வடக்கின் மீள்குடியேற்றத்துக்காக ஒன்றிணைவோம்

0
20

நாளை மறுநாளொருநாள்
நானுஞ் சுற்றுஞ் சுமந்து என் மண்ணுக்கு வருவேன்
அழுகா என் வேரிலிருந்து
அழகாய் விருட்சித் தெழுதலுக்காய்

அப்போதுகளில்
உங்களின் தம்பியரும் தங்கையரும்
தளைத்தொரு புதுயுகம் செய்து

எம்மை என் செய்வரோ?
ஏற்பரோ மறுப்பரோ
ஏற்று மறுப்பரோ.

(முல்லை முஸ்ரிஃபாவின் “இருத்தலின் அழைப்பு” என்ற கவிதையில் இருந்து)

30 வருடங்களுக்கு முன்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருந்த வேளையிலே, ஆயுதப் போராட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு சூழலிலே, 75,000 – 80,000 வரையிலான முஸ்லிம்கள் தமது வடக்குத் தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வடக்கிலே அன்று இராணுவ ரீதியிலே பலம் மிக்கதாக இருந்த‌, பெரிய அளவிலான நிலப்பரப்பினைத் தன் கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஒரு ஒட்டுமொத்த சமூகத்தினை ஒரு மாகாணத்தில் இருந்து ஒரு சொப்பிங் பையுடனும், 500 ரூபாக் காசுடனும் மாத்திரம் இரண்டு நாட் கால அவகாசத்திலே வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர். யாழ். குடாநாட்டிலே வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு வெறும் 2 மணித்தியாலங்களே வழங்கப்பட்டன‌. இன்று முப்பது வருடங்களின் பின்னர் இந்த வெளியேற்ற நிகழ்வினை நினைவுகொள்ளும் வேளையிலும், இந்தக் கொடிய அநீதியினை ஞாபகமூட்டிப் பார்க்கும் வேளையிலும், அன்றைய தினத்திலே நாம் அனைவரும் ‍‍தமிழர்களும், முஸ்லிம்களும் ‍‍எம்மில் ஒரு பகுதியினை இழந்திருந்தோம் என்பதனையும் நினைத்துப் பார்க்கிறோம். யுத்தம் மிகவும் கொடூரமானதாகவே இருந்தது. எங்கள் இரண்டு சமூகங்களும் யுத்தத்தினால் சிதைவுண்டு போயிருந்தோம். குண்டுத் தாக்குதல்களும், ஷெல் வீச்சுக்களும் இடம்பெற்ற போதும், அரச இராணுவமயமாக்கத்தின் கொடூரத்தின் போதும், ஆயுத முரண்பாடுகளின் பயங்கரத்தின் போதும், இரண்டு சமூகங்களுமே தமது வாழ்விடங்களில் இருந்து மீண்டும் மீண்டும் கிளறி எறியப்பட்டிருந்தோம். 30 வருடங்களின் பின்னர், எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பிலே நாம் இன்னும் பதில்களைத் தேடிக்கொண்டிருப்பதுடன், இன்று எமக்கு இடையிலே தோழமைக்கான தேவையினையும் நாம் உணருகிறோம்.

