எமது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.

379
  • நேர்காணல் – P.M. முஜீபுர் ரஹ்மான்

2007 ஆம் ஆண்டு நியூயார்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் கலாநிதிப் (Ph.D) பட்டத்தைப் பெற்ற. ஃபர்சானா ஹனிஃபா அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சமூகவியல் துறைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறைப் பேராசிரியராக தற்பொழுது கடமையாற்றுகிறார். மேலும் 2018/19 காலங்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுகள் மையத்தின் காமன்வெல்த் படிப்புகளில் ஸ்மட்ஸ் வருகை தரு விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் முஸ்லிம் சமூக அரசியல், வரலாறு, சமூகவியல் மற்றும் இலங்கையில் பாலின அரசியல் என்பவற்றில் கவனம் செலுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மேலும், இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள், தேர்தல் அரசியலில் சிறுபான்மையினரின் வரலாறு, மற்றும் 2001 யுத்த நிறுத்த சமாதான உடன்படிக்கை காலத்தில், வடக்கு முஸ்லிம்களின் மீளத்திரும்புகை, மீள்குடியேற்றம், நல்லிணக்கம் தொடர்பாகவும், போருக்குப் பிந்தைய முஸ்லிம் எதிர்ப்பு சொல்லாட்சிக் கலைகள் குறித்தும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

இவற்றுடன், இலங்கை இஸ்லாமிய இயக்கங்களின் பார்வையில் பாலினம் மற்றும் பெண்களின் நிலை, இராணுவமயமாக்கலும், கிழக்கு முஸ்லிம்ளும், ஆணாதிக்க சமூகமும் போருக்குப் பிந்திய பெண்களின் நிலை என்பன குறித்தும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, 2016 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க வழிமுறைகள் தொடர்பான குழுவின் ஆலோசனை சபைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மேலும், 2016 ஆம் ஆண்டில், பேர்லினில் உள்ள Leibniz Zentrum Moderner Orient வருகை தரும் ஆராய்ச்சியாளராகவும் இருந்துள்ளார்.

ஹனிஃபா சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் (Social Scientists’ Association) நிர்வாகக் குழுவில் பணியாற்றுகிறார். சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை (Law and Society Trust) யின் இயக்குநர்கள் குழுவிலும் உள்ளார். அத்துடன், இலங்கையில் உள்ள நீலன் திருச்செல்வம் அறக்கட்டளை (Neelan Tiruchelvam Trust)  நிறுவனத்திலும் கடமையாற்றுகிறார். மீள்பார்வை  அவருடன் நடத்திய பேட்டியை கீழே தருகிறோம்.

அண்மையில் சமூகவியல் துறையில் உங்களுக்கு பேராசிரியர் பதவி கிடைத்துள்ளது. கல்வி குறித்த உங்கள் சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். ஒரு முஸ்லீம் பெண் என்ற வகையில் நீங்கள் அடைந்த சாதனையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த சாதனை குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன், ஆனால் அது என்னுடையது மட்டுமல்ல, எனது இலக்குகளை அடைய என்னை உற்சாகமூட்டி வளர்த்த எனது தாய்க்கு இத்தியாகத்தின் பெரும் பகுதி உண்டு. (எனது 12 ஆவது வயதில் என் தந்தை காலமானார். அதன் பின்னர், அனைத்து குடும்பப் பொறுப்பையும் ஏற்று, அவர் தனியாக என்னை வளர்த்தார்.) அதேபோல், நான் வளர்ந்து வரும் போது எனது மாமாக்கள் மற்றும் உறவினர்கள் நிறைய பேர் என்னை ஊக்குவித்து நிதி உதவி செய்தனர். அவர்கள் என் கல்விக்கு ஊக்கமளித்து உதவினார்கள்.

