துரோகிகள் தலைவர்களாக இருக்கும் போது முஸ்லிம்களுக்கு வேறு எதிரிகள் தேவையா ?

0
95
  • கலாநிதி அமீர் அலி

தேர்தலை இலக்காகக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் குழுவொன்று ஆளும் கும்பலுடன் சேர்ந்து கொண்டு, இலங்கையில் ஜனநாயகத்தை மெல்லச் சாகடித்து இனம் சார்ந்த ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்துவதற்கு வழிவகுக்கின்ற சர்ச்சைக்குரிய 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய அபாயகரமான நாளாக 2020 ஒக்டோபர் 22 ஆம் திகதியை வரலாறு நினைவூட்டும். எதேச்சாதிகாரத்தின் கசப்பை ருஷித்த பின்னர் இலங்கை முஸ்லிம்களின் வருங்காலத் தலைமுறைகள், நாட்டினதும் சமூகத்தினதும் நலனில் எந்த அர்ப்பணிப்பும் இல்லாத சமூகத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தங்களது முன்னோர்களின் முட்டாள்தனத்தையிட்டு புலம்பப் போகிறார்கள். துரோகிகள் தலைவர்களாக இருக்கும் போது முஸ்லிம்களுக்கு வேறு எதிரிகள் தேவையா ?

நாட்டின் அனைத்துச் சமூகங்களிலும் அண்மைக்காலங்களில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமூகமே. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததுக்குப் பின்னர் தோன்றிய சிங்கள பௌத்த இன மத மேலாதிக்க இயக்கங்கள் பல தீவிர அரசியல் மற்றும் அழுத்தக் குழுக்களின் வடிவத்தில் வெளிப்பட்டதனால் இந்தச் சமூகம் தனது இருப்பு தொடர்பிலான அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தொடங்கியது. ஆயிரம் வருடத்துக்கும் மேலாக பௌத்தர்களுடன் மட்டுமன்றி பிறமதங்களைச் சேர்ந்தவர்களுடனும் அமைதியான சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் வெளிக்காட்டி வரும் முஸ்லிம்கள் இந்த மேலாதிக்கவாதிகளின் பார்வையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாகவும் அதனால் துரத்தப்பட வேண்டியவர்களாகவும் தோன்றினர். இதனால் 2009 க்குப் பிறகு முஸ்லிம் எதிர்ப்பு பய அலையொன்று வன்முறைகளுடன் சேர்த்து கட்டவிழ்த்து விடப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அல்லது அதிலிருந்து பிரிந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ அல்லது தேசியக் கட்சிகளைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் தலைவருமோ  அந்தப் போக்கைத் தணிப்பதற்கும் வன்முறைச் சக்கரத்தை தடுத்து நிறுத்துவதற்கும் எதுவுமே செய்ய முடியாதிருந்தனர். உண்மையில் கடந்த வருடம் இருநூற்றி ஐம்பது சிங்கள, தமிழ், கிறிஸ்தவ வழிபாட்டாளர்களை சில முஸ்லிம் தீவிரவாத வெறியர்கள் ஈஸ்டர் ஞாயிறன்று பழிவாங்கும் விதமாகக் கொன்றமைக்கு  அவர்களது அதிகாரமின்மையும் வேறுபாடுகளும் ஒருவகையில் காரணமாக அமைந்தன.

