ஆர்மேனியா – அஸர்பைஜான் யுத்தத்தின் பின்னணி

88

கலாநிதி றவூப் ஸெய்ன்

கவ்காசஸ் பிராந்தியத்திலுள்ள ஆர்மேனியா மற்றும் அஸர்ஜைõன் ஆகிய நாடுகளுக்கிடையில் தற்போது நிகழ்ந்து வரும் எல்லைத் தகராறு சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றது. இரு பக்கங்களிலிருந்தும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் ரஷ்யாவின் மத்தியஸ்தத்துடன் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சுமத்தியுள்ளன. மொஸ்கோவில் ஜனாதிபதி விளாடிமர் புட்டின் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன்போது யுத்தக் கைதிகளையும் போரில் இறந்தவர்களையும் பரஸ்பரம் பரிமாரிக் கொள்வதற்கும் போரை உடனடியாக நிறுத்துவதற்கும் உடன்பாடு காணப்பட்டது.

எனினும், நகர்னோ – கரபாக் எனக் கூறப்படும் எல்லைப் பிராந்தியத்தில் இரு நாட்டு படைகளுக்கும் இடையில் தொடர்ந்தும் உக்கிரப் போர் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய இந்தப் பிராந்தியம் யாருடையது என்பதே பிரச்சினையின் மையமாக உள்ளது. சர்வதேச சட்டங்களின் படி இப்பிராந்தியம் அஸர்பைஜானுக்குரியது எனக் கூறப்படுகின்றது. இப்பிராந்தியத்தில் வாழும் பெரும்பான்மையினர் ஆர்மேனிய இனத்தவர்கள் என்பதனால் அவர்கள் அஸர்பைஜானின் ஆட்சியை எதிர்த்து நிற்கின்றனர்.

1990 இல் சோவியத் யூனியனின் சரிவினை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்தது. தலைநகர் பாகூவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் போரை நிறுத்துவது குறித்து உடன்பாடை எட்டிய போதும் அது நடைமுறைக்கு வரவில்லை என்று களத்தில் பணியாற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் அவ்வப்போது ஆயுத ரீதியான மோதல் இடம்பெற்று வந்துள்ளது. 1918 ஆம் ஆண்டிலிருந்து இப்பிரச்சினை தொடங்கியதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் அஸர்பைஜான் – ஆர்மேனியா இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் போரின் பின்னணி என்ன?

அஸர்பைஜான்

கிழக்கே கஸ்பியன் கடலையும் மேற்கே ஆர்மேனியாவையும் வடமேற்கே ஜியோஜியாவையும் தெற்கே ஈரானையும் எல்லைகளாகக் கொண்ட 86,000 சதுர கி.மீ. பரப்பைக் கொண்ட, கவ்காஸ் மலைகளால் சூழப்பட்ட ஒரு நாடே அஸர்பைஜான். 80 வீத முஸ்லிம்களைக் கொண்ட இந்நாட்டில் 10 வீதம் ஆர்மேனியர்களும் 10 வீதம் ரஷ்ய கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். முஸ்லிம் சனத்தொகையில் 74 வீதமானவர்கள் அஸர்பைஜானிய இனத்தவர்கள். இதர ஆறு வீதத்தினர் துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்டவர்கள்.

பெரும்பான்மையான அஸர்பைஜானியர்கள் உள்நாட்டிலும் கிராமப்புறங்களிலுமே வாழ்கின்றனர். சிறுபான்மைச் சமூகங்களான ஆர்மேனியர்களும் ரஷ்யர்களும் நகர்ப் புறங்களிலேயே வாழ்கின்றனர். தலைநகர் பாகூவில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் ரஷ்ய இனத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சனத்தொகையிலும் 60 வீதமானவர்கள் ஷீஆக்கள். உலகில் ஷீஆக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளின் வரிசையில் அஸர்பைஜானும் ஒன்றாகும். ஈரான், ஈராக், பஹ்ரைன், லெபனான், அஸர்பைஜான் ஆகிய நாடுகள் பெரும்பான்மை ஷீஆக்களை கொண்டவை எனக் கருதப்படுகின்றன. அஸர்பைஜானின் சனத்தொகையில் 40 வீதமானவர்கள் ஷாபி மத்ஹபைப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அதிகமாக நாட்டின் தென்பகுதியிலேயே வாழ்கின்றனர்.

அஸர்பைஜானில் வாழும் ஆர்மேனிய, ஜோர்ஜிய இனத்தவர்கள் கிறிஸ்தவர்கள். மொரோக்கோ போன்று ஒரு சிறுதொகை யூதர்களும் இங்கு வாழ்கின்றனர். பெற்றோலியம், பருத்திப் பஞ்சு, கோதுமை, பார்லி, சோளம், தேயிலை, திராட்சை, அத்தி என்பன இந்நாட்டின் முக்கிய விளைபொருட்களாகும். கால்நடை வளர்ப்பில் ஆடு, மாடு, கோழி என்பன முன்னணி வகிக்கின்றன. எவ்வாறாயினும், அஸர்பைஜானின் புவி அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக பெற்றோலியமும் இயற்கை எரிவாயுவும் காணப்படுகின்றது.

