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை தங்கத்தின் விலை குறைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வரி ரத்து தொடர்பிலான ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பு காரணமாக தங்க வர்த்தகர்கள் செய்வதறியாது உள்ளனர்.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்களின் லாபத்தின் மீதான 14 சதவீத வருமான வரி, தங்க இறக்குமதி மீதான 15 சதவீத வரி ஆகியவற்றை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தார்.

1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச் சலுகை, 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையில் நீக்கப்பட்டது. தங்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியில் ஈட்டப்படும் உண்மையான வருமானம் இந்த மூலம் வெளிகொணரப்படாத நிலைமை தோன்றியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன், 2018ஆம் ஆண்டு தங்க இறக்குமதி மீது 15 வீத வரி விதிக்கப்பட்டதுடன், தங்கத்திற்கான விலை இலங்கையில் அதிகரிப்பதற்கு, இந்த வரி காரணமாக அமைந்திருந்தது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கத்தின் மீதான 15 சதவீத இறக்குமதி வரியை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

முன்னதாக, சர்வதேச சந்தையில் இலங்கையை இரத்தினக்கல்லின் கேந்திர முகமையாக மாற்றுவதற்கு முடியாது போனது மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான 14 யோசனைகள் குறித்து ஜனாதிபதி நடத்திய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அவரது ஊடகப் பிரிவு கூறுகிறது.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் தொடர்புடைய கைத் தொழில், இராஜங்க அமைச்சின் எதிர்கால திட்டம் தொடர்பாகவும் அந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய நிலவரத்தின்படி, தங்கத்தின் விலை இலங்கையில் ஒரு லட்சம் ரூபாய் வரை பதிவாகியிருந்தது.எனினும், 15 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்யும் அறிவிப்பு வெளியான நிலையில், 15 சதவீத சலுகையை தங்க நுகர்வோருக்கு வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு தங்க விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அவ்வாறு 15 சதவீத சலுகை வழங்கப்படுவதாக இருந்தால், இன்று ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்படும் தங்கம், 85,000 ரூபா விற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

எனினும், ஏற்கனவே 15 சதவீத இறக்குமதி வரியை செலுத்தியே தங்கத்தை கொள்வனவு செய்துள்ள வர்த்தகர்கள், அரசாங்கத்தின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கொழும்பு – செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, பழைய தங்கத்தை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம் காணப்பட்ட தங்கத்தின் விலையின்படியே இன்றைய தினம் தங்க விற்பனை காணப்பட்டது. எனினும், செட்டியார் தெருவில் இன்றைய தினம் தங்க விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தங்க வர்த்தகர்கள் கூறுகின்றனர்

பிபிசி