இலங்கையில் கல்வித் துறை எதிர்நோக்கும் நெருக்கடிகள்

135
  • கலாநிதி றவூப் ஸெய்ன்

கல்வி எப்போதும் இந்நாட்டில் ஒரு பொது நலனாகக் கருதப்படுவதோடு,  கல்வியைப் பெறுவதற்கான அணுகல் தொடர்ந்தும் பொதுக் கொள்கையின் முக்கியத் தூண்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. பல தசாப்தங்களாக சமூக மற்றும் அரச முதலீடுகள் மீது கட்டியெழுப்பப்பட்ட எமது கல்வித் திட்டமும் இலவச மற்றும் நியாயமான கல்வியை வழங்குவதில் உள்ள அர்ப்பணிப்பும் இலங்கையை கல்வி, சுகாதாரம், வாழ்க்கை எதிர்பார்ப்பு, பெண்களுக்கான சமவாய்ப்புக்கள் போன்ற சமூகக் குறியீடுகளில் சுவாரஸ்யமான இடத்தினைப் பெற உதவியுள்ளது.

இலங்கையில் மனித வளர்ச்சியின் உயரிய தர வரிசைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியதாக கல்விக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை அங்கீகரிக்கப்படுகின்றது. இந்த சாதனைகளை நிலைக்கச் செய்து கல்வித் துறையினை மேலும் விருத்தி நிலைக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவது எமது தேசத்தின் பொறுப்பாகும். எனினும், அதற்கான கொள்கைத் திட்டமிடல் மற்றும் செயலாக்கமானது ஏனைய பல்வேறு கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், தனியார்த் துறை மற்றும் அனைத்துக் குடிமக்களினதும் ஆக்கபூர்வமான செயற்பாட்டினையும் அக்கறையையும் வேண்டி நிற்கின்றது.

சமீபத்தில் ஏற்பட்ட Z புள்ளிப் பிரச்சினை முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்தல், தகுதி வாய்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தட்டுப்பாடு, கல்வித் துறை நியமனங்களின் அரசியல் மயமாக்கம் போன்றவை குறித்து கடந்த காலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு (FUTA) மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

அக்கறை கொண்ட குடிமக்களான வெள்ளி போரம் சமீபத்தில் இலங்கையின் கல்வி நிலைமை குறித்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சமகால இலங்கையின் கல்வி தொடர்பான சில முக்கிய பிரச்சினைகளை இனங்காட்டியுள்ளது.

  1. ஆலோசனை, கொள்கைத் திட்டமிடலுக்கான முன்னுரிமையில் நிலவும் குறைபாடு.

சமீபகாலமாக தேசிய கல்வி ஆணைக்குழு போன்ற சட்ட ரீதியான கொள்கை ஆலோசனை அமைப்புக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பல்கலைக்கழக சட்டத்தினால் இணைக்கப்பட்ட கல்வி சுயாட்சி என்ற கருத்தை நிலைநிறுத்த தனது பொறுப்பை அங்கீகரித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இப்போது பல்கலைக்கழகக் கல்வி மேலாண்மை மற்றும் வளங்களை நிருவகித்தல் மீது அமைச்சர் மேற்கொள்ளும் தற்காலிக முடிவுகளை செயல்படுத்துவதற்கான ஒரு களமாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் சுயாதீனமான நிறுவனமாக உயர் கல்வியின் சட்ட ரீதியான கட்டுப்பாட்டாளராக இருந்த UGC இப்போது கிட்டத்தட்ட உயர்கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அரசாங்கத் திணைக்களமொன்றாக மாற்றப்பட்டுள்ளது. முக்கியமான சட்டவாக்கங்கள், சட்ட சீர்திருத்தம், மற்றும் கொள்கை சூத்திரத்திற்குத் தேவையான சிந்தனை மற்றும் பிரதிபலிப்பு இல்லாமல் இரகசியமாக வரையப்படுவது போல் தெரிகிறது. இதற்கான எடுத்துக்காட்டாக பல்கலைக்கழகங்களின் சட்ட வரைபு காணப்படுகின்றது.

கல்வித் துறையில் நிருவாக முடிவும் தகுதி மிக்க நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். அதேவேளை, அவை கொள்கைத் திட்டமிடலாலும் செயலாக்கத்தாலும் ஈடுசெய்யப்படுதல் மிக முக்கியமானதாகும். அத்தகைய நிபுணர்கள் சுயாதீனமாக செயல்பட்டு கல்வித் துறையில் முக்கியமான பங்களிப்பை வழங்கும் பங்குதாரர்களாக விளங்க வேண்டும்.

NEC மற்றும் UGC போன்றன சுயாதீன அமைப்புகளாக செயல்பட்டு, அரசாங்கம் கல்விக் கொள்கையை உருவாக்கும்போது மதிக்க வேண்டிய தொழில்நுட்பக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

  1. முக்கிய பகுதிகளுக்கு அரசியல் நியமனங்கள்

முக்கிய நியமனங்களை மேற்கொள்ளும்போது அரசியல் நோக்குடன் செயல்படுவது உயர் கல்வி அமைச்சின் போக்கினை எடுத்துக் காட்டுகின்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி மற்றும் பல்கலைக்கழக சபைப் பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழகச் சட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியான அரசியல் குறுக்கீடுகள் இருந்து வந்துள்ளன. இதற்கு அறிக்கைகள் சாட்சியாக உள்ளன.