உமையா கலீபா ஹிஷாம் பின் அப்துல் மலிக் காலத்தில் சுமாராக ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில் அஸர்பைஜான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாறியது. பிற்பட்ட காலங்களில் தேச அரசு முறைமை தோன்றியதன் பின்னர் தனிநாடாக மாறியது. 1920 களில் சோவியத் யூனியனின் ஆட்சி கவ்காஸ் பிராந்தியத்தில் திணிக்கப்பட்டது.

ரஷ்யா அயலில் இருந்த சுதந்திரக் குடியரசுகளான ஜியோஜியா, ஆர்மேனியா, உக்ரைன், பெலோ ரஷ்யா என்பவற்றோடு அப்பிராந்தியத்தில் காணப்பட்ட ஆறு முஸ்லிம் சுதந்திரக் குடியரசுகளையும் ரஷ்யாவுடன் வலுக் கட்டாயமாக இணைந்தது. உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான், கிரிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், கஸகஸ்தான் ஆகியன இணைக்கப்பட்டது போன்று அஸர்பைஜானும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டு பிரமாண்டமான சோவியத் யூனியன் ரஷ்யத் தலைமையில் உருவானது.

அப்போது இன்று சர்ச்சைப்படும் நகர்னோ கரபாக் பிராந்தியம் ஒரு சுயாட்சிப் பிராந்தியமாகவே கருதப்பட்டது. அதேவேளை, அஸர்பைஜானிய சோவியத் குடியரசு என்ற இணைப்பின் பின்னர் உருவாக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியாகவே அது விளங்கியது. 1990 களில் சோவியத் யூனியனின் சரிவைத் தொடர்ந்து அஸர்பைஜான் தலைநகர் பாகூவின் நேரடி ஆட்சியின் கீழ் இப்பிராந்தியம் கொண்டுவரப்பட்டது.

எவ்வாறாயினும், ஆர்மேனிய இனத்தவர்கள் இந்த முடிவை ஏற்கவில்லை. 1988 இல் நகர்னோ கரபாக் சட்டசபை தாம் ஆர்மேனியக் குடியரசோடு இணைய வேண்டும் என்று வாக்களித்தனர். ஆயினும், அஸர்பைஜானிய மற்றும் ரஷ்ய அரசாங்கம் இம்முடிவை எதிர்த்தது. 1991 இல் சோவியத் யூனியன் உடைந்ததற்குப் பின்னர் இப்பிரதேசத்தை ஆர்மேனிய பிரிவினைவாதிகள் கைப்பற்றினர்.

இங்கு அஸர்பைஜானியர்களும் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இதனோடு இணைந்த வகையில் 7 அஸர்பைஜானிய மாவட்டங்கள் உள்ளன. அப்போது நடைபெற்ற சண்டையில் 30,000 மக்கள் கொல்லப்பட்டனர். பலர் இருப்பிடங்களை இழந்தனர். 1994 இல் சர்வதேச சமூகத்தின் பங்கேற்புடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனினும், அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையில் நகர்னோ – கரபாக் எல்லைப் பிராந்தியம் தொடர்பில் மோதல்கள் இடம்பெற்று வந்தன. 2016 ஏப்ரலில் இரு நாட்டு மக்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய புதிய மோதல்கள் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகின்றது. நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இந்த எல்லைப் பிராந்தியம் குறித்த சண்டையில் சர்வதேச சமூகம் முறையாகத் தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐ.நா. மற்றும் ஏனைய வல்லரசுகள் ஆர்மேனிய-அஸர்பைஜானிய பிரச்சினையில் இதய சுத்தியுடன் செயல்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. மொஸ்கோ தனிப்பிட்ட நலன்களை மையமாகக் கொண்டு இப்பிரச்சினையை அணுகி வருகின்றது.

அஸர்பைஜானும் ஆர்மேனியாவும் அமைந்திருக்கும் கவ்காஸ் பிராந்தியம் சர்வதேச வணிகத்திலும் வர்த்தகத்திலும் உலக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இப்பிராந்தியத்திலுள்ள இயற்கை எரிவாயுவும் பெற்றோலியமும் சர்வதேச சந்தைகளுக்கு இப்பிராந்தியத்தை ஊடறுத்தே செல்கின்றது என்பதனால் நகர்னோ-கரபாக் நெருக்கடி நீடிப்பதானது இப்பிராந்தியத்திற்கு மட்டுமன்றி, உலகப் பொருளாதாரத்திற்கே மிகப் பெரும் சவாலாக அமையும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

