பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை அவமதித்தல் – ஓர் இலங்கைப் பார்வை

0
61
  • மாஸ் எல் யூசுப்

2020 ஒக்டோபர் 16 இல் சாமுவேல் பட்டியின் தலை துண்டிக்கப்பட்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான கொன்ப்லான்ஸ் செய்ன்ட் ஹொனரைனில் ஒரு பிரான்சிய மத்தியதர பாடசாலையொன்றின் ஆசிரியராகவிருந்தார். ஒக்டோபர் 05 ஆம் திகதி அவர் நடத்திய பேச்சுச் சுதந்திரம் தொடர்பான பாடத்தின்போது முஹம்மது நபியின் சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ கேலிச்சித்திரங்களை ஆட்சேபனைகளையும் மீறி அவர் வகுப்பில் காட்டியிருந்தார். 2015 இல் நையாண்டித் தாக்குதல் நடத்தும் சஞ்சிகையான சார்லி ஹெப்டோவின் அலுவலகங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்துக்கும் மதம் மற்றும் மத உணர்வுகளுக்கும் இடையிலான இந்தப் போர் பிரான்ஸில் உச்சத்தில் இருந்தது.

கொலை என்பது தனிநபர் செயற்பாடு என்பது அனைவரும் அறிந்ததே. மனதார யாருமே இந்தக் குற்றத்தைத் தட்டிக் கொடுக்கப் போவதில்லை. பல தடவைகள் கூறப்பட்டது போல ஒரு மதமாக இஸ்லாம் அத்தகைய செயல்களை ஏற்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். எனவே இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் இயல்பாகவே இத்தகைய கொடூரமான செயலை மன்னிக்க மாட்டார்கள்.

பின்புறத்தைத் துடைத்தல்

பிரெஞ்சுக்காரர்களின் உணர்வுகளுடன் நேரடியாகத் தொடர்புபடுத்திப் பார்த்தால் இதே கருத்துச் சுதந்திரம் பொருத்தமானதாக அமையாது. 2010 ஏப்ரலில் பிரெஞ்சுக் கொடியினால் ஒருவர் தனது பின்புறத்தைத் துடைப்பதாக வெளிவந்த புகைப்படத்தின் மீது ஏன் அவ்வளவு பெரும் விமர்சனங்களும் சீற்றமும் எதிர்ப்பும் எழ வேண்டும் ? “இந்த அட்டூழியத்தைச் செய்த நபர் தண்டிக்கப்பட வேண்டும், இதை வெளியிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும், ஏற்றுக் கொள்ள முடியாத இந்தச் செயலுக்காக குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் ”என்றார் நீதியமைச்சர் மைக்கல் அல்லியட் மேரி. “இந்தப் படம் அவமதிப்பதாக உள்ளது. அதனை அகற்ற வேண்டும். பிரெஞ்சுக் கொடியை “அவமதிப்பது“ ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் 7000 பவுண்களும் தண்டனையாக விதிக்கக் கூடிய குற்றமாகும்” என்றார் ஆளும் யூஎம்பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரிக் சியோட்டி.

கொஞ்சம் பொறுங்கள், “கருத்துச் சுதந்திரம்” என்று சொன்னார்களே, அதற்கு என்ன நடந்தது ? கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை, தேசியக் கொடி விவகாரம் தொடர்பில் அருந்ததிராய் என்ன சொல்கிறார் ? “வண்ணத் துணிகளால் ஆனவைகளே கொடிகள். முதலில் அரசாங்கம் மக்களின் மூளையை சுருட்டுவதற்கு அதனைப் பயன்படுத்துகின்றது. பின்னர் இறந்தவர்களை அடக்கும் போது போர்வையாகப் பயன்படுத்துகிறது” என்கிறார் அவர். குறித்த இந்தக் கண்டனங்கள் பிரெஞ்ச் அதிகாரிகளுக்கு எப்படிப் பொருந்தினாலும் தாராளவாதிகள் இதனைக் கருத்துச் சுதந்திரம் என்றே அழைப்பார்கள்.