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள கல்வியியலாளர்ல்கள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் உள்ள காரணத்தினால் விண்ணப்பிக்க மறுத்த பல தருணங்களை வெள்ளி போரம் அறியக் கிடைக்கின்றது. இத்தகைய பதவிகளுக்கு இப்போது வெளிப்படையான அரசியல் ஆதரவை நாடும் நிலை காணப்படுகின்றது.

உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அரசியல் கூட்டணியினில் உள்ளவர் உரிய தேர்ச்சியும் நிபுணத்துவமும் இல்லாமல் தொடர்ந்து பல்கலைக்கழக சபைகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது முக்கிய தகுதியாக ஆட்சி அல்லது உயர் கல்வி அமைச்சர் மீதுள்ள அரசியல் விசுவாசம் காணப்படுகின்றது. அரசியல் மயமாக்கத்தினால் கல்வி துறையில் பல்வேறு பலவீனங்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியே FUTA ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

பல்கலைக்கழகங்களின் அக்கறைகளைப் பாதுகாக்க கொள்கை வரைபவர்கள், அரசியல் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய சில துணை வேந்தர்கள் அரசியல் அமைப்புக்கள் விரும்பிய வண்ணம் செயற்படும் ஆர்வத்துடன் கல்வி சார் சமூகத்தின் சட்டரீதியான கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர். இதற்கு துணை வேந்தர்கள் அரசியல் மேடைகளில் ஜனாதிபதி மற்றும் ஏனைய ஆளும் கட்சி வேட்பாளர்களுடன் தேர்தல் காலங்களில் தோன்றியது சாட்சி பகர்கிறது.

  1. கல்விக்கான வளங்கள்

இலங்கை புத்திசாலித்தனமாக அனைத்து மட்டங்களிலும் முறையான கல்வி கூட்டாகச் செலுத்தப்பட வேண்டும் என்று 1943 இல் தேசிய சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் தீர்மானம் மேற்கொண்டது. இந்த சமூக ஒப்பந்தம் நீடித்த ஆயுத மோதல், பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகமயமாக்கலின் அழுத்தங்கள் காரணமாக மதிப்பிழந்து போயுள்ளது. தெற்காசியாவில் கல்விக்காக மிகக் குறைவான நிதியை ஒதுக்கும் நாடாக இலங்கை உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தில் 1.9 வீதம் மட்டுமு கல்வித் துறைக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்வது ஆச்சரியமாக இருக்கின்றது.

கிராமியப் பாடசாலைகள் சமூகத்தவரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மூடப்பட்டு வருகின்றன. வளப் பற்றாக்குறைக்கு தீர்வொன்றைக் காணாமல் அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நிதியை மட்டுப்படுத்த முனைகின்றது.

தனியார்த் துறை கல்வியின் வளர்ச்சி இயந்திரமாக மாறி, தனியார் நிறுவனங்கள் ஆசியாவின் அறிவு மையமாக வருவதற்கான வழியில் இலங்கையினை வைக்கும் என்ற கருத்தொன்றும் உள்ளது. இலங்கையில் இன்று முறைப்படுத்தப்படாத தனியார் நிறுவனங்கள் தோன்றி கல்வித் தரம் மற்றும் நேர்மையான கல்வி போன்றவற்றைக் கருத்திற் கொள்ளாத இலாபத்தினை குறிக்கோளாகக் கொண்ட தனியார் கல்விக் கூடங்கள் தோன்றியுள்ளன.

அரச நிறுவனங்கள் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் சீரற்ற வசதிகளை வளப் பற்றாக்குறை காரணமாக வழங்குவது உண்மையே. எனினும், FUTAவின் தொழிற்சங்க நடவடிக்கைகள் போதிய வளங்களை பகிர்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது,

  1. இராணுவயமாக்கல்

இராணுவம் தனது சொந்த வடிவத்தில் பயிற்சியைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதை வெள்ளி போரம் மதிக்கின்றபோதும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் உறுதியாய் உள்ள ஒரு நாட்டில் இராணுவ நடவடிக்கைகளை பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் உட்புகுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது கல்வி முறை அதிகாரத்தைக் கேள்வி கேட்காது சுயாதீன சிந்தனையும் செயற்பாடும் கலகத்தை உருவாக்கும் என்ற எண்ணத்தைக் கொண்ட கட்டுப்பாடில்லாத மனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தக் கூடாது.

யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் நாம் நமது மக்களின் உரிமைகளையும் மரியாதையையும் ஆதரிக்கும் கல்வி முறை மூலம் ஜனநாயக சுதந்திரத்தையும் மதிப்பையும் வலுப்படுத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது.