மாடறுப்புத் தடை முஸ்லிம் Vs பௌத்த விவகாரமல்ல

14

லுக்மான் ஹரீஸ்

அரசியலில் நயவஞ்சகம் என்பது கைவந்த கலையாகும். வஞ்சிக்கப்படுவது என்பது ஜனநாயக அரசியலின் முரண்நகையாகக் கூட இருக்கலாம். நயவஞ்சகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அரசியலில் பொதுவானவை. நயவஞ்சகன் என்பதற்கான ஒத்தகருத்தாக சிலவேளைகளில் அரசியல்வாதி என்றும் பாவிக்கப்படுகிறது. கேம்பிரிஜ் விரிவுரையாளர் டேவிட் ரன்சிமான் குறிப்பிடுவதைப்போல நயவஞ்சகத்தை அரசியலின் ஓர் அங்கமாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அதிலிருந்து நம்மால் விலகி விட முடியாது. அழுக்காக நம்மில் ஒட்டிக் கொள்ள விடுவதைத் தவிர. நயவஞ்சகம் என்பது அரசியலின் உயிர்நாடி. ஆனாலும் நயவஞ்சகம் என்பது அரசியலின் எந்தவொரு பிரிவினதும் பகுதியாக இருந்ததில்லை. எது எப்படி இருந்தாலும் அரசியல் என்பது இன்று பாரிய ஒழுக்கக் கேட்டின் இடுகுறியாக, ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும், மாறிவிட்டது. நயவஞ்சகர்கள் எதிர்த்தரப்பில் இருக்கும் போது நாங்கள் அவர்களுடன் கடினமாக இருப்போம். உங்களது சொந்தத் தரப்பிலிருக்கும் நயவஞ்சகர்களைப் பாருங்கள். மாறுபட்ட விளக்கங்கள் உங்களுள் ஊற்றெடுக்கும்.

மாடறுப்புத் தடையை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவைத் தொடர்ந்து மாடுகள் இப்பொழுது அரசியலை மேய்ந்து வருகின்றன. தீவின் எல்லைக்குள் மாடுகள் அறுக்கப்பட்டால் அது கொலை எனவும், வெளிநாட்டிலிருந்து அறுத்துக் கொண்டுவரப்பட்டால் அது சுவை எனவும் அரசியல் போலித்தனம் சொல்கிறது. வேறொரு நாட்டில் கொல்லப்பட்ட கன்றுக்குட்டியின் இறைச்சியைச் சாப்பிடுவதில் மதம் என்ன வேண்டிக் கிடக்கிறது என்ற கேள்வி குழப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றிய மக்களின் மத உணர்வுகள் நிச்சயமாக மதிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தச் சர்ச்சைக்குரிய விடயத்தைச் சுற்றியுள்ள அரசியல் போலித்தனம் வெறுக்கப்பட வேண்டும்.

இப்பொழுதெல்லாம் மாடுகள் வெறும் விலங்குகளல்ல, அவை அரசியல் விலங்குகள். அவை அரசியல் கட்சிகளின் கருவியாகவும் தேர்தல்களின் குறியீட்டு வாசகமாகவும் ஆர்ப்பாட்டங்களின் கோசமாகவும் அரசியல் சந்தர்ப்பவாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன. தற்பொழுதெல்லாம் மாட்டிறைச்சி சமையல்கலையை விட அரசியல்முறைகளில் தான் அதிகமாகப் பேசப்படுகிறது. மகாசங்கத்தினருக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் மத்தியில் இருக்கும் தந்திரமான அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் மாட்டிறைச்சியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் எப்போதும் சுவை காண்கிறார்கள். மாட்டிறைச்சியின் மீதான வெறி கடந்த நூற்றாண்டின் இனவாத அரசியலின் எச்சமாகும். அப்போது உணவு மதப்பிளவுக்கான அடையாளமாகவும் சமூகங்களை ஒன்றுதிரட்டுவதற்கான அறைகூவலாகவும் அமைந்திருந்தது.