முஸ்லிம் குடும்பங்களில் பெண்களை கீழே வைக்கின்ற ஒரு ஸ்டீரியோடைப் உள்ளது. சில குடும்பங்களில் இது உண்மையாகவே இருப்பதை நான் அறிவேன், ஆனால் அது எனது அனுபவம் அல்ல. இதிலிருந்து எனது அனுபவம் வித்தியாசமானது. இலங்கை முஸ்லிம்களில் இவ்வாறான அனுபவங்களும் உண்டு என்பதை புரிந்து கொண்டு, முன்வைக்க விரும்புகிறேன்.

கொழும்பில் உள்ள ஆங்கிலிகன் கிறிஸ்தவ பள்ளியான பிஷப் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றேன். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டபோது உயர் கல்விக்காக அதிஷ்டவசமாக வெளிநாடுகளுக்குச் சென்று எனது கல்வியைத் தொடர்ந்தேன்.

அதன்போது, எனது கல்விக்காக எனது தாயின் போராட்டத்தினாலும், குடும்பத்தவர்களின் உதவியினாலும் சில ஆண்டுகள் கல்வியைத் தொடர முடியுமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, டாக்டர் குமாரி ஜெயவர்தன மற்றும் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எனது PhD ஆலோசகரின் வழிகாட்டலினால் எனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன்..

இவ்வாறு எனது கல்வி வளர்ச்சிக்கு பலர் உதவினார்கள். அதன் மூலமே நான் தற்போதுள்ள இடத்தை அடைந்தேன். எனவே, பலரின் உதவியின்றி ஒரு நபரினால் எந்த வெற்றியையும் பெற முடியாது என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். அதனையே ஏனையோருக்கும் வலியுறுத்த விரும்புகிறேன். இதுவே, சமூக ஒப்பந்தமாகும்.

அவ்வாறே, எனது தொழில் வாழ்க்கையிலும் நிறைய பேர் குறிப்பாக பல சிவில் சமூக ஆர்வலர்கள் எனக்கு வழிகாட்டியுள்ளார்கள். பின்னர் நிறைய பேர் எனது சிரமங்களைப் பற்றி என்னிடம் கலந்துரையாடியுள்ளனர். இவைகள் ஆராய்ச்சிகள் செய்வதற்கு ஊக்குவித்தது. அதற்காக நிறையப்பேர் அவர்களின் தாராள மனப்பான்மையுடன் ஒத்துழைத்தனர். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இவ் வேலையைச் செய்திருக்க முடியாது.

எல்லாவற்றுக்கும் அப்பால், என் கணவர் மற்றும் எனது குழந்தைகள் எனது பயணங்களை சகித்துக்கொண்டார்கள். நான் அதிக நேரத்தை எழுதுவதற்கும் புத்தகங்களை வாசிப்பதற்குமே செலவிட்டேன்.

இவ்வாறு, எனக்கு கிடைத்த தாய், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரின் உதவிகள் மற்றும் அவர்களின் ஆதரவினால்தான் நான் இச்சாதனையை அடைந்தேன். அனைவருக்கும் எனது நன்றிகள்.

முஸ்லிம் பெண் என்ற முறையில் இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முஸ்லிம் பெண்களுக்கு மாத்திரமல்ல, அனைத்து பெண்களுக்கும் ஒன்றைக் கூற விரும்புகிறேன், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால்தான் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். எனவே இலக்குகளை அழகாக வகுத்துக் கொள்ளுங்கள், அதற்காக தொடராக முயற்சி செய்யுங்கள், இலக்கை அடையும்வரை தொடராக பாடுபடுங்கள் மாறாக அதனை விட்டுவிடாதீர்கள்.

அதேபோல், சமூகம், நண்பர்கள், குடும்பத்தினர் முக்கியமானவர்கள். அவர்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, உங்களுக்கென்று ஆதரவு வட்டம் ஒன்றும் வேண்டும். இந்த இரண்டு குழுமங்களோடும் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலுத்துங்கள். இவர்களே உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இதில் உறுதியாக இருங்கள்.