போர் முடிவுக்கு வந்து பதினொரு வருடங்களாகி இருக்கும் அதேவேளை, இன முரண்பாடும் இந்த முரண்பாடு தோற்றுவித்திருக்கும் பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்பட்டபாடில்லை. பெரும்பான்மைவாத அரசிடம் இருந்து சாத்தியமான தீர்வு ஒன்றினைப் பெறுவதற்கான தேடல் எங்களில் பலரது கரிசனையாகவும் அமைகின்றது. இராணுவமயமாக்கம் நிகழும் ஒரு சூழலிலே, தொடருகின்ற பாதுகாப்பற்ற நிலைமை நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய ஒரு விடயமாக அமைகின்றது. கடந்த காலத்தின் முக்கிய அம்சங்களாக விளங்கிய ஆயுதப் போராட்டமும், வன்முறை சார்ந்த அரசியற் கலாசாரமும் எமது சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் பாதித்திருக்கின்றன. மீள்குடியேற்றமும், புனர்வாழ்வு முயற்சிகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இன்னும் தொடர்கின்றன. நிலங்களினைப் பகிர்தல், அரசு மற்றும் சமூக வலையமைப்பு வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள், மொழி சமத்துவம், அதிகாரங்களைப் பரவலாக்குதல், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், பால்நிலை, வர்க்க மற்றும் சாதிய அடிப்படையிலான பிளவுகள் போன்றன எமது அரசியல் நிலவுருவின் பகுதிகளாக அமைகின்றன. அத்துடன், உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நெருக்கடியானது, பொருளாதார வீழ்ச்சி நிலைக்கும், கூடிய எதேச்சாதிகாரத்திற்கும் எம்மை இட்டுச் செல்லுவதுடன், அச்ச உணர்வுகள் மற்றும் சமூகங்கள் ஒன்றினை ஒன்று நோக்குகின்ற விதத்திலே துருவப்படுத்தப்படும் நிலைமை போன்றவற்றினையும் அது உள்ளூர் மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் உருவாக்கும்.

எங்களுடைய இருப்பு நிலைத்திட, புதிய செயற்பாட்டியக்கப் பாதைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தினை நாம் இன்று எதிர்நோக்குகின்றோம். இந்தச் செயன்முறையின் போது, சமூகங்களுக்கு இடையிலான உரையாடல்களின் வாயிலாக எமது பிரச்சினைகளுக்கான பதில்களை நாம் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. நாங்கள் நீதியானதும், ஜனநாயகத் தன்மை மிக்கதுமான ஒரு அரசியற் தீர்வைக் கோருபவர்களாயின், இந்தச் செயன்முறையிலே எம்மை ஈடுபடுத்திக்கொள்வது அவசியம். இந்தத் திசையிலே பயணிக்கையிலே, 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தினை, சம்பந்தப்பட்ட எல்லா அரசியல் மற்றும் சிவில் தரப்புக்களும் பொது வெளியில் வைத்து கண்டனத்துடன் நிராகரிக்க வேண்டும். இந்த வெளியேற்றம் போன்ற ஒரு கொடிய செயல் இனிமேலும் ஒருபோதும் எம்மத்தியில் இடம்பெறாது என்பதனை நாம் முழுமனத்துடன் சொல்லுவோம். இதுபோன்ற இனச்சுத்திகரிப்புக்களை, ஒரு போதும் பொறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்பதனை நாம் வெளிப்படுத்துவோம்.