எங்களது அயலில் எமக்கான பாடங்கள் உள்ளன. இந்தியாவில் உணவைச் சுற்றியுள்ள கலாச்சார மற்றும் மத உணர்வுகள் காரணமாக ஏற்படும் அனைத்து சமூகக் கோளாறுகளிலும் மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி சாப்பிடுவதைத் தவிர வேறு எதுவும் இந்தளவு ஆழமாக அறுக்கப்படவில்லை. மாட்டுக்கான மத அந்தஸ்தை வைத்துப் பார்க்கும் போது இந்தியாவில் மாடறுப்பு என்பது சர்ச்சைக்குரிய புள்ளியாகும். குறிப்பாக இந்து மதத்தில் மாடு உயர்திணையாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறத்தில் இந்தியாவில் மாடுகள் துருவமயப்படுத்தும் விலங்காகப் பார்க்கப்படுகிறது. இந்திய மாடுகள் அடிக்கடி அரசியல், கலாச்சார, சமூகப் பரப்புக்களை மேய்கின்றன. வரலாற்றுரீதியாக இது நாட்டின் இனமோதலின் முக்கிய ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. கோமாதாவின் பெயரில் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான அண்மைய பாதிப்புக்கள் புனித மாடுகளை மீண்டும் விவாதத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. அரசியலமைப்பின் கட்டமைப்புகளுக்கு மத்தியில், இறைச்சிக்கடை விவகாரம் கலந்துரையாடல்களின்போது மிகவும் பாரமானதாகவும் விவாதத்துக்கான கருப்பொருளாகவும் அமைந்தது. கிருஷ்ண தேவரின் காலத்திலிருந்தே இது ஒரு நாகரிகப் பிரச்சினையாக வரையறுக்கப்பட்டிருந்தது எனக் கூறும் அரசியலமைப்புச் சட்டமன்றத்தைச் சேர்ந்த சேத் கோவிந்த் தாஸ், மாடறுப்புக்கான தடையானது கையடிக்கமுடியாத தடைகளுடன் அரசியலமைப்பில் பிரதான உரிமைகளில் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார்.

மாட்டிறைச்சித் தடை என்பது இன்றுவரை இந்தியாவில் இந்து எதிர் முஸ்லிம் விவகாரமாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பாரிய வேறுபாடுகளைக் கொண்ட சிக்கலான சமுதாயத்தின் சமூக,மத சமநிலையில் இது ஒரு கவலையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாட்டிறைச்சி வர்த்தகர்களும் நுகர்வோரும் மாட்டுப் பாதுகாப்புக்கான இந்து விழிப்புணர்வுக் குழுக்களால் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறத்தில் உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. இந்தியா ஆண்டுதோறும் 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது என்றும் மாட்டிறைச்சித்தடை காரணமாக விநியோகம் குறைந்து உலக மாட்டிறைச்சி விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்கனவே உள்ளதாகவும் இதனால் இந்தியாவின் ஏற்றுமதித் தொகை குறைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவின் பெருமளவு உணவு ஏற்றுமதி முகவர்களான விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்தி ஏற்றுமதி அதிகாரசபை (APEDA) யின் தகவல்களின்படி, 2011 ஆம் ஆண்டிலிருந்து எருமை இறைச்சியின் ஏற்றுமதி வருடாந்தம் அண்ணளவாக 14 வீதத்தினால் அதிகரித்துவருகிறது. அதன் தகவல்களின்படி 2015 இல் இந்தியாவின் உணவு உற்பத்திப் பொருட்களில் உயர்ந்த இடத்தில் இருந்த பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதியைவிட அதிகமான வருமானத்தை மாட்டிறைச்சி ஏற்றுமதி ஈட்டிக் கொடுத்துள்ளது.