இங்குள்ள சுவாரசியம் என்னவென்றால், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சாமுவேல் பட்டியின் பிணத்தை வைத்து இலாபமீட்ட முயற்சிப்பது தான். வளர்ந்த நாடொன்றின் ஜனாதிபதியாக அவர் இவ்வளவு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தூரமாகியிருந்த தனது ஆதரவாளர்களின் ஆதரவை ஈர்த்துக் கொள்வதற்கு மட்டுமன்றி, வலதுசாரிகளின் அலையை அள்ளிக் கொள்வதற்கும் அவர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். புள்ளிவிபரங்கள் இதற்கான காரணத்தைச் சொல்லுகின்றன. ரிசேர்ச் டிபார்ட்மென்ட் ஒப் ஸ்டடிஸ்டா 2020 ஜூனில் நடத்திய  கருத்துக் கணிப்பொன்றில் வாக்களித்தவர்களில் 60 வீதமான பிரெஞ்சு மக்கள் ஒரு ஜனாதிபதியாக மக்ரோனின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கவில்லை என்று சொல்கிறது. இந்த நிலையில் ஆசிரியர் மீதான தாக்குதலும், பக்கச்சார்பான பிரெஞ்சு ஊடகங்களால் தூண்டப்பட்ட சலசலப்பும் வீழ்ச்சியடைந்த அவரது பெறுமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு தக்க தருணத்தில் கை கொடுத்திருக்கிறது.

இந்த அரசியல் பின்னணியில் மக்ரோன் தனது நோக்கங்களை தெளிவான வார்த்தைகளால் அம்பலப்படுத்தினார். “சுதந்திரத்தை” முதன்மையாகக் காட்டுவதற்கு அவர் அதனைப் பயன்படுத்திக் கொண்டார். ஐரோப்பிய நாடொன்றின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற பெறுமானங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காகவே பட்டி கொல்லப்பட்டார் என மக்ரோன் உணர்ச்சி பொங்கக் கூறினார். பிளவுபட்ட அவரது நாவின் அடுத்த பகுதியால் அவர் அனுபவிக்கின்ற அதே சுதந்திரத்தை அவர் மூடிமறைக்கப் பார்க்கிறார்.

எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத மொத்தமான ஜனநாயக விரோத ஒடுக்குமுறையை மக்ரோன் தொடக்கி வைத்தார். சிலவேளை இது 2017 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட தனது வலதுசாரி எதிராளியான மரைன் லா பெனை ஈர்ப்பதற்காக இருக்கலாம். இஸ்லாமியத்துக்கு எதிராக கடுமையாகச் செயற்படவில்லை என அவர்  மக்ரோனைச் சாடியிருந்தார். இது எதனை உணர்த்துகிறது என்றால், முழு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபரின் செயற்பாடுகளில் புத்திசாலித்தனத்தை விட நம்பிக்கையீனத்தின் வாடையே வெளிப்படுகிறது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்ரோனால் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனோடு நிறுத்திக் கொள்ளாமல் இஸ்லாம் ஒரு நெருக்கடியில் இருப்பதாக அவர் துணிச்சலாகக் கூறுகிறார். அரச விவகாரங்களில் மதத்தின் ஈடுபாட்டை வெறுக்கின்ற பிரான்ஸின் மதச்சார்பின்மைக் கொள்கையை உருவாக்கிய லாசெட்டேவுக்கே இவரது செயற்பாடு அவமானதாகும். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தனது தேர்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது லாசெட்டேயின் கருத்துக்கு நேர்மாறானது.

பிரான்சில் வறுமை

பிரெஞ்சு சமுதாயத்துக்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாக “தீவிர இஸ்லாம்“ என அழைக்கப்படும் பிரிவினைவாதம் இருப்பதாக மக்ரோன் தனது உரையில் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் இஸ்லாம் நெருக்கடியில் இருந்தது என அவர் கூறினார். தீவிரப் போக்குக்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம்களை ஓரங்கட்டுவதற்குமான பொறுப்பை பிரெஞ்ச் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்பதை மக்ரோனின் நயவஞ்சகத்தனத்தை மட்டுமன்றி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பிரெஞ்சுக் கொள்கைகள் மீதான வஞ்சனையையும் வெளிப்படுத்துகின்ற அவரது நிர்வாகம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

மக்ரோன் பேசாமல் வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்ட விடயங்கள் வெறுக்கத்தக்கவை. வறுமை மற்றும் பாரபட்சத்துக்கு எதிராகப் போராடும் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான செகோர்ஸ் பொபுலேர் (பிரென்ச் பொபியூலர் ரிலீப்) 2018 இல் நடத்திய கணக்கெடுப்பில் அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிட்டது. பிரான்ஸ் மக்களில் ஐந்து பேரில் ஒருவர் ஒருநாளில் மூன்று வேளை உண்பதற்கு வழியில்லாதவர்களாக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை அது வெளியிட்டது.

