உலமா சபையுடனும் ஆலோசித்தே 20 க்கு வாக்களித்தேன்

512

ஜம்மிய்யத்துல் உலமா மற்றும்  இதர அமைப்புக்களுடன் ஆலோசித்தே 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தேன் என  தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் தெரிவாகிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.  20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் மீள்பார்வை அவரைத் தொடர்பு கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

19 ஆவது திருத்த சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமருக்கும் சில ஆணைக்குழுக்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்த ஒரு முயற்சி என்பது முழு இலங்கைக்கும் தெரிந்த விடயம். 19 ஆவது திருத்த சட்டத்தில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதால் ஒரு இழுபறி நிலையிலான ஆட்சியே நடந்தது. அதிகாரங்கள் ஒருவரிடம் இருந்தால் தான் ஆட்சியை ஒரு நிலையில் கொண்டு செல்ல முடியும். உதாரணமாக ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் அதிகாரம் அனைத்தும் ஜனாதிபதி என்ற வகையில் அவரிடம் மட்டுமே இருந்தது. அவரது ஆட்சியும் சீராக நடைபெற்றது. அது போல யுத்தம் நடைபெற்ற காலம் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக இருந்தார். அவரிடம் மட்டுமே அதிகாரம் இருந்தது. அதை பயன்படுத்தி அவர் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தார். அந்த வகையில் இலங்கை போன்ற நாட்டிற்கு அதிகாரம் ஒருவரிடம் இருப்பதே சிறந்தது என்பதால் நாம் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

“இது எனது தனிப்பட்ட தீர்மானம் அல்ல. புத்தளம் மக்கள் தேசிய அரசியல் செய்யவில்லை. மக்களின் அபிலாசைக்கு ஏற்பவே நான் வாக்களித்தேன். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து

புத்தளத்திற்கு 31 வருடமாக இல்லாதிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொண்டோம். அவ்வாறே நான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாயல் நிர்வாக சபைகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், மாவட்ட ரீதியாக உள்ள எமது 117 கிளைகள் என பலருடன் கலந்தாலோசித்தே 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தேன்.” எனவும்  புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.