தேசிய தௌஹீத் ஜமாஅத் தீவிரவாதத்தைத் தூண்டும் இயக்கமல்ல

63

சஹரான் ஐஎஸ் கருத்துக்களைப் பின்பற்றுபவர் என்பது தெரிந்திருந்தால் அவரை எமது அமைப்பில் சேர்த்துக் கொண்டிருக்கவே மாட்டோம். அல்லது ஆரம்பத்திலேயே அவரது இந்தக் கருத்துக்கள் பற்றித் தெரிந்திருந்தாலும் நாங்கள் அப்பொழுதே அவரை நீக்கியிருப்போம் என தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மௌலவி முஹம்மத் யூசுப் முஹம்மத் தௌபீக் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 2017 மார்ச் 10 ஆம் திகதிய கல்முனை அலியார் சந்தி கைகலப்பின் பின்னர் சஹ்ரான் தலைமறைவாகவிருந்தார். அதிலிருந்து நான் அவரைச் சந்திக்கவில்லை. ஐஎஸ் கருத்துக்களை அங்கீகரித்து சஹ்ரான் வெளியிட்ட கருத்துக்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அவரைப் பின்பற்றுபவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருந்தது. இது தொடர்பில் பொதுமக்கள் எம்மிடம் முறைப்பாடு செய்தனர். நாம் அது தொடர்பில் தேடிப் பார்த்தோம். பின்னர் 2017 டிசம்பரில் நாம் அவரை எமது ஜமாத்திலிருந்து நீக்கினோம். இது தொடர்பில் டிசம்பர் 28, 29 ஆம் திகதிகளில் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தோம். 2018 ஜனவரி முதலாம் திகதி பத்திரிகைகளுக்கூடாகவும் இதனை விளம்பரப்படுத்தினோம்.

அலியார் சந்தி கைகலப்பின் பின்னர் தலைமறைவாகியிருந்த சஹ்ரானுக்கு பொலிஸில் சரணடையுமாறு நான் அவரது தாயிடமும் சொல்லியிருந்தேன். தேசிய தௌஹீத் ஜமாஅத் தீவிரவாதத்தைத் தூண்டும் இயக்கமல்ல. சஹ்ரான் தீவிரவாதியாக இருந்தமைக்காக என்னை அப்படிப் பார்க்க வேண்டாம். அல்லாஹ் மீது சத்தியமாக நான் அவற்றுக்குத் துணை போகவில்லை.

தாக்குதல் நடக்கும் போது நான் பள்ளியிலேயே இருந்தேன். தாக்குதலுக்கு இரண்டு நாட்களின் பின்னர் சிஐடியும் டிஐடியும் வந்து சஹ்ரானின் துண்டிக்கப்பட்ட தலையை அடையாளம் காட்டுமாறு கூறினர். அப்போது தான் இந்தத் தாக்குதலில் சஹ்ரான் சம்பந்தப்பட்டிருந்ததை அறிந்து கொண்டேன். இதனை அறிந்த பள்ளிவாசல் அங்கத்தவர்கள் உண்மையிலேயே சஹ்ரான் தான் இதனைச் செய்தாரா என்று பயத்துடன் கூறிய மக்கள் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர்.

தேசிய தௌஹீத் ஜமாஅத்துக்கென வங்கிக் கணக்கொன்று பேணப்பட்டது. அமைப்பின்  பொதுச் சேவைகளுக்கும் பள்ளி நிர்மாணத்துக்குமென இதனூடாக நன்கொடைகள் கிடைத்தன. எப்படிப் பணம் வந்தது என்பது தெரியாது. ஆனால் செலவுகளுக்கு பதிவுகள் பேணப்பட்டன. உலகம் முழுவதும் உள்ள தௌஹீத் ஜமாஅத் ஆதரவாளர்கள் இந்தக் கணக்குகளுக்கு பணம் அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது. வலது கையால் கொடுக்கும் தர்மம் இடது கைக்குத் தெரியக் கூடாது என இஸ்லாம் எங்களுக்குப் போதிக்கிறது. உலகம் முழுவதும்  இருக்கின்ற இப்படியானவர்கள் பலர் இதற்குப் பணம் அனுப்பியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இதன் போது கேள்வி எழுப்பிய ஆணைக்குழு உறுப்பினர் சஹ்ரான் இந்தத் தாக்குதலையும் இடது கைக்குத் தெரியாமல் தான் செய்தாரா எனக் கிண்டலாகக் கேட்டார்.