உளஆரோக்கியம்: மனச் சிதைவு நோய் – அறிகுறிகளும் சிகிச்சையும்

122

மனச் சிதைவு அல்லது உளப் பிளவு (Shizochrenia) ஒரு விசித்திரமான உள மாறாட்டமாகும். மனிதனின் உளத்தைப் பாதிக்கும் மாறாட்டங்களில் மிகவும் சீரயஸானது இது. உருவெளித் தோற்றத்திலோ பிறழ் நம்பிக்கையிலோ இருப்பது போல் மெய்மையுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட ஒரு நிலையே இது. இதனால் சிந்தனையிலும் புலன் அறிவிலும் குறிப்பிட்டத்தக்க வினோத நடத்தைகள் எழுகின்றன.

உலகெங்கிலும் வாழும் பல மில்லியன் கணக்கானோர் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமையம் கூறுகின்றது. அந்த அமைப்பின் அறிக்கைப்படி உலக சனத்தொகையில் 1.3 வீதமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிளமைப் பருவத்தின்போது அல்லது அதன் முடிவில் தோற்றம் கொள்ளும் இந்நோய், சிலருக்குப் படிபடியாக வளர்ந்து இறுதியில் சீரியஸான கட்டத்தை அடைகின்றது. பல ஆண்டுகளாக அவர்கள் மற்றவர்களில் இருந்து விலகியிருப்பவர்களாகவும் உலகத்தோடு ஒத்துப் போக முடியாதவர்களாகவும் இருப்பர்.

தொடக்கத்தில் மனச் சிதைவு நோயை வரையறை செய்வதில் குறிப்பாக அதன் நோய்க் குறிகளை அடையாளப்படுத்துவதில் உள மருத்துவர்களிடையே பாரிய கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. தற்காலத்தில் நோய்க் குறிகளை இனங்காட்டுவதில் உள மருத்துவர்களுக்கிடையில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது,

பல்வேறுபட்ட நோய்க் குறிகளைக் கொண்ட உளச் சிதைவின் அடையாளங்கள் பல. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்கள் உணர்வுகள் ஆகியவற்றில் ஒரு இருமைத் தன்மை வெளிப்படுகின்றது. ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத தன்மையைக் கொண்டே இந்நோய் பெயரிடப்பட்டது. மனச் சிதைவு நோயாளர்கள் அனைவரும் எப்போதும் ஒரே வகையான குணங் குறிகளைக் காட்டுவதில்லை. தனிநபர்களுக்கிடையில் பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். எவ்வாறாயினும், ஒரு தொகுதி நோக் குறிகளில் குறிப்பிட்டளவுஒற்றுமைகள் காணப்படுகின்றன.

தவறான புலக்காட்சி, மாயப் புலன்கள் இவர்களிடம் காணப்படும் இரு முக்கிய நோய்க் குறிகளாகும். தன்னையோ தம்மைச் சூழவுலுள்ள உலகின் நடைமுறைகளையோ சரியாக உள்வாங்குவதில் அவர்களுக்குக் கஷ்டங்கள் இருக்கலாம். தொடர்பற்ற அனுபவங்களுக்கு தூண்டலை வெளிப்படுத்துவது இவர்களது முக்கிய இயல்புகளில் ஒன்றாகும். இதனால் இவர்கள் யதார்த்தத்திலிருந்து முற்றிலும் விலகியே இருப்பர்.

ஏராளமான புலனுணர்வுத் தகவல்கள் ஒன்றாக வந்து தம்மை நெருக்கடிக்கு உட்படுத்துவதாக இவர்கள் கூறக் கூடும். தொலைக்காட்சியைப் பார்த்த வண்ணம் அதில் கூறப்படுவதை தன்னால் கேட்க முடியவில்ல என்று இவர்கள் கூறக் கூடும். சிந்தனையில் ஒழுங்கீனம் காணப்படும். தர்க்க ரீதியாக நிரூபிக்கும் ஆற்றலை இத்தகையோர் இழந்து விடுவர். ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கு வேகமாகத் தாவும் அவர்களது மனம் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கும்.

மகிழ்ச்சியை உணர முடியாத மனச்சோர்வு நிலையில் இருக்கும் இந்நோயாளர்கள், தம்மைச் சூழ என்ன நடக்கின்றது என்பதை முற்றிலும் உணராதவர்களாக இருப்பர். இதற்கு மேலதிகமாக இவர்களிடம் பதகளிப்புக் காணப்படும்.

மாயப் புலன்கள், போலி நம்பிக்கைகள் இவர்களிடம் காணப்படும் மற்றொரு பிரதான அறிகுறியாகும். எந்த ஆதாரமும் இல்லாத பலனுணர்வுகள் பற்றி இவர்கள் குறிப்பிடுவர். பெரும்பாலும் அந்த உணர்வு தூண்டப்பட்டதாகவும் விசித்திரமானதாகவும் இருக்கும்.

ஒரு பொருள் கண்பார்வைக்குச் சரியானதாகவே இருக்கும். ஆனால், மனச் சிதைவு நோயாளர்களின் மாயம் நிறைந்த மனதில் அது தவறானதும் ஐயப்பாடானதுமான காட்சியைத் தரும். சற்று முன்னர் ஏதோ ஒரு பொருளை தான் கண்டதாகவோ அல்லது ஒரு நபர் முன்னே வந்து சென்றதாகவோ கூறுவர். இதனை கட்புலமாயம் அல்லது பார்வை மாயம் (Visual Hallucination) என உளவியலாளர்கள் அழைப்பர்.

ஒரு பொருள் ஒரு இடத்தில் இல்லாத நிலையில் அது இவ்விடத்தில் இருந்ததாக வாதிடுவர். சீனியை உண்டால் கசக்கும் என்றும் பாவற்காய் இனிக்கும் என்றும் கூறுவர். அல்லது எந்தவித சுவையையும் சகிக்காமல் தத்தளிப்பர். இதனை சுவை மாயம் Tasty Hallucination என்பர். தொடுகை உணர்வை ஸ்பரிசிக்க முடியாத நிலை இவர்களுக்கு இருக்கும். எறும்பு கடிக்கும். ஆனால் அதனை உணர முடியாமல் இருப்பர். காலில் ஆணி குத்தியிருக்கும். அல்லது கையில் நெருப்புச் சுட்டிருக்கும். ஆனால் அதை சட்டைசெய்ய மாட்டார்கள். பேசினால் பேச மாட்டார்கள். கேட்டால் சொல்ல மாட்டார்கள். எதைக் கேட்டாலும் எதுவுமே கேட்காத மாதிரி தன்னை மறந்த நிலையில் பேசா மடந்தையாக நடந்துகொள்வார்கள்.

இப்படியான ஐம்புல மாயங்களினால் பாதிக்கப்பட்ட இந்நோயாளர்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். இவர்கள் எப்போதுமே ஆபத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள். எந்தவிதமான உணர்வுமே அற்ற நிலையானது மிகவும் வருந்தத் தக்க உபாதையாகும். இத்தகையோர் மீது மிகுந்த அவதானமும் கரிசனையும் அவசியம். (தொடரும்)