நாட்டின் ஜனநாயகத்துக்கு வரும் பாதிப்பினை அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்

0
127
  • லதீப் பாரூக்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்த ஆறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். திருத்தத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. விலைக்கு வாங்கப்பட்டதாக முஸ்லிம்கள் பலரும் சொல்லுகின்ற ஆறு வாக்குகளும் கிடைக்கப்பெறாவிட்டால் இந்தத் திருத்தத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வசதியாகக் கிடைத்திருக்காது.

நாட்டினதும் அவர்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய வங்குரோத்துச் சமூகத்தினதும் ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்குமான வெட்கக் கேடான துரோகம் என ஜனநாயக சக்திகள் கருதுகின்ற இந்த விடயத்தினால் வருகின்ற பாதிப்புக்கு  அவர்கள் முழுமையான பொறுப்பேற்க வேண்டும். ஆதரவாக வாக்களித்த ஆறு முஸ்லிம்களில் நான்கு பேர் ரவூப் ஹக்கீமின் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் ரிஷாத் பதியுதீனின் பிளவுண்ட குழுக்களில் இருந்து வந்தவர்கள். ரவூப் ஹக்கீமின் முகாமிலிருந்து நஸீர் அஹமட், ஹரீஸ், எம்எஸ் தௌபீக், பைசல் காஸிம் ஆகியோரும் ரிஷாதின் முகாமிலிருந்து அலிசப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் ஆகியோரும் அடங்குவர்.

இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீனின் அனுமதியின்றி திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்க முடியுமா என்பதே இப்போதுள்ள கேள்வி. சிலவேளை அவர்கள் காரணங்களை நன்கு  தெரிந்துகொண்டே சமூகத்தையும் நாட்டையும் ஏமாற்றுவதற்கான தாங்கள் வழமையாகச் செய்கின்ற இரகசிய ஒப்பந்தங்களைச் செய்திருக்கலாம். பதவிகளுக்கும் சலுகைகளுக்குமாக டீல்களில் ஈடுபட்டு சமூகத்துக்குத் துரோகம் செய்வது இவர்களுக்குக் கைவந்த கலை. இந்த விடயத்தில் இப்போது இவர்கள் நாட்டினதும் சமூகத்தினதும் வருங்காலச் சந்ததிகளை விற்று விட்டார்கள். குறிப்பாக சிங்கள பௌத்த அக்கறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியுடனான கூட்டின் விளைவுகளை எதிர்காலமே எடுத்துச் சொல்லும்.

ஊழல் நிறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அதேபோன்ற சர்ச்சைக்குரிய சமயத்தலைவர்களுக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டுள்ள சமூகத்தை வைத்து பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் சமூகத்துக்குத் துரோகமிழைத்து டீல்களில் ஈடுபடுவதில் பேர் போனவர்கள், மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபுக்குப் பின்னர் இது தான் தமது பாரம்பரியம் என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.

உதாரணமாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு இடம் கொடுக்கும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளை விட்டுக் கொடுப்பதாகக் கூறி இவர்கள் தமது பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்தனர். ஆனால் எதிர்பார்த்தது போலவே ஈஸ்டர் தாக்குதல் தொட்ர்பான விசாரணைகள் முடியுமுன்னரே இவர்கள் மீளவும் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். இது எதிர்பாராத ஒன்றல்ல. சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே அவர்கள் அதனை இராஜினாமா என அழைத்துக் கொண்டனர்.

சுதந்திரமடைந்த காலத்திலிருந்தான பெரும்பான்மைச் சமூகத்தின் இனவாத அரசியலின் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜயவர்தனவின் ஆணவம் கொண்ட இனவெறியும் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. இலங்கைக்கு இஸ்ரேலைக் கொண்டு வருவதற்காக அவர் முயற்சித்தபோது அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த டொக்டர் எம்சி கலீல் தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதி ஜேஆரைச் சந்தித்து எதிர்ப்பை வெளியிட்டபோது தம்மைச் சந்திக்க வந்த குழுவிடம் அவர், நல்லது, முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்க விரும்பினால் இருக்கலாம். இல்லாவிட்டால் வெளியேறிச் செல்லலாம் என்றார்.

அஷ்ரபின் மரணத்தின் பின்பும் இந்தத் துரதிர்ஷ்டமான நிலை தொடர்ந்தது. சமூகத்தையும் கொள்கைகளையும் ஒழுக்க நெறிகளையும் கைவிட்டு பலரும் குறுகிய இலாபங்களுக்காக அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்களுடன் தனிப்பட்ட டீல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்பது ஜனநாயகத்தினதும் மக்களின் சுதந்திரத்தினதும் சமூகமும் நாடும் மொத்தமாக அனுபவிக்கும் உரிமைகளினதும் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் விவகாரம்.  2019 மேயில் இனப் போர் முடிவடைந்ததிலிருந்து எந்தவொரு நியாயமான காரணமுன்றி தற்போது அதிகாரத்தில் இருக்கும் இனவெறிச் சக்திகளால் முழு முஸ்லிம் சமூகமும் எவ்வளவு துன்புறுத்தப்பட்டார்கள் என்பது இந்த எம்பிக்களுக்குத் தெரியும். இதை நன்கு அறிந்துள்ள இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களைத் தாக்கிய அதே சக்திகளுக்கு அளவுக்கதிகமான அதிகாரத்தைக் கொடுக்கும் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக எப்படி வாக்களிக்க முடியும் ? ஒருவேளை ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் இருவருமே அவர்களுக்கும் மக்களுக்கும் நன்கு தெரிந்த காரணங்களுக்காக அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை நடத்தி அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அனுமதித்திருக்கலாம் என்பது தான் முஸ்லிம் சமூகத்தின் அறிவுள்ள பலரதும் உடனடி எதிர்வினையாக இருந்தது.

ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவில் இருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்ட முஸ்லிம் அறிஞரும் பத்தியாளருமான பேராசிரியர் ஏ.சி. அமீர் அலி, எனக்கு விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. தங்கள் சமூகத்துக்கு என்ன நடக்கிறது என்பதை மறந்து ஜீஆரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சொந்தத் தலைவர்கள் இருக்கும் போது முஸ்லிம்களுக்கு வேறு எதிரிகள் தேவையா என வினவுகின்றார்.

இந்தியாவின் முஸ்லிம் விரோத வன்முறை ஆர்எஸ்எஸ் முன்னணிவகிக்கும் பாஜக அரசாங்கத்தைப் போன்ற சிங்கள பௌத்த அரசாங்கம் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற அனைத்துச் சிறுபான்மைக்கும் எதிரான நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயம். அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலைப் பகிரங்கமாக நடைமுறைப்படுத்துவதோடு அதனை அவர்கள் ஈவிரக்கமின்றிச் செயற்படுத்துகிறார்கள். இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறேதேனும் விவகாரமொன்றில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்தால் மன்னித்திருக்க முடியும். சிறுபான்மைச் சமூகங்கள் மீது பகையை வெளிப்படுத்துகின்ற ஒரு ஜனாதிபதியை எப்படி அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒருவராக ஆக்க முடியும் என்பது தான் கேள்வி.

சிறுபான்மையினரின் உரிமைகளை மேலும் ஒடுக்குவதற்கும் இழக்கச் செய்வதற்கும் பறிப்பதற்கும் 20 ஆவது திருத்தத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதியோ அவரது அரசாங்கமோ எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இந்த அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் வழங்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மத அனுஷ்டானத்துடன் அடக்கம் செய்ய மறுப்பது, பன்றிகளைக் கொலை செய்வதைத் தடுக்காமல் ஏழைகளின் உணவுக்காக மாடறுப்பதை தடை செய்வதாக அச்சுறுத்துவது போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இலங்கையில் மூன்றாவது மிக முக்கிய சமூகமாக முஸ்லிம்கள் இருந்தாலும் பிரபல இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயக்கின் பீஸ் டீவியை பியோ டீவி நீக்கியுள்ளது. ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இஸ்ரேலுக்கும் மற்றும்  கிறிஸ்தவர்களுக்கும் விஷேட சனல்களை வழங்கியுள்ளது.

வெள்ளவத்தை கின்ரோஸ் கடற்கரையில் நான் வழமையாகச் சந்திக்கின்ற அரசியலமைப்பு சட்டத்தரணி ஒருவர் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாள் என்னுடன் கதைக்கும் போது, லதீப், இதனைச் சொல்வதையிட்டு நான் வருந்துகிறேன். முஸ்லிம்களுடைய நாணயம் தொடர்பில் பலரும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாகவே அந்த ஆறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை அமைந்திருந்தது என்றார்.

நான் வாயடைத்துப் போய் நிர்க்கதியானேன். இந்தச் சூழ்நிலையில் பொதுவாக முஸ்லிம் சமூகமும் குறிப்பாக சிவில் சமூகமும் எழந்து நிற்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் விரும்புகின்ற சராசரி சிங்களவர்களுடன் கைகோர்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக சமூகம் தனது சொந்த விதிக்காகவேனும் எழுந்து நிற்க மறுக்கிறது.