மேற்குநாடுகளில் இந்தியா ஒரு முக்கிய சைவ நாடாகக் கருதப்படுவதற்கு மாற்றமாக தேசிய அளவிலான சமீபத்திய மாதிரிக் கணக்கெடுப்புகளின்படி 15 வயதுக்கும் மேற்பட்ட இந்தியர்களில் 70 வீதமானோர் அசைவ உணவு உண்பவர்கள். கோழி மிகவும் பரவலாக நுகரப்படும் இறைச்சியாக இருக்கும் நிலையிலும் பர்கர்கள், குருமாக்கள் போன்ற மாட்டிறைச்சி உணவுகளும் கடந்த தசாப்தத்தில் செல்வந்த நகர்ப்புற இந்துக்கள் வாழும் இந்திய நகரங்களில் உள்ள  சிறந்த உணவகங்களின் மெனுக்களில் பிரபலமாகிவிட்டன. இருபுறமும் நடக்கின்ற இறைச்சி விவாதம் குறித்த கணக்கீடுகளுக்குப் பின்னால் மதம், பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் கலவை உள்ளது. பெரும்பான்மையான இந்துக்கள் உட்பட 70 வீத இந்தியர்கள் மாமிச உணவை உட்கொண்டாலும் இந்து மதத்தில் உள்ள பல உயர்சாதி சமூகங்கள் சைவ உணவை உட்கொள்பவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் பல நூற்றாண்டுகால கலாச்சார ஆதிக்கம் உயர்சாதியினருக்கு அரசியல் செல்வாக்கை வழங்கியிருக்கிறது. மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் மூலமும் ஏனைய இறைச்சிகளைக் குறைப்பதன் மூலமும் இந்த சமூகங்களின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என பாஜக நம்பியது. இந்தியாவின் தீவிரவாத பாஜக அரசாங்கத்தின் பிழைப்புக்கு மாட்டிறைச்சித் தடையைப் பேண வேண்டிய அரசியல் தேவை இருக்கிறது.

இந்தத் தடை பாரம்பரிய இந்து விழுமியங்களைப் பாதுகாப்பதாக ஆதரவாளர்கள் கூறிவந்தாலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இந்தத் தடையை கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில் அவர்களின் மாநிலங்கள் பாரம்பரியமாக மாட்டிறைச்சியை உட்கொள்பவைகளாக இருக்கின்றன. பல இந்திய தாராளவாதிகள் அத்தகைய தடை அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்று கேள்வி எழுப்புகின்றனர். மக்களின் உணவுத் தேர்வுக்கான அடிப்படை உரிமையை காவல்துறை மீறுவதாக அவர்கள் வாதிடுகின்றனர். எவ்வாறாயினும் மாடறுப்பு அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரியதாக மாறியதால் மாட்டிறைச்சி சாப்பிடாத ஆனால் மற்றவர்கள் அதனைச் சாப்பிடுவதில் அக்கறை காட்டாத பலரும் முன்னரைவிடப் பலமான சகிப்புத்தன்மையற்ற நிலைப்பாட்டை எடுக்கத் தலைப்பட்டனர். இதனால் உயிர்வாழ்வதற்கு மாட்டிறைச்சி உட்கொண்டவர்களும் கூட தங்களைச் சர்ச்சைக்குரியவர்களாகக் கருதத் தொடங்கினர். மாடறுப்புக்குத் தடை என்பது இந்தியாவில் வகுப்புவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைப்பது வேடிக்கையானது, யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டது. மாடறுப்புத்தடை எப்படிப் போனாலும் வாக்குகளை இலக்குவைத்த சொந்த நலன்களால் வகுப்புவாதம் நிச்சயம் தூண்டப்படும்.