அஸர்பைஜானில் ஈரானின் எல்லைப் புறத்தில் வாழும் மக்களில் அநேகமானோர் ஷீஆக்கள். இந்நாடு நீண்டகாலமாக திட்டமிட்ட அடிப்படையில் ஷீஆ மயமாக்கப்பட்டு வந்துள்ளது. ஈரான் இப்பிரச்சினையில் அஸர்பைஜானின் பக்கம் மாத்திரம் சாய்வதாக ஆர்மேனியா குற்றம் சாட்டுகின்றது. இங்குள்ள மிகப் பெரும் பிரச்சினை சர்வதேச சட்டங்களின்படி நகர்னோ-கரபாக் அஸர்பைஜானுக்குரியதே. ஆனால், அங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் ஆர்மேனிய கிறிஸ்தவ இனத்தவர்கள் என்பதனால் அவர்கள் பாகூவின் ஆட்சியை நிராகரிக்கின்றனர்.

மறுபக்கம் இங்கு வாழும் சிறுபான்மை மக்களாகிய அஸர்பைஜானிய முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உள்ளது. சர்ச்சைக்குரிய இந்த எல்லைப் பிராந்தியம் ஆர்மேனியாவுடன் இணைக்கப்பட்டால் அவர்கள் பெரும்பான்மை ஆர்மேனியர்களின் ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர். சில நூறு மீற்றர் எல்லைகளைக் கொண்ட ஆர்மேனிய அஸர்பைஜானிய கட்டுப்பாட்டுக் கோட்டில் இரு இனத்தவர்களும் தமது இருப்புக் குறித்து கொண்டுள்ள அச்சம் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றது.

கரபாக் பிரதேசத்தில் 150,000 ஆர்மேனிய இனத்தவர்கள் உள்ளனர். அதேபோன்று குறிப்பிட்டளவு அஸர்பைஜானிய முஸ்லிம்களும் உள்ளனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் அஸர்பைஜானை அண்டியுள்ளது. அதேவேளை, ஆர்மேனியர்கள் வாழும் கிராமங்கள் பல அஸர்பைஜானை அண்டி அமைந்துள்ளன. எல்லைப் பிரதேசத்தில் இடம்பெறும் வன்முறைகளோ மோட்டார் மற்றும் ஏவுகணைத் தாக்கதல்களோ எந்த இன மக்களுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்.

பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் இந்த மோதல் ஒரு முழு அளவிலான யுத்தமாக வெடிக்கலாம் என்றே மக்கள் பெரிதும் அஞ்சுகின்றனர். நிலச் சண்டையினால் ஏற்படப் போகும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு இரு நாடுகளும் விட்டுக்கொடுப்புடன் செயல்பட வேண்டும் என்று களத்தில் செய்தி சேகரிப்புக்குச் சென்றுள்ள ஊடகவியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இரு சமூகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பிராந்தியத்திலேயே உள்ளூர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்ச்சியான போர் அவர்களது நிலைமைகளை மேலும் சிக்கலாக்கும் என்று அங்குள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புவி அரசியலின் மோசமான பலிக்கடாவாக மக்கள் மாற்றப்படுவது மட்டுமே இந்த எல்லைப் போரினால்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதேபோன்ற ஒரு நிலைமைதான் இந்தியப் பாகிஸ்தான் எல்லைக் கோட்டிலும் நடந்து வருவதாக ஜஸீராவின் ஊடகவியலாளர் ஒருவர் ஒப்பிட்டு வர்ணித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் நெருக்கடியின் சட்டபூர்வத் தன்மை பற்றிப் பேசுகின்றன. ஆனால், மலைப் பாங்கான இப்பகுதியில் போர் விமானங்களும் ஏவுகணைகளும் ஏற்படுத்தி வரும் மனித அழிவுகள் பொருளாதார வளங்களின் அழிவுகள் குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்ல.

தாக்குதல் தொடங்கி சில மணித்தியாலங்களிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து விட்டனர். ஆர்மேனிய மற்றும் அஸர்பைஜான் அரசாங்கங்கள் பிராந்தியத்தில் தமக்குள்ள உரிமை குறித்து அறிக்கை விட்டு வருகின்றார்களே ஒழிய, சுமுகமாக நெருக்கடியைத் தணிப்பதன் மூலம் பெறக் கூடிய பலாபலன்கள் குறித்து அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது பிராந்தியத்தை மீட்டெடுப்பது ஒரு புனிதக் கடமை என அஸர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சர் சூளுரைத்துள்ளார். பதிலாக, ஆர்மேனிய பாதுகாப்பு அமைச்சர் இதேபோன்ற அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், உலகில் இன்னொரு போர் முனை உருவாவது தவிர்க்கப்பட வேண்டும். இது குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை வினைத்திறனுள்ள தீர்மானங்களை எடுத்து செயல்படுத்த வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.