கேள்விக்குள்ளாகும் வெளிப்படைத்தன்மை. பொதுநிதி தலைமை எதிர்க்கட்சிக்கு இல்லை

0
19

பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவுக்கான தலைமையைத் தீர்மானிக்கும் பொறுப்பை குழுவுக்கே விடுவதற்கு வழிவகுக்கும் வகையிலான பிரேரணையொன்றை நிறைவேற்றியதன் மூலம் பொதுநிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

11 உறுப்பினர்களைக் கொண்ட பொதுநிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டும் என்ற பாராளுமன்ற நிலையியற் கட்டளையைத் திருத்துவதற்கான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட போது மேலதிக 60 வாக்குகளால் அது நிறைவேறியது.

அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ள வருவாய்களைத் திரட்டுதல், திரண்ட நிதியிலிருந்து கொடுப்பனவுகளை மேற்கொள்ளல், நடப்பு வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், பொதுக்கடன்கள் மற்றுமு் கடன் சேவைகள், அறிக்கைகள் மற்றும் கூற்றுக்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்தல் என்பன 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவம் (பொறுப்புக்கள்) சட்டத்தின் கீழ் பொது நிதிக் குழுவின் கீழ் வருகின்ற கடமைகளாகும்.

பொது நிதிகள் குழுவில் இதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த எம்.ஏ. சுமந்திரன் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சி வசமிருந்த கோப் மற்றும் கோபா குழுக்கள் இரண்டினதும் தலைமைப்பொறுப்புக்களும் கடந்த மாதம் அரசாங்கம் சுவீகரித்துக் கொண்டது.