பிரான்ஸின் நையாண்டிப் பத்திரிகையான சார்லி ஹெப்டோ வெளியிட்ட நபிகள் நாயகத்தைக் கேலி செய்யும் கார்ட்டூன்கள் மான்பெல்லியர்லிலும் தூலிஸிலும் உள்ள டவுன் ஹோல் கட்டடங்களில் பலமணிநேரம் காட்சிக்கு வைக்கப்படுவது கடுமையான ஆத்திரத்தை வரவழைக்காதா ? தீவிரமயமாக்கலுக்கான நிலைமைகளே  முதலில் உருவாக்கப்படுகின்றன. தீவிரவாதத்தை வளர்ப்பதில் வெற்றி பெற்றதன் பின்னர், நாட்டில் மதப்பிரிவுகளுக்கு எதிராகப் போராடுவதையும் நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் நோக்காகக் கொண்டதெனக் கூறி அரசாங்கம் பிரிவினைவாதத்துக்கு எதிரான சட்டங்களை புதிதாக வடிவமைக்கிறது.

பிரான்ஸின் சமூகவியலாளரான அலி சஅத் 2020 ஒக்டோபர் 28 இல் அல்ஜஸீராவுக்கு எழுதிய ஆக்கமொன்றில் குறிப்பிடும்போது, “எது நடந்தாலும் சமூகத்தில் இருந்து தன்னைப் பிரித்துக் கொள்வதும் அவர்களை வெளியாட்களாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்துவதும் முஸ்லிம்களாகவன்றி அரசாங்கமாகவே இருந்துள்ளது. பன்மைத்துவக் கலாச்சாரத்தை பிரெஞ்சு சமுதாயத்தின் ஓர் அங்கமாக அறிவிப்பதற்கு அது விரும்பவில்லை என்பதோடு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் விரும்புகிறது என்கிறார்.

புத்தரும் முஹம்மது(நபியு)ம்

ஒரு விவகாரம் ஒருவருடன் நேரடியாகத் தொடர்புபடாதபோது அது சுயாதீனமானதொரு விவகாரமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் ஒரு முஸ்லிம் சம்பந்தப்படும் போது மட்டும் அதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பரிஸிலிருந்து 8000 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள இலங்கையில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் பற்றி ஏன் இந்த ஆரவாரம் ?

“தீவிர இஸ்லாம்” என்று மக்ரோன் சொன்னமை சிலவேளை சரியாக இருக்கலாம். கருத்துச் சுதந்திரத்தில் என்ன தவறு இருக்கப் போகிறது ? நாங்கள் நாகரிக உலகில் வாழ்கிறோம். முஹம்மது நபியின் கார்ட்டூன்கள் பற்றியும் கேலிச்சித்திரங்கள் பற்றியும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ? யார் பின்வாங்கினாலும் பிரான்ஸ் கார்ட்டூன் வரைவதையும் வரைபடங்களைக் கீறுவதையும் கைவிடாது என மக்ரோன் கூறியபோது, அவர் சுதந்திரமான, வளர்ந்த, படித்த உலகத்தைத் தானே பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இலங்கையின் பார்வையில் இதனை நோக்குவோம். இந்த சொர்க்கபுரியுடன் நாம் இதனைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது பரவலாகப் பேசப்படுகின்ற கருத்துச் சுதந்திரம் வித்தியாசமான அர்த்தத்தைக் கொடுக்கிறது. அதே வேளை, மிகவும் பாராட்டப்பட்ட ஜனாதிபதி மக்ரோனின் வளர்ந்த, சுதந்திரமான, படித்த உலகத்துக்கான கருத்துச் சுதந்திரம் வேறு விஷேட அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது.

