இலங்கை கொவிட் 19 கொண்டுவந்த வறுமையை ஒழிப்பதற்கான மூன்று வழிகள்

48
  • பாரிஸ் ஹத்தாத் சர்வோஸ்

உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு, நேபாள நாடுகளுக்கான பணிப்பாளர்

கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக உலகளாவிய வறுமை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 115 மில்லியன் மக்கள் வரை தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படப் போகிறார்கள்.

இனி இந்த “வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தினம்“ (End poverty Day) என்பது கடந்த காலங்களைப் போல கொண்டாட்டமாக இருக்காது. மாறாக நிகழ்காலத்தின் பிரதிபலிப்பாகவும் மறுசீரமைப்பதாகவுமே இருக்கும். கடந்த பல தசாப்தங்களில் தீவு அடைந்த சாதனைகளை நாம் இந்தக் காலத்தில் பிரதிபலிக்கச் செய்ய முடியும்.

உண்மையில் இலங்கை இந்தப் பிராந்தியத்தில் சிறப்பான இடமொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளது. அதன் பொருளாதாரம் முக்கியமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. உலக வங்கியின் மனித மூலதனக் குறியீட்டில் (Human Capital Index) இலங்கை இரண்டாவது தடவையாகவும் தெற்காசியாவிலேயே முதலாவது இடத்தில் இருக்கிறது.

ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையிலும் பெருந்தொற்றினால் ஏற்படும் வேலையிழப்பும் வருமான இழப்பும் கடுமையாக உள்ளது. அனேகமாக அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் குறைந்த சேவைத் தொழில்களில் உள்ளவர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்படப் போகிறார்கள்.

சுமார் அரை மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட ஆடைத்தொழிற்சாலைகள் கணிசமான எண்ணிக்கையில் வேலைகளைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன. ஏப்ரல் 21 தாக்குதலின் பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து இப்போது தான் மீண்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் தொழில்களை உற்பத்தி செய்யும் துறையான சுற்றுலாத்துறையும் சொல்லத்தக்க அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றின் விளைவாக வறுமை நிலை 2019 இன் 8.9 வீதத்திலிருந்து 13 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (உலக வங்கியின் 2011 கொள்வனவுச் சக்தி அளவுகோள்களின் படி 3.2 டொலர்கள் வறுமை நிலையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை வைத்துப் பார்க்கும் போது) இந்தவகையில் சுமார் 890,000 பேர் புதிதாக வறுமையில் தள்ளுப்படப் போகிறார்கள். அவர்களில் பலர் இலங்கையின் வறுமைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இது குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். இது நலனை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளின் ஐந்து வருட முன்னேற்றத்தை பின்னோக்கி இழுக்கும்.

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிலும் அவர்களது செல்வம் கீழ்நோக்கிப் பாய்வதிலிருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் இலங்கை அரசாங்கம் துரிதமான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது. இப்பொழுது முன்னோக்கி நகரும் போது மீளக்கட்டியெழுப்புவதில் கூடுதலான கவனத்தைக் குவிக் வேண்டியிருக்கிறது.

உலக வங்கி இலங்கையினதும் அதன் மக்களினதும் நீண்ட காலப் பங்காளியாகும். நாடு மீண்டும் தனது மீண்டெழுவதற்கான பாதையில் செல்வதற்கு உதவுவதற்காக கொவிட் 19 நெருக்கடியால் அதிகரித்து வருகின்ற வறுமை அலைக்கு அணை கட்டுவதற்கு உலக வங்கி மூன்று வழிகளில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறது.

ஏழைகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாத்தல்

முதலில் ஏழைகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பது. தொற்று நோயால் உந்தப்பட்ட பொருளாதாரச் சுமை சமமாகச் சுமக்கப்படுவதில்லை. ஏழைகளையும் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடியவர்களையும் பாரிய கஷ்டங்களில் விழ விடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. தக்க தருணத்தில் உதவிகளை வழங்கும் வகையில் தொழிற்சந்தைகளையும் நிறுவனங்களின் நெருக்கடியினால் வரும் தாக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானிப்பதற்கான முயற்சிகள் அவசியமாகின்றன.

தொழில்களிலும் வருமானத்திலும் ஏற்படும் நெருக்கடியின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக உலக வங்கி தெற்காசியப் பிராந்தியத்தில் தொலைபேசி மூலமான கண்காணிப்புக் கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நெருக்கடிக்கான செயற்பாடுகளை அது வெளிப்படுத்தும். நெருக்கடிக்கான எதிர்வினையின் ஒரு பகுதியாக சமூகப் பாதுகாப்புக்கான அரசின் வலையமைப்புச் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கும் சமூகப் பாதுகாப்புக்கான நீண்ட கால மூலோபாயமொன்றை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எமக்கு வாய்ப்புத் தந்திருக்கிறது.

நாட்டின் அனைத்து நலன்புரித் திட்டங்களுக்குமான மத்திய ஒன்லைன் போர்டாலாக (Central Online Portal) ஒரு குடையின் கீழுள்ள கடைகளை (One Stop Shop) உருவாக்குவது   அதில் முக்கியமான வெற்றியாகும். இதனூடாக ஏழை மக்களின் வீட்டுத் தேவைகளை சிறப்பாக அறிந்து கொள்ளவும், ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்க்கவும், ஓட்டைகளை இல்லாமலாக்கவும் முடியுமாகும். இதனால் தேவையானவர்களுக்கு உதவிகளை அடையச் செய்வது அரசாங்கத்துக்கு இலகுவானதாக அமையும்.

