இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை சுமுகமாக்கும் சூடான்

105
  • கலாநிதி றவூப் ஸெய்ன்

இஸ்ரேலுடன் தனது ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை சுமுகமாக்கிக் கொள்ள சூடான் இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதி இச்செய்தியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ளார். அதன்போது ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அவரது பிரதம ஆலோசகர் குச்னர் அவரோடு இருந்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெடன்யாஹு மற்றும் சூடான் பிரதமர் அப்துல்லாஹ் ஹம்தூக் மற்றும் இடைக்கால சபைத் தலைவர் அப்துல் பத்தாஹ் புர்ஹான் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரேயே இரு நாடுகளும் உறவுகளை சுமுகமாக்கிக் கொள்வதற்கு தயாராகவுள்ளன என்று ட்ரம்ப் அறிவித்தார்.

“சூடானும் இஸ்ரேலும் மீளவும் தமது உறவுகளை சுமுகமாக்கிக் கொள்வதற்கு முன்வந்துள்ளதோடு, அவற்றுக்கிடையில் கடந்த பல தசாப்தங்களாக நிலவி வந்த பகை முரண்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இணங்கியுள்ளன. இது பெரும் வரலாற்றுத் திருப்பமாகும். இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை சுமுகமாக்கும் மூன்றாவது நாடு சூடான் ஆகும். ஏற்கனவே அமீரகமும் பஹ்ரைனும் சுமுகமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன” என ட்ரம்ப் அங்கு மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள ஐக்கிய அறபு அமீரகம் சூடானின் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளது. அதன் வெளிவிவகார அமைச்சர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் பாதுகாப்பையும் பொருளாதார அபிவிருத்தியையும் மேம்படுத்துவதற்கு சூடானின் இத்தீர்மானம் பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானின் நிலைப்பாடு

தொலைபேசிக் கலந்துரையாடல்களை அடுத்தே டொனால்ட் ட்ரம்ப் சூடானின் இணக்கத்தைத் தெரிவித்துள்ளார். எனினும், அரசியலமைப்பு சபை நிறுவப்பட்ட பின்னரே இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கிக் கொள்ளல் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அரசியலமைப்புச் சபை குழுவின் உறுப்பினர் உமர் கமருத்தீன் கருத்து வெளியிட்டுள்ளார்.

2019 இல் உமர் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் சூடானில் இராணுவ ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சிவில் ஜனநாயகத்திற்கு பெரிதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சூடானில் இராணுவத்திற்கும் சிவில் சமூகத்திற்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.

கிட்டிய எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தை சிவில் சமூகத்திடம் கையளிக்க வேண்டும் என்று கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.  குறிப்பிட்டளவு அதிகாரங்கள் இராணுவக் கட்டமைப்பிலிருந்து சிவில் சமூகத்திற்கு பகிரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில், இதற்கான ஆரம்ப நடவடிக்கையாக அரசியலமைப்பு சபை நிறுவப்பட வேண்டும் என்று உடன்பாடு காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அம்முயற்சி மந்த கதியிலேயே நடந்து வருகின்றது.

1989 இல் முன்னாள் ஆட்சியாளர் உமர் பஷீர் இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்தார். அவர் அமெரிக்காவின் காலனித்துவத்தையும் சூடானிய எண்ணெய் வளம் மீதான ஆக்கிரமிப்பையும் கடுமையாக எதிர்த்தார். அதனால், கென்யாவிலும் தன்சானியாவிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு சூடான் அரசாங்கமே காரணம் என்று ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கம் குற்றம் சாட்டி அரச பயங்கரவாதப் பட்டியலில் சூடானையும் இணைத்தது. இதனால் கடந்த 30 ஆண்டு காலமாக வொஷிங்டனுக்கும் கார்டூமுக்கும் இடையிலான உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் டொனல்ட் ட்ரம்ப் சூடானை அரச பயங்கரவாத நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதோடு அங்கு உருவாகியுள்ள, பஷீருக்குப் பிந்திய இராணுவச் சர்வதிகாரத்தையும் அங்கீகரித்துள்ளார். உமர் பஷீர் இராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்தபோதும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஓரளவு மதிப்பளித்தார். அவ்வாறிருந்தும் வொஷிங்டன் அவரை அங்கீகரிக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தன.

இன்று பஷீரை விட கொடிய இராணுவ அதிகாரிகளை வொஷிங்டன் அரவணைத்துச் செல்கின்றது. இன்றைய மதச்சார்பற்ற இராணுவம் மற்றும் சூடானின் பெற்றோலிய வளம் என்பவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள வொஷிங்டன், இஸ்ரேலையும் ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு கார்டூம் மீது அழுத்தங்களை மிக இலகுவாகப் பிரயோகிக்க முடிந்துள்ளது. புதிய இராணுவச் சர்வதிகாரிகளுக்கு அமெரிக்காவின் டொலர் பிச்சை அவசியமாகியுள்ளது.