மீண்டும் இலங்கையை நோக்கினால், இந்தத் தடை ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் இந்த முடிவு ஏற்கனவே பௌத்த உயர்பீடங்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. இது மிருக உரிமைக் குழுக்களிடமும் சிங்கள பௌத்த லொபிகளிடமும் நிச்சயமாக ஓர் அதிர்வலையைத் தோற்றுவிக்கும். சில வருடங்களுக்கு முன்னர், மாடறுப்புக்குத் தடைவிதிக்கக் கோரி இந்திரதிஸ்ஸ தேரர் தலதா மாளிகைக்கு முன்னர் தற்கொலைசெய்து கொண்டார். அரசியல் போலித்தனத்துக்கு அப்பால் மதப் போலித்தனமும் இங்கிருக்கிறது. ஆடு, கோழி (ஏன் மீன்களும்) போன்ற உயிரினங்களின் கொலைகளும் பெருமளவில் சுதந்திரமாக முன்னெடுக்கப்படும்போது, மாடறுப்புக்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பதன் நயவஞ்சகத்தனம் தொடர்பில், மருத்துவ நன்மைகளுக்கு அப்பால் போர்வை போர்த்தப்பட்ட இந்தத் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடக்கின்றன. இவை அனைத்துமே உயிரினங்கள். எல்லா வகையான உயிரினங்களின் கொலை பற்றியே பௌத்த மதம் பேசுகிறது. அந்தவகையில் இந்தத் தடை தாவரங்களுக்கும் நீடிக்கப்பட வேண்டும். எனவே மாட்டுக்கு மட்டுமான தடை இந்துச் செல்வாக்கே என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இதில் பொருளாதார விவகாரங்கள் இருந்தாலும் மாடறுப்புத் தடையுடன் மதரீதியான எந்த மனக்கிலேசங்களையும் கொள்ளத் தேவையில்லை. இந்தத் தடை முஸ்லிம் இறைச்சி வர்த்தகர்களை பொருளாதார ரீதியாக இலக்காக வைத்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக சில விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வகையான பொருளாதாரத் தாக்கம் முஸ்லிம் இறைச்சி வர்த்தகர்களுக்கு மட்டுமன்றி, பெரும்பாலான மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், மாடு வளர்ப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் பெரும்மான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இதன் பொருளாதாரத் தாக்கம் எல்லா இடங்களிலும் உணரப்படும். உண்மையில் அரசாங்கத்தின் தடை உத்தரவு மாட்டிறைச்சி சாப்பிடுவோரை மட்டும் பாதிக்கப் போவதில்லை. உள்நாட்டுச் சந்தைகளுக்கு மட்டுமன்றி வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் விநியோகம் செய்யும் தோல் உற்பத்திப்பொருள் மற்றும் இறைச்சி உற்பத்தியாளர்களுக்கும் இது தீங்கு விளைவிக்கும். ஆனால் முன்னர் கூறியது போல, முஸ்லிம் நுகர்வோரைத் தாண்டி தங்களது மாமிச மற்றும் மாட்டிறைச்சி உணவுகளை அனுபவிக்கும் மில்லியன் கணக்கான மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான நாவூறும் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாட்டிறைச்சித் தடை விவகாரம் முஸ்லிம் எதிர் பௌத்த பிரச்சினையாக முன்வைக்கப்படக் கூடாது. ஏனெனில் மாட்டிறைச்சி நுகர்வு முஸ்லிம்களுக்கு கட்டாயமானதொன்றல்ல. மாடு அல்லது எருமையின் இறைச்சியைப் பொறுத்த விடயங்களில் எந்தவிதக் கற்பிதங்களாலும் இதனை இஸ்லாமிய அடையாளத்தின் ஒரு பகுதியாகக் கணிப்பிட முடியாது.

முஸ்லிம்களைப் பொருத்தவரை இந்தியாவின் படிப்பினைகள் நிச்சயம் உதவும். இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்திய முஸ்லிம் சமூகம் நூறு ஆண்டுகளுக்கு முன்பே மாட்டிறைச்சி சாப்பிடுவதை தாமாகவே முன்வந்து கைவிட்டு விட்டது. 1919 ஆம் ஆண்டில் துவங்கிய மகாத்மா காந்தி தலைமையிலான கிலாபத் இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயற்பட்டவர்களான மௌலானா முஹம்மதலி, ஷௌகத் அலி, ஹக்கீம் அஜ்மல் கான், மியான் ஹாஜி அஹமத் காத்ரி, மியான் சோட்டானி, மௌலானா அப்துல் பாரி, மௌலானா உசைன் அஹமத் மதானி ஆகிய முஸ்லிம் தேசியவாதிகள் மாடறுப்பைத் தவிர்ப்பதற்கான யோசனையை முன்வைத்தனர். இந்த முன்னணி முஸ்லிம் மதத் தலைவர்கள் மாடறுப்பதைத் தவிர்க்குமாறு தம்மைப் பின்பற்றியோரை வேண்டினர். இதனால் தமது சமயத்துக்குள்ளிருந்தே மதத் தீவிரவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகினர். தமது கருத்துக்கு இரு தரப்பினரும் குர்ஆனையும் ஹதீஸையும் ஆதரவாக முன்வைத்தனர். பல முன்னணி முஸ்லிம் அறிஞர்கள் மாடறுப்பு தொடர்பில் மோடி அரசாங்கம் சட்டத்தை முறையாக வகுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த உலமாக்களில் சிலர் மாடறுப்புக்கு நாடு தழுவிய தடை விதிப்பதை ஆதரிக்கின்றனர். தேவ்பந்து பிரிவைச் சேர்ந்த ஜம்இய்யதுல் உலமா ஹிந்தைச் சேர்ந்த மௌலானா மஹ்மூத் மதனி, மாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் அரசியல்மயமாக்கப்பட்டு முஸ்லிம்களைக் குறிவைக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக உணர்கிறார். 1921 ல் தரீக் இ குர்பானி காவோ வை எழுதிய காஜா ஹஸன் நிஸாமி “உங்களது குர்பானியின் இரத்தமோ இறைச்சியோ இறைவனுக்குத் தேவையில்லை“ என்ற அல்குர்ஆன் வசனத்தைச் சுட்டிக் காட்டுகிறார். உண்மையில் இறைச்சி உ்ண்பது அல்குர்ஆனில் கட்டாயமானதாகவோ (வாஜிப்) கடமையானதாகவோ (பர்ள்) குறிப்பிடப்படவில்லை. உணவு நுகர்வு சம்பந்தமாக “உங்களுக்கு அருளியவற்றில் இருந்து நல்லதை உண்ணுங்கள்“ (அல்குர்ஆன் 2: 168) என்று தான் அல்குர்ஆன் சொல்கிறது. அல்குர்ஆன் இறைச்சி சாப்பிடுவதை அனுமதிக்கிறதே ஒழிய அதனை அவசியமானதொன்றாகக் கூறவில்லை. உலகம் முழுவதுமுள்ள மிதவாத ஷீயா சுன்னி அறிஞர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். இறைச்சி சாப்பிடுவதை அனுமதிக்கும் இஸ்லாமிய சட்டம் அதனை அளவுக்கதிகமாக நுகர்வதை வெறுக்கிறது (மக்ரூஹ்).

ஒட்டுமொத்தமாக மாடறுப்புத் தடையின் தேசிய ரீதியான தாக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். கால்நடைகளின் பொருளாதாரம் சிக்கலானது. பல குறிப்பிடத்தக்க தொழில்கள் அதனுடன் சிக்கலான முறையில் பிணைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் புகழ்பெற்ற நீதிபதியான பைசான் முஸ்தபா மாடறுப்பு தொடர்பில் பேசும் போது பல்வேறு சூழல் விவகாரங்களையும் கவனத்திலெடுக்க வேண்டும் என்கிறார். ஹைதராபாத்தின் NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சினையாகாத மாடுகளுக்கு என்ன நடக்கும் என ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். சமூகத்தின் ஒரு பிரிவின் மத உணர்வுகளைப் பேணுவதற்கு சமூகத்தின் பிறிதொரு பிரிவின் அன்றாட நுகர்வுப் பழக்கமாக இருக்கும் மாட்டிறைச்சி உட்கொள்வதைத் தடை செய்வது கூட்டாட்சி நிலவும் நாடொன்றுக்கு நியாயமான சட்டம் அல்ல என சில சட்ட வல்லுனர்கள் வாதிடுகின்றனர்.

