ஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது

0
10
  • அஜ்மல் மொஹிடீன்

ஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது என்பது தொடர்பில் அறிவதற்கு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தையே அடிப்படையாகக்கொண்டு ஆராய்வோம்.

1. ஏதேனுமொரு புதிய சட்டத்தை இயற்றுவதாக இருந்தால் முதலில் அதற்கான திட்டவரைவை துறைசார் அமைச்சர், அமைச்சரவையில் முன்வைப்பார். அதன்பின்னர் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து, தேவையான மாற்றங்களை மேற்கொண்டு அமைச்சரவை அனுமதி வழங்கும்.

( அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி அமைச்சரவையில் முன்வைத்தார். அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது.)

2. அமைச்சரவையின் ஒப்புதலின் பின்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும். சமுக கலந்துரையாடலுக்காக இருவாரங்கள் வழங்கப்படும். ( 20ஆவது திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது, இருவார கால அவகாசமும் முடிவடைந்துள்ளது.)

3.மேற்கூறப்பட்ட காலப்பகுதி முடிவடைந்ததும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்ற நிலையியற்கட்டளையின் பிரகாரம் இதுவே முதலாம் வாசிப்பு எனப்படுகின்றது. அவ்வாறு முன்வைக்கப்பட்ட சட்டமூலம் ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படும். ( அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

4. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை ஆட்சேபித்து ஏழு நாட்களுக்குள் நாட்டு பிரஜைகளால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்யமுடியும்.சட்டமூலத்தை எவரும் ஆட்சேபிக்காவிட்டால் ஒருவாரத்தின் பின்னர் அதனை நிறைவேற்றுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.

(20 இற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு சில அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் முடிவெடுத்துள்ளன. 19ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டபோதும் அதற்கு எதிராக இவ்வாறு நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.)

5.நீதிமன்ற செயற்பாடுகளுக்கு 3 வாரகாலம் வழங்கப்படும். சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோருக்கு அறிவிக்கப்படும்.பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்புவேளையின்போது இது பற்றி சபாநாயகர் சபைக்கு அறிவிப்பார்.

(அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள சில சரத்துகளுக்கு சர்வஜன வாக்கெடுப்புடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிகோலும் விடயங்களை நீக்கிவிட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றுவதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.)

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டிய  தேவை எழாது என சட்டமா அதிபர் திணைக்களம், அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுள்ளது. எனினும், உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் வெளிவந்த பின்னரே அது பற்றி உறுதியாக கூறமுடியும்.)

மூன்றுவாரங்களுக்கு பின்னர் இரண்டாம்வாசிப்புக்கென சட்டமூலம் சபையில் முன்வைக்கப்படும். சட்டமூலம் குறித்து ஆளும், எதிரணி உறுப்பினர்கள் கருத்து முன்வைப்பார்கள்.

6. அதன்பின்னர் சட்டமூலத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் குழுநிலைக்கு செல்லும். ( செங்கோலானது மேசையின் கீழ் தாங்கியில் வைக்கப்பட்டிருக்கும். திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றம் கூடும். ( செங்கோல் மேசையின் உச்சி தாங்கியில் வைக்கப்படும்.)

(20ஆவது திருத்தச்சட்டமூலத்தை குழுநிலை விவாதத்தின்போதே அரசாங்கம் திருத்துவதற்கு உத்தேசித்துள்ளது. புதியதொரு அரசியலமைப்பு இயற்றப்படவுள்ளதால் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தாத விதத்திலேயே 20 ஐ நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கும்.)

7. குழுநிலையின்போது திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்படும். வாக்கெடுப்புமுறை குறித்து சபையே தீர்மானிக்கும். சட்டமூலம் நிறைவேறிய பின்னர், சபாநாயகர் சான்றுரை வழங்கியதும், அது நடைமுறைக்கு வரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here