அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ட்ரம்பின் சாதனை என்ன?

134

பிபிசி ஆய்வாளர் ரெபேகா சீல்ஸ்

கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் அவரது பதவிக் காலத்தில் சாதித்தது என்ன? பொதுவாக அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் உலகின் ஜனாதிபதியாகவே கருதப்படுகிறார். உலக நாடுகளில் வாழும் மக்களின் பொருளாதார அரசியலை மாற்றக் கூடிய தீர்மானங்களை அமெரிக்க ஜனாதிபதிகள் எடுக்கின்றனர். அந்த வகையில் ட்ரம்பின் உலக அரசியல் மீதான தாக்கம் என்ன? இது குறித்து பெவ் ரிசேர்ச் சென்டர் ஆய்வொன்றை நடத்தியுள்ளது.

அமெரிக்கா குறித்த உலகக் கண்ணோட்டம்

13 நாடுகளில் PRC நடத்திய ஆய்வில், ட்ரம்பின் காலத்தில் அமெரிக்கா குறித்த உலக நாடுகளின் கண்ணோட்ட் மோசமான நிலைக்குச் சென்றுள்ண்மை கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் அவரைப் பற்றிய பிரதிமை மங்கியுள்ளது. காட்டாக, கொரோனாவைக் கையாள்வதில் உலக வல்லரசு என்ற வகையில் அமெரிக்கா முன்னுதாரணமாகத் திகழவில்லை.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 வீதமானவர்கள் ட்ரம்ப் தனது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலையும் மரணங்களையும் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் குறித்து ட்ரம்புக்கு தெளிவான ஒரு கருத்து நிலை இருந்ததில்லை. அதை ஒரு “முக்கியமான விவகாரம் என்றே கூறிவருகிறார். இன்னொரு புறம் உலகளவிலான சீரற்ற காலநிலை மாற்றங்களை மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ட்ரம்ப் எந்த அக்கறையையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் பதவியேற்று ஆறு மாதங்களில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வொஷிங்டன் விலகுவதாக அறிவித்தார். அந்த முடிவு விஞ்ஞானிகளைத் திகைக்க வைத்தது. உலகின் வெப்பநிலை உயர்வை 2 டிகிரியினால் கட்டுப்படுத்த 200 நாடுகள் ஒப்புக்கொண்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் வெளியேறியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீனாவுக்கு அடுத்ததாக உலகிலேயே அதிகளவு பச்சைவீட்டு விளையத்தை வெளியேற்றும் நாடாக அமெரிக்கா விளங்கும் நிலையில், ட்ரம்ப் மேற்கொண்ட முடிவு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவு எதிர்வரும் 4 ஆம் திகதி -அதாவது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த நாள்- நடைமுறைக்கு வருகிறது.

குடிவரவுக் கொள்கை

ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரு வாரத்தில் அவர் பிறப்பித்த மற்றொரு உத்தரவு உலகளவிலான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. தற்போது இந்தக் கட்டுப்பாடு 13 நாடுகள் மீது ஆமுலில் உள்ளது.

இதேசமயம், மெக்சிகோவில் பிறந்த அமெரிக்கவாசிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கல்வி மற்றும் தொழிலுக்காக புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும் நிரந்தர வசிப்புரிமை பெறுவதற்கான வாய்ப்பு ட்ரம்பின் ஆட்சியில் குறைந்தது. அவரது குடியேற்றக் கொள்கையின் முக்கிய அடையாளம் மெக்சிகோவின் எல்லையில் கட்டுவதாக அவர் வாக்குறுதியளித்த பெரிய அலங்காரச் சுவராகத்தான் இருக்க முடியும்.

597 கி.மீ. தூரத்திற்கு அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இந்தச் சுவரை நிர்மாணிக்க பல கோடி டொலர்களை ட்ரம்ப் செலவுசெய்துள்ளார். ஆனால், இந்தத் திட்டம் எந்தப் பயனையும் கொடுக்கவில்லை. வறுமை, உள்நாட்டுப் போர் போன்ற காரணங்களால் அமெரிக்காவுக்கு அகதிகளாக வரும் தென்னமெரிக்க மக்களை ட்ரம்ப் நிருவாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. 2021 ஆம் ஆண்டில் வெறும் 15,000 பேருக்கு மட்டுமே அடைக்கலம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ட்ரம்ப் அமெரிக்காவை ஒரு மூடுண்ட தேசமாக மாற்றுகிறார் என்ற விமர்சனத்தை இது எழுப்பியுள்ளது.