மறுபுறத்தில் மாட்டிறைச்சித் தடை கால்நடை வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. விவசாயிகள் இனி கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். விலங்குகளுக்கு வயதாகும் போது அவற்றை மீள விற்பதற்கான விலைமதிப்பு இருக்காது என்று அஞ்சுகிறார்கள். உற்பத்தியில் ஈடுபடாத கால்நடைகளுக்கு பாதுகாப்பும் மீள்விற்பனை மதிப்பும் இல்லாதபோது விவசாயிகள் கால்நடைகளைச் சொந்தமாக்குவதற்கு விரும்புவது குறைகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இவ்வாறான நிலையில் மாடு வளர்ப்பது விவசாயிகளுக்கு எந்தப் பொருளாதார விளைவுகளையும் தரப்போவதில்லை. (இந்தியாவின் கால்நடைகளின் கணக்கெடுப்பின்படி மாடறுப்பு தடை செய்யப்பட்டுள்ள மாநிலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகியுள்ளது. மறுபுறத்தில் மாடறுப்பு தடை செய்யப்படாத மாநிலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை மாறாதிருந்துள்ளது அல்லது அதிகரித்துள்ளது). இந்த வகையில் மாடறுப்புச் சட்டம் என்பது உண்மையிலேயே “மாடுகளுக்கு எதிரானது“. மாட்டிறைச்சிக்கான தடை என்பது கட்டாக்காலி மாடுகள், சரிந்து விழுந்த சந்தைகள், எருமைகளின் பெருக்கம் என்பவற்றையே விளைவாகக் கொண்டு வரும். ஒரு விலங்கின் பொருளாதாரப் பெறுமானம், அது இன்னொரு விவசாயியால் வாங்கப்படாத வேளையில், அதனை அறுப்பதற்காக விற்பனை செய்வதில் தான் தங்கியிருக்கிறது. மாட்டிறைச்சி உணவுக் கலாசாரத்தின் முக்கிய கூறாகியிருக்கிறது. புரதத்தைப் பெறுவதற்கான செலவு குறைந்த மூலமாகவிருக்கிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் தோல் உற்பத்தித் துறையின் அடிப்படையாகவிருக்கிறது. அதனுடைய உள்ளுறுப்புக்கள் மருந்து தயாரிப்பிலும் ஏனைய உற்பத்தித் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. காளை மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யும் பாலுற்பத்தியாளர்களையும் இது பாதிக்கிறது. பகரமாக, இறைச்சியை இறக்குமதி செய்வதால் உள்ளுர் சந்தையில் மாட்டிறைச்சியின் விலை அதிகரிக்கும்.

இலங்கையின் சில அவதானிகளின் கூற்றுப்படி மாடறுப்புத் தடைக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்ட நேரம், அரசியல் உந்துதல்களால் இயக்கப்படுவதாக இருந்தது. மாடறுப்புத் தடைக்கான கோஷம் எப்பொழுதும் முஸ்லிம் சிறுபான்மைக்கெதிராக பௌத்த பெரும்பான்மையினரை ஒன்றுதிரட்டுவதற்காக சிங்களத் தேசியவாதிகளாலும் பிக்குகளாலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ள சில சர்ச்சைக்குரிய விவகாரங்களில் இருந்து கவனத்தைத் திருப்புவதற்கான உபாயமாகவும் இது சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் தற்பொழுது ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீதான தடையை பலவீனப்படுத்தும் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் முன்னணியில் இருக்கிறது. இந்தத் திருத்தச் சட்டத்துக்கான வரைபை பகிரங்கப்படுத்தியதன் பின்னர் அரசாங்கம் அதற்கான சட்டரீதியான செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறது. சிறையிலடைக்கப்பட்டுள்ள கொலைக்குற்றவாளி ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு எதிரான மக்களின் எதிர்ப்புப் பரவுவது மாடறுப்புச் சட்ட முன்மொழிவினால் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பதவிப்பிரமாணம் சொல்லப்படுகின்ற ஒரு நாடு ஒரு சட்டத்துக்கு முரணானது. (சரத் பொன்சேகாவுக்கும் குட்டிமணிக்கும் மறுக்கப்பட்டது) “சிங்களப் பெரும்பான்மையைச் சந்தோஷப்படுத்துவதன் ஒரு பகுதியாக“  “முஸ்லிம் சமூகத்தைப்“ பலி கொடுக்கும் ஒரு செயற்பாடாக பலரும் இதனைக் கருதுகின்றனர். அந்த வகையில் சனத்தொகையின் பன்மைத்துவத்தில் விழுந்த மற்றுமொரு அடியாக இது நோக்கப்படுகிறது.

மொத்தத்தில் “மாட்டு அரசியலுடன்“ நயவஞ்சகம் பிணைக்கப்பட்டுள்ளதால் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய பரந்த பல தாக்கங்கள் உள்ளன. இந்த மாடறுப்புத் தடை முஸ்லிம்களை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும். இந்தத் தடையானது அண்மைக்காலங்களில் இலங்கை கண்ட பல சட்டங்களையும் கொள்கைகளையும் போலவே தவறானதொன்றாகவே தோன்றுகிறது.