ஜனாதிபதி ஜீஆர் தனது பதவியை மேலாதிக்கவாதிகளினதும் அவர்களுக்கான வணிக மற்றும் நிதிரீதியான ஆதரவாளர்களதும் முழு ஆதரவோடு வென்றதாக அரசியல் அவதானிகள் நிறுவுகின்றனர். ஒரு “பாதுகாப்பான நல்லொழுக்கமுள்ள நெறிமுறைசார்ந்த சட்டத்தை மதிக்கின்ற” ஒரு சமுதாயத்துக்குள் “செழிப்பையும் சிறப்பையும்” வழங்குவதாக அவர் வாக்குறுதியளித்த போதிலும் அவர் வெற்றி பெற்ற நாளிலிருந்து அனைவருக்குமான ஜனாதிபதி என்பதனை விட தன்னை பௌத்தர்களுக்கான ஜனாதிபதியாக அவர் நிரூபித்து வருகிறார். அனைத்துச் சமூகங்களுக்குமான ஆட்சியாக கிளிப்பிள்ளை போல அவர் சொல்லி வருவதைத் தவிர சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர் முற்றாகவே புறக்கணிக்கத் தொடங்கினார். உதாரணமாக நெலுந்தெனியவில் ஒரு நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த பள்ளிவாசலொன்றுக்கருகில் புத்தர் சிலையொன்று திருட்டுத்தனமாக வைக்கப்பட்டபோது அவர் அந்த விவகாரத்தில் தலையிட மறுத்து மாவட்ட நீதிமன்றத்தைக் கையாள்வதற்கு விட்டு விட்டார். அந்தச் சிலையை அதனை வைத்த இடத்தில் நிரந்தரமாக இருக்கவிட்டு அதற்கும் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு பிரிசுவரை எழுப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது நிச்சயமாக எதிர்காலச் சிக்கல்களுக்கும் இறுதியில் அந்தப் பள்ளிவாசலை மூடுவதற்கும் வழியமைக்கும். அதேபோல மஹர சிறைச்சாலையின் பாதுகாப்புப் பிரிவினர் அங்குள்ள பள்ளிவாசலைக் கையகப்படுத்தி அதனை வழிபாட்டுக்கும் பொழுதுபோக்குக்குமான இடமாக மாற்றியபோதும் ஜீஆர் அதிலும் தலையிடவில்லை. முஸ்லிம்கள் அந்தப் பள்ளிவாசலையும் இழந்து விட்டார்கள். மேலும் வைரஸினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அதிலும் அவர் தலையிட மறுத்தார். மாறாக வைரஸ் தொற்றி இறந்த உடல் புதைக்கப்பட்டால் அதிலிருந்து வைரஸ் பரவும் என எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் மருத்துவர் சங்கத் தலைவர் கூறியதை ஆதரித்தார். இறுதியாக பொத்துவிலில் ஜீஆரின் தொல்பொருள் செயலணி முஸ்லிம் தனியார் நிலங்களை ஆக்கிரமித்தபோது அங்குள்ள மக்கள் வீதியில் இறங்கி தமது நிலம் இழக்கப்படுவதற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதற்கும் துணிந்தனர். மிக அண்மையில் மூன்று நாட்களுக்கு முன்னர் தாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு வந்த விதத்தை முஸ்லிம்கள் ஊடகங்களில் காண நேர்ந்தமை எவ்வளவு அவமானமானது ? அவரை அழைத்து வருவதற்கு நாகரிகமான ஒரு முறையை ஜனாதிபதி உத்தரவிட்டிருக்க முடியாதா ? ஒரு நாடு ஒரு சட்டம் என்று அழைக்கப்படுவது இப்படித்தான் செயற்படுகிறதா ?

ஜீஆரின் கரங்களைப் பலப்படுத்துவதற்கு வாக்களித்த தேர்தலை நோக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் அவருடைய எதேச்சாதிகாரத்தின் கீழ் வெறும் கறிவேப்பிலையாக இருந்துவிட்டுச் செல்வதற்குத் தயாராகிவிட்டனர். அரச நியமனங்களிலும் பொது மருத்துவமனைகளிலும் தனியார் வியாபார நிலையங்களிலும் இடர்க்கால நிதி விநியோகத்திலும் முஸ்லிம்களுக்குப் பாகுபாடு காட்டுவது விதியாகிவிட்டது. இது அனைவரும் அறிந்த விடயமே. முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களில் நீதியும் சமத்துவமும் எங்கே ?

இந்த ஆதரவுக்குப் பகரமாக இந்தக் கறுப்பாடுகளுக்கு என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயம். முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இதனை விட மோசமாகப் பாதிக்கப்படப் போகிறது. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இல்லாத கட்டுப்பாடுகள் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசல் நிர்மாணப்பதில் மட்டும் விதிக்கப் பட்டுள்ளதை இந்த வெட்கம் கெட்ட தலைவர்கள் அறியவில்லையா?

பண்டைய காலங்களிலும் பௌத்த மன்னர்களின் ஆட்சியின் கீழும் இலங்கை அதன் பன்மைத்துவத்தை வெற்றிகரமாக நிர்வகித்துப் பாதுகாத்து முன்னேறியிருக்கிறது. காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னரும் ஆசியாவின் மிக மூத்த செழிப்பான தாராளமய ஜனநாயக நாடு என்ற புகழைப் பெற்றிருந்தது.  எல்லா ஜனநாயகங்களிலும் குறைபாடுகள் இருப்பது போலவே இந்த ஜனநாயகத்திலும் குறைகள் இருக்கலாம். ஆனாலும் தாராளமய ஜனநாயகத்தை விட ஒரு பன்மைச் சமூகத்துக்கான சிறந்த அரசியல் மாதிரி ஒன்று இல்லை. குறிப்பாக ஒரு முஸ்லிம் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் தாராளமய ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கும் அரசியல் இஸ்லாத்தின் போதனைகளுக்கும் இடையில் கணிசமான அளவில் “ஒருமித்த கருத்து” உள்ளதென  அரசியல் விஞ்ஞானி ஆன்ட்ரூ எப் மார்ச் தனது இஸ்லாமும் தாராளமய ஜனநாயகமும்:  ஒருமித்த கருத்துக்களுக்கான தேடல் (ஒக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் 2009) எனும் நூலில் குறிப்பிடுகிறார். மாற்றமாக ஒரு மேலாதிக்க மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நிரலைக் கொண்ட எதேச்சாதிகாரமானது நாட்டின் பன்முக அரசியலுக்கும் பன்மைத்துவத்துக்கும் அச்சுறுத்தலாகும். இதற்கும் அப்பால் வளர்ந்து வரும் இந்த எதேச்சாதிகாரத்தைப் பற்றி அஞ்சுவதற்கு முஸ்லிம்களுக்கு மேலதிகமான காரணங்களும் இருக்கின்றன.