சில வெற்றிகளை அடைய நீங்கள் செய்ய வேண்டிய பல தியாகங்கள் உள்ளன. ஆனால் வெற்றியைப் பின்தொடர்வதில் நட்பையும் உறவுகளையும் தியாகம் செய்யாதீர்கள், ஏனென்றால் கடினமான சமயங்களில் அது உங்களுக்கு பக்கபலமாக அமையும்.

நீங்கள் வடக்கு முஸ்லிமகள் குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டுள்ளீர்கள். அவ்வாறே, இம்முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து சுயாதீன ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி செயற்படுத்தியுள்ளீர்கள், இதன் பின்னணியில் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம் நம் நாடு எதிர்கொள்ளும் பல பயங்கரமான துயரங்களில் ஒன்றாகும். மோதல் தொடர்பான நமது அறிவில் இது சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் வடக்கு முஸ்லிம்கள் குறித்து சுயாதீன ஆணைக் குழுவை மேற்கொண்டதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாணைக்குழு அறிக்கை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து எனக்கு இன்னும் பல தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளேன்.

ஆனால், நான் நினைக்கிறேன், இப்போது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகும் நாமும் இந்நேர்காணலை செய்கிறோம்.  அப்போது, நாங்கள் நேர்காணல் செய்த பல குடும்பங்களுக்கு இப்போது என்ன நடந்துள்ளது என்று கூறமுடியாதுள்ளது. அத்தோடு, அவர்களது வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்பதற்கு இன்னுமொரு ஆய்வு செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். சிலபோது இப்போது அவர்களின் நிலைமை மேம்பட்டிருக்கலாம்.

இடைக்கால நீதி மற்றும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? அதனை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள்?

இடைக்கால நீதி செயல்முறைகள் உண்மையில் வடக்கு முஸ்லிம்களிலும் ஆர்வமாக இருந்தன என்றுதான் நான் நினைக்கிறேன். பெரும்பாலான இடைக்கால நீதி செயல்முறைகள் போரின் முடிவில் நிகழ்ந்த கொடூரங்கள் மற்றும் அதற்கு முன்னர் நிகழ்ந்த சம்பவங்கள் என்பவற்றில் போதுமான வெளிப்பாட்டைப் பெறவில்லை என்றே நான் உணர்கிறேன்.

போருக்குப் பின்னர் வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேறுவதில் ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து உண்டு. வடக்கு நிர்வாகம் அதிக பாகுபாடு காட்டுவதாக அவர்கள் உணர்கின்றனர். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?, வடக்கு முஸ்லிம்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வடக்கு முஸ்லிம்களின் குற்றச்சாட்டு எந்தளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால், வடக்கு முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குழு அல்ல. வெளியேற்றப்பட்ட நேரத்தில் அவர்கள் 75000 க்கும் மேற்பட்ட மக்களாக இருந்தனர். இப்போது, 30 ஆண்டுகளின் பின்னர் அந்த எண்ணிக்கையில் மாற்றம் அடைந்துள்ளது. அவர்கள் அதிவேகமாக வளர்ந்துள்ளார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ளவர்களின் நிலைமையை வைத்து, ஒட்டுமொத்த வடக்கு முஸ்லிம்களின் நிலை இதுதான் என்று உறுதியாக கூற முடியாது. எனவே, இதனை ஆய்வுக்கு உட்படுத்தி, தெளிவான விடையினை பெற வேண்டும்.