மனிதர்கள் என்ற வகையில் வடக்கிலே எமது இருப்பானது, தமிழ், முஸ்லிம் மற்றும் இங்கு வாழும் ஏனைய சமூகத்தவர்கள் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஒருவர் மீது ஒருவர் தங்கியிருப்பதிலேயே நிலைபெற்றிருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கிலே, மீளத்திரும்பலும், மீளக்குடியேறுவதும் ஆரம்பம் தொட்டே சிக்கல் மிக்க விடயங்களாக விளங்குகின்றன.  மீளத்திரும்புவது எந்த ஒரு சமூகத்துக்குமே அவ்வளவு இலகுவான ஒரு செயன்முறையாக அமைந்திருக்கவில்லை. தமிழ்ச் சமூகத்துக்கும் கூட மீளத்திரும்புவது இலகுவான ஒரு விடயமாக அமையவில்லை. சுமைகள் நிரம்பிய மீளக்கட்டுமாணச் செயன்முறைகளிலே, முஸ்லிம் மக்களின் மீளத்திரும்புகையும், மீள்குடியேற்றமும் மிகவும் குறைவான கவனத்தினையே பெற்றிருக்கின்றன. மீளத்திரும்புவது என்பது மிகவும் கடினமான செயன்முறை. ஏனெனில், மீளத்திரும்புவது என்பது வாழ்விடத்தினையும், சமூகத்தினையும் தொடக்கத்தில் இருந்து புதிதாகக் கட்டியமைப்பதனை உள்ளடக்குகிறது. புதிதாகிப் போன விரோதத்தன்மை மிக்க ஒரு சூழலிலே, வாழ்வாதாரத்துக்கான ஒரு பாதையினைக் கண்டுபிடிப்பதனை மீளத்திரும்பல் உள்ளடக்குகின்றது. 30 வருட கால இடப்பெயர்வின் காரணமாக, முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகையில் ஏற்பட்டிருக்கும் இயற்கை அதிகரிப்பு, மீள்குடியேற்றத்தின் போது அந்தச் சமூகம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூடிய அளவிலான நிலங்களைப் பெற வேண்டியதன் அவசியத்தினை வெளிப்படுத்துகிறது. பல இடங்களில் நிலமும், வாழ்விடங்களும் காடாகி விட்டன. வடக்குக்கு மீளத் திரும்புகையிலே, முஸ்லிம் மக்கள் தாம் நீண்டகாலத்துக்கு முன்னர் விட்டுச் சென்ற பல வீடுகளிலும், காணிகளிலும் இடம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்வதனைக் கண்டார்கள். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், போரின் போது தமது சொந்த நிலங்களை இழந்தவர்களாக இருக்கின்றனர். இடம்பெயர்ந்த இரண்டு சமூகங்களும் நிலம் மற்றும் ஏனைய வளங்களுக்காக இன்று ஒருவருடன் ஒருவர் மோதுகின்ற ஒரு சூழ்நிலையிலேயே தம்மைக் காண்கிறார்கள். வள ஒதுக்கீடுகள், தொழில்கள், பாடசாலைகள், மற்றும் ஏனைய விநியோகக் கட்டமைப்புக்களினைப் பெறுவது தொடர்பில் சமூகங்களுக்கு இடையில் நிலவும் போட்டிகள் பழைய காயங்களைத் தோண்டிவிடும் வகையிலான போராட்டங்களாகவும் மாறியிருக்கின்றன. இவ்வாறு மக்கள் மீள்திரும்புவதற்கும், மீளக்குடியேறுவதற்குமான வரலாற்றுப் பின்னணி இளைய தலைமுறையினரின் மத்தியில் இல்லாதிருப்பது நிலைமையினை மேலும் மோசமாக்குகின்றது. சில இடங்களிலே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையும், வீதி அமைப்பு மற்றும் அபிவிருத்திச் செயன்முறைகளுக்காக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றமையும், இந்தப் பிரச்சினையினை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இதன் காரணமாக நிலங்களை மீள உரித்துக் கோருவதுடன் தொடர்பான அரசியலானது மேலும் சிக்கல் மிக்கதாகி இருக்கின்றது. இந்த நிலைமைகள் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் மோசமாக்கி இருக்கின்றன. ஆனால், இவை யாவும் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் அல்ல. எம்மிடம் சரியான அரசியற் பற்றுறுதி இருக்குமாயின், எம்மால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

இந்த உணர்வுடன் நாம் பின்வரும் விண்ணப்பங்களை முன்வைக்கின்றோம்:

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியற் தலைமைத்துவங்கள் இந்த இரண்டு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயற்படாதவிடத்து, அவற்றினால் நிலைத்திருக்க முடியாது என்பதனை மனதிலே நிறுத்தி, இனத்துவ எல்லைகளைக் கடந்து ஒருவருடன் ஒருவர் தொடர்ந்து உரையாட வேண்டும். அத்துடன், தமது செயற்பாடுகளிலே அனைவரினையும் உள்வாங்கும் வகையிலே இத்தலைவர்கள் செயற்பட வேண்டும். எல்லா விதமான இராணுவமயமாக்கற் செயற்பாடுகளுக்கும், எதேச்சாதிகாரச் செயற்பாடுகளுக்கும் எதிராக எமது அரசியற் தலைமைத்துவங்கள், எல்லாச் சமூகங்களையும் உள்வாங்கி, தொடர்ச்சியாகச் செயற்பட வேண்டும்.