உணவுப் பாதுகாப்பிலும் விவசாயத்திலும் முதலீடு செய்தல்

இரண்டாவதாக உணவுப் பாதுகாப்பிலும் விவசாயத்திலும் முதலீடு செய்வது. தொற்றுநோய் காலப்பிரிவில் விவசாயம் ஒன்றே ஆறுதல் தருவதாக இருந்தது. ஏற்றுமதி உற்பத்திகளுக்கான குறைந்தளவு கேள்வி சில துறைகளில் ஊதியத்தில் தாக்கம் செலுத்துவதாக இருந்தாலும், விவசாய உற்பத்திகள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

இலங்கையின் விவசாய நிலத்தில் 80 வீதம் சிறியளவு விவசாயம் செய்வோராலேயே பயிரிடப்படுகிறது. அவர்களின் வருமானத்தை மேம்படுத்தும் வகையில் இலாபமீட்டக் கூடிய வர்த்தக ரீதியான பயிர்களை நோக்கி அவர்களைப் பன்முகப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை இணைக்கவும், சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்கவும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் உலக வங்கி அவர்களுக்கு உதவி செய்யும்.

தேவையான நிதியையும் தீர்வுகளையும் தனியார் துறைக்கு வழங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதும் தேவையான சூழலை உருவாக்குவதும் தமது பணி என்பதை அங்கீகரிக்கும் வகையில் அரச துறையினது மனப்பாங்கை மாற்றுவதும் இந்த வேலையில் அடங்கும்.

மக்களில் முதலீடு செய்தல்

மூன்றாவதாக மக்களில் முதலீடு செய்வது. மனித வள மூலதனம் இலங்கையில் தொடர்ந்தும் மெய்யான மூலதனமாகவும் ஆற்றல்களுக்கான பாரிய வளமாகவும் இருந்து வருகிறது. தொற்று நோயின் போது பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்ட போதும், தொலைக்காட்சி, வானொலி மற்றும் மின் கற்றல் போன்ற ஒன்லைன் வழியாக பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்குத் துணை நின்றன.

உலக வங்கி பல தசாப்தங்களாகவே சுகாதாரத்திலும் கல்வியிலுமான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்த இரண்டு துறைகளிலும் தொழிலாளர்கள் அதிக ஊதியம் பெறத்தக்க வகையில் அவர்களது உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்து வறுமையிலிருந்து அவர்கள் வெளிவருவதற்கான உதவிகளை நாம் தொடர்ந்தும் வழங்குவோம்.

உலக வங்கி ஆதரவுடனான விவசாயத்துறை நவீனமயப்படுத்தும் திட்டம் மற்றும்  காலநிலைக்கு ஈடுகொடுக்கக் கூடிய பாசன முறைகளிலான விவசாயத் திட்டங்களும், பல்வேறுபட்ட சுருங்கைகளிலும் கலப்பின மிளகாய் விதைகளைப் பயிரிடுவதிலும் மாந்தோப்பில் வெங்காயம் பயிரிடுதல் மற்றும் கிராமக் கொத்தணிகளில் மரவள்ளி பயிரிடுதல் போன்ற ஊடுபயிர்ச் செய்கையிலும் புத்தாக்க விவசாய முயற்சிகளுக்கு உதவுவதாக உள்ளன. இலங்கையின் 11 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் காலநிலைக்கு ஈடுகொடுக்கக் கூடிய (Climate Smart) விவசாய முறைகளுக்கான அறிவையும் உதவியையும் பெற்று வருகின்றனர்.

புதிய அச்சுறுத்தல்களின் பாதிப்பு

கொவிட் 19 தொற்று நோய் புதிய அச்சுறுத்தல்களின் உலகளாவிய பாதிப்பைக் காட்டி நிற்கின்றது. இலங்கையில் இது ஏழைகளின் வாழ்க்கையை வகை தொகையின்றிப் பாதிக்கின்ற வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட காலநிலை அனர்த்தங்களினால் ஏற்கனவே எதிர்நோக்குகின்ற பாதிப்புக்களையும் விட அதிகமாகும்.

வானிலை முன்னறிவிப்புச் சேவைகளை மேம்படுத்தல், மண்சரிவுகளைத் தடுத்தல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தல் போன்றவற்றினூடாக நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் உலக வங்கி ஏற்கனவே ஈடுபட்டிருக்கிறது.

நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும் நீண்டகால இருப்பபை நோக்கி தொற்றிலிருந்து மீள்வதற்கான அணுகுமுறைகளையும் சாதனங்களையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் கொவிட் 19 நமக்குக் கற்பிக்கிறது.

தனது நிலங்களில் கைவிடப்பட்டுள்ள இயற்கை வளங்கள், காடுகள், வனவிலங்குகள், கடல்கள் ஆகியவற்றின் நிலைத்ததன்மையை வளப்படுத்துதல், சுத்தமான சக்தி வளங்களையும் பசுமைக் கட்டமைப்பையும் முன்னெடுத்துச் செல்லுதல்,  காப்புறுதி போன்ற நிதிச் சாதனங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலமாக பசுமையை மீட்டெடுத்து அதிர்ச்சிகளைத்தாங்கி இடர்களைக் குறைக்க முடியுமான இலங்கை ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

டெய்லி எப்டி