இலங்கையில் கல்வி தரப்படுத்தப்படுகின்றதா? மட்டுப்படுத்தப்படுகின்றதா?

33

சமீபகாலமாக இலங்கை அரசு எடுத்து வரும் சில தீர்மானங்கள் உயர் கல்வியை மட்டுப்படுத்துகின்றதா அல்லது தரப்படுத்துகின்றதா என்ற சந்தேகத்தை கல்வியியலாளர்களிடையே எழுப்பி வருகின்றது.

இலங்கையில் இத்தனை காலம் அங்கீகரிக்கப்பட்டிருந்த மூன்று ரஷ்ய அரச பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து இலங்கை மருத்துவக் கழகம் நீக்கியுள்ளது. மிகவும் ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே இம்முடிவை தாம் எட்டியதாக மருத்துவக் கழகம் அறிவித்தது.

அம்மூன்று பல்கலைக்கழகங்களும் Pirogrov Russian National Research Medical University, The Tver State Medical University மற்றும் People’s Friendship University of Russia  என்பனவாகும்.

இலங்கை மருத்துவக் கழகத்தின் பதிவாளர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இப்பலைக்கழகங்களை அங்கீகரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இத்தீர்மானம் குறித்து கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதரம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. முற்கூட்டிய அறிவித்தல் எதுவுமின்றி இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே இலங்கை மருத்துவர் சங்கம் சடுதியாக இவ்வாறான தீர்மானமொன்றை அறிவித்துள்ளது. இது மிகப் பிழையான தீர்மானம் என்று ரஷ்யத் தூதரகத்தின் கலாசாரப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 50 ஆண்டுகால ராஜதந்திர உறவுகள் நிலவி வருகின்றன. ரஷ்ய அரச பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான மற்றும் மருத்துவக் கற்கைகளைத் தொடர்வதற்கு ரஷ்ய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு பூரணப் புலமைப் பரிசில்களை வழங்கி வரும் நிலையில், இலங்கை மருத்துவக் கழகம் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கை மாணவர்களுக்கு தாம் வழங்கி வரும் புலமைப் பரிசில்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

உண்மையில் இலங்கை மருத்துவர் கழகம் இத்தகைய தீர்மானமொன்றை எடுப்பதற்குப் பின்னால் இருந்த அரசியல் என்ன? இதுதான் கல்வியியலாளர்களைக் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி. ஏனெனில், வருடாந்தம் 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கி உயர் தரப் பரீட்சையில் தோற்றுகின்றனர். அவர்களுள் பாடசாலை மாணவர்களும் தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர். இவர்களில் சுமார் 180,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெறுகின்றனர். ஆனால், அவர்களிலிருந்து வெறும் 30,000 மாணவர்களே அனைத்துப் பீடங்களுக்குமான நுழைவு அனுமதியைப் பெறுகின்றனர். உயர் தரத்தில் தோற்றும் மாணவர்களோடு ஒப்பிடும்போது இது வெறும் 10 வீதமாகும்.

பல்கலைக்கழகங்களில் தகுதி பெறும் மாணவர்களில் 150,000 மாணவர்கள் நுழைவு அனுமதி மறுக்கப்படுகின்றனர். இது இலங்கையின் உயர் கல்வியிலுள்ள பாரிய குறைபாடாகும். மிகக் குறிப்பாக ஓரிரண்டு புள்ளிகளால் மருத்துவ பீட நுழைவு அனுமதியை இழக்கும் மாணவர்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பெரும்பாலும் இம்மாணவர்கள் தமது மருத்துவராகும் கனவை நனவாக்குவதற்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களையே நாடுகின்றனர்.

ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சைபிரஸ், ஜியோஜியா போன்ற நாடுகளில் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் கற்றுத் தேர்ந்து மருத்துவருக்கான கல்வித் தகைமையைப் பெறுகின்றனர். பின்னர் நாடு திரும்பியதும் இலங்கை மருத்துவர் சங்கத்தினால் நடத்தப்படும் கட்டாயப் பரீட்சையொன்றில் தோற்றி, அதில் சித்தியடைந்த பின்னர் இலங்கையின் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள இலங்கை மருத்துவக் கழகம் நீண்டகாலமாக வெளிநாடுகளில் கற்று வரும் மருத்துவர்கள் மீது ஓரக்கண் பார்வையொன்றை வைத்து வந்தது. தற்போது அதற்குச் சாதகமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதனால் இத்தகைய அதிரடி முடிவுகளை அறிவித்து வருகின்றது. இத்தீர்மானத்தால் ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் கற்றுவரும் நூற்றுக்கணக்கான இலங்கை மருத்துவத் துறை மாணவர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கற்கை நெறியின் அரைவாசியைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் இலங்கை மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினால் அவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். காலப் போக்கில் ஏனைய நாடுகளிலும் மருத்துவத் துறையில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இத்தீர்மானம் மாற கூடிய ஆபத்து உள்ளதென்று எச்சரிக்கப்படுகின்றது.

இதிலுள்ள வேடிக்கை என்னவெனில், இலங்கையிலுள்ள அரச மருத்துவ மனைகளில் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவும் சூழலிலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இலங்கை மருத்துவக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஹரிந்த டி சில்வா அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலிலிருந்து ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டுள்ளமை ஒரு விபத்து அல்லது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அபிப்பிராயத்தில் இத்தீர்மானம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. ஏனெனில் அது கல்வி நிறுவனங்களை ஆராய்வதற்கான குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். பின்னர் பொறுப்பான அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டும். அமைச்சே இது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இலங்கை மருத்துவக் கழகத்தின் பதிவாளர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஆழமான ஆலோசனைகளின் பின்னரே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மருத்துவக் கழக உறுப்பினர்களிடையே தீர்மானம் குறித்த கருத்து வேறுபாடுகள் உள்ளதையே இது காட்டுகின்றது.

இதேபோன்று இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பட்டப் படிப்புக்கான கலைத் துறை விண்ணப்பங்கள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதாவது வெளிவாரியாக கலைத் துறை பட்டதாரியாக மாறுவதற்கான வாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த பட்டதாரிகளுக்கான தொழில் வழங்கும் நேர்முகப் பரீட்சையில் தோற்றியோரில் பெரும்பான்மையானவர்கள் வெளிவாரிப் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டதாரியானால் தொழில் வழங்க வேண்டும். ஆகவே, நீங்கள் பட்டதாரியாக வேண்டாம் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை பூசி மெழுகும் நோக்கம் கொண்டது. மிக நீண்டகாலமாக கலைத் துறையில் கற்பிக்கப்படும் வெளிவாரிப் பாடங்கள் மீள்பரிசீலிக்கப்படவில்ல. தொழிற் திறனுக்கும் இப்பாடங்களுக்கும் இடையில் பெருத்த இடைவெளி நிலவி வருகின்றது. மாணவர்களை தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் உருவாக்குவதற்கு வெளிவாரிக் கலைப் பிரிவின் பாடங்களை மீளமைக்க வேண்டிய தேவை உள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, வெளிவாரிக் கலைப் பிரிவு இடைநிறுத்தப்பட்டுள்ளமை ஒரு தற்காலிக முடிவே என்றும் பாடங்கள் மீளமைக்கப்பட்டதன் பின்னர் வெளிவாரிக் கலைப்பிரிவு மீளவும் ஆரம்பிக்கப்படும் என்றும் மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. ஆயினும், ஏனைய பிரிவுகளுக்கான வெளிவாரிக் கற்கைநெறிகள் நிறுத்தப்படவில்லை என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

உண்மையில் கலைப்பிரிவு வெளிவாரிக் கற்கை நெறி இதன் மூலம் தரப்படுத்தப்படுகின்றதா அல்லது கலைப் பிரிவு பட்டதாரிகளின் தொகை மட்டுப்படுத்தப்படுகின்றதா என்பது புலனாகவில்லை என கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொழிற் சந்தைக்கும் இலங்கையின் கல்வி முறைமைக்கும் இடையில் பாரிய இடைவெளியொன்று நிலவி வருவது உண்மையே. எனினும், மாணவர்களின் கல்வியோடும் எதிர்கால தொழில் வாழ்வோடும் விளையாடும் அதிரடியான தீர்மானங்கள் அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என்று கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.