அதேவேளை, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீங்க வேண்டும் என்ற தேவையும் எழுந்துள்ளது. இதற்காகவே ட்ரம்பின் அழுத்தங்களுக்குப் பணிந்து இஸ்ரேலுடன் தமது உறவை சுமுகமாக்குவதற்கு சூடான் புதிய ஆட்சியாளர்கள் முன்வந்துள்ளனர்.

கருத்துக் கணிப்பில் பின்னடைவில் உள்ள ட்ரம்ப்

நவம்பர் 03 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பீட்டில் ஜோ பைடனை விட பின்னடைவில் இருந்து வரும் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறும் வியூகங்களில் ஒன்றாக ‘நூற்றாண்டின் கொடுக்கல் வாங்கலை கையிலெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதி இஸ்ரேலுக்கும் அறபு நாடுகளுக்கும் இடையிலான உறவினை சுமுகமாக்குவதன் மூலம் அமெரிக்காவில் வாழும் ஒரு கோடி யூதர்களின் வாக்குகளைக் கவர்வதாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தான் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் நூற்றாண்டின் கொடுக்கல் வாங்கலை வேகமாக அமுல்படுத்தி வருவது போன்ற ஒரு மாயையை தாம் உருவாக்கி வருகிறார்.

ஓவல் அலுவலகத்திலிருந்து நெடன்யாஹுவுடன் தொலைபேசியின் மூலம் உரையாடிய அவர், ஜோ பைடன் ஜனாதிபதியானால் இது போன்ற முயற்சியை மேற்கொள்வாரா என்று கேள்வியெழுப்பினார். அப்போது இது நவீன அமெரிக்க அரசியல் வரலாற்றில் உங்களால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒன்று எனவும் அதற்கு தான் நன்றியுள்ளவராக இருப்பதாகவும் நெடன்யாஹு பதிலளித்தார்.

இஸ்ரேலியப் பிரதமரின் பதிலை அங்கிருந்த அனைவரும் வெளி ஒலிபெருக்கியின் மூலம் செவிமடுத்தனர். 1967 இற்குப் பின்னர் இடம்பெற்று வந்த அறபு இஸ்ரேல் மோதல் குறித்த உடன்பாடுகள் தொடர்பில் அடிநுனி எதுவும் தெரியாத ட்ரம்ப் தேர்தலை முன்னிறுத்தி இந்த விஷப் பரீட்சையில் இறங்கியுள்ளார். அதற்குப் பலியாகியுள்ள மூன்றாவது நாடாக சூடான் மாறியுள்ளது.

பலஸ்தீனர்களின் எதிர்வினை

சூடான் இஸ்ரேலுடன் உறவுகளை சுமுகமாக்கிக் கொள்வது தொடர்பில் தெரிவித்துள்ள இணக்கம் குறித்து பலஸ்தீன குழுக்கள் தமது கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் ராமல்லா நகரில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பேச்சாளர்களில் ஒருவரான வாஸில் அபூ யூசுப் பின்வருமாறு கருத்து வெளியிட்டார்.

“சூடான் இராணுவ ஆட்சியாளர்களின் தீர்மானம் பலஸ்தீனர்களின் முதுகில் மீளவும் குத்தும் பெரும் வரலாற்றுத் துரோகம். பலஸ்தீன மக்களை யூத சியோனிஸ்டுகளுக்குக் காட்டிக் கொடுக்கும் மிகப் பெரும் அநியாயம். ஐக்கிய அறபு அமீரகம், மற்றும் பஹ்ரைனின் பட்டியலில் சூடானும் இணைந்து கொள்வது பலஸ்தீனர்களின் போராட்டத்தை ஓர் அங்குலமும் தொய்வடையச் செய்யாது. அவர்கள் தமது இலக்கில் தெளிவாக உள்ளனர். அனைத்து அறபு நாடுகள் ஒன்றிணைந்தாலும் பலஸ்தீனர்களின் போராட்டத்தை ஒடுக்க முடியாது.”

இதேவேளை காஸாவில் ஹமாஸ் இயக்கத்தின் பேச்சாளர் பௌசி பர்ஹூம் சூடானின் இணக்கம் குறித்து கருத்து வெளியிட்டபோது, “இது பிழையான திசையில் எடுத்து வைக்கப்படும் முதலாவது அடி” என்று வர்ணித்துள்ளார்.

பலஸ்தீனர்கள் பஹ்ரைன், அமீரகம், சூடான் ஆகியவை மட்டுமன்றி எதிர்காலத்தில் சவூதி அரேபியா போன்ற நாடுகளும் இஸ்ரேலுடன் தமது உறவுகளை சுமுகமாக்கும் என்றே எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதன் மூலம் இஸ்ரேல் அடைய விரும்பும் அரசியல் இலக்குகளை அது ஒருபோதும் அடைந்துகொள்ள முடியாது என்றே பலஸ்தீனர்கள் நம்புகின்றனர்.

