அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: வெல்லப் போவது யார்?

53

றவூப் ஸெய்ன்

நவம்பர் 03 இல் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தல் களம் களைகட்டி வருகிறது. நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் இறங்கியுள்ளபோதும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகின்றது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் முறை ஏனைய நாடுகளிலிருந்து சற்று வேறுபட்டது. தேர்தல் கல்லூரி மூலமே (The Electoral College) ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் 270 ஐப் பெறுகின்றவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார். அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களிலும் அதே காலப் பகுதியில் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலும் செனட் சபை உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்று மாநிலங்களின் பிரதிநிதிகள் சபை அங்கத்தவர்களின் தொகைக்குச் சமமான தொகையினர் தேர்தல் கல்லூரிக்குத் தெரிவாவர். அவர்கள் நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவுசெய்வர்.

எவ்வாறாயினும், 50 மாநிலங்களில் சனத்தொகைக்கு ஏற்ப ஒதுக்கப்பட்டுள்ள அதிக ஆசனங்களைக் கொண்ட 14 மாநிலங்கள் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் ஆற்றலைப் பெறுகின்றன. அதில் கலிபோர்னியா (45), டெக்ஸாஸ் (27), நியூயோர்க் (34), பென்சில்வேனியா (23), இல்நாய் (22), ஒஹியோ (22), ப்ளோரிடா (19), மிச்சிக்கென் (18), நியூ ஜேர்சி (14), மெசுஸஸ் (11), இந்தியானா (10), வேர்ஜினியா (10), மிசூரி (9), விஸ்கொன்சின் (9) ஆகிய மாநிலங்களின் வாக்குகள் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

இது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முறையிலுள்ள விமர்சனத்திற்குரிய ஒன்றாகும். இம்மாநிலங்கள் வேட்பாளர்களுக்கான பிரதான போட்டிக் களங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஆகக் கூடிய மக்கள் ஆதரவைப் பெறுபவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவது உறுதியாகும். அந்த வகையில் செப்டம்பர் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பீடுகளின்படி ஜோ பைடன் இம்மாநிலங்களில் முன்னணியில் உள்ளார்.

தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பீடு செய்யும் அமெரிக்கக் கம்பனிகள் ஜோ பைடனை 52 வீத ஆதரவைப் பெற்றுள்ளார் என்று கருத்துக் கணிப்பீடுகளை முன்வைத்துள்ளன. டொனால்ட் ட்ரம்ப் 48 வீதமான செல்வாக்கினையே கொண்டுள்ளதாக கணிப்பீடுகள் காட்டுகின்றன.

ஆயினும், இதனை உறுதியான முடிவாக ஏற்க முடியாதுள்ளது. ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பை விட ஹிலாரி கிளின்டனே முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்பீடுகள் காட்டின. இறுதியில் டொனால்ட் ட்ரம்பே வெற்றி பெற்றார்.

மூன்று முக்கிய கேள்விகள் இம்முறை அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்கவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றன. கோவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர் யார்? இரண்டாவது அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றக் கூடியவர் யார்? தொழிலாளர் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க அமெரிக்கர்கள் குறித்து அக்கறையுள்ளவர்கள் யார்? இக்கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலளிப்பவரே மக்களின் தெரிவாக இருப்பார் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, ஜோ பைடன் சார்ந்த ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் இம்மூன்று கேள்விகளுக்கும் ட்ரம்ப் பொருத்தமற்றவர் என்பதை அவரது முதல் பதவிக் காலம் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். காரணம், கோவிட் 19ஐக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். அதேவேளை, பொருளாதார வளர்ச்சி குறித்து ட்ரம்ப் அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக, Foxconn Plant எனப்படும் இராட்சத கம்பனியில் மூலம் மில்லியன் கணக்கானோருக்கு தொழில் பெற்றுத் தரப்படும் என ட்ரம்ப் வாக்குறுதியளித்தார். இந்தக் கம்பனியை எட்டாவது உலக அதிசயம் என்று அவர் வர்ணித்திருந்தார்.

ஆனால், அவரது நான்கு ஆண்டு கால ஆட்சியில் வேலையற்றோர் வீதம் குறையவில்லை. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கக் கம்பனிகளின் வருமான வரியை உயர்த்தப் போவதாக அவர் அச்சுறுத்தி வருகின்றார். ட்ரம்பின் காலத்தில் உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவையெல்லாம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்வைத்து வரும் விமர்சனங்களாகும்.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளவும் சிறப்பாகக் கட்டியெழுப்புதல் (Build Back Better Plan) எனும் திட்டத்தை ஜோ பைடன் முன்வைத்துள்ளார்.  ட்ரம்பை விட அரசியலிலும் பொருளாதாரத்திலும் சிறந்த அனுபவம் மிக்கவர் என்று ஜோ பைடன் கருதப்படுகிறார். அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வரப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இவை ஜோ பைடனின் பலங்கள் எனக் கருதப்படுகின்றன.

