சமூகப் பரவுகைக்கு வந்துவிட்டோமா இல்லையா ?

0
21

இன்றைய நிலையில் நம்முன் இருக்கும்  கேள்விகள் இரண்டு.

1) நாம் சமூகப் பரவுகை எனும் நான்காம் நிலைக்கு வந்து விட்டோமா?

2) அப்படியானால் மறுபடியும் ஊரடங்குகள், லொக்டவுன்களுக்குள் செல்லப்போகிறோமா? நாடு தாங்குமா?

சம்பவத்துக்கு செல்ல முன், சரித்திரத்தையும், கொஞ்சம்  விஞ்ஞானத்தையும் பார்த்து விட்டு செல்லலாம். இது நம் அனைவருக்கும் தெரிந்த கதைதான்!

ஒரு வியாபாரி நெடுந்தொலைவு நடந்து போகையில், நிழலுக்காக ஓர் ஆலமரத்தடியில் இளைப்பாறினானாம். அப்போது, ஏன் இந்தப் பெரிய ஆலமரத்துக்கு இந்தளவு சிறிய பழங்களை ஆண்டவன் கொடுத்திருக்கிறான்? பூசணிக்காய் போல பெரிதாய் இருந்திருக்கலாமே என்று சிந்தித்தானாம். அந்த நேரம் பார்த்து அவனது தலையில் டொக்கென ஓர் ஆலம் பழம் விழுந்ததாம். தலையைத் தடவிய வியாபாரிக்கு, காரணம் அப்போது புரிந்ததாம்.

இந்தத் தத்துவம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நோயாக்கிகளுக்கு, குறிப்பாக வைரஸ்களுக்கு நன்கு பொருந்தும். மிக விரைவாக பரவி, இலகுவாக நோயேற்படுத்தும் வைரசுக்களின் உக்கிரத்தன்மையானது ( virulence), பரவும் வீதம் குறைந்த வைரசுக்களின் உக்கிரத்தன்மையை விட மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு  எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV யையும் , சாதாரண சளிக்காய்ச்சலை ஏற்படுத்தும் influenza வைரசையும் எடுத்துக்கொள்ளலாம். இந்த சளிக்காய்ச்சல் வராதவர்களே நம்மிடையே இருக்க முடியாது. அதுபாட்டுக்கு வரும், போகும், நாமும் ஒரு தும்மலைப் போட்டு, மூக்கை ஒரு இழு இழுத்துவிட்டு வேலையைப் பார்ப்போம். காற்றில் பரவும் இதன் பரவல் வீதம் ( contagiousness) மிக உயர்வானதாயினும், இதன் கொல்லும் திறன் மிகமிக மிகக் குறைவானது.

இப்போது  HIV யை எடுத்தால், அதன் கொல்லும் திறன் ஏறத்தாழ 100 வீதம். ( தற்போதைய மருந்துகளால் பெருமளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமானாலும் கூட..). ஆனால், இந்த HIV பரவ உடலுறவு, இரத்தப்பரிமாற்றம் போன்ற சிக்கலான பொறிமுறைகள் அவசியம்.

இப்போது, இந்த HIV  காற்றால் பரவுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்… நிலைமையை கற்பனை செய்ய முடிகிறதா? மனித இனமே என்றோ அழிந்திருக்கும்!

நமக்கு நோயேற்படுத்தும் நோயாக்கிகளின், குறிப்பாக வைரசுக்களின் இயைபாக்கத்தில் இந்த நிலை மிக முக்கியமானது. அதாவது அவற்றின் நீடித்த நிலவுகைக்கு நாம் இருந்தாக வேண்டும். நாம் அழிந்தால்  அவையும் அழிந்து விடும்!  ஒரு mutual understanding மாதிரி…!

இப்படியிருக்கையில், நோயாக்கிகளின் மரபணுவில் ஏற்படும் சிலமாற்றங்கள், விரைவாக பரவும் திறன் கொண்டவற்றை வீரியமிக்கதாகவும் ஆக்கிவிடுகின்றன. ஆலமரத்தில் பூசணிக்காய் காய்ப்பது போல. இந்த நிலையில் தான் pandemics எனப்படும் சர்வதேச நோய்த்தொற்று நிலைமைகள் ஏற்படுகின்றன.

எனினும், “தன் காவி அழிந்தால் தானும் அழிவோம்” என்ற நோயாக்கிகளின் அடிப்படைத் தத்துவப்படி, இந்த pandemics ஒரு குறித்த காலத்தில் தானே அடங்கிவிடும். எனினும்,  அதனை விரைவாக அடக்கி, மரணங்களை குறைக்க சில மனித பிரயத்தனங்கள் தேவையாயிருக்கின்றன. தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பில் இருந்து, ஊரடங்கு, லொக்டவுன் வரை இந்த வகைக்குள் தான் வரும்!

**********

சரி, இனி சம்பவத்துக்கு வரலாம்!

நாம் இப்போது சமூகப்பரவுகைக்கு வந்து விட்டோமா?

சமூகப்பரவுகை என்பது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது-

* தாம் பெற்ற தொற்று யாரிடமிருந்து வந்தது என்று தெரியாமல் பலருக்கு தொற்றேற்படல்.

* ஒரு நாட்டின் பல இடங்களில் ஒன்றோடொன்று தொடர்பில்லாத பல கொத்தணிகள் ( clusters) உருவாதல்.

* சமூக மட்டத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் பலருக்கு பொசிட்டிவ் ஆகுதல்.

இந்த வகையில் பார்த்தால், முதலாவது விதி எப்போதோ பூர்த்தியாகிவிட்டது. இப்போது நாங்கள் அடையாளம் கண்டுகொண்டிருக்கும் பலருக்கும் தாம் யாரிடமிருந்து தொற்றைப் பெற்றோம் என்பது தெரியாது.

