ஊரடங்குக்கு மத்தியில் கம்பஹாவின் வங்கிகள், வர்த்தக நிலையங்கள் நாளை திறப்பு

0
20

கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்  மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை (26) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (26) திறக்கப்படவுள்ளன. நிறுவன அடையாள அட்டையை காண்பித்து ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை, நாளை (26) காலை நீக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள வேளையில், மக்களுக்குத் தேவையான அத்தியசாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

மூன்று தினங்களுக்கு மேல் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை, நாளைய (26) தினம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.