மேலும், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவுக்குச் திரும்பிச் சென்றவர்களை நான் அறிவேன். இம் முஸ்லிம்கள் மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் ஒரு வாழ்க்கையை உருவாக்க முயற்சிக்கின்றார்கள். ஆனால், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளவர்களை எனக்குத் தெரியாது, ஆனால் இம்மாவட்டங்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

பல கஷ்டங்களையும் கடந்து வடக்கு முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பிய விதத்தை ஆவணப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதில், பெரும் பின்னடைவை அடைந்த பல மக்கள் உள்ளனர் என்பதும் எனக்குத் தெரியும். அதேபோல், பலர் மிகவும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள், அந்த வெளியேற்றத்தின் பேரழிவு அவர்களின் வாழ்வை சீரழித்து, இன்னும் பலவீனப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

மிகப் பெரிய சிரமங்களை அனுபவிப்பவர்களுக்கு உதவ வழிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இச்சமூகத்தில் இல்லை என்றே நான் உணர்கிறேன் (என்னையும் சேர்த்துத் தான் கூறுகிறேன்). ஏனெனில், நான் சுமார் 8 ஆண்டுகளாக வடக்கு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் பணியாற்றவில்லை என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

வடக்கு முஸ்லிம் சமூகங்களுடனான எனது கடைசி ஆராய்ச்சி பணி 2012 இல் செய்யப்பட்டது. வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக, வடக்கு நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள், பாடசாலைக் கல்வி, உள்கட்டமைப்பு, வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் வேலைவாய்ப்பு பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், ஆகியவற்றை நாம் அடையாளம் காண முடிந்தால் அது மிகவும் நல்லது.

வெளியேற்றத்தில் அதிக அங்கீகாரம், புத்தளத்தில் வடக்கு முஸ்லிம்களிடையே நடந்துகொண்டிருக்கும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள், இரண்டு இடங்களில் தொடர்புகளைப் பேணுவது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வெவ்வேறு குழுக்கள் அல்லது அமைப்புகளுடன் வெவ்வேறு பிரச்சினைகள் போன்றவற்றை  எடுத்து தனித்தனியாக உரையாடல்களை ஏற்பாடு செய்து ஆய்வுகளை மேற்கொள்வது காலத்தின் கடமையாகும் என நான் நினைக்கிறேன்.

(நான் 2012 முதல் இச்சமூகத்துடன் பணியாற்றவில்லை. புதிய மாற்றங்கள் குறித்து எனக்குத் தெரியாது. எனவே, இப்போதுள்ள பிரச்சினைகள் வித்தியாசமாக இருக்கலாம்.)

ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கின்ற இம்மக்களின் பல பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது சிறப்பாக இருக்கும். அத்தோடு, 1990 இல் ஏற்பட்ட அட்டூழியங்கள் மற்றும் அப்போது நடைபெற்ற கதைகளை நாம் வெளிக் கொண்டுவர வேண்டும். வெளியேற்றத்தினால் என்ன நடந்தது என்பது பற்றி அதிகமான மக்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது போரின் பெரிய சோகத்தின் ஒரு பகுதியாகும், அந்த துயரத்தை ஒட்டுமொத்தமாக சமாளிப்பதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும், இப்போது அதை சிறிது காலத்திற்கு இடைநிறுத்த வேண்டிய துரதிர்ஷ்டத்திற்கு நாம் தள்ளப்பட்பட்டுள்ளோம்..

இறுதியாக சமூக அறிவியல் பேராசிரியராக, இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் எப்படி என்று நீங்கள் நோக்குகிறீர்கள், முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்,

இலங்கையின் வெவ்வேறு தளங்களில் உள்ள முஸ்லிம் தலைமைகள் ஆராய்ச்சி மற்றும் ஆவணங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நம்மில் பலர் ஆராய்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கோ அல்லது அதனை மதிப்பிடுவதற்கோ முற்படுவதில்லை.

ஏனெனில், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன, நமது கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்கும், ஒரு நாட்டுப் பிரஜை என்ற வகையில் தற்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கும் நாம் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியுள்ளது.

நாட்டிற்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இது மிகவும் மோசமான காலம் என்றே கூறலாம். இந்த நேரங்களை எங்கள் தலைவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதே, நாம் எதிர்காலத்தில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும். எனவே, நமது எதிர்காலம் குறித்து இப்போது எடுக்கப்படும் முடிவுகளில் முஸ்லிம்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.