இரண்டாவது விதி இப்போது பூர்த்தியாக தொடங்கியிருக்கிறது. உதாரணத்துக்கு கல்முனையில் உருவாகியிருக்கும் cluster பேலியகொட மீன் சந்தையோடு தொடர்பு பட்டதென சொன்னாலும், அவையிரண்டும் ஒன்றோடொன்று நேரடி நிலத்தொடர்பற்றவை. இன்னும் சில நாட்களில் இன்னுமின்னும் புது clusters நாடு முழுதும் உருவாகலாம்.

மூன்றாவது விதியை பூர்த்தியாக்க நாம் சமூக மட்டத்தில் எழுமாற்றாக குறிப்பிட்டளவு பரிசோதனைகள் செய்யவேண்டும். நோய்த் தொடர்புள்ளோருக்கும், நோய் அறிகுறி உள்ளோருக்கும் செய்யவே தாவு தீரும் நிலையில், இப்போதைக்கு சமூக மட்டத்திலெல்லாம் PCR செய்யும் சாத்தியக்கூறு இல்லை!

மேலோட்டமாக பார்த்தால், சமூகப்பரவுகைக்கு என்றோ வந்து விட்டதாக தெரிந்தாலும், இப்போது தான் நாம் அந்த நிலைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம் என்றால் மிகையில்லை!

மீண்டுமொரு லொக்டவுன் சாத்தியமா? ஒரே வரியில் சொன்னால் நாடு தாங்காது. ஆனால் அதை விட்டால் வேறு வழியுமில்லை. அரசும் இந்த இரண்டுங்கெட்டான் நிலையில் தான் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. கொரோனாவின் முதல் அலையின் போது, மிக விரைவாக ‘லொக்டவுன்’ என்ற  முடிவுக்கு வந்தவர்களால், இப்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தைக் கூட இன்னும் நிறுத்த முடியவில்லை. அப்படி நிறுத்தியிருந்தால் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் clustur களைத் தடுக்க முடிந்திருக்கும். ஆனால், அந்த வியாபாரிகளின் குடும்பம் பட்டினி கிடந்திருக்கும்..!

இங்கு முடிவுகளை எடுப்பது பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த வல்லுனர்களைக் கொண்ட குழு. எல்லா நிலைகளையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம். இப்போதைக்கு மேல்மாகாணத்துடனான ஏனைய மாகாணங்களின் போக்குவரத்து தொடர்பை துண்டித்து, clusters ஏற்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துதலே புத்திசாலித்தனமான முடிவாக அமையலாம்.

பாதிக்கப்படுவோருக்கு அரசு நிவாரணம் அளிக்கவேண்டும்.  அரசியல்வாதிகள், அமைச்சர்கள், ஏனைய உள்ளூராட்சி உறுப்பினர்கள் – இவர்கள் சம்பளம் பெறுவதற்கான ஒரே தகுதி மக்கள் அளித்த வாக்குகளே என்பதால்- இதை விட அதிகமாக செய்யலாம். வீட்டுத்தோட்டங்கள், சிறுவிவசாய முயற்சிகள் உள்ளுராட்சி மட்ட நிலைகளில் ஊக்குவிக்கப்படலாம். இதெல்லாம் என் சொந்தக் கற்பனைகள் மட்டுமே!

நாம் செய்யக்கூடியது என்ன? காலம் காலமாக சொல்லப்படுவது தான்-

1) மாஸ்க் அணியுங்கள்

2) கைகளை கழுவுங்கள்

3) 1 மீட்டர் தூரம் எனும் சமூக இடைவெளியை பேணுங்கள்.

இதெல்லாம் ஒரு மேட்டரா, இதாலெல்லாம் கொரோனாவை தடுக்க முடியுமா என்றால்,  மேற்கூறிய மூன்று விதிகளையும் மட்டும் கடைப்பிடித்தாலே ஏறத்தாழ 99% பரவலை நிச்சயம் தடுக்க முடியும். கோவிட் காற்றில் பறந்தெல்லாம் பரவுவதில்லை. அவை சுவாசத் துளிகள் ( respiratory droplets) மூலமே பரவுகின்றன. அதனால் ஒருவரிடம் இருந்து அந்தக் குறித்த தூரத்தை தாண்டி அதனால் பயணிக்கமுடியாது. எனினும் ஒருதரம் வெளிப்பட்டால் சிலநாட்கள் வரை காற்றில் உயிர்ப்புடன் இருக்கும். இதனால் தான் தேவையற்ற கூட்டம் கூடல்கள் தவிர்க்கப்படவேண்டும்!

தடுப்பூசிகள், லொக்டவுன்கள் என்று எதையோ எதிர்பார்த்திருப்பதை விட, அவையெல்லாவற்றையும் விட வினைத்திறன் கூடிய, நம்மால் செய்யக்கூடிய அந்த மூன்றையும் செய்தாலே போதும், உருப்பட்டு விடலாம்!

சுருங்கச்சொன்னால்:

* நாம் இப்போது சமூகப்பரவுகையின் நுழைவாயிலில் உள்ளோம்.

* மேலும் பரவுதலை தடுக்க பிரதேசங்களை தனிப்படுத்தல், போக்குவரத்துகளை மட்டுப்படுத்தல் என்பன அவசியம். பாதிக்கப்படுவோருக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

*கைகழுவுவோம்

மாஸ்க் அணுவோம்.

சமூக இடைவெளி பேணுவோம்!

 

அவ்வளவுதான்!

நன்றி, டொக்டர்,சஜீதன், ராகம போதனா வைத்தியசாலை

சில திருத்தங்களுடன் அஜ்மல் மொஹிடீன்