“புத்தரின் புகைப்படங்களுக்காக இலங்கையில் குற்றம் காணப்பட்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள்” என்ற தலையங்கத்தில் 2012 ஓகஸ்டில் பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது. பௌத்தர்களின் மத உரிமையைப் புண்படுத்தியதற்காக பிரான்சிய சுற்றுப்பயணிகள் மூவருக்கு நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களதும் மத உணர்வுகளைக் காயப்படுத்தவும் அவமதிக்கவும் செய்யும் வகையில் வேண்டுமென்றே செய்கின்ற எந்தச் செயற்பாடுகளும் குற்றமாகும் என்ற குற்றவியல் சட்ட விதியொன்றின் கீழ் அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

2014 ஏப்ரலில் பௌத்தத்தை அவமதிப்பது தொடர்பான மற்றுமொரு செய்தியை பிபிசி வெளியிட்டது. “புத்தரின் உருவத்தை உடம்பில் டட்டூ வரைந்திருந்த பிரிட்டிஷ் பெண்ணை இலங்கை நாடு கடத்தியது” என அது தலைப்பிடப்பட்டிருந்தது. நவோமி கோல்மன் கொழும்பு விமான நிலையத்துக்கு வந்தபோது அவரது வலது கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு கொண்டனர். தான் பௌத்த மதத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், தாய்லாந்து, இந்தியா, நேபாளம், கம்போடிய நாடுகளில் தியானங்களிலும் வழிபாடுகளிலும் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். நீதிமன்றத்தில் அவர் ஆஜராக்கப்பட்ட பின்னர் விமான நிலையத்துக்கு அருகில் நீர்கொழும்பில் உள்ள சிறையொன்றில் ஒரு தி்ங்கள்கிழமை இரவைக் கழிக்க வேண்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். கோவென்ட்ரியைச் சேர்ந்த 37 வயதான அவர், “அடுத்தவர்களது மத உணர்வுகளைக் காயப்படுத்தியதற்காகக்” கைது செய்யப்பட்டார். அவரை நாடுகடத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

2017 ஜூலையில், இந்தியப் பெண் ஒருவரின் சம்பவம் தி இந்து பத்திரிகையில் தலைப்பிடப்பட்டிருந்தது. “புத்தரின் படம் பொறித்த ஆடை அணிந்திருந்த இந்தியப் பெண் தடுத்து நிறுத்தப்பட்டார்” என அந்தச் செய்தித் தலைப்பு சொல்லியது. “இவ்வாறு அச்சிடப்பட்டவைகளை அணிவது தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகும். புத்தருடையது மட்டுமல்ல, எந்த மதத்தினரதும் தெய்வங்களை அச்சிட்ட ஆடை அணிவது குற்றமாகக் கருதப்படும்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தி இந்து செய்தியாளரிடம் தெரிவித்தார். ஆனாலும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜேசி வெலிஅமுன குறிப்பிடுகையில், “ஒரு மதத்தை அவதூறு செய்வது மட்டுமே இலங்கையில் கிரிமினல் குற்றமாகும். சாதாரணமாக புத்தரின் உருவம் பொதித்த ஆடை அணிவது இதில் அடங்காது. இது வேடிக்கையானது” எனக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அந்தக் குடும்பம் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

இவர்கள் யாரும் புத்தரின் கேலிச்சித்திரங்களை அணியவுமில்லை, காட்சிப்படுத்தவுமில்லை. மாறாக அதனை கண்ணியமான முறையில் மரியாதையாக மீள்பதிப்புச் செய்துள்ளனர். இதற்கு முற்றிலும் மாற்றமான வகையில், பில்லியன் கணக்கான மக்களால் போற்றப்படும் நபிகள் நாயகம் போன்ற ஆளுமையின் இழிவான கார்ட்டூன்களையோ அசிங்கமான கேலிச்சித்திரங்களையோ கற்பனை செய்து பாருங்கள். அதனையும் விட, இந்த அசிங்கமான கார்ட்டூன்களை மான்ட்பெல்லியரிலும் தூலூஸிலும் உள்ள டவுன் ஹோல் கட்டடங்களில் பல நேரம் காட்சிப்படுத்தி வைப்பது எவ்வளவு அவமதிப்புக்குரியது ?

கருத்துச் சுதந்திரம் என்ற கருத்தை தாமாகவே குழப்பியடித்துக் கொண்ட பிரெஞ்சுக்காரர்களால் முஹம்மது நபி இழிவாகச் சித்திரிக்கப்படுவதைக் கண்டனம் செய்வதானது, முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் ஆழமாக வேதனையுற்றிருக்கிறார்கள் என்பதையும் எப்படி அதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. தீவிரவாதத்தைக் கையாள்வதற்காக பிரான்ஸ் முஸ்லிம் சமூகத்தின் மீது இஸ்லாமோபோபியா அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது உதவப் போவதில்லை. இந்த விவகாரத்தில் முஸ்லிம் சமூகத்துக்கும் அனைத்துப் பிரஜைகளுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கின்றன.