போலிச் செய்தியின் எழுச்சி

என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் அதிகம் பயன்படுத்திய வார்த்தை ‘போலி’ என்பதுதான் என்று 2017 ஆம் ஆண்டு நேர்காணலொன்றில் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், போலிச் செய்தி என்ற இச்சொல்லாடலை ட்ரம்ப் ஏற்படுத்தவில்லை. அவர் அதை பிரபல்யப்படுத்தினார். 2016 ஆண்டு டிசம்பர் முதல் இதுவரையான காலத்தில் பேட்டிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் என இச்சொற்றொடரை அவர் சுமார் 2000 முறை பயன்படுத்தியிருப்பார் என்று ஓர் இணையத்தளம் கூறுகின்றது. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சவூதி அறேபியா, பஹ்ரைன் போன்ற நாட்டின் தலைவர்களும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர்.

நம்பகமான செய்திகளுக்கு எதிராகவே போலி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதன் மூலம் ட்ரம்ப் நேர்மையற்றவராகவும் பொய்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டார். மனித உரிமை செயற்பாட்டளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வழக்குகளுக்கு நியாயம் கற்பிப்பதற்கு சில ஆட்சியாளர்கள் ‘போலிச் செய்தியை பயன்படுத்துவதற்கு ட்ரம்ப் காரணமாக இருந்தார்.

அமெரிக்காவும் மத்திய கிழக்கு நாடுகளும்

2019 பெப்ரவரியில் ட்ரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தார். அத்தோடு, “சிறந்த நாடுகள் முடிவற்ற போரை எதிர்த்துப் போராடுவதில்லை” என்றும் கூறினார். ஆனால், தரவுகள் அவரது கூற்றுக்குப் புறம்பாகவுள்ளது. எந்த நாட்டிலிருந்தும் அமெரிக்கத் துருப்புக்கள் முழுமையாகத் திரும்பப் பெறவில்லை. சிரியாவில் எண்ணெய்க் கிணறுகளைப் பாதுகாப்பதற்கு 500 துருப்புக்களை ட்ரம்ப் அனுப்பி வைத்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியாவில் அமெரிக்க துருப்புக்கள் குறைக்கப்பட்டதே ஒழிய, முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.

2018 இல் டெல்அவிவிலிருந்து ஜெரூசலத்திற்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றியதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேலின் அங்கமாக அங்கீகரித்தார். இதன் மூலம் முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளின் ஆட்சேபனைகளை மீறிச் செயற்பட்டார்.

கடந்த மாதம் ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் இஸ்ரேலுடன் உறவைப் புதுப்பிக்கும் முயற்சியை ‘மத்திய கிழக்கின் புதிய விடியல்’ என்று ட்ரம்ப் பாராட்டினார். பலஸ்தீனர்களின் கோபத்தைக் கிளறிய இந்தத் திட்டத்திற்குப் பின்னால் அமெரிக்காவில் தலையீடு இருந்தது.

வர்த்தக ஒப்பந்தங்கள்

தனது ஆட்சிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை பழித்து வருதை ட்ரம்ப் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பதவியேற்ற முதல் நாளே ஒபாமாவினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 நாடுகளுக்கிடையிலான ட்ரான்ஸ் பசுபிக் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் வெளியேறினார். மேலும் கனடா மற்றும் மெக்சிகோவுடனான அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தையும் ட்ரம்ப் கேள்விக்குள்ளாக்கினார். இவை அமெரிக்காவுக்குச் சாதகமாக எதையும் செய்யவில்லை.

சீனாவுடன் வர்த்தகப் போர்

சீனாவின் இறக்குமதிப் பொருள்கள் மீது நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் வரிகளை விதித்து வர்த்தகப் போரைத் தொடங்கினார். இது அமெரிக்க விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப மற்றும் வாகனத் தொழில்களுக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

ஈரானுடனான போர்ச் சூழல்

எங்களது இராணுவத் தளத்தில் வீரர்கள் இறந்தால் அல்லது அவர்களுக்குச் சேதம் ஏற்பட்டால் அதற்கு ஈரான்தான் பொறுப்பு. இது எச்சரிக்கை அல்ல அச்சுறுத்தல் என்று 2019 ஜனவரி 01 இல் ட்ரம்ப் டுவிட் செய்தார். அடுத்த நாள் ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

இவ்வாறு ஈரானைப் பகைத்து பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ட்ரம்பின் பதவிக் காலம் சர்ச்சைக்குரியதாகவும் உணர்ச்சிகரமானதாகவும் பகை முரண்பாட்டை வளர்ப்பதாகவுமே இருந்தது. ஆனால், அமெரிக்க மக்கள் நவம்பர் தேர்தலில் மீண்டும் இதே ட்ரம்பை தெரிவுசெய்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.