CNN தொலைக்காட்சி இறுதியாக மேற்கொண்ட கருத்துக் கணிப்பீட்டில் பிரதான கட்சியின் இரு வேட்பாளர்களுக்கும்  இடையில் கடும் போட்டி நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், ட்ரம்புக்குப் பாதகமான சூழல் களத்தில் உள்ளதென்று அமெரிக்காவின் உள்ளூர் ஊடகங்கள் எழுதி வருகின்றன.

நவம்பர் மூன்று தேர்தலில் ஒட்டுமொத்த அமெரிக்க வாக்காளர்களிலும் 30 வீதமானவர்கள் வெள்ளை இனமல்லாதவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க அமெரிக்கர்கள் ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் அதில் உள்ளடங்குகின்றனர். ஜோ பைடனின் உதவி ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயகக் கட்சியில் இம்முறை களமிறங்கியிருப்பவர் கமலா ஹரிஸ் எனப்படும் இந்தியப் பூர்வீகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியாவார்.

வெள்ளை இனமல்லாதவர்களின் வாக்குகள் ட்ரம்பிற்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு இம்முறை மிகவும் குறைவாகும். ஏனெனில், ஜோர்ஜ் ப்லைட் எனப்படும் கறுப்பினத்தவரை அமெரிக்கப் பொலிஸார் கழுத்து நெரித்துக் கொன்றதைத் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கறுப்பினத்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வெள்ளை இனவாதத்திற்கு எதிரான விடுதலைப் போராட்ட உணர்வுகள் வலுவடைந்து வரும் இந்தத் தருணத்தில் ஜோ பைடனுக்கான ஆதரவுத் தளம் வலுவடைந்து வருகின்றது. மட்டுமன்றி, ட்ரம்ப் மேற்கொண்ட அதிரடியான வெளிநாட்டு நகர்வுகள் அவருக்கு எதிராகத் திரும்பலாம் என்று கருதப்படுகின்றன.

சீனாவுடன் ட்ரம்ப் கொண்டுள்ள பகைமை, நேட்டோவிலிருந்தும் ஐ.நா. பாதுகாப்புச் சபையிலிருந்து விலகுவதாக அவர் விடுத்த அறிவிப்பு உலக சுகாதார அமையத்திற்கு ட்ரம்ப் அமெரிக்க அரசின் நிதியாதரவை நிறுத்தியமை, மெக்சிகோ எல்லைப் புறத்தில் உத்தேசிக்கப்பட்ட அவரது பாதுகாப்புச் சுவர், கோவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதில் காட்டிய அதிரத்தை, பொலிஸாரின் வெள்ளை இனவாதத்திற்கு ஆதரவாக அவர் தெரிவித்த கருத்துக்கள் என ட்ரம்புக்குப் பாதகமான பல காரணிகள் களத்தில் உள்ளன.

இதேவேளை, கருத்துக் கணிப்பீடுகளில் பெரும்பாலானவை இருவரில் யார் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்கிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சர்வதேச அரசியலை எவ்வாறு பாதித்து வருகின்றது என்பது முக்கிய கேள்வியாகும். அந்தக் கேள்வியிலிருந்தே அமெரிக்கத் தேர்தல் உலக அரசியலில் ஏற்படுத்துகின்ற தாக்கம் குறித்து விவாதிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ரத்து அதிகாரம் அமெரிக்காவில் பூரண ஜனநாயக ஒழுங்கமைப்பொன்று உள்ளதா என்ற கேள்வியைப் பலமாக எழுப்புகின்றது. ஏனெனில், நிறைவேற்றுத் துறை நிருவாகம், சட்டவாக்கம் ஆகியன சுதந்திரமாக இயங்குவதாகக் கூறப்பட்டாலும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி அனைத்திலும் தலையீடு செய்கின்ற அதிகாரத்தைக் கொண்டுள்ளார். ஆயுதப் படைகளை வழிநடத்துதல், வெளிநாட்டு விவகாரங்களை நிருவகித்தல், நீதித்துறை அதிகாரங்களைக் கட்டுப்படுத்தல் என்பவற்றைக் கடந்து மக்கள் நேரடியாகத் தெரிவுசெய்யும் பிரதிநிதிகளின் சட்டவாக்கத் துறை மீதும் தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தும் உரிமையை அமெரிக்க அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்குகின்றது.

