பொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வோர் கைது செய்யப்பட வேண்டும்

150

இதுவரை முன்னாள் அமைச்சர் பதுர்தீனைக் காணவில்லை. ஏன் தேடப்படடுகிறார் என்பது தொடர்பில் ஆராயமலேயே பலரும் அவர் தொடர்பில் தேடத் துவங்கியிருக்கிறார்கள்.

அரசாங்கம் என்பது நாட்டு மக்கள் தங்களை நிர்வகி்ப்பதற்காக உருவாக்கிக் கொண்ட ஒரு கட்டமைப்பு. இதில் பொதுமக்களுடைய சொத்துக்கள் அனைத்தும் பொதுச் சொத்துக்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது அரசின் கடமைகளில் தலையாயது. அந்த வகையில் அரசாங்கம் என்ற கட்டமைப்பில் வருகின்ற அனைவருக்கும் அதனைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு இருக்கிறது. ஜனநாயக அரசாங்கமொன்றில் பொதுச் சொத்துக்களை அரச அதிகாரிகளே துஷ்பிரயோகம் செய்வது என்பது அதனால் தான் அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறது.

இந்த வகையில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தவர்களைத் தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். இதே போல ஒரு நல்ல காரியத்தை கடந்த அரசாங்கமும் செய்ததாக கடந்த அரசாங்கத்திலும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முஜிபுர் ரஹ்மான சுட்டிக் காட்டியிருந்தார். நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான நிதியிலிருந்து தனது தாய் தந்தையருக்கான நினைவுத் தூபிகளை நிறுவப்பட்டதாகவும் நல்லாட்சி அரசாங்கம் இது தொடர்பில் விசாரணைகள் நடத்திய பின்னரே அந்தப் பணம் மீளவும் திருப்பிச் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இப்படி எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களை மக்கள் முன் நிறுத்தித் தோலுரித்துக் காட்டுவது ஆட்சிக்கு வருகின்றவர்களின் கடமையாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திறைசேரியைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல நிதியமைச்சராகவிருந்து மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்களும் இன்னும் விசாரிக்கப்படவில்லை.  கோடிக் கணக்கான நாட்டின் வருமானத்தை இழப்பதற்குக் காரணமான இந்த விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் மட்டும் நடத்தி முடிப்பதை விட இழந்து போன் மக்களின் பணத்தை முதலும் வட்டியுமாக மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல குற்றவாளிகளுக்கு பாராளுமன்றத்தில் அடைக்கலம் கொடுப்பதை நிறுத்துவது தொடர்பிலும் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும். கொலைக் குற்றத்துக்காகச் சிறை வாசம் அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவி கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தை அவமதித்து கொச்சைப்படுத்திய பலருக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் சௌபாக்கியத்தை விரும்புகின்ற அரசாங்கம் இந்த இடங்களை எல்லாம் துப்பரவு செய்ய வேண்டும்.

முன்னாள் அமைச்சர் ரிஷாதுடைய விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முன்னரேயே கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இடம் பெயர்ந்த மக்களை வாக்களிக்க அழைத்துச் செல்வதற்காக அவர் வாடகைக்கு அமர்த்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளுக்கான 96 இலட்சம் ரூபா கட்டணம் தொடர்பிலேயே அவரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணம் மீள்குடியேற்றத் திட்டத்துக்கான நிதியிலிருந்து செலுத்தப்பட்டதாகவும் இது தவறானது என தான் சுட்டிக் காட்டியதன் பின்னர் அடுத்த ஆறு நாட்களிலேயே இந்தப் பணத்தை அவர் திருப்பிச் செலுத்தியதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் ஒரு சில நாட்கள் அரச நிதியைச் செலுத்துவதற்குத் தாமதித்ததற்காகவே அவர் மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இது வரவேற்கத்தக்க விடயமாகும். பொது நிதியை ஓரிரு நாட்களுக்கேனும் வைத்திருப்பது கூட குற்றமாகக் கருதப்படும் அளவுக்கு நாடு மாறியிருப்பது பாராட்டத்தக்கது. அந்த வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களைத் திருப்பி ஒப்படைக்காதவர்கள் எல்லாம் இனிக் கைது செய்யப்படுவார்கள் என்று நம்புவோமாக.

நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட பின்னர் இவரைக் கைது செய்ய முடியும் என சட்டமாஅதிபர் விடுத்த அறிவுறுத்தலுக்கிணங்க பொலிசார் நீதிமன்றத்தை அணுகியபோது இதற்குப் பிடிவிறாந்து அவசியமில்லை என கோட்டை நீதவான் தெரிவித்திருக்கிறார். இப்படியானவர்களை பிடிவிறாந்து இன்றியே கைது செய்ய முடியும் என்றிருக்கும் போது பொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்தவர்களை இனிக் காலதாமதமின்றிக் கைது செய்வதற்கான அவகாசம் கிடைத்திருக்கின்றது. ஆகவே பொதுச் சொத்துக்களில் கை வைத்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அல்லது தடுமாற்றங்களைச் சமாளிக்கத் தேவைப்படும் போதெல்லாம் பதுர்தீன் பயன்படுத்தப்படுவதாக மக்கள் நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்.