ஜனநாயகத்தை தகர்ப்பதற்கான நகர்வுகளுடன் பொருளாதாரமும் கீழ்நோக்கிச் சுழலும். தொற்றுநோயின் தற்போதைய அலை அந்தச் சுழற்சியை வேகமாக்குகிறது. மக்ரோ (பாரிய) மட்டத்தில் அரசாங்கம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு அப்பால் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் மைக்ரோ மட்டத்தில் (நுண்ணளவில்) பல சிரமங்களை எதிர்கொள்கின்றன. உணவு மற்றும் பிற தேவையான பொருட்களின் பற்றாக்குறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலைகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது. பீதியின் காரணமாக பொருட்களை வாங்கி வைக்க முற்படுவதால் கடைகளின் முன்னால் ஒழுங்கில்லாத வரிசைகள் நீளுகின்றன. நுகர்வோர் கடன் அதிகரித்து வருகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால்  வருமான அறிகுறியின் கடும் பற்றாக்குறையொன்று (Acute Deficiency of Income Syndrome – AIDS) நிலவுகிறது. இது வருமான இடைவெளியை விரிவாக்குகிறது. மக்களை ஏழ்மையாக்குகிறது.  பொருளாதார நெருக்கடி காலங்களில் அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைவது தவிர்க்க முடியாமல் போகும். அப்படி நிகழ்ந்தால் மக்களின் கோபத்தை தனியார் விநியோகத்தர்களை நோக்கித் திசை திருப்பி விட அரச அதிகாரிகள் முயலலாம். இந்த நிலையில் நுகர்வோரின் குழப்பத்தினால் முதலில் பாதிக்கப்படுவோராக கடைக்கார்கள் இருப்பார்கள். அந்தவகையில் வணிக சமூகம் என முத்திரை குத்தப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படப் போகிறது. ஜீஆர் – எம்ஆர் ஆட்சியைக் கொண்டுவந்த மேலாதிக்கவாதிகளும் அவர்களின் முஸ்லிம் விரோத வணிக ஆதரவாளர்களும் இதுபோன்ற சந்தர்ப்பமொன்றில் சுரண்டிக் கொள்வதற்குக் காத்திருப்பார்கள். ஜீஆர் தனது முப்படைகளின் ஆதரவுடன் முஸ்லிம்களைப் பாதுகாத்து மேலாதிக்கவாதிகளின் ஆதரவைப் பணயம் வைக்கத் துணிவாரா ?

இதற்கிடையில் 20 ஆவது திருத்த நாடகத்தில் மற்றுமொரு நகைச்சுவைக் காட்சியும் அரங்கேறியது. முஸ்லிம் கட்சி என அழைக்கப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் தங்களது தலைவரை விட்டும் வெளியேறி திருத்தத்தை ஆதரிப்பதற்காக பெருமளவில் நகர்ந்து சென்றபோது அதன் நிறுவன அமைப்பிலான குழப்பமும் கட்சியின் ஒழுக்கமின்மையும் நிரூபணமானது. இது கட்சித் தலைவருக்கும் ஆளுந்தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விளைவாக நேர்ந்ததா அல்லது அந்தத் தலைவருக்கு எதிரான வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட சதிப்புரட்சியின் விளைவா என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் கலைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. அவை இரண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு சுமையாக மாறிவிட்டன.

இறுதியாக புதிய ஆட்சி தனது சமூகத்தை நடத்திய விதம் தொடர்பில் தமது திருப்தியையும் விரக்தியையும் அரசாங்கத்துக்கு வெளிக்காட்டுவதற்கு முன்வைக்கப்பட்ட 20 ஆவது திருத்தம் முஸ்லிம் தலைவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியது. இந்தத் தலைவர்கள் மிரட்டப்பட்டிருந்தாலும் பலவந்தப்படுத்தப்பட்டிருந்தாலும் லஞ்சம் பெற்றிருந்தாலும் இந்தத் திருத்தத்துக்கு அவர்கள் அளித்த ஆதரவு ஒரு வரலாற்றுத்தவறு. இனி வருங்காலமெல்லாம் அது கண்டிக்கப்பட்டு வருந்த வேண்டி ஏற்படும்.