ஊழல் மோசடியில் சிக்கியுள்ள நெடன்யாஹு அதிலிருந்து மீள்வதற்கும் அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கும் இந்த நகர்வை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறார். இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று எண்ணும் ட்ரம்ப் மத்திய கிழக்கின் சமாதானத் தூதுவராக தன்னைக் காண்பிக்கவும் அமெரிக்க யூதர்களின் வாக்குகளைக் கவர்வதற்கும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால், இது பலஸ்தீனர்களுக்கு சார்பாக உருவாகி வரும் பக்க விளைவுகள் குறித்து இவர்கள் கவனம் கொள்ளவில்லை.

ட்ரம்பினதும் நெடன்யாஹுவினதும் இந்தத் தந்திரம் பலஸ்தீல் உருவாக்கி வரும் உடனடி விளைவுகளில் ஒன்று பலஸ்தீனர்களின் ஐக்கியமாகும். 2007 ஆம் ஆண்டிலிருந்து பலஸ்தீன் விடுதலை இயக்கத்திற்கும் (PLO) ஹமாஸுக்கும் இடையில் கடும் மோதலும் பிளவும் ஏற்பட்டன. அமீரகமும் பஹ்ரைனும் பேச்சுவார்த்தையில் இறங்கிய பின்னர் இவ்வியக்கங்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்ற உந்துதலில் தமக்குள் உள்ளகக் கலந்துரையாடல்களை ஆரம்பித்து பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேற்குக்கரை மற்றும் காஸாவின் நிருவாகங்களை ஒன்றுபடுத்துவதற்கும் இணைந்த தலைமைத்துவக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும் இவ்வியக்கங்கள் இணங்கியுள்ளன.

மேற்குக்கரையில் புதிதாக இஸ்ரேல் ஆரம்பித்துள்ள நில ஆக்கிரமிப்புத் திட்டங்கள், நூற்றாண்டின் கொடுக்கல் வாங்கல் தந்திரம், அரேபியர்களின் சமாதான செயன்முறை, அமீரகம்-பஹ்ரைன் இஸ்ரேலுடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் என்பன பலஸ்தீனர்களின் ஐக்கியத்திற்கான விதைகளை ஊன்றியுள்ளன. ஒன்றுக்கொன்று பிளவுபட்டு உள்ளக மோதலில் ஈடுபட்டு வந்த, பலஸ்தீன விடுதலை இயக்கம், அல்பதாஹ், அல் ஜிஹாத் இயக்கங்கள் ஒரே மேசையில் உட்கார்ந்து பலஸ்தீனர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கத் துவங்கியுள்ளன.

வொஷிங்டன், டெல்அவிவ் வரைந்த சதித்திட்ட வலையில் ஒவ்வொன்றாக வீழ்ந்து வரும் அறபு நாடுகள் மீது பலஸ்தீனர்கள் கொண்டிருந்த நம்பிக்கை மெதுமெதுவாக தளர்ந்து வரும் நிலையில் பலஸ்தீனர்கள் தமக்குள் ஒரு பலமான அணியை உருவாக்கிக் கொள்வதற்கான தருணம் பிறந்துள்ளது. இது அறபு நாடுகளதும் இஸ்ரேலினதும் கூட்டுச் சதித்திட்டத்தின் மிகச் சிறந்த பக்க விளைவுகள் என்கிறார் காஸாவிலுள்ள அல் உம்மா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அத்னான்.

அறபு நாடுகள் இஸ்ரேலுடன் உறவுகளை சுமுகமாக்கிக் கொள்வது இஸ்ரேலுக்குச் சாதகமானதா என்ற தலைப்பில் அவர் அல் ஜஸீராவின் இணையத்தளத்தில் எழுதியுள்ள நீண்ட கட்டுரையொன்றில் சுமுகமாக்கல் முயற்சியின் இறுதி விளைவு பலஸ்தீனர்களுக்கே சாதகமாக இருக்கும் என்று எதிர்வுகூறுகிறார்.

எது எவ்வாறாயினும், கையாலாகாத, சியோனிச யூத ஆதரவு கொண்ட மன்னராட்சி நிலவும் அறபு நாடுகள் தமது அரசியல் வசதிகளுக்கு ஏற்ப இஸ்ரேலுடன் உறவுகளை சுமுகமாக்கிக் கொள்வதற்கு ஒவ்வொன்றாக முன்வருகின்றன. இந்த வரிசையில் இரு ஹரம்களின் காவலர்களும் கூட இணைந்து விடுவார்கள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஆனால், இதன் விபரீதமான விளைவுகளை டெல்அவிவ் மட்டுமல்ல, அறபு நாட்டு ஆட்சியாளர்களும் அனுபவித்தே ஆகுவார்கள். வரலாறு இவர்களை நிச்சயம் பழிதீர்க்கும்.