மக்களால் மட்டுமே தடுக்க முடியும்

90

கொவிட் 19 பெருந்தொற்று அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அது சமூகப் பரவலாக இதுவரை அரசாங்கம் ஒத்துக் கொள்ளாத போதும் சமூகப் பரவலுக்கான அடையாளங்களுடன் அது நாடு முழுவதும் பரவி வருகின்றது.

யாரிடமிருந்து தனக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையையே சுருக்கமாக சமூகப் பரவலுக்கான அடையாளமாகக் குறிப்பிட முடியும். தற்போதை பரவல்களில் பெரும்பாலானவை தொடர்புகள் தெளிவாக வரையறுக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. இந்த நிலையில் சமூகப் பரவலுக்கான வாய்ப்பு இருப்பதனை பல அதிகாரிகளும் சுகாதாரத் துறை சார்ர்ந்தவர்களும் எடுத்துக் கூறி வருகிறார்கள்.

இனியுமொரு முறை நாட்டை முடங்கச் செய்வதனை நாடு தாங்காது என பொருளாதார வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள். இப்பொழுது தான் கொவிட் 19 இன் பொருளாதாரப் பாதிப்பை இலங்கை உணரத் தொடங்கியுள்ள வேளையில் மீண்டும் ஒரு முறை இந்தப் பாதிப்புக்குள்ளாவதன் தாக்கங்கள் பற்றி அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். அதனைவிட இந்த முறை சமூகப் பரவலாக கொரோனா தொடங்கினால் அது முழு நாட்டிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து பாதிப்புக்களையும் முன்னரை விட கடுமையாக ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வேண்டுமாக இருந்தால் அது மக்களின் பூரண ஒத்துழைப்பினால் மட்டுமே முடியும். கொரோனா வைரஸ் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் தாவுவதற்கு ஒரு நோய்க்காவி அதற்குத் தேவைப்படுகிறது. அதனை மக்கள் சேர்ந்து தடுக்க முடியும் என்றிருந்தால் தொற்றின் பரவலை மக்களாலேயே கட்டுப்படுத்த முடியும்.

அந்த வகையில் பொதுமக்கள் ஒன்று கூடுகின்ற இடங்களைத் தவிர்ப்பதில் மக்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அனாவசியமான ஒன்று கூடல்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவசியமான ஒன்று கூடல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியுமானால் அதுவே சிறந்த தெரிவாக இருக்கும். முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் அதனைத் தள்ளிப் போடுவதற்கு எடுக்கின்ற முடிவுகள் தான் நாட்டையும் சமூகத்தையும் நேசிக்கின்ற முடிவுகளாக அமைய முடியும்.

சுகாதாரப் பாதுகாப்பு முறைகள் இடையில் கைவிடப்படக் கூடியவையல்ல. அவை இனி வாழ்க்கையுடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டவை என எண்ணி அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் கொரோனாவிலிருந்து இலங்கை விடுபடுவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது செல்லும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே அடிக்கடி சொல்லப்படுகின்ற சுகாதாரப் பழக்கங்களை நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும்.

இது ஒரு அனர்த்த நிலை. வெள்ளப் பெருக்கின் போதும் மண்சரிவுகளின் போதும் ஓடி வருகின்ற சிவில் அமைப்புக்களும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களும் இந்த அனர்த்த நிலையின் போது தங்களது வழமையான நிவாரணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கொரோனாவைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை ஏனையவர்களை பாதிப்பிலிருந்து காப்பது முக்கியமாகும். அந்த வகையில் மக்களை விழிப்பூட்டுகின்ற வேலைகளை இந்த அமைப்புக்கள் முன்னெடுக்க முடியும். அத்தோடு பொதுமக்கள் கவனமாகச் செயற்படுகின்றார்களா என்பதை அவதானித்து வழிப்படுத்தும் வேலையையும் அவர்களால் செய்ய முடியும். ஏனைய அனர்த்தங்களில் காணப்பட்டது போல அனர்த்தத் தவிர்ப்புப் பணிகளை கொரோனா விடயத்தில் காண முடியவில்லை. நிவாரணம் வழங்க முன்னர் வராமல் தடுப்பதில் முதலீடு செய்ய முடியுமென்றிருந்தால் அதுவே விவேகமானதாக அமையும்.

கொரோனாவைத் தடுப்பது அரசாங்கத்தின் பணி என யாரும் விட்டுவிட முடியாது. ஒவ்வொரு பிரஜையும் இதனைத் தன்னுடைய பணியாக முன்னெடுக்கும் பொழுது தான் இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.