அதாவது 50 மாநிலங்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபை எடுக்கும் ஒரு தீர்மானத்தை 10 நாட்களுக்குள் நிராகரிப்பதற்கும் அங்கீகரிப்பதற்குமான அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உள்ளது. இது அமெரிக்க ஜனநாயகத்திலுள்ள மிகப் பெரிய கோளாறாகும்.

உலக நாடுகள் மீது போர் தொடுப்பதற்கும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டவிழ்ப்பதற்குமான தீர்மானங்களை அமெரிக்கக் காங்கிரஸின் (மக்கள் பிரதிநிதிகள் சபை, செனட் சபை) அங்கீகாரமின்றியே தனித்தெடுக்கும் அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதி கொண்டுள்ளார். வெறி பிடித்தவனின் கையில் எல்லையற்ற அதிகாரம் குவிக்கப்பட்டால் அவன் பேயாடுவான் என்பதற்கு ட்ரம்பின் ஆட்சிக் காலம் ஓர் எடுத்துக் காட்டு.

காங்கிரஸின் தீர்மானங்களை மறுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பது அமெரிக்க ஜனநாயகத்தின் விகாரமான முகம் என்று விமர்சிக்கப்படுகின்றது. அலெக்சாந்தர் ஹெமில்டன் மற்றும் ஜேம்ஸ் மெடிசன் ஆகியோர் நியூயோர்க் பத்திரிகையொன்றில் தொடர்ச்சியாக எழுதி வந்த அரசியல் கட்டுரையே இன்று அமெரிக்காவின் அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. அது சர்வதேச நாடுகள் மீது அமெரிக்காவின் அனாவசியமான தலையீட்டை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதிக்கு அதிகாரங்களைத் தாரைவார்த்துள்ளது.

உலகில் எங்குமே ஜனநாயகம் முழுயாக அமுலில் இல்லை என்பதற்கு அமெரிக்க அரசியல் முறைமையே ஓர் எடுத்துக் காட்டு. அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டாலும் அமெரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு பிற நாடுகளை அடிமைப்படுத்துவது, ஆக்கிரமிப்பது அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படைகளாக இருந்து வருகின்றன.

முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வொசிங்டன் 1789 இல் பதவிக்கு வந்தார். தற்போது 46 ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறப் போகின்றது. பதவியிலிருந்த 46 ஜனாதிபதிகளும் ஒரே வெளிநாட்டுக் கொள்கையுடன்தான் செயல்பட்டுள்ளனர். காலநிலை மாற்றம், பூகோள வெப்பம், அணுவாயுதப் பரவல், நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு, பிராந்தியங்களை ஊடறுக்கும் பயங்கரவாதம், தகவல் திருட்டு, பிரமாண்டமான மக்கள் புலம்பெயர்வு, வேலையற்றோர் பிரச்சினை, சர்வதேச நாடுகளின் வறுமை மற்றும் சமத்துவமின்மை, ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்ற விவகாரங்களில் இதுவரை அமெரிக்க அரசு எல்லா நாடுகளில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. நேரத்திற்கு நேரம் தனது ஒரு பக்க நலன்களைக் கருத்திற் கொண்டு ஜனநாயக விழுமியங்கள் தொடர்பாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட அணுகுமுறைகளையே அவ்வரசு பின்பற்றி வருகின்றது.

ஒரு நாட்டில் ஜனநாயக அரசை சர்வதிகாரம் என்றும் இன்னொரு நாட்டில் சர்வதிகார ஆட்சியை ஜனநாயக சக்தி என்றும் அது போற்றிப் புகழ்கின்றது. மிகப் பெரும் ஜனநாயகம் எனப்படும் அமெரிக்கா மத்திய கிழக்கில் நிலவும் மன்னராட்சிக்குக் குடைபிடிக்கின்றது. இதுதான் அமெரிக்க ஜனநாயகத்திலுள்ள மிகப் பெரும் கோளாறு.

இதைத்தான் பிரெஞ்சுத் தத்துவஞானியும் கட்டுடைப்புவாதியுமான ழாக் டெரிடா “ஜனநாயகம் வந்து விட்ட ஒன்றல்ல. அது எப்போதும் வர வேண்டியதொன்றாகவே உள்ளதென்று (Democracy is yet to come) என்றார். ஆக, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் முறை ட்ரம்ப் வென்றாலும் ஜோ பைடன் வென்றாலும் உலகில் நம்பிக்கைக்குரிய நல்ல மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்ப்பது கடந்த கால அனுபவங்களிலிருந்து பார்க்கும்போது சற்றுக் கடினமாகவே உள்ளது.