வடக்கின் நிருவாகத் துறையில் பணியாற்றுவோர், இடம்பெயர்ந்தோரினதும் மீளத்திரும்புவோரினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட வேண்டும். அத்துடன், மீளத்திரும்பும் செயன்முறையினை மேலும் கடினமாக்கும் விடயங்களுக்கு அவர்கள் தீர்வுகாண வேண்டும். அதன் மூலமாக மீளத் திரும்பும் செயன்முறையினை இலகுபடுத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களும், சிவில் அமைப்புக்களும் கருத்துப் பகிர்வு, உரையாடல், மாற்றுக் கருத்துக்கள் போன்ற விடயங்களைத் தமது ஜனநாயகச் செயன்முறைகளின் பிரதான அம்சங்களாக மாற்றும் வகையில் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சமய நிறுவனங்களின் தலைவர்கள் சமூகங்களுக்கு இடையிலே உறவுப் பாலங்களைக் கட்டியமைக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தினையும், அந்த நிகழ்வினது வழித் தொடர்ச்சிகளையும் நினைவுகூருகையிலே, வட பகுதி மக்களாகிய நாம் கலாசார, இனத்துவ, சமய வேறுபாடுகளினை ஊடறுத்து, எம்மத்தியிலே தோழமை உறவு மிக்க பாதைகளை உருவாக்குவோம் என உறுதி பூணுகின்றோம். அத்துடன், எங்களுடைய சமூகங்களின் மத்தியிலும், எமது சமூகங்களை ஊடறுத்தும் இருக்குகின்ற வர்க்க, சாதிய, பால்நிலை மற்றும் ஏனைய வடிவங்களில் தொழிற்படும் புறமொதுக்கும் செயன்முறைகள் குறித்தும் நாம் கரிசனை மிக்கவர்களாக இருப்போம். அந்த வகையில் வடக்கினைச் சேர்ந்த நாம் சமூக ஒருங்கிணைப்பு, ஜனநாயகச் செயற்பாடுகள், அரசியல் நீதி போன்ற இலக்குகளின் மீது கட்டியமைக்கப்பட்ட ஒரு பொதுவான பார்வையினை வளர்த்தெடுக்கத் திடசங்கற்பம் பூணுவோம்.

கையொப்பமிடுவோர்:

 1. நைனா முஹம்மத் அப்துல்லாஹ், யாழ் – கிளிநொச்சி முஸ்லிம் கவுன்சில்
 2. சமூக மாற்றத்துக்கான இயக்கம் (அங்கத்தவர்கள்)
 3. மொஹமட் அமீன் – ரோசா டெக்ஸ்டைல்ஸ்
 4. அப்துல் கபூர் அனீஸ் – Research and Action Forum (RAFF
 5. சங்கரப்பிள்ளை அறிவழகன்
 6. பிஸ்லியா பூட்டோ – சமூக செயற்பாட்டாளர்
 7. நஜீஹா புகாரி – யாழ் பெண்கள் அபிவிருத்தி நிலையம்
 8. ஜான்சி கபூர் – யாஃ கதீஜா மகா வித்தியாலயம்
 9. ரங்கன் தேவராஜன் – சட்டத்தரணி
 10. பர்ஸானா ஹனிபா – கொழும்பு பல்கலைக்கழகம்
 11. எலிஜா ஹூல்
 12. ராஜன் ஹூல்
 1. ஹஸனா சேகு இஸ்ஸதீன்
 2. அருட்தந்தை பிஜே ஜெபரத்னம், பிஷப் ஹௌஸ், யாழ்ப்பாணம்
 3. அகிலன் கதிர்காமர்
 4. ஜுவைரியா மொஹிடீன்
 5. பேராசிரியர் நூமான்
 6. ஷெரீன் ஸரூர